Tamil Islamic Media

நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை

முஹம்மத் பகீஹுத்தீன்

எல்லாக் கதவுகளும் மூடப்படும் போது இதயம் கனக்கும். உள்ளம் நடுங்கும். விரிந்த பூமி ஒடுங்கிய பந்தாக மாறும். இருள்படர்ந்த வாழ்வில் இனி ஒளியேது என்று எண்ணத் தோன்றும்.

கவலைப்படாதே தோழா! இதுதான் இறை உதவி வரும் நேரத்திற்கு அறிகுறி. முன்னால் கடல் பின்னால் படை இனி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் மூஸாவிற்கு (அலை) கடல் பிளந்து வழி தந்தது.

பத்துக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தான் யூசுப் (அலை) மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால் கந்தல் ஆடை அவருடைய கற்பை காப்பாற்றும் ஆதாரமாக அமைந்தது. இறை உதவி எந்த வடிவில் எப்படி வரும் என்று யாராலும் கற்பனை பண்ணவே முடியாது.

உனது முயற்சிகள் தோல்விகண்டு நெஞ்சம் கனக்கும் போது, வலிகள் முள்ளாய் உன்தன் நெஞ்சில் குத்தும் போது நீ மனம் தளர்ந்து விரக்தி அடையலாம். இயலாமை உன்னை வாட்டி வதைக்கும். உனது அயராத உழைப்பும் அர்ப்பணமும் வீண்போகுதே என்று எண்ணத் தோன்றலாம்.

இந்த கசப்பான உணர்வு தான் இறைவன் பால் தஞ்சமடைவதற்கான நேரம் வந்து விட்டது என்ற செய்தியை தருகிறது.

இது பலவீனமான மனிதன் தன் இயலாமையை படைத்த ரப்பிடம் முறைப்பாடு செய்யும் தருணமாகும். நான் என்ற அகந்தையை வெளியேற்றி இனி நீதான் எல்லாம் என உன் உள்ளத்தை அறிந்த அல்லாஹ்விடம் உன்னை கொடுத்து விடு.

இதுகால வரை நீ அயராது பாடுபட்ட முயற்சிகளை எதுவும் செய்யாதது போல் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டிவிட்டு அவனிடம் சரணடைந்து விடு.

நிச்சயமாக எஜமானாகிய அல்லாஹ் அடியானுக்கு உதவுவான். அந்த நம்பிக்கையில் உறுதியாக இரு. நடந்து முடிந்த அனைத்தும் நன்மைக்கே என்று நம்பு. அப்போது அல்லாஹ் உனக்கு ஒரு வழி காட்டுவான். ஒருபோதும் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்காதே.

நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடாவிட்டாலும் நீ புரியாத வழியில் உனக்கு அல்லாஹ் உதவுவான். இறைவனுடைய வாக்குகள் நிச்சயமாக நிறைவேறும் என்று அசையாத நம்பிக்கை கொள்.

விரக்தி விசத்தை விட கொடியது. கவலைகளை மறந்து விடு. காரியம் செய்ய துணிந்து விடு. உலக வாழ்வில் எதுவும் பூரணமாக முடியாது.

இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி வரும். நிச்சயமாக இரவுக்கு பகலும் வரும்.






No articles in this category...