Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ

அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி அடுத்து நின்ற இடம் மோஸுல். இராக்கின் மோஸுல். சிலுவைப் படையினரிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அலெப்போவுக்கு அச்சமயம் இருந்த ஒரே சாத்தியம் அதன் ஆளுநரான ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ. ஆனால் அலெப்போவின் தூதுவர் வந்து நின்ற நேரத்தில், இறை விதி அங்கும் ஒரு சிறு தடையை ஏற்படுத்தியிருந்தது.

அது என்ன? அடுத்து என்னாயிற்று? பார்ப்போம். அதற்குமுன், அலெப்போவை முற்றுகையிட்டுள்ள சிலுவைப் படைக்கு இச்சமயம் தூண்டுகோலாய் அமைந்த நயவஞ்சகர் ஒருவரின் கிளைக் கதையைப் பார்த்துவிடுவோம். சூழ்ச்சியும் வஞ்சகமும் இல்லாமல் அரசியல் வரலாறு ஏது?

இராக்கில் ஹில்லா என்றொரு பகுதி. அதன் அமீராக இருந்தவர் தபீஸ் இப்னு ஸதக்கா அல்-மஸீதி. அவர் ஓர் அரபி. ஷிஆப் பிரிவைச் சேர்ந்தவர். எகிப்திலுள்ள ஃபாத்திமீக்களின் பிரதிநிதியாக, பாக்தாதிலுள்ள அப்பாஸிய கலீஃபாவுக்கும் செல்ஜுக் சுல்தான்களுக்கும் எதிராக, ஓயாமல் சதித் திட்டங்கள் தீட்டி, கர்மசிரத்தையாகத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர் அவர். ஒரு கட்டத்தில் கலீஃபாவும் செல்ஜுக்கியர்களும் இனி அவரை விட்டு வைக்கக்கூடாது என்று விரட்டத் தொடங்க, தப்பித்து ஓடிய தபீஸ், சிலுவைப் படையினரிடம் வந்து நின்றார். தூபம் போட்டார்.

‘அலெப்போ மக்களுள் பலர் எனது ஷிஆப் பிரிவினர். அதனால் அவர்களுக்கு என் மீது இனப்பற்றும் பிரியமும் உண்டு. அவர்களுள் எனக்குக் கணிசமான ஆதரவாளர்களும் உளர். விளையாட்டுப் பிள்ளை ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் கிளம்பிச் சென்றபின் அலெப்போவுக்கு வலிமையான ஆட்சி அதிகாரியும் இல்லை. நான் படை ஒன்றுக்குத் தலைமையேற்றுச் சென்றால், என்னைப் பார்த்ததுமே என் மக்கள் அலெப்போவை என் வசம் ஒப்படைத்துவிடுவர். எனக்கு உதவுங்கள். உங்களது பிரதிநியாக உங்களுக்குக் கட்டுப்பட்டு நான் அலெப்போவை வைத்திருப்பேன். பகரமாக நான் உங்களுக்குச் செய்யும் நன்மைகளுக்குக் குறை இருக்காது’ என்ற ரீதியில் ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வினிடமும் ஜோஸ்லினிடமும் அவர் பேரம் பேசினார்.

‘நன்று. அலெப்போ உனக்கு; அதன் வளமும் செல்வமும் எங்களுக்கு’ என்று பேரம் படிந்து சிலுவைப் படை திரண்டது. வேறு சில உதிரி முஸ்லிம் ஆட்சியாளர்களும் ‘இந்தாருங்கள் எங்கள் பங்கு துரோகம்’ என்று அக்கூட்டணியில் இணைந்து கொண்டனர். அப்படித்தான் உருவானது பிரம்மாண்டமான அக்கூட்டணி.

ஆனால் தபீஸ் இப்னு ஸதக்கா சொல்லி அழைத்து வந்ததைப்போல் அலெப்போ அவரை வரவேற்கவும் இல்லை; சரண் அடையவும் இல்லை. மாறாக வெறுமே குதிரைப் படையினர் ஐந்நூற்றுவரை மட்டும் வைத்துக்கொண்டு காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தலைமையில் எதிர்த்து நின்றது. வலிமையான ஒரு சுல்தானின் உதவியைத் தேடித் தூது அனுப்பியது. சில அத்தியாயங்களாக நாம் கவனித்து வந்த காழீ இப்னில் ஃகஷ்ஷாப் பற்றிய மற்றொரு தகவலையும் இச்சமயத்தில் நாம் இங்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அவரும் ஷிஆப் பிரிவைச் சேர்ந்தவரே. ஆனால் சிலுவைப் படையினர் வந்து நுழைந்த நாளாய் அவர் தோளோடு தோள் நின்று களம் கண்டதெல்லாம் ஸன்னி முஸ்லிம்களுடன் மட்டுமே. உதவி நாடி அவர் சென்றதும்கூட அப்பாஸிய கலீஃபாவிடமும் ஸெல்ஜுக் சுல்தான்களிடமும்தாமே தவிர, எகிப்திலிருந்த ஃபாத்திமீக்களுடன் அவருக்கு எத்தொடர்பும் இருந்ததில்லை.

பல மாதங்கள் ஆனாலும் சரி, ஆண்டாக நீண்டாலும் சரி, அலெப்போவைப் பிடிக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சிரியாவின் குளிர், கோடைப் பருவங்களைத் தாக்குப்பிடிக்கும் வகையில் அலெப்போவைச் சுற்றி வீடுகளையும் குடில்களையும் கட்டிக்கொண்டு, தங்களது தங்குமிடங்களைச் சிலுவைப் படை வசதிப்படுத்திக்கொண்டது. அலெப்போவின் பொருளாதார முதுகெலும்பான விவசாயத்தை அழிக்கும் திட்டத்துடன் அவர்கள் மரங்களை வெட்டிச் சாய்த்து, தோட்டங்களையும் பயிர்களையும் நாசப்படுத்தினர். அவை எல்லாம் என்ன கிலியை அலெப்போவினருக்கு ஏற்படுத்திவிடப் போகிறது என்பதுபோல், அடுத்த காட்டுமிராண்டித்தனத்தில் இறங்கினர். முஸ்லிம்களின் அடக்கத்தலங்களைத் தோண்டி, அவற்றுள் பிரேதம் சிதிலம் அடையாமல் இருந்தால் அதை வெளியே எடுத்து, அதன் கால்களைக் கயிற்றால் கட்டி, தரதரவென இழுத்துச் சென்று, அரணிலிருந்து பார்க்கும் முஸ்லிம்களிடம் ‘இதோ உங்கள் நபி’ என்று கூச்சலிட்டு ஆர்ப்பரித்தார்கள். குர்ஆனின் பிரதிகளைக் கழுதையின் பின்னங்கால்களில் கட்டி முஸ்லிம்களின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்தார்கள். தங்களிடம் முஸ்லிம் சிக்கினால் அவரது அங்கங்களைத் துண்டாடி எறிந்து, எந்தளவிற்குக் காட்டுமிராண்டித்தனத்தையும் அக்கிரமத்தையும் நிகழ்த்த முடியுமோ அத்தனையும் செய்தனர்.

அனைத்தையும் பார்த்துக் கொதித்து, வயிறு எரிந்த போதும் காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தலைமையில் தற்காத்து எதிர்த்து நின்றது அலெப்போ. அது மட்டும் இன்றி, முஸ்லிம் உளவாளிகள் சிலர் எதிரிகளின் கூடாரங்களுக்குள் ஊடுருவி, சிலரைக் கொல்வதும் சிலரைச் சிறைப் பிடித்து நகருக்குள் இழுத்து வருவதும்கூட நிகழ்ந்தன. அவ்விதம் தம்மிடம் சிக்கிய சிலுவைப் படையினரை முஸ்லிம்களும் தங்கள் பங்கிற்குக் கொன்று தீர்த்து எதிர்வினை ஆற்றிக்கொண்டனர்.

காழீ அனுப்பி வைத்த தூதுவர் மோஸூல் வந்தடைந்து ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீயைச் சந்தித்தபோது அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். இத்தகவல் சிலுவைப் படை கூட்டணிக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. தபீஸ் இப்னு ஸதக்காவுக்குப் பெரும் கொண்டாட்டம். அடுத்த சில நாள்களில் அவர் மரணமடையப் போவது உறுதி என்று நினைத்தாரோ ‘அல்லாஹு அக்பர்’ என்று கூக்குரலிட்டு மகிழ்ந்து, அலெப்போ மக்களை நோக்கி, “நீங்கள் உதவி தேடிச் சென்றீர்களே ஆக் சன்க்கூர், அவர் மரணமடைந்து விட்டாராம்” என்று குதூகலிக்க, அதைக் கேட்டு அலெப்போவினருக்கு முதுகு முற்றிலும் உடைந்ததைப்போல் ஆகிவிட்டது!

ஆனால் நிலைமை மாறப்போகிறது என்பதை தபீஸ் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அலெப்போவின் தூதுவர் விவரித்த அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஆக் சன்க்கூர், “நோயின் தாக்கத்தால் எப்படி இருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கின்றீர்கள். ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் என்னை இந்நோயிலிருந்து குணமாக்கிவிட்டால், உங்கள் நகரைக் காப்பாற்ற என்னாலான அனைத்து உதவிகளையும் புரிவேன். உங்கள் எதிரிகளுடன் போரிடுவேன்” என்று உறுதி அளித்தார்.

இறைவனின் நாட்டம், அடுத்து வெகு சில நாள்களில் அவரது உடல் தேற ஆரம்பித்து, நல்ல முன்னேற்றம் அடைந்தது. இப்பொழுது தேவலாம் என்று தோன்றியதுமே உடனே செயலில் இறங்கினார் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ. படைத் துருப்புகள் அழைக்கப்பட்டன. ‘சிலுவைப் படையினருக்கு எதிரான ஜிஹாதுக்குத் தயாராகவும்’ என்று கட்டளை இடப்பட்டது. அடுத்துச் சில நாள்களில் அவரது தலைமையில் படை அணி திரண்டு அலெப்போவை நோக்கி நகர்ந்தது. தமது முயற்சிக்குத் துணை வேண்டி அவர் டமாஸ்கஸில் இருந்த துக்தெஜினுக்கும் ஹும்ஸு நகரின் அமீருக்கும் தகவல் அனுப்ப, அவர்களும் தங்கள் சார்பாக உதவிப் படைகளை அனுப்பி வைத்தனர்.

புர்ஸுகீ படையின் முன் அணி அலெப்போவை நெருங்கியதுதான் தாமதம், அதுவரை கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த சிலுவைப் படையின் போக்கில் மாற்றம் நிகழ்ந்தது. புஜம் தட்டி அலெப்போவை முற்றுகையிட்டிருந்த அவர்களின் படை, அவருடன் போருக்குக் களமிறங்காமல் தற்காப்புக்கான வழியைத்தான் தேடியது. அந்தாக்கியா செல்லும் பாதையில் உள்ள ஜபல் ஜவ்ஸான் என்ற பகுதிக்கு, அவசர அவசரமாக நகர்ந்து சென்று தங்களைப் பத்திரப்படுத்திக்கொண்டனர் அவர்கள். ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சிலுவைப் படை, தற்காப்புத் தேடி ஓடிவிட, அதுவரை தங்களைத் தற்காத்துப் போராடிக் கொண்டிருந்த அலெப்போவினர் ஆரவாரமாக வெளியேறி வந்து, சிலுவைப் படையினர் தப்பித்து ஓடும்போது கைவிட்டுச் சென்ற அவர்களது பொருட்களைக் கைப்பற்றினர். ஒரு கூட்டம் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகியை வரவேற்கச் சென்றது.

சிலுவைப் படையைத் துரத்திச் சென்று போரிடுவதைத் தவிர்த்தார் ஆக் சன்க்கூர். “அங்கு அவர்களின் வியூகம் என்னவென்பது நமக்குத் தெரியாது. இச்சமயம் அவர்களுடைய தீமையிலிருந்து அல்லாஹ் நம்மை விடுவித்துவிட்டான். சீரழிந்துள்ள அலெப்போவை முதலில் சீரமைத்து வலுவூட்டுவோம். அதுவே இப்பொழுது ஆக முக்கியம். அதன்பின் அல்லாஹ் நாடினால் நாம் நமது படையுடன் அவர்களை நோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்துவிட்டு அலெப்போவினுள் நுழைந்தார்.

அவர் சொன்னதைப் போலவே முன்னுரிமை அளித்து அலெப்போவைச் சீரமைத்து, அதன் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார். நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டது. முற்றுகையினால் சீர்குலைந்தோரின் வாழ்க்கை புனரமைக்கப்பட்டது. உணவுத் தட்டுப்பாடு களையப்பட்டது. விவசாயம் மீண்டும் தழைத்தது. வர்த்தகப் போக்குவரத்து மீண்டது.

அதையடுத்து அவர் செய்த காரியம், சிரியாவின் முக்கிய நகரமான அலெப்போவை இராக்கின் முக்கிய நகரமான மோஸூலுடன் ஒன்றிணைத்து இருதரப்பிலுமான ஆட்சிகளுக்கு இடையே இணக்கத்தையும் ஒற்றுமையையும் உருவாக்கியதுதான். அது வெகு சிறப்பான நகர்வு. ஆங்கில வரலாற்றாசிரியர் ஸ்டீவன் ரன்சிமன் (Steven Runciman) அதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்:

‘புர்ஸுகி உருவாக்கிய இமாரத், வெகுவிரைவில் ஒருங்கிணைந்த இஸ்லாமியப் பேரரசிற்குத் துவக்கமாக அமைந்தது. பிற்காலத்தில் ஸெங்கிகள், அய்யூபிகள், மம்லூக்குகள் அதன் அஸ்திவாரத்தில்தான் இணைந்த ஆட்சியை நிலை நிறுத்தினர். அதற்கு முன்வரை, ஜெருஸல ராஜாங்கத்தின் தலைமையில் ஒன்றிணைந்திருந்த சிலுவைப் படையினர் எதிர்கொள்ள வேண்டியிருந்ததெல்லாம் பிளவுபட்டு, சிதறுண்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டிருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களை மட்டுமே. அவர்களது பிரிவினை சிரியாவை மேலும் பலவீனப்படுத்தவே செய்தது. ஆகவே, அலெப்போவும் மோஸுலும் ஒன்றிணைந்ததை இஸ்லாமிய ஆட்சி அணிகளின் ஒருங்கிணைப்புக்கான துவக்கம் என்றே கருத வேண்டும். அதுதான் பின்னர் சிரியாவில் சிலுவைப் படையை அழிக்க உதவியது’

அது உண்மையே. அலெப்போ-மோஸுல் ஒன்றியம் சக்தி வாய்ந்த இஸ்லாமிய அரசிற்கான ஓர் உட்கருவாக உருவெடுத்து, அது விரைவில் பரங்கியர்களின் ஆணவத்திற்கு எதிரான, வெற்றிகரமான சக்தியாக மாறியது. அடுத்து வரப்போகும் இமாதுத்தீன் ஸெங்கிக்குப் பாதையைத் தயாராக்கி வைத்தது.

ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி நேர்மையாளர், பாராட்டத்தக்க தன்மை அமைந்தவர், நீதிமான், மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுபவர், நன்னோக்கங்கள் கொண்டவர், மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பவர், அவர்களிடம் தாராளப் போக்குள்ள பெருந்தன்மையாளர் என்றெல்லாம் டமாஸ்கஸைச் சேர்ந்த அக்கால வரலாற்று ஆசிரியர் இப்னுல் ஃகலானிசி (Ibn Al-Qalanisi) சிலாகித்து எழுதி வைத்துள்ளார்.

ஆனால், இவ்வாறெல்லாம சீரமைப்பை மேற்கொண்டவரைச் சதி கொன்றது. யாருடைய சதி? புற்றாகப் பரவிவிட்டதே அஸாஸியர் கூட்டம், அவர்களின் சதி.

ஹி. 520 / கி.பி. 1126, துல்கஃதா மாதம். மோஸூல் நகரம். வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையில் இருந்தார் ஆக் சன்க்கூர். ஆயுதங்கள் துளைக்க இயலாத இரும்புக் கவச அங்கியை அணிந்திருந்தார் அவர். முந்தைய நாள் இரவு தாம் கண்ட கனவிற்கு, தமக்கு விபரீத முடிவு அன்றைய நாள் காத்திருப்பதாக அவர் அர்த்தம் சொன்னதாகவும் குறிப்புகள் உள்ளன. அதனால் முன்னெச்சரிக்கையாக அவரைப் போர்த்தியிருந்தது அக்கவச அங்கி. அவரைச் சுற்றிக் காவலர்களும் இருந்தனர்.

சூஃபிகளைப்போல் உடை அணிந்து, எந்தச் சந்தேகத்தையும் தூண்டாமல் அஸாஸியர்களும் ஒரு மூலையில் அந்தப் பள்ளியில் அமர்ந்திருந்தனர். திடீரென்று அவர்கள் ஆக் சன்க்கூர் மீது குதித்து, சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். ஆனால் அவரது கவச அங்கியைத் தாண்டி அவர்களால் அவரது உடலை வெட்ட முடியவில்லை. ‘அவரது கழுத்துக்கு மேல் தாக்குங்கள்!’ என்று ஒருவன் கத்தினான். அதை அடுத்து ஒருவன் அவரைத் தொண்டையில் தாக்கினான். அதைத் தொடர்ந்து பல கத்திக் குத்துகள். சரிந்து விழுந்து மடிந்து, உயிர்த் தியாகியானார் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி!

நச்சுக் கிருமியாய்ப் பரவி, விஷ ஜந்தாய் உருவாகிவிட்ட அஸாஸியர்கள் வரலாறு நெடுக இவ்விதம் கொன்று தீர்த்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களது திட்டமும் கொலை நேர்த்தியும் தீவினைகளின் உச்சம். அவர்களது குறுவாள்கள் நிகழ்த்திய படுகொலைகள் சிலுவைப் படையினருக்குத்தான் சாதகமாக முடிந்தன. ஏற்கெனவே சிதறுண்டு கிடந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுள் ஒரு சிலர், ஜிஹாதை முன்னிறுத்தி, தங்களது செயல்பாடுகளைச் சிலுவைப் படையினருக்கு எதிராக ஒன்று திரட்டும் போதெல்லாம் இந்த நிஸாரி இஸ்மாயில்களான அஸாஸியரின் சூழ்ச்சியும் கொலைகளும் முஸ்லிம்களது முயற்சிகளின்மீது மண் அள்ளிப் போட்டன. இதனால் சிலுவைப் படையினருக்கு எதிராகக் களம் கண்ட முஸ்லிம் ஆட்சித் தலைவர்கள் எல்லாம் இருதரப்பு எதிரிகளை எதிர்கொள்ளும்படி ஆனது. பரங்கியர்களை எதிர்த்து நிற்பதற்கான அனைத்து கவனமும் ஆற்றலும் சக்தியும் முஸ்லிம்களுக்குத் தேவைப்பட்ட அந்நேரத்தில் அஸாஸியர்களின் பிரச்சினை முஸ்லிம்களுக்குப் பெரும் தலைவலியாகத் தொடர்ந்தது.

அஸாஸியர்களுக்கு, தங்களின் தலைவரான நிஸாரைக் கொலை செய்த ஃபாத்திமீக்களின் அஃப்தல் மீதும் தங்களை வேட்டையாடும் ஸெல்ஜுக்கியர்கள் மீதும் எக்கச்சக்க வெறுப்பு. அதனால் அவர்கள் சிலுவைப் படையினரின் வரவையும் அவர்கள் முஸ்லிம் ராஜாங்கங்களின் மீது நிகழ்த்தும் பாதிப்பையும் அவற்றை அழிப்பதையும் ரசிக்கவே செய்தனர். அலெப்போவின் முந்தைய ஆட்சியாளர் ரித்வான் சிலுவைப் படையினருடன் நெருக்கமாக இருந்ததற்கும் அவர்களுடன் இணங்கிப் போனதற்கும் அஸாஸியர்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமும் அவர்களின் ஆலோசனையும்கூடக் காரணங்களாக அமைந்திருந்தன என்பது வரலாற்றாசிரியர் அமீன் மஃலூஃபின் கருத்து.

அதனால் ரித்வான் இறந்ததும் அலெப்போவில் அஸாஸியர்களைத் தெருத் தெருவாக, வீடு வீடாகத் தேடிப் பிடித்து, அழித்ததில் பெரும் பங்கு வகித்தவர் காழீ இப்னுல் ஃகஷ்ஷாப். பரங்கியர்களுடன் அஸாஸியர்கள் கொண்டிருந்தது கள்ளக் காதல்; அது அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என்று அவர் கருதினார். பெரும்பாலான அஸாஸியர்களை அவர் அழித்தாலும் தப்பிப் பிழைத்தவர்கள் அந்த இழப்பையெல்லாம் பாடமாக எடுத்துக்கொண்டு அச்சமூட்டும் தீய சக்தியாக மீண்டெழுந்தனர். முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தீராத் தலைவலியாகத் தொடர்ந்தனர்.

தங்களுக்குப் பரம எதிரியாகிவிட்ட காழீ இப்னுல் ஃகஷ்ஷாப்பையும் அஸாஸியர்கள் விட்டு வைக்கவில்லை. கி.பி. 1125 ஆம் ஆண்டு. ஒருநாள் பகல் தொழுகையை முடித்துவிட்டு காழீ இபுனுல் ஃகஷ்ஷாப் பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது அஸாஸியரின் கொலையாளி ஒருவன் அவர்மீது பாய்ந்து தனது குறுவாளை அவரது நெஞ்சில் பாய்ச்சினான். அவரது வரலாற்றுக்கு அது முடிவுரை எழுதியது.

oOo

ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ கொல்லப்பட்டதும் அவருடைய மகன் மசூத் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவருக்கான ஆயுள் அவகாசமாகச் சில மாதங்களே அமைந்தன. அவரையும் அஸாஸியர்கள் கொன்றனர். அதையடுத்து நான்கு அமீர்களுக்கு இடையே அலெப்போவைக் கைப்பற்ற அரசியல் போராட்டம் உருவாகி, அந்நகரத்தின் சட்ட ஒழுங்கு முற்றிலும் உருக்குலைந்தது.

இங்கு நிலைமை இவ்விதம் இருக்க, மறைந்த சிலுவைப் படைத் தலவைர் பொஹிமாண்டின் பதினெட்டு வயது மகன் ஐரோப்பாவிலிருந்து கிளம்பிவந்து, அந்தாக்கியாவின் அதிபதியானார். அலெப்போ உள்ள நிலையில் அவர் வந்து நகரை கைப்பற்றப் போவது உறுதி என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். சரியான ஆட்சியாளர் இல்லை; முன்னர் இத்தகு சிக்கல்களைச் சமாளித்த காழீயும் இல்லை எனும்போது வேறு நம்பிக்கை?

அலெப்போ இப்படி என்றால் அங்கு டமாஸ்கஸும் சோதனைக்கு உள்ளானது. அலெப்போவிலிருந்து தப்பி ஓடி டமாஸ்கஸில் தஞ்சம் புகுந்து வளர ஆரம்பித்திருந்த அஸாஸியர்களுக்கு அங்கு அதிபர் துக்தெஜினின் அமைச்சராக இருந்த அல்-மஸ்தஃகானியுடன் நல்லுறவு ஏற்பட்டு விட்டது. அந்த அமைச்சரும் அவர்களுக்கு உடல் வேண்டுமா, பொருள் வேண்டுமா, எனது ஆவி வேண்டுமா, எதுவானாலும் உங்களுக்கு அர்ப்பணிக்க தயார் என்று அன்னியோன்ய நண்பராகி விட்டார். அது மட்டுமின்றி, அவருக்கு ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வினுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

துக்தெஜின் முதுமையடைந்து நலிவுற்றுவிட்ட போதிலும் அவர்களது சதித் திட்டங்களுக்கு எல்லாம் ஓரளவு தடைக்கல்லாகவும் டமாஸ்கஸ் பரங்கியர்களிடம் பறிபோகாமல் ஒரு பாதுகாவலாகவும் இருந்து கொண்டிருந்தார். ஆனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. தானாகப் போகப்போகும் உயிரை ஏன் கத்தியால் குத்தி அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, அஸாஸியர்களும் அமைச்சரும் அவரது தலைமாட்டில் அமர்ந்து சதியாலோசனையில் மட்டும் ஈடுபட்டனர்.

ஒருவாறாக ஹி.522 / கி.பி. 1128ஆம் ஆண்டு துக்தெஜினும் மரணமடைந்தார். சரிதான், இனி நம் நகரம் பரங்கியர் வசம் ஆகும் நாள் வெகு தூரமில்லை என்று அந்நகர மக்களும் எண்ணத் தலைபட்டனர்.

ஆனால், வரலாறு அடுத்த பாகத்திற்கு முன்னுரை எழுத ஆரம்பித்தது!

.

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 39
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 41

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்






No articles in this category...