தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
டாக்டர் கா.மு. பாதுசா.
''புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே''
என்று பேதை ஒருவன் சொன்னதாக பாரதி பாடியதை நாம் திரும்பவும் நினைவு கூர வேண்டியுள்ளது. அங்கே அறிவியலும் சமூக அறிவியலும் ஒரு சேர வளர்கின்றன. இங்கே அதற்கான ஆயத்த வேலைகள் இன்னும் ஆரம்பமானதாகத் தெரியவில்லை.
அந்த வகையில் இனம் தொடர்பான ஒரு புது ஆய்வு நெறியை இக்கட்டுரை வழி தொடங்குகிறோம். நாம் சிறுபான்மையினர் என்பதும் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் என்ற அளவில் எவ்வளவு பேர் உள்ளோம் என்பதை தேர்தல் காலங்களில் அறிவது என்பதும் இதுவரையில் உள்ள ந�முறை.
முஸ்லிம் இனம் குறித்த இந்தப் புள்ளி விவரங்களோ தகவல்களோ மட்டும் போதாது. இனம் பற்றிய தகவல்கள் புவியியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். Ethno எனப்படும் இனம் குறித்த ஆய்வையும் Geography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்ந்து Ethnogeography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்த்து Ehnogeography எனப்படும் சமூகஅறிவியல் துறை வாயிலாகத் தமிழ் முஸ்லிம்களின் Cartographyயைத் தயாரிப்பதே நமது நோக்கம்.
இந்த Cartography யை எப்படித் தயாரிப்பது என்பதைக் காண்போம். கோதுமை, நெல், பருத்தி, கரும்பு போன்ற பயிர்கள் எந்தெந்தப் பகுதியில் அதிகம் விளைகின்றன என்பதைப் புவியியல் வரைப்படத்தில் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறோம். அதுபோல புவியியலில் பச்சை நிறம் சமவெளியையும், மஞ்சள் நிறம் பீடபுமியையும், வெளிர் அரக்கு மலைகளையும், அடர் அரக்கு உயரமான சிகரங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய குறியீடு எல்லா வகையான ஆய்வுகளுக்கும் உதவுகிறது.
மக்கள் நெருக்கத்தையும் நெருக்கமற்றதையும் குறித்துக் காட்டுகிறோம். இந்த அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களின் நிலை கொள்ளலை வரைபடத்தில் காட்டுவதே இதன் நோக்கம்.
கீழக்கரை, காயல்பட்டினம், அதிராமப்பட்டினம், நாகூர் போன்ற கடலை ஒட்டிய நகரங்களிலும் தஞ்சை, நெல்லை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பல இடங்களிலும் தமிழ் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். சில வட்டங்களில் நூற்றுக்கும் குறைவாக உள்ளனர். குறிப்பிட்ட ஓர் ஆண்டை கால எல்லையாகக் கொண்டு நிலை கொண்டிருத்தலின் மாறுபட்ட அளவுகளைப் பல்வேறு வர்ணங்களின் வாயிலாகக் குறித்துக் காட்டுகிறோம். மக்கள் தொகைக்கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுக்கொரு முறை தேவைப்படுவது போல, தமிழ் முஸ்லிம்களின் cartography பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தயாரிக்கப்படல் வேண்டும்.
படம் தயாரித்தலோடு நம் பணி நின்று விடுவதில்லை. நெருக்கத்திற்கும் நெருக்கம் குறைவிற்கும் உண்டான காரணங்களைக் கண்டறிய வேண்டும். பத்தாண்டுக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நுணுக்கமாகக் கண்டறிதல் இயலும். நம் கவனத்திற்கு வராமலேயே கணக்கற்ற மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடியும்.
மாதிரிக்கு ஒன்றை எடுத்துக்காட்டலாம். கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பு பரமக்குடியைச் சுற்றிய கிராமப்புறங்களில் வசதியாக வாழ்ந்து வந்த ஆயிரவைசிய செட்டியார்கள் குடிவாரம், இனாம் ஒழிப்பு போன்ற நிலச்சட்டங்கள் காரணமாக விவசாயத்தைத் தொடர்ந்து நடத்திட இயலாது நிலங்களை வந்த விலைக்கே விற்று விட்டுப் பரமக்குடியில் குடியேறித் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். வளர்ச்சியும் வாழ்க்கையும் நன்றாகவே இருந்தன. எனினும் யாருக்காகக் கிராமப்புறத்தைவிட்டு வெளியேற நேர்ந்ததோ அதே மக்கள் இவர்களைத் தொடர்ந்து பரமக்குடியில் குடியேறத் தலைப்பட்டனர். எனவே மீண்டும் நெருக்கடியைச் சந்திக்க விரும்பாத ஆயிரவைசிய மக்கள் மதுரையைத் தேர்ந்தேடுத்து அங்கு வாழ முற்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
அதேவேளை, கீழக்கரை சார்ந்த முஸ்லிம் பெருமக்கள், வணிகத்தின் பொருட்டுச் சென்னை போன்ற இடங்களுக்குச் சென்றாலும் குடும்பங்களைக் கீழக்கரையிலேயே நிலை கொள்ளச் செய்திருப்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.
அமெரிக்க வரலாற்றில் Westward Movement எனச் சிறப்பாகச் சொல்லப்பட்ட நிகழ்வு போன்று எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் பல்வேறு காரணிகளால் மக்களின் இடப்பெயர்ச்சி நடைபெறவே செய்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தமிழ் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களையும் உள்ளடக்கியதாக அப்பட்டங்கள் அமையும். இவற்றோடு தமிழ் முஸ்லிம்களில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்ற பிரிவினர் எங்கெங்கே எந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதை வரைபடத்தில் உடன் காண முடியும்.
தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றை அறியும் களனாகத் திகழும் புவியியல் அமிசத்தையும் மக்களின் பொருளாதார நடவடிக்கையையும் அப்படங்களின் வழி அறியலாம். என்னென்ன காரணிகளுக்காகக் குறிப்பிட்ட பகுதிகளை வாழ்வதற்குரிய இடங்களாகத் தெரிவு செய்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
கமுதி, அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், இளையாங்குடி போன்ற பகுதிகளைச் சேர்ந்த நம்மக்கள் வியாபார நிமித்தம் இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களுக்குக் குடி பெயர்ந்துள்ளனர். அன்றாடப் போக்கில் இது பெரிதாகத் தெரியாது போகலாம். ஆனால் அரைநூற்றாண்டுக் காலத்திற்குப் பிறகு இந்தக் குடிப்பெயர்ச்சி எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொணர்ந்திருக்கிறது என்பது கண்டு வியப்புற நேரிடும்.
ஆதி மனிதன் நதிக்கரையில் என்ன காரணத்திற்காக வாழ்ந்தானோ அதே காரணங்கள் இன்றும் பொருத்தமுடையதாக இருக்கின்றன. இடப்பெயர்ச்சி அல்லது இயக்கம் காரணமாகப் பல்வேறு துறைகளில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. இதுவும் ஒருவகையில் பரிணாமத்தோடு தொடர்பு கொண்டதே இடப்பெயர்ச்சியைத் தவிர்த்து இருந்த இடத்திலேயே நிலையாக இருப்போர், முன்னிலும் �ர்கெட்ட நிலையில் முகவரியில்லாது முடங்கிப் போவதையும் காண்கிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வரைபடங்களின் வாயிலாகப் பரம்பரை சார்ந்த நாட்டார் கலாச்சாரத்தைக் (Folk Culture) கண்டறிய முடியும். இத்தகைய படங்கள் உலகெங்கிலுமுள்ள எல்லா இன மக்களுக்காகவும் வரையப்படுமேயானால் கலாச்சார வளர்ச்சி முறைகளையும் அன்றாட வாழ்க்கையும் வழிமுறைகளையும் தெளிவாக அறிதல் இயலும்.
Institute of Ethnography என்ற அமைப்பு இல்லாத மேலைநாடுகளே இன்று இல்லை. அந்நிறுவனம் வழியாக இனம், இனக்குழு, கிளை, போன்ற விவரங்களைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றனர். நாமோ அந்த விடியலை இன்னும் காணாமலே இருக்கின்றோம். சங்கட மேகங்களைக் கலைத்துக் கொண்டு அந்தச்சுடரொளி கிளர்ந்து எழ வேண்டும்.
இறுதியாக ஒன்று, தேர்வு எழுதும் மாணவன் பென்சிலை எடுத்தமாத்திரத்தில் வினாவில் கேட்கப்பட சில இடங்களைக் குறித்து மதிப்பெண் பெறுவது போன்றதன்று இப்பணி. மொழியியலாளர்கள் தொல்பொருளாளர்கள், மானிடவியலாளர்கள், இன ஆய்வாளர்கள், வரலாற்றாளர்கள், சமய அறிஞர்கள் ஆகிய அனைவரது பணியினையும் ஒரு சேர உள்ளடக்கிய பணி இது. இத்தகைய பணியினை நாமும் தொடர வேண்டும் என்ற நல்விருப்பத்தை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
http://www.intamm.com/history/tamilmuslim.ht
No articles in this category... |