Tamil Islamic Media

இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?

01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா?

02. நம் வீட்டுப் பெண்களை மஹ்ரமல்லாத அந்நிய ஆண்களின் பார்வையில் தடுக்க விரும்பும் நாம், அடுத்த வீட்டுப் பெண்களை கடைக்கண்ணால் பார்க்கும் முரண்பாட்டை என்னவென்று கூறுவது?

03. முதியோர், அனாதைகளை ஆதரிப்பது பற்றி பிறருக்கு அட்வைஸ் பண்ணும் நாம், நமது வீட்டில் யாராவது அப்படி இருந்தால், நமது மனம் என்ன சொல்கிறது? நமது நடைமுறை அவர்களது விசயத்தில் எப்படி இருக்கிறது?

04. பொய் பேசுவது, புறம் பேசுவது தவறு என்று பள்ளியில் பயான் கேட்ட பிறகு, எத்தனை தடவை நமது நட்பு, சொந்தபந்தத்தைப் பற்றி புறம் பேசி பயானை மீறி இருப்போம், சொல்லுங்கள் பார்க்கலாம்?

05. எல்லோரிடமும் அன்பாக உருகி உருகி சலாம் சொல்லும் நாம், நமது மனைவி மக்களிடம், உடன் பிறந்தவர்களிடம் அப்படி உருக்கமாக ஸலாம் சொல்லி பழகியிருப்போமா?

06. இரவில் இஷாவுக்குப் பிறகு உண்டு உறங்கி ஓய்வெடுத்து அதிகாலையில் சுபுஹ் தொழுகைக்கு உற்சாகமாக எழவேண்டும் என்ற அர்த்தமுள்ள நபிமொழியை எத்தனை தடவை நாம் மீறி இருப்போம்?

07. பணம் படைத்தவர்கள், பெரும் பதவிகளில் உள்ளவர்களோடு ஃபோட்டோ எடுக்கும் நாம், எத்தனை தடவை பாமர மக்களோடு, சாமான்ய மனிதர்களோடு அட்லீஸ்ட் செல்ஃபியாவது எடுத்திருப்போமோ?

08. ஆடம்பர மற்றும் வரதட்சினை திருமணங்கள், மார்க்க அடிப்படையில் தவறு என தெரிந்தும், கொஞ்சம் கூட மனஉறுத்தல் இன்றி அந்த மாதிரி திருமண நிகழ்ச்சி யில் எத்தனை தடவை சந்தோசமாக பங்கெடுத்திருப் போம்?

09. சாலையில் மனிதர்களுக்கு இடர்தரும் கல்லோ முள்ளோ கண்ணாடிச்சில்லோ கிடந்தால், அதை அகற்ற முயற்சிப்பது நபிவழி என அறிந்தும், துளிகூட மனசாட்சி இல்லாமல் அதனை எத்தனை தடவை நாம் கடந்து போயிருப்போம்?

10. சத்தியத்துக்குத்தான் துணை போகவேண்டும். அசத்தியத்துக்கு ஒருபோதும் துணை போய் விடக் கூடாது என்பது இஸ்லாமிய பால பாடம். ஆனால், நமது குடும்பம், நட்பு வட்டம், நமது இயக்கம் என்ற அடிப்படையில் எத்தனை அசத்தியத்துக்கு அநியாயத்துக்கு துணை போயிருப்போம் நாம்?

இன்னும்..... பட்டியல் நீளும். இருப்பினும் யோசித்துப் பார்த்தால், அன்றாடம் ஏகப்பட்ட முரண்களோடுதான் நமது வாழ்க்கை நகர்கிறது. குறைந்த பட்சம்...மேலே உள்ள இந்த பத்து கேள்விகளையும் தனிமையில் இரண்டு ரக்அத் நஃபில் தொழுதுவிட்டு ஆற அமர யோசிப்போம்...!

இவ்வளவு பெரிய முரண்களோடு இறைவனிடம் நாம் கையேந்தினால், இறைவன் எப்படி நமது துஆக்களை - பிரார்த்தனைகளை அங்கீகரிப்பான்; ஏற்றுக் கொள்வான்...?

இப்படி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்தால், இறைவனிடம் துஆகேட்க - கையேந்த வெட்கமா இல்ல...?

எல்லாம் வல்ல இறைவா! இனிவரும் நாட்களிலாவது நாங்கள் ஹலால், ஹராம் பேணி முரண் இல்லாத வாழ்வு வாழ எங்களுக்கு நல்ல புத்தியையும் சந்தர்ப்ப சூழலையும் சாதகமாக்கி அருள்வாயாக!

மனித பலவீனங்களை வென்று, உன்னிடம் பிரார்த்திக் கும் தகுதியைப் பெற்று, ஸலாமத்தான பறக்கத்தான வாழ்வு வாழ, அருள்புரிவாயாக! ஆமீன், யா றப்பல் ஆலமீன்!

[சிங்கை பஷீர்... சிறிது வார்த்தை மாற்றங்களுடன்...]






No articles in this category...