Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 7

போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு மளமளவென்று காரியங்கள் நடைபெற ஆரம்பித்தன.


வெகு கவனமாகத் திட்டமிட்டுக் காய்கள் நகர்த்தப்பட்டன. அடுத்த ஒன்பது மாதங்கள் பிரான்ஸ் நகரின் குறுக்கும் நெடுக்கும் சுற்றிச் சுற்றிப் பிரச்சாரம்; ஐரோப்பாவின் பல நகரங்களுக்கும் சென்று கிறிஸ்தவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தின் விளக்கவுரை என்று போப் அர்பனுக்கு ஓயாத ஒழியாத பிரச்சாரப் பயணம்.

ஆனால் அதே நேரத்தில் தம் உள்நோக்கத்தை மறைத்துக்கொண்டு, தமது திட்டத்தை மட்டும் சமர்ப்பிப்பதில் போப் அர்பனுக்கு அலாதித் திறன் வாய்த்திருந்தது. எந்த இலக்கை முன்மொழிந்தால் மேற்குலகு தன்னிலை மறந்து, மகுடி அசைவுக்குக் கட்டுண்ட பாம்பாய் அணி திரளுமோ அந்த இலக்கான ஜெருசலத்தை மட்டுமே அவர் தமது பிரச்சாரத்தில் முன்னெடுத்தார். கான்ஸ்டன்டினோபில் தேவாலயங்களைப் போப்பின் திருச்சபைக்குள் கொண்டு வருவது பற்றியெல்லாம் அவர் விவரிக்கவே இல்லை. அவ் விஷயத்தை மறந்தும் அவர் தம் உரையில் தொடவில்லை. உள்பொதிந்துள்ள அரசியலையும் அனைத்துத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொன்னால் அது அனாவசியமான கவனச் சிதறலாக அமையும், ஒற்றுமையான அணிவகுப்பிற்கு எதிராக அமையும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, திருச்சபையின் முன்னுரிமைகளைச் சரியான வகையில் பட்டியலிட்டு, ஜெருசலத்தை முன்னிலைப்படுத்தி, அதன் அடிப்படையில் அவரது செயல்கள் அமைந்திருந்தன.

அந்நிய சக்திகளால் புனித நகரம் கேவலப்படுத்தப்படுகிறது என்று ஆரம்பித்து, மக்களின் பாவ மீட்சிக்கான புதிய பாதையை வாக்குறுதி அளித்து, அவர்களது உணர்வுகளைத் தம் வசப்படுத்தி, அவர்களை ஆயுதமேந்த வைக்கும் தம் திட்டத்தைப் பிழையின்றி, குறையின்றிச் சிறப்பாகச் செய்தார் போப் அர்பன். தத்தம் பாவங்களைக் குறித்து மக்களிடம் ஏற்பட்டிருந்த குற்ற உணர்வுகளையும் அவற்றின் விளைவாக அவர்களுக்குள் உருவாகியிருந்த ஆன்மிக மாற்றத்தையும் சரியான வகையில் தீண்டியது அவரது உரை. அவரது உரையைக் கேட்டவர்களுக்கெல்லாம் மின்சாரம் தாக்கிய உணர்வுதான் ஏற்பட்டது. கண்களில் குளம்; உணர்ச்சி உத்வேகத்தில் உடல்களில் நடுக்கம் என்றாகிப் போனார்கள் அம் மக்கள்.

இந் நிகழ்வுகளுக்கு முன்பே அம் மக்களிடத்தில் ஆன்மிக உந்துதல் ஏற்பட்டிருந்தது என்று பார்த்தோமில்லையா? அது எந்தளவு இருந்ததென்றால், கிறிஸ்துவத்தைத் தவிர இதர மதங்களைப் பின்பற்றும் மக்களெல்லாம் மாபாவிகள் என்ற பெருவெறுப்பு அவர்கள் மத்தியில் பரவியிருந்தது. மிகையில்லை. ஸான்சோன் த ஆன்டியோஸ் (Chanson d’Antioche) எனப்படும் காவியக் கவிதை லத்தீன் கிறிஸ்தவர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்த, “சபிக்கப்பட்ட விக்கிரகக்காரர்கள்” மீதான பழிவாங்கும் மனோநிலையை ஒளிவின்றித் தெரிவிக்கிறது. அது முஸ்லிம்களை மட்டும் கிறிஸ்துவத்திற்கு விரோதமானவர்களாகச் சித்திரிக்கவில்லை. கத்தோலிக்க தேவாலயத்திற்கு மாற்றமானவர்கள் அனைவரையும் அப்படித்தான் விவரித்தது.



அதனால்தான் போப்பின் க்ளெர்மாண்ட் உரை அவர்களுக்கு வெறுமே போருக்கான அழைப்பாக மட்டும் அமையாமல் அதையும் தாண்டிப் புனிதம் என்றாகிவிட்டது. அவரது உரை அவர்களுடைய மத நம்பிக்கையின் ஆணிவேரைத் தொட்டதால் அவர்களுக்குள் ஏற்பட்டதெல்லாம் சிலிர்ப்பு. தங்களது மீட்சிக்கும் மறுமை வாழ்வுக்கும் சிலுவை யுத்தமே சரியான பாதை என்று தோன்றியதால் அவர்கள் மனமெல்லாம் உற்சாகம். சிலுவை யுத்தத்தில் பங்கேற்பதன் மூலம் போப்புக்கோ தனி நபருக்கோ தாங்கள் ஊழியம் புரியப்போவதில்லை; மாறாக தேவனுக்கு முழுக்க முற்றிலும் அடிபணியப் போகிறோம் என்று அப்பட்டமான தேவ நம்பிக்கை.

oOo

போப் அர்பனின் திட்டத்தின் பகுதியாகப் பல பகுதிகளுக்கும் மடல்கள் அனுப்பப்பட்டன. மக்கள் பல தரப்பட்டவர் இல்லையா? அதனால் அவர்களது மனோ இயல்புக்கு ஏற்பப் பேசி, விவரித்து, அவர்களைப் போருக்குத் தூண்ட திறமையான பரப்புரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரபல்யமான பிரச்சாரகர்களுக்கு ஐரோப்பா முழுவதும் சிலுவை யுத்தப் பிரச்சாரத்தைக் கொண்டு செல்வதே முழு நேர வேலையானது. தேவாலயத்தின் அனுமதி பெற்றவர்கள், பெறாதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லாமல், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் பிரச்சார ஆற்றல் இருக்கிறதா, அது போதும் என்று அந்தப் பிரச்சாரகர்கள் தங்கள் பங்குக்குப் பேசி உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். போப்பின் க்ளெர்மாண்ட் உரையை நேரில் கேட்டிருந்த பாதிரியார்களோ அதைத் தங்களது ஊர்களில் தங்களின் மக்கள் மத்தியில் சற்றும் வீரியம் குறையாமல் பரப்பிக்கொண்டிருந்தனர்.

போப் அர்பன் II கிறிஸ்துவ மதகுருமார்களையும் பாதிரியார்களையும் தொடர்ந்து சந்தித்தார். பல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முஸ்லிம்களின்மீது போர் தொடுக்கப் படை திரட்டுவது, அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்துத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பிறகு மதத் தீர்மானங்களின் பட்டியல் ஒன்று வரைந்து வெளியிடப்பட்டது.

• தண்டனைக்குரிய பாவம் புரிந்தவன் யாராக இருந்தாலும் அவன் இந்தப் புனிதப் போரில் பங்கெடுப்பதன் மூலம் தனது பாவங்களிலிருந்து மீட்சி பெற்றுவிட முடியும்.

• புனித நகரை மீட்கப் படையெடுத்துச் செல்பவனுடைய சொத்து, செல்வத்திற்குத் திருச்சபை பொறுப்பு. அது அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து அவன் திரும்பி வந்ததும் அவனிடம் ஒப்படைக்கும்.

• போரில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் சிலுவை அணிய வேண்டும்.

• இதில் இணைய ஒருவன் சிலுவையைத் தூக்கிவிட்டால் அவன் படையினருடன் ஜெருசலம் வரை சென்று தனது போர் வாக்குறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். மனம் மாறிவிட்டால், அவன் சமூகத்திலிருந்து தள்ளிவைக்கப்படுவான்.

• முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்படும் ஒவ்வொரு நகரமும் தேவாலயத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

• ஒவ்வொருவரும் கன்னி மேரியின் விழா நாளன்று தத்தம் ஊரிலிருந்து கிளம்புவதற்குத் தயாராக வேண்டும்.

போப் அர்பன் II இந்தப் பட்டியலை பாதிரியார்களிடம் கொடுத்து ஐரோப்பாவிலிருந்த அரசர்களிடம் அவர்களை அனுப்பி வைத்தார்.

அரசர்கள் நேரடியாகப் படையில் சேரவில்லையே தவிர, அந்தந்த ஊரை, நாட்டைச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரபுக்கள் நேரடியாகப் படையில் இணைந்தனர். அரசர்களுக்கு அடுத்துப் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த அவர்கள் சிலுவை யுத்தத்தில் பங்கு பெறுகிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களுடைய வம்சத்தினர், உறவினர்கள் அப்படியே கூட்டங் கூட்டமாக அவர்களைப் பின்தொடர்ந்து இணைந்தனர். அந்தந்தப் பிரபுக்களுக்கு அவர்களது படை தனி இராணுவப் பிரிவாக மாறி, அதற்கு அவர்கள் தலைவர்கள் ஆனார்கள். அவர்களுக்கு இளவரசர்கள் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

படையில் இணைந்த ஒவ்வொருவரும் ‘எனது பயணம் ஜெருசலத்தை நோக்கி’ என்று சிலுவை யுத்தப் பிரமாணத்தை மொழிந்து தங்களது ஆடைகளில் சிலுவைக் குறியைத் தைத்துக்கொண்டனர். இத்தாலியின் தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்ட் (Bohemond of Taranto) இளவரசர் தம்முடைய மிக விலையுயர்ந்த மேலங்கியைத் துண்டுகளாக்கித் தந்தார். அவையெல்லாம் சிலுவைகளாகத் தைக்கப்பட்டன. மற்றும் பலரோ, ‘அப்படியான அங்கி என்னிடம் இல்லையென்றால் என்ன? என் தியாகம் சளைத்ததா’ என்பதைப் போல் தங்களது அங்கத்தில் சிலுவைக் குறியைச் செதுக்கி வடுவாக்கிக் கொண்டனர். வேறு பலருக்கு உடலிலும் ஆடையிலும் சிலுவையை வரைவதற்கு அவர்களது உதிரம் மையானது.

இப்படியாக மேற்கு ஐரோப்பா முழுவதும் சிலுவை யுத்தச் செய்தி பரவி, அது உச்சபட்ச போர் வெறியாக மாறி, அவர்களது வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத வகையில் யுத்தத்திற்கு மக்களின் பேராதரவு பெருக ஆரம்பித்தது. மக்கள் போருக்குத் திரள ஆரம்பித்தனர். திரண்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் வேறுபாடு உள்ளது. சிலர் அந்த எண்ணிக்கை ஐந்து இலட்சம் என்று தெரிவிக்கிறார்கள். அன்றைய கால வரலாற்று ஆசிரியர் துறவி ராபர்ட் (Robert the Monk) என்பவர், ‘அனைத்து வயதினர், பலதரப்பட்ட வகுப்பினர் என்று பெருங் கூட்டமொன்று க்ளெர்மாண்ட் கூட்டத்திற்குப் பிறகு சிலுவைகளைத் தூக்கியது. புனித நகரை மீட்கப்போவதாக சபதமிட்டது. அவர்களது எண்ணிக்கை மூன்று இலட்சத்தைத் தொட்டது’ என்கிறார். வேறு சிலர் படை எண்ணிக்கை ஒர் இலட்சம் இருக்கும் என்கிறார்கள்.

எண்ணிக்கை எத்தனையோ, ஐரோப்பாவின் ரோம் அதுவரை கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான படை என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அத்தகு பிரம்மாண்ட படையில் போர்த் திறன் கொண்ட சேனாதிபதிகள், காலாட்படையினர் ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே. மற்றவர்களெல்லாம் முறையான போர்ப் பயிற்சியற்ற ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள்.

சிலுவைகளையும் ஆயுதங்களையும் சுமந்தபடி மாபெரும் திரள் ஒன்று ஐரோப்பாவில் இவ்விதம் பெரும் வெறியுடன் தயாராகிக் கொண்டிருக்க கிழக்கே முஸ்லிம்கள் மத்தியில் நிலைமை எப்படியிருந்தது?

முதலாவதாக, இப்படியொரு ஆபத்து உருவாகிறது, புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவலைக்கூட அவர்கள் அறியவில்லை. ஒற்றர்கள், உளவாளிகள் என எவ்வித முன்னேற்பாடும் அவர்களிடம் இல்லை. முதலாம் சிலுவை யுத்தப் படையினர் சிரியாவை அடையும்வரை அதைக் குறித்து எந்த முன்னறிவிப்பும் அவர்களுக்கு வந்தடையவில்லை. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு காலானிஸி எனும் வரலாற்றுப் பதிவாளர், ‘சிலுவை யுத்தப் படையினர் பற்றிய செய்தி சிரியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு ஹி. 490 / கி.பி. 1097 ஆம் ஆண்டுவரை வந்தடையவே இல்லை’ என்று தெரிவிக்கிறார்.

அடுத்த பெரும் அவலம், முஸ்லிம் சுல்தான்களும் கலீஃபாவும் ஆளுக்கொரு திக்கில் தத்தம் ராஜ்ஜியம், தத்தம் அதிகாரம் என்று சிதறுண்டு கிடந்தனர். ஒன்றாகத் திரண்டுவந்த சிலுவை யுத்தப் படையினரை எதிர்கொள்ள முடியாதபடி அது அவர்களை வெகு பலவீனமாக்கியிருந்தது. ‘சிலுவைப் படையினர் தங்களது பலத்தால் வெற்றியடையவில்லை. மாறாக முஸ்லிம்கள் மத்தியில் திகழ்ந்த ஒற்றுமை இன்மையினால்தான் வென்றனர்’ என்று ஜெஃப்ரி ஹின்ட்லே Geoffrey Hindley தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அவலத்தை அறிய இது போதாது?

ஆனால் தொடரும் வரிகளில் கூடவே முக்கியமான மற்றொன்றையும் குறிப்பிட்டுள்ளார் ஜெஃப்ரி. ‘மத உணர்வு என்ற ஒன்று மட்டுமே இஸ்லாத்தின் ஒற்றுமையை மீட்டெடுக்கும். அந்த ஒன்று தன் வேலையைத் துவங்கியபோது, அத் தீயை, சரியான வகையில் பயன்படுத்த மூன்று பெரும் தலைவர்கள் உருவானார்கள். இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவியவர்களை அடித்து நொறுக்கினார்கள்’.

யார் அந்த மூவர்? இமாதுத்தீன் ஸன்கி, நூருத்தீன் ஸன்கி, சலாஹுத்தீன் ஐயூபி. ஆனால், அதெல்லாம் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு. அதற்குமுன் நிகழ்ந்தவை, முஸ்லிம்கள் இழந்தவை ஏராளம். சந்தித்த கொடூரங்கள் பெருஞ் சோகம்.

முதலாம் சிலுவை யுத்தப் படையினர் அணிதிரண்டு வரட்டும். அப்பொழுது அவற்றைப் பார்ப்போம். அதற்குமுன் முஸ்லிம் சுல்தான்களின், ஆட்சியாளர்களின் நிலைமைகளைப் பார்த்து விடுவோம்.

oOo

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் - 6
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் - 8

இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்






No articles in this category...