Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13

முன் யுத்தம்

போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு, கும்பலைக் கூட்டும் திறன் பெற்றிருந்த சொற்பொழிவாளர்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் துறவி பீட்டர்.


பிரான்சின் வட கிழக்கில் உள்ள ஏமியன்ஸ் நகரைச் சேர்ந்த அவர் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எளிய ஆடை, காலணி அற்ற வெறுங்கால், வாராத பரட்டைத் தலை, பஞ்சப் பராரித் தோற்றம்; ரொட்டியும் இறைச்சியும் ஆடம்பரம் என்று கூறி, பொது இயல்புக்கு மாறாய் மீனும் மதுவும் மட்டுமே உணவு; நாடோடியைப் போல் வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருந்தார்.

கரடுமுரடான வாழ்க்கை வாழ்ந்த அவருக்குப் பாமர மக்கள் மத்தியில் அளவற்ற அபிமானம் ஏற்பட்டுவிட்டது. இனந்தெரியாக் கவர்ச்சி உருவானது. அவர்கள் அவரைத் துறவியாகக் கருதினர்; தேவனின் தூதர் என்று கொண்டாட ஆரம்பித்தனர். அவர் ஒரு புனிதர் என்று வெறித்தனமாக நம்பிய மக்கள் அவரது கோவேறுக் கழுதையின் உரோமங்களைக் கூடப் புனிதப் பொருளாகப் பத்திரப்படுத்தத் தொடங்கினர்.

மக்களிடம் அந்தளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருந்த துறவி பீட்டர், போப் அர்பனின் உரையைச் செவியுற்றதும் அதில் மிகவும் கவரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டுப் போனார். கழுதை ஒன்றில் ஏறிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று, அங்குள்ள பட்டிதொட்டிகள் எல்லாம் நுழைந்து போப்பின் உரையை அவர் எடுத்துரைக்க, மூலை முடுக்கெல்லாம் தீ பரவியது. போதாததற்கு, தாம் தேவனால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வேறு அறிவித்துக்கொண்டார். அவர்மீது ஏற்கெனவே எக்கச்சக்கமான நல் அபிப்ராயத்தில் இருந்த மக்களுக்கு அது பக்திப் பரவசத்தை அதிகப்படுத்த, அவரது வீரியமிக்கச் சொற்பொழிவுகள் அவர்களுக்கு வேத வாக்காக ஒலிக்க ஆரம்பித்தன.



அழுகையும் விம்மலும் சரியான விகிதத்தில் கலந்திருந்த அவரது உரைகள், தேவனின் விரோதிகள் என்று முஸ்லிம்களை வர்ணித்து, அவர்கள்மீது அவர் விடுத்த சாபம், கிறிஸ்துவின் கல்லறையைக் காக்க அணிவகுப்பவர்கள்மீது தேவனின் மன்னிப்பு நிச்சயம் என்ற வாக்குறுதி எல்லாமாகச் சேர்ந்து அவர்களை வேறு எந்தப் பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. அவருடைய நாவன்மை அவர்களை அப்படியே கட்டிப்போட்டது. பின்பற்றியவர்கள் பாமரக் கூட்டம் என்பதால் அவர்கள் அவர் சொன்னதை அப்படியே நம்பினர்.

‘அனைவரும் உங்களது ஆயுதங்களைத் தூக்குங்கள்; போர்த் தளவாடங்கள் அனைத்தையும் சித்தப்படுத்துங்கள்; ஒன்று கூடுங்கள்; குதிரைகளில் ஏறி வந்து சேருங்கள்’, என்று மக்களுக்குப் போர் வெறியை ஊட்ட ஆரம்பித்தார். க்ளெர்மாண்ட் உரை நிகழ்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கும். ஆனால் அதற்குள் பிரான்சில் 15,000 பேர் அடங்கிய படை அவரால் திரண்டது. அனைவரும் அவரது சொல்லுக்குக் கட்டுண்டு கிளம்பிய ஏழை எளிய மக்கள். குதிரையேற்றமோ, போர்ப் பயிற்சியோ, ஆயுதப் பயிற்சியோ அறியாதவர்கள். ஆயினும் பேரார்வத்துடனும் உத்வேகத்துடனும் அவர்கள் அவரைப் பின்பற்றித் தொடர்ந்தனர்.

அதற்குள் ஜெர்மனியில் பல்வேறு பரிவாரங்கள் திரண்டிருந்தன. அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து, படையாக உருமாறி, அதற்கு ‘மக்களின் சிலுவைப் போர்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. போர் வெறி அவர்களை உந்தித்தள்ள, கி.பி. 1096ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், அந்தக் கூட்டம் ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டது. போப் அர்பனின் அதிகாரபூர்வமான சிலுவைப் படைக்கு முந்தைய அந்தப் படை, கான்ஸ்டன்டினோபிளை நோக்கி நகர்ந்தது. ஆர்வமும் ஆர்வக் கோளாறும் ஒழுங்கீனமும் கொண்ட அந்தப் படை அடுத்து நிகழ்த்திய அட்டகாசங்கள் பின்னால் வரவிருக்கும் ஆபத்திற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.


படையெடுத்துப் போகிற போக்கில், பிரான்ஸ், ஜெர்மனி பகுதிகளில், ஏசு கிறிஸ்துவின் விரோதிகள் என்று தாங்கள் கருதியவர்களை எல்லாம் அடித்துக் கொன்று தூக்கி எறிந்துகொன்டே சென்றனர். அப்படி அவர்கள் கொன்றதெல்லாம் யூதர்கள். எண்ணிக்கை ஏராளம். பெல்கிரேட், ஹங்கேரி பகுதிகளெல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டன. கொன்று, துவம்சம் செய்து, அராஜகம் புரிந்து ஒருவழியாக, கி.பி. 1096 ஆகஸ்ட் முதல் தேதி, கான்ஸ்டன்டினோபிள் வந்து சேர்ந்தது அந்தக் கூட்டம்.

எதிர்பாராமல் வந்து சேர்ந்த இந்த ஒழுங்கீனர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பைஸாந்தியச் சக்ரவர்த்தி அலெக்ஸியஸ் யோசித்தார். துருக்கியர்களின் பெரும்படையுடன் இந்தக் கற்றுக்குட்டிப் படை மோத முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் ஒரு காரியம் செய்தார். ‘சிலுவைப் படையினர் வரட்டும், அதுவரை காத்திருங்கள். வேறு எதுவும் செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தி, ஆசியா மைனர் பகுதிக்கு அவர்களை அனுப்பி வைத்தார். ஆசியா மைனர் என்பது அனடோலியாவின் பீடபூமி. இன்றைய துருக்கியின் முழுப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. ஆசியா மைனரையும் ஐரோப்பாவையும் டார்டாநெல்லெஸ், பாஸ்போரஸ் ஜலசந்தி பிரிக்கிறது.

அறிவுரையையும் சொல் பேச்சையும் கேட்கிற படையா அது? அப்படியானவர்களாய் இருந்திருந்தால் இப்படி ஏன் முந்திக்கொண்டு வருகிறார்கள்? ஐரோப்பாவைக் கடந்து ஆசியா மைனர் பகுதியை வந்தடைந்த அந்தக்கூட்டம் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தது. அங்கிருந்த சிறு கிராமங்களையும் நகரங்களையும் தாக்கிக் கொள்ளையடித்தனர். ஏக களேபரம். இத்தனைக்கும் நடுவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜெர்மனியர்கள், இத்தாலியர்கள் ஒரு பிரிவாகவும் பிரஞ்சுக்காரர்கள் ஒரு பிரிவாகவும் பிரிந்து ஆளுக்கொரு தலைவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். தத்தம் போக்கில் அவர்கள் நகர்ந்து, சென்ற திக்கில் இருந்த புறநகர்ப் பகுதிகளைக் கொள்ளையடித்தனர். ஜெர்மனியர்களின் அணி அனடோலியாவில் உள்ள அரணைக் கைப்பற்றியது.

அல்ப் அர்ஸலானின் பெரிய பாட்டனாரின் பேரன் சுல்தான் ரோம ஸல்தனத்தை உருவாக்கினார் என்பதை, ‘சுல்தான்களின் ராஜாங்கம்’ என்ற எட்டாவது அத்தியாயத்தில் வாசித்தோம். அவர் மரணமடைந்து அவருடைய மகன் கிலிஜ் அர்ஸலான்-I அங்கு சுல்தான் ஆகியிருந்தார். அவருடைய ஆட்சியில் இருந்த பகுதிகள்தாம் அவை. தகவல் வந்ததும் தம் படையைக் கிளப்பினார் அவர். பைஸாந்தியக் கிறிஸ்தவர்கள் அன்றி லத்தீன் கிறிஸ்தவர்களுடன் முதன்முறையாக முஸ்லிம்களுக்கு இப்பொழுது போர் அறிமுகம் ஏற்பட்டது.

ஜெர்மனியர்கள் கைப்பற்றியிருந்த அனடோலியாவின் கோட்டையை கிலிஜ் அர்ஸலானின் படை முற்றுகையிட்டது. உள்ளிருப்பவர்களின் நீர் ஆதாரங்களுக்கான வாயில்களைத் தடுத்து நெருக்கியது. நீரின்றித் தவித்துப்போன சிலுவைப் படையினர் வேறு வழியின்றிக் கழுதையின் இரத்தத்தைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இறுதியில் கிலிஜ் அர்ஸலானின் தளபதிகள் வெகு இலகுவாக அரணை அவர்களிடமிருந்து மீட்டனர். சிலுவைப் படையினர் போர்க் கைதிகள் ஆனார்கள். கைதானவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்று உயிர் பிழைக்க, மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.

சிலுவைப் படையின் மற்றொரு பிரிவு வேறொரு பகுதியில் கொள்ளையடித்துக்கொண்டிருந்தது இல்லையா, அப் பகுதிக்குத் துருக்கிய உளவாளிகள் இருவர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜெர்மானியர்கள் அனடோலியா அரணையும் நைஸியா நகரையும் கைப்பற்றிவிட்டனர் என்று அவர்கள் வதந்தியைப் பரப்ப, ‘ஆஹா! வெற்றி’ என்று குதித்தது சிலுவைப் படையின் அந்தப் பிரிவு. ஆனால் அந்த உற்சாகம் வெகு விரைவில் அவர்களுக்குள் பொறாமையைத் தூண்டியது. கைப்பற்றப்பட்ட பகுதிகளின் வளங்கள் ஜெர்மானியர்களுக்கு மட்டும் சொந்தமாகிவிடுமே, செல்வத்தில் தங்களுக்குப் பங்கு ஏதும் கிடைக்காமல் பறிபோகுமே என்ற கவலையும் சோகமும் ஏற்பட்டு, பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டும் அங்கேயே விட்டுவிட்டு 20,000 பேர் கொண்ட கூட்டம் நைஸியாவுக்கு ஓடியது. முஸ்லிம்களின் திட்டம் சரியாக வேலை செய்தது.

மூன்று மைல் தூரத்தில் பாதை குறுகும் இடத்தில் துருக்கிப் படையினர் காத்திருந்தனர். சிலுவைப் படை அவ்விடத்தை நெருங்கியதும் அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று இடைவிடாத அம்பு மழை பெய்ய ஆரம்பித்தது. திகைத்துப்போய், அச்சத்தில் நிலைகுலைந்து சிலுவைப் படையினர் தட்டுக்கெட்டு ஓட, சரமாரியாக அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் சரணடைந்தவர்களும் மட்டும் உயிர் பிழைத்தனர்.



ஆயிரக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டார்கள் சரி, அவர்களையெல்லாம் படை திரட்டிச் சென்ற துறுவி பீட்டர்? படையினரின் உணவுக்கு ஏற்பாடு செய்ய கான்ஸ்டன்டினோபிள் சென்றிருந்ததால் அவரது உயிர் அச்சமயம் பிழைத்தது.

இப்படியாக, அப்பட்டமான தோல்வியில் முடிவுற்றது ‘மக்களின் சிலுவைப் போர்’. அதன் காலகட்டம் கி.பி. 1096, ஏப்ரல் – அக்டோபர். முதலாம் சிலுவை யுத்தத்திற்கு முன்னோடியாக நிகழ்வுற்ற இந்த யுத்தத்தில் கிலிஜ் அர்ஸலான் அடைந்த வெற்றியே பிற்பாடு சிலுவைப் படையினர் வந்து சேர்ந்தபோது ஒரு பின்னடைவாக ஏற்பட்டுப்போனதுதான் பெருஞ் சோகம். தாம் அடைந்த இந்த எளிய வெற்றியின் அடிப்படையில் பின்னர் வந்த அந்தப் பெரும் படையின் தீவிரத்தையும் அபாயத்தையும் வலிமையையும் குறைத்து மதிப்பிட்டு விட்டார் கிலிஜ் அர்ஸலான். துறவி பீட்டரின் தலைமையில் வந்த கூட்டத்தைப்போல் அவர்களை இலகுவாக நினைத்துவிட்டார் அவர்.

அதற்கு முஸ்லிம்கள் அளித்த விலை?

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 12
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 14

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்






No articles in this category...