Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11

அஸாஸியர்கள்

டெஹ்ரானுக்கு அருகே ‘ரே’ என்றோர் ஊர். அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ் அந்த ஊரைச் சேர்ந்த பாரசீகன். ஸெல்ஜுக் சுல்தான் மாலிக் ஷாவின் பிரதம அமைச்சரான நிஸாமுல் முல்க்கின் வகுப்புத் தோழன்.


அவன் ஃபாத்திமீக்கள் எனப்படும் பனூ உபைதிகளின் இஸ்மாயிலீ கோட்பாட்டை ஏற்றுக்கொண்டான்.

அமைச்சருடன் இருந்த அறிமுகத்தினால் அவருடைய உறவினர் அபூமுஸ்லிம் என்பவரிடம் பணிக்குச் சேர்ந்தான் அல்-ஹஸன். அபூமுஸ்லிம் கோட்டைக் காவற்படையின் தளபதியாக இருந்தவர். அரசுப் பணி; அதுவும் முக்கியமான துறை. அப்படியான அந்தப் பணியில் சேர்ந்த ஹஸன் அஸ்-ஸபாஹ்வுக்கு எகிப்தின் உபைதிகளுடன் தொடர்பு இருப்பதும் அந்நாட்டு உளவாளிகள் அவனைச் சந்திப்பதும் அபூமுஸ்லிமுக்குத் தெரியவந்தது. அவர் விசாரிக்க ஆரம்பித்ததும், பார்த்தான் ஹஸன் அஸ்-ஸபாஹ், ‘நாம் மேற்படிப்பு படிப்போம்’ என்று எகிப்திற்குச் சென்றுவிட்டான். என்ன மேற்படிப்பு? இஸ்மாயிலீ கோட்பாட்டை அவர்கள் தலைமையகத்தில் அமர்ந்து ஆழப் பயில்வது.

எகிப்தில் அச்சமயம் கலீஃபாவாக ஆட்சி புரிந்த அல்- முஸ்தன்ஸிருடன் அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கலீஃபாவுக்கும் அவனைப் பிடித்துப் போய்விட்டது. விருந்தோம்பல், சொத்து, சுகம், உபகாரம் என்று அவனைச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டான் அல்-முஸ்தன்ஸிர். கலீஃபாவுடன் ஏற்பட்டுவிட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி, தான் பாரசீகத்தில் பனூ உபைதியின் இமாமாக உயர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை ஹஸன் அஸ்-ஸபாஹ்வுக்குத் தோன்றியது. தன் விருப்பத்தையும் அவன் முஸ்தன்ஸிரிடம் தெரிவித்தான். ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் நெருக்கம் ஏற்பட்டுவிட்டால் அதைக்கொண்டு ஆதாயம் அடைய நினைப்பது மனித இயல்புக்கு விரோதமா என்ன? அதனால் அதை ஒரு பெரும் குறையாக நாம் கருத முடியாது. மாறாக, அப்படி நிறைவேறியிருந்தாலும் சகித்துத் தொலைத்திருக்கலாமோ என்றுதான் அங்கலாய்க்க வேண்டியிருக்கிறது. பிறகு நேர்ந்த திருப்பங்கள் அப்படி.

பதினெட்டு மாதங்கள் தன்னுடைய பொழுதை எகிப்தில் கழித்தான் ஹஸன் அஸ்-ஸபாஹ். அங்கு அவன் தங்கியிருந்த காலத்தில் முஸ்தன்ஸிர் தனக்குப்பின் தன்னுடைய மூத்த மகன் நிஸார்தான் அடுத்த கலீஃபா, பட்டத்து வாரிசு என்று அறிவித்ததை அறிந்து வைத்திருந்தான். மூத்த மகனைப் பட்டத்து வாரிசாக அறிவிப்பதுதான் அவர்களது வழக்கமாக இருந்தது. ஆகவே நமது வழித்துறையின்படி சரியான தீர்ப்பையே நமது கலீஃபா ஏற்படுத்தியுள்ளார் என்று அவனுக்கும் அதில் திருப்தி.

ஆனால், முஸ்தன்ஸிரின் காலத்தில்தான் உபைதி வம்ச ஆட்சி ஒரு திருப்புமுனையை அடைந்தது. கலீஃபாதான் எல்லாம், அவர் சொல்படிதான் ஆட்சியும் செயல்பாடும் என்றிருந்த அவர்களுடைய நிலையில் அமைச்சர்களின் செல்வாக்கும் அரசியல் தலையீடும் குறுக்கிட ஆரம்பித்தன. எந்த அளவிற்கு அது சென்றது என்றால், கலீஃபாவையும் மீறித் தங்களது திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் அளவிற்கு அவர்களின் கை ஓங்க ஆரம்பித்துவிட்டது.

இந்த அரசியல் மாற்றத்தைக் கவனித்த ஹஸன் அஸ்-ஸபாஹ் அதை ரசிக்கவும் இல்லை; ஃபாத்திமீக்களின் தலைமை அதிகாரம் அவ்விதம் சீரழிவதையும் விரும்பவில்லை. அப்படியோர் அவலம் ஃபாத்திமீ ஆட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாது; எப்படியும் அல்-முஸ்தன்ஸிரின் கொடியைப் பாரசீகத்திலும் குராஸானிலும் பறக்கவிட வேண்டும்; தூய்மையான இஸ்மாயிலீ மத்ஹபை அங்கு நிறுவிவிட வேண்டும் என்று கருதினான். அதனால் ஹி. 473ஆம் ஆண்டு பாரசீகத்தின் இஸ்ஃபஹானுக்கு அவன் திரும்பியதும் நிஸாருக்கு ஆதரவாகப் பரப்புரை புரிந்து செயல்பட ஆரம்பித்தான் – தீவிரமாக, வெகு தீவிரமாக.

இந்த விஷயம் சுல்தான் மாலிக் ஷாவின் அமைச்சர் நிஸாம் அல்-முல்க்குக்கு எட்டியது. ‘எகிப்திற்குச் சென்றவன் போய்த் தொலைந்தான் என்று நினைத்தால் திரும்ப வந்து இப்படி மற்றொரு குழப்பத்தை ஆரம்பித்திருக்கிறானே’ என்ற கவலையும் ஆத்திரமும் அவருக்கு ஏற்பட்டு அவனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார் நிஸாம் அல்-முல்க். அதை அறிந்ததும் அங்கிருந்து சற்று வடமேற்கே உள்ள ஃகஸ்வீன் பகுதிக்குத் தப்பிச் சென்று தனது செயல்பாடுகளைத் தொடர்ந்தான் ஹஸன் அஸ்-ஸபாஹ்.

oOo

ஈரானின் வடக்குப் பகுதியில், காஸ்பியன் கடலுக்குத் தெற்கே அல்-போர்ஸ் என்றொரு மலைத்தொடர் உள்ளது. அதில் 6000 அடி உயரத்தில் அலாமுத் என்றொரு கோட்டை. அதற்குச் செல்லப் பெயர் கலஅத் அல்-மவுத். அதாவது மரணக் கோட்டை. அலீ ரலியல்லாஹு அன்ஹுவின் வழித்தோன்றல்கள் எனப்படும் அலாவீப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் அதை ஆண்டுவந்தான். அவனிடம் வந்து சேர்ந்தான் ஹஸன். வந்தவனை விருந்தினனாக ஏற்று, தங்குவதற்குக் கோட்டையில் இடமும் தந்து விருந்தோம்பல் புரிந்தான் அந்த அலாவீ. ஆனால் ஒண்ட வந்த ஹஸன் அந்த ஊர் அலாவீயை விரட்டிவிட்டுக் கோட்டையைக் கைப்பற்றி விட்டான். அடுத்து அக்கம்பக்கத்தில் பரவலாகக் கிடந்த கோட்டைகள், தெற்குப் பகுதிகள் என்று சுற்றி வளைத்து, ஏறத்தாழ அறுபது கோட்டைகள் அவன் கைக்குள் வந்தன. அலாமுத் கோட்டை தலைமையகமாக மாற, அதற்குள் நுழைந்தான் அவன், நுழைந்தவன் நுழைந்தவன் தான். அடுத்த முப்பத்தைந்து ஆண்டுகள் – ஒருநாள், ஒரு நொடிகூட வெளியில் வராமல் – அவனது சொச்ச வாழ்நாள் முழுவதும் அதனுள்ளேயே கழிந்தது.


அப்படியானால், அவன் ஊரை விட்டு, உலகை விட்டு ஒதுங்கித் துறவறம் பூண்டுவிட்டான் போலும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அது தப்பு. மகா தப்பு. ஆள்தான் உள்ளே பதுங்கியிருந்தானே தவிர அவன் அங்கிருந்தபடி ஏவி நிகழ்த்திய காரியங்கள் அனைத்தும் சதிப் படுகொலைகள்.

இதற்கிடையே, ஹஸன் அஸ்-ஸபாஹ் எகிப்திலிருந்து திரும்பிப் பதினான்கு ஆண்டுகள் கழிந்து, ஹி. 487 / கி.பி. 1094 ஆம் ஆண்டு கலீஃபா அல்-முஸ்தன்ஸிர் அங்கு மரணமடைந்தான். உருவானது அரசியல் களேபரம். ஏற்கெனவே இத்னா ஆஷாரீ, இஸ்மாயிலீ என்று இரு பிரிவாக உடைந்திருந்த ஷீஆக்கள் இப்பொழுது மேலும் இரண்டாக உடைந்தனர். ஒரு பிரிவு மூத்த மகன் நிஸார்தான் பட்டத்து வாரிசு; அதுதான் மரணமடைந்த கலீஃபாவின் அறிவிப்பு என்றது. மற்றொரு பிரிவோ, அதெல்லாம் சரிப்படாது, கடை மகனான அல்-முஸ்தஆலி அஹ்மது அபுல் காஸிம்தான் கலீஃபா என்று தெரிவித்தது. அந்த இரண்டாவது கட்சியின் தலைவன் முஸ்தன்ஸிரின் ஆளுநராக இருந்த பத்ரு அல்-ஜமாலி. அவனும் முஸ்தன்ஸிரின் சகோதரியும் ஒன்று சேர்ந்து, சரியானபடித் திட்டமிட்டு, கடைக்குட்டி அஹ்மது அபுல் காஸிமின் தலையில் கிரீடத்தைச் சூட்டிவிட்டனர்.

ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் நிஸாரின் ஆதரவாளர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கிழக்குப் பகுதியிலுள்ள பாரசீகத்திற்கு அவர்கள் தப்பி ஓட, அங்கு அவர்களை வரவேற்கத் தயாராகக் காத்திருந்தான் ஹஸன் அஸ்-ஸபாஹ். அவனும் அங்கிருந்த அவனுடைய ஆதரவாளர்களும் வந்து சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து நிஸாரீக்கள் என்ற பிரிவு உருவானது. அது வலுவான தீய சக்தியாகப் பரிணமித்தது.

நிஸாரின் வழித்தோன்றலாகத்தான் மஹ்தி அவதரிப்பார். துருக்கியர்களிடமிருந்து இஸ்லாத்தை மீட்டுத் தூய்மைப்படுத்துவார் என்று பரப்புரை புரிய ஆரம்பித்தான் ஹஸன் அஸ்-ஸபாஹ். நிஸாரின் முப்பாட்டன் உபைதுல்லாஹ் தன்னை மஹ்தி என்று அறிவித்துக்கொண்டுதானே பட்டத்திற்கு வந்தான்; செத்துப்போனான்; இந்தப் பாழாய்ப்போன உபைதி வம்சம் உருவானது. இப்பொழுது இந்த நிஸாரின் வழித்தோன்றலாக மஹ்தி அவதரிப்பார் என்றால் உபைதுல்லாஹ்? கேள்வி எழுகிறதல்லவா? ஆனால் அந்தக் கூட்டத்தில் யாருக்கும் அப்படி எந்தச் சந்தேகமும் எழவில்லை. குறுக்குக் கேள்வியும் கேட்கவில்லை. அப்படியே நம்பினார்கள். நம்பியது நம்பினார்கள் சரி. ஆனால், அவர்களின் மரியாதைக்குரிய அந்த நிஸார் வாரிசு இன்றி மரணமடைந்த பிறகும்கூட நம்பியதுதான் வேடிக்கை. அதற்கு ஹஸன் அஸ்-ஸபாஹ் அளித்த வியாக்கியானம் அப்படி. ‘இமாம் மஹ்தி மறைந்திருக்கிறார். திடீரென்று அவதரிப்பார்’!

தன்னைத்தானே நிஸாரின் பிரதிநிதியாக அறிவித்துக்கொண்டு ஹஸன் அஸ்-ஸபாஹ் புரிந்த பிரச்சாரம் வறியவர்களிடமும் ஆதரவற்ற எளியவர்களிடமும் மிகவும் எடுபட்டது. கேள்வி கேட்காமல் இணைந்தா்கள். அவனது சொல்லுக்கு மறுபேச்சில்லாமல் கட்டுப்பட்டு மூர்க்கத்தனமாகச் செயல்பட ஆரம்பித்தார்கள். மரணத்திற்கு அஞ்சாத. கொலைகாரர்களாக உருவானார்கள். ஹஸன் அஸ்-ஸபாஹ்வுக்கு எந்தளவு நிஸாரின் மீது வெறித்தனமான பற்று இருந்ததோ அதற்குச் சற்றும் குறையாத பகைமை ஸன்னி முஸ்லிம்களின் மீதும் ஸெல்ஜுக் சுல்தான்களின் மீதும் அப்பாஸிய கிலாஃபத்தின் மீதும் இருந்தது. அப்பாஸியர்களுக்கு ஆட்சி புரிய எந்தவொரு அருகதையும் அதிகாரமும் கிடையாது என்று அவன் திட்டவட்டமாக நம்பினான்.

அவர்களை வீழ்த்த அவன் தேர்ந்தெடுத்தச் செயல்பாடுதான் சதிக்கொலைகள். அமீர்கள், அதிகாரிகள், அரபியர், துருக்கியர், சுல்தான், பாதிரி, அமைச்சர், தளபதி, ஷீஆ, ஸன்னி என்று யாராக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி, தங்களுக்குப் பிடிக்காதவர்களை, அல்லது தான் கொல்ல விரும்பியவர்களைத் திட்டமிட்டு, நேர்த்தியாகக் கொல்ல ஆரம்பித்தான். தொடரின் ஆங்காங்கே அவற்றைப் பார்க்கத்தான் போகிறோம். இங்கு இச்சமயம் பிரபலமான ஒருவரின் கொலையை வேண்டுமானால் அறிந்து கொள்ளலாம். இவனது செயல்பாடுகளுக்கு ஆரம்பத்திலிருந்தே தொந்தரவாக இருந்த சுல்தான் மாலிக் ஷாவின் பிரதம அமைச்சர் நிஸாமுல் முல்க்கை, தன் முன்னாள் வகுப்புத் தோழரை, வெற்றிகரமாகக் கொன்றான் ஹஸன் அஸ்-ஸபாஹ்.


தன் கூட்டத்திலிருந்து ஆளைத் தேர்ந்தெடுத்துப் பணியை ஒப்படைப்பான். தனியாளாகவோ ஓரிருவராகவோ நாலைந்து பேர் கொண்ட சிறு குழுவாகவோ அவர்கள் கிளம்புவார்கள். கத்தி, வாள், குறுவாள் என்று ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள். சமயங்களில் அக் கொலையாளிகள் தாக்கப்பட்டு மரணமடைவதும் உண்டு. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தற்கொலைப் படைபோலத்தான் செயல்பட்டனர். அவர்களுக்கு அஸாஸியர்கள் என்ற பெயர் ஏற்பட்டது. அதன் ஆங்கிலப் பதமாக ‘Assassins’ உருவாகி, தொழில்முறைக் கொலையாளிகளுக்கான பெயராக அது இன்றளவும் நிலைத்துவிட்டது.

இந்தப் பெயரைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையொன்றும் வரலாற்று நூல்களில் உலாவுகிறது. ‘ஹஷீஷ் என்பது கஞ்சா வகையைச் சார்ந்த ஒரு லாகிரிப் பொருள். நிஸாரீக்கள் அந்த ஹஷீஷைப் பயன்படுத்துபவர்கள். ஹஷீஷ் பாவித்து, அந்த போதையை ஏற்றிக்கொண்டு, ஏகாந்த நிலையில் அவர்கள் கொலை புரியச் செல்வார்கள். அதனால்தான் தம் உயிருக்கு அஞ்சாமல் துணிச்சலாக அவர்களால் செயல்பட முடிந்தது. அதுதான் அவர்களது தொழில் இரகசியம். அதனால்தான் அவர்கள் ஹஷாஷியர்’ என்று அழைக்கப்படுகின்றனர் எனப் பரவலாக நம்பப்பட்டது. ‘அதற்கான வலுவான ஆதாரம் இல்லை. அது உண்மையில்லை. மாறாக, அந்தக் கொலையாளிகளை இகழ்வதற்காக, மட்டந்தட்டுவதற்காக அப் பதம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது’ என்பது பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் முடிவு.

போதை ஏற்றிக் கொண்டார்களோ இல்லையோ – ஆனால் தாங்கள் குறி வைத்தவர்களின் அங்கங்களில் இலகுவாக ஆயுதங்களை ஏற்றிச் செருகி, தம் இஷ்டத்திற்குக் கொலை புரிந்து, கனக்கச்சிதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் உண்மை. கொடூரமான உண்மை. மக்கள் மத்தியில், ஆட்சியாளர்கள் மத்தியில் கிலி ஏற்பட்டது. எந்த நேரத்தில் யார் எங்கிருந்து தாக்குவார்கள் என்று முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரும் எந்நேரமும் எச்சரிக்கையுடனேயே இருக்க நேரிட்டது. பிற்காலத்தில் சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபியை அவர்கள் குறிவைத்து, இருமுறை தாக்குதல் நடத்தி, இரண்டிலும் அவர் உயிர் தப்பியது இறைவனின் நாட்டமின்றி வேறில்லை. அதற்குப்பின் அவரும் தமக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திக்கொண்டு உறங்கும்படி ஆனது.

இவ்விதம் முதலாம் சிலுவைப் போருக்கு முந்தைய காலத்தில் உருவாகி, வளர்ந்து, வலுவான ஒரு சக்தியாகப் பரிணமித்த இவர்களின் ஆட்டம் நீண்ட நெடுங்காலம் தொடர்ந்தது. கிழக்குப் பகுதியான பாரசீகத்தில் உருவான இந்த நிஸாரீப் பிரிவு புற்று நோயைப் போல் இதரப் பகுதிகளுக்கும் பரவியது. ஹஸன் அல்-ஸபாஹ்வின் ஆதரவாளர்கள் சிரியாவிலும் பரவ ஆரம்பித்தனர். கி.பி. 1103ஆம் ஆண்டு பாரசீக அஸாஸியர்களின் அரபுக் கிளை அங்கு உருவானது. சிரியாவில் இருந்த முக்கியமான கோட்டைகளையெல்லாம் அவர்கள் கைப்பற்றினர். அவற்றுள் முக்கியமான ஒன்று மஸ்யஃப்.

அது மட்டுமின்றி கி.பி. 1120ஆம் ஆண்டுகளில் டமாஸ்கஸ் நகரத்தை இந்த அஸாஸியர்கள் தங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்துவிட்டனர். ஆனாலும் டமாஸ்கஸ் நகர மக்களிடம் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அந்தச் சங்கடத்தில் அவர்கள் ஒரு காரியம் செய்தனர். முதலாம் சிலுவை யுத்தம் முடிந்து கிறிஸ்தவர்கள் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்த காலம் அது. ஜெருசலம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோயிருந்தது. அங்கு மன்னனாக வீற்றிருந்தவரிடம் சென்று, ‘நாங்கள் டமாஸ்கஸை உங்களுக்குத் தந்து விடுகிறோம். நீங்கள் எங்களுக்கு டைர் நகரைத் தந்துவிடுங்கள்’ என்று ஒப்பந்தம் பேசினர். சிலுவைப் படையினரிடமிருந்து அகதிகளாகத் தப்பிப் பிழைத்து, டமாஸ்கஸில் தஞ்சமடைந்திருந்த அரபியர்கள் மத்தியில் இது பெரும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாகி கிளர்ந்தெழுந்து அங்கிருந்த அஸாஸியர்களைக் கொன்று தீர்த்தார்.

பத்து ஆண்டுகள் கழிந்தன. மேற்சொன்ன நிகழ்வில் தப்பிப் பிழைத்த நிஸாரீ இளைஞன் ஒருவன் இருந்தான். அவனது பெயர் சுல்தான் இஸ்மாயீல். பேராசையும் கொடூர புத்தியும் கொண்ட அவன், நிஸாரீக்களுக்கு எதிரிகள் எனத் தான் கருதியவர்களை எல்லாம் கொன்று குவிக்க ஆரம்பித்தான். டமாஸ்கஸ் நகரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அது அவனுக்கு மக்கள் மத்தியில் பெரும் விரோதத்தை ஏற்படுத்திவிட்டது. எங்கே அது தனக்குக் கேடாக வந்து முடியுமோ என்று அச்சப்பட்ட அவன் வித்தியாசமான முடிவொன்றை எடுத்தான். என்னவென்று? டமாஸ்கஸ் நகரை இமாதுத்தீன் ஸன்கியிடம் ஒப்படைப்பது என்று!

இதை வாசித்தீர்களா? : சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -8
இத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில், ஸலாஹுத்தீன் ஐயூபியின் தந்தைக்கு அடைக்கலம் அளித்தார் என்று வாசித்தோமே அந்த இமாதுத்தீன் ஸன்கி. அவரோ ஸன்னி முஸ்லிம். ஸெல்ஜுக் துருக்கியர்களின் வழித்தோன்றல். அப்பாஸிய கலீஃபாவுக்குக் கட்டுப்பட்டவர். அவரிடம், ‘நீ எனக்குப் பாதுகாப்பு அளி’ என்று உதவி கோரினான் இஸ்மாயிலீ உபைதிகளின் வழி தோன்றிய, நிஸாரீ. இது ஆச்சரியமான அரசியல் திருப்பமல்லவா? அல்ப் அர்ஸலான் காலத்திலிருந்தே டமாஸ்கஸைக் கைப்பற்ற ஸெல்ஜுக் துருக்கியர்கள் முயற்சிக்கு மேல் முயற்சி, படையெடுப்புக்கு மேல் படையெடுப்பு என்றுதானே இருந்து வருகிறார்கள். இப்பொழுது அவர்கள் மடியில் தானாகக் கனி கனிந்து விழுகிறதென்றால் வலிக்குமோ? ஆனால், அங்கு ஒரு திருப்பம் ஏற்பட்டது.

இஸ்மாயிலீன் தாய் ஸுமுர்ருத் பச்சைத் துரோகியாகிவிட்ட தன் மகனின் திட்டத்திற்குச் சிவப்பு முற்றுப்புள்ளி வைத்தாள். அடித்துத் திருத்தும் வயதை அவன் கடந்துவிட்டான் என்பதால் அவனைக் கொன்று ஒழித்துவிட்டு, தன்னுடைய மற்றொரு மகனிடம் டமாஸ்கஸை ஒப்படைத்தாள். ஆனால் சிறு காலங் கடந்த பின் அந்த மகனை வேறு யாரோ, ரகசியமாகக் கொன்றுவிட்டார்கள். அது ஸுமுர்ருத்துக்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தான் ஆட்சியில் அமர்த்திய மகனைக் கொன்றவனைக் கண்டுபிடித்துப் பழி வாங்க வேண்டும் என்று துடித்தவள், திட்டமிட்டாள்; முடிவெடுத்தாள். அது அடுத்தத் திருப்பம். யாரிடம் ஒப்பந்தம் பேசினான் என்பதற்காகத் தன் மகன் இஸ்மாயிலைக் கொன்றாளோ அதே இமாதுத்தீன் ஸன்கியிடம், “நான் உன்னை மணந்துகொள்கிறேன். என் இரண்டாம் மகனைக் கொன்றவனைக் கண்டுபிடித்து நீ பழி தீர்க்க வேண்டும்” என்று செய்தி அனுப்பினாள்.

“வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழி உடைந்தது. இப்பொழுது அது தாயின் வடிவில் மீண்டும் திரள்கிறது” என்று இமாதுத்தீன் ஸன்கி மகிழ்ந்த நேரத்தில் அடுத்தொரு திருப்பம் ஏற்பட்டது. டமாஸ்கஸில் முயினுத்தீன் உனார் என்ற புதிய தலைவன் தோன்றினான். அவனும் ஸன்னி முஸ்லிம்தான். அவன், ‘இதோ பார். நீ நெருங்கினால் நான் பரங்கியர்களிடம் (சிலுவைப் படை) உதவி கோருவேன்’ என்று இமாதுத்தீன் ஸன்கியை மிரட்ட ஆரம்பித்தான். டமாஸ்கஸ் நகரைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துச் சிலுவைப் படையினரிடம் கொடுத்ததைப் போல் ஆகிவிடுமே என்று யோசித்த இமாதுத்தீன் ஸன்கி,டமாஸ்கஸை நோக்கிச் செல்லும் திட்டத்தை அச் சமயம் கைவிடும்படி ஆனது. டமாஸ்கஸ் ஸெல்ஜுக்கியர்களுக்கு மீண்டும் எட்டாக்கனி ஆனது.

சிரியாவிலுள்ள கோட்டைகளை அஸாஸியர்கள் கைப்பற்றினார்கள் என்று மேலே பார்த்தோமில்லையா. அதில் முக்கியமான ஒன்று மஸ்யஃப். அது பாரசீகத்தின் அலாமுத் கோட்டையைப் போலவே பலமானதொரு கோட்டை. மத்திய தரைக் கடலிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்தது. அஸாஸியர்கள் உருவாகி, சுமார் ஐம்பதாண்டு காலம் கழிந்திருக்கும். ஹி. 558 / கி.பி. 1163ஆம் ஆண்டு பாரசீகத் தலைமையகமான கலத் அல்-மவுத், ரஷீதுத்தீன் ஸினான் அல்-பஸரீ என்பவனை சிரியாவிலுள்ள அந்-நுஸைரிய்யாவைப் பொறுப்பேற்றுக்கொள்ள அனுப்பி வைத்தது. அவனுக்குத் தலைமையகமானது இந்த மஸ்யஃப் கோட்டை. பாரசீகத்தில் ஹஸன் அஸ்-ஸபாஹ் எப்படி அவர்களின் பிரபலமான தலைவனாகத் திகழ்ந்தானோ அதைப்போல் சிரியாவில் மிகவும் பிரபலமான தலைவனான் ரஷீதுத்தீன் ஸினான். வரலாற்றில் அவனுக்கு அமைந்த பட்டப் பெயர் ஷெய்குல் ஜபல் – மலையின் தலைவன்.

இவ்விதம் கொலையே பணியாய் வாழ்ந்த அந்த அஸாஸியர்கள், கி.பி. 1256ஆம் ஆண்டு, ஸலாஹுத்தீன் ஐயூபி மரணமடைந்து நூறு ஆண்டுகளுக்குப் பின், மங்கோலியர்களின் படையெடுப்பின்போதுதான் அழிந்தனர். சிரியாவின் அஸாஸியர்கள் கி.பி. 1273ஆம் ஆண்டு எகிப்தின் பய்பர் சுல்தான்களால் அடக்கப்பட்டனர். அத்துடன் அஸாஸியர்கள் என்ற அந்தக் கொலைப் பிரிவு முடிவுக்கு வந்தது.

அப்படியானால் நிஸாரீக்கள்? அந்தப் பிரிவு மட்டும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து, இன்று ‘ஆகா கான்’ பிரிவாகப் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் - 10
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் - 12

இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்








1 மான்சா மூசா: வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை!

மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
28 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
29 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
32 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
33 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
34 திருநெல்வேலி வரலாறு...!
35 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
36 அந்த இரண்டணா ......
37 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
44 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
45 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
46 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
47 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
48 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
49 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
50 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
56 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
57 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
58 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
59 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
60 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
61 சூஃபிக்களும் புனித போர்களும்
62 யார் தேச விரோதி?
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
65 விடுதலைப்போரில் வீரமங்கையர்
66 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
67 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
68 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
69 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
70 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
71 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
72 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
73 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
74 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
75 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
76 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
77 தமிழகத்தில் முஸ்லீம்கள்
78 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
79 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
80 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
81 பாடலியில் ஒரு புலி
82 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
83 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
84 முதல் சுதந்திரப் பிரகடனம்
85 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
86 காலித் பின் வலீத் (ரலி)
87 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
88 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
89 முதல் வாள்!
90 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
91 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
92 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்