அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
▪ தூக்கம் ஓர் இறையருள்!
'நீங்கள் மனஅமைதி பெறவும், இறையருளைத் தேடவும், இறைவனுக்கு நன்றி செலுத்தவும் இரவு பகல் இரண்டையும் ஏற்படுத்தி இருப்பது இறைவனது மிகப்பெரும் அருள்களில் ஒன்று!.' [28 : 73]
▪ இறைவனுக்கு நன்றி கூறுவோம்!
பாலிருக்கும் பழமிருக்கும் பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப எத்தனையோ வசதி படைத்தவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டும் தூக்கமின்றி தவிப்பதை நடைமுறை உலகில் காண்கிறோம்.
இந்த நிலையில், படுத்த அடுத்த வினாடியே நிம்மதியாக தூங்கிவிடும் நிலையை நமக்கு இறைவன் வழங்கியுள்ளான் என்றால், இது எவ்வளவு பெரிய பேறு என்பதை உணர்ந்து இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும்.
▪ தான் தூங்காமல் நம்மை தூங்க வைப்பவன்!
தூக்கம் என்பது மனிதர்களுக்கு உரித்தான ஒரு பலவீனம். இறைவனுக்கு இந்த பலவீனம் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. 'இறைவனுக்குச் சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது'. [03 :255]
▪ இறைவன் தூங்கினால் என்னாகும்?
இறைவனுக்கும் மூஸா நபிக்கும் (அலை) நடந்த இந்த உரையாடலைக் கேளுங்கள்!
'இறைவா! நீ தூங்குவதில்லையா?'
'நான் தூங்கினால் அகிலம் என்னாவது?'
'என்னாகும்?'
நீர் நிரம்பிய இந்தக் கண்ணாடி கூஜாவை குறிப்பிட்ட நேரம் வரை கையில் பிடித்திரும்!
'ஓ, தாராளமாக பிடித்திருக்கிறேன்!'
[நீண்டநேரம் கையில் வைத்திருந்த மூஸா நபி
பின் அசதி ஏற்பட்டு கண்ணயர, கையில் இருந்த கூஜா கீழே விழுந்து உடைய, தண்ணீரும் சிதற, பதறி விழித்தார் மூஸா நபி.]
'மூஸாவே! உமது சிறிது நேர தூக்கத்துக்கே இந்த நிலை என்றால், அகிலத்தின் அதிபதியாகிய நான் தூங்கினால் நிலமை என்னாகும் யோசித்துப் பார்!'
▪ தூக்கமும் பிறமத கடவுளரும்!
பிறமதத்தினரிடம் கடவுள் தூங்குவதாக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் அதிகாலையில் மணி அடித்து கடவுளை பள்ளி எழுப்பும் பழக்கம் உள்ளது. இஸ்லாமில் அவ்வாறு இல்லை.
▪ தூங்காத ஒரு ஜீவன்!
பொதுவாக படைப்புகள் அனைத்தும் இரவில் இயற்கையாக தூங்கும் வகையில்தான் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆந்தை மட்டும் இரவில் தூங்குவதில்லை என்பது இறை யாற்றலைப் பறைசாற்றும் ஒரு விதிவிலக்கான செய்தி.
▪ இரவுத் தூக்கத்தின் அவசியம்!
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்கு முன்பு தூங்குவதையும் (இதனால் இஷா தொழுகை தப்பிவிடும்.) இஷாவுக்குப் பின்பு தூங்காமல் வெட்டிப்பேச்சு பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள்.
▪ தூங்காமல் தொழுவதற்குக் கூட தடை
தூங்காமல் இரவு முழுவதும் நின்று வணங்கு வதாகக் கேள்விப்பட்ட ஒரு தோழரிடம், 'உமது கண்களுக்கென்று உரிமை உள்ளது. எனவே அவற்றுக்கான உரிமையை வழங்கு!' என்று கூறி நபியவர்கள் கண்டித்துள்ளார்கள்.
▪ மூன்றுக்கு விதிவிலக்குகள்!
- அறிவுத் தேடலுக்கான கலந்துரையாடல்
- விருந்தினர்களுடனான உரையாடல்
- தம்பதியர்களுக்கிடையிலான உறவாடல்
இந்த மூன்று அம்சங்களுக்காக இஷாவுக்குப் பிறகு விழித்திருக்க அனுமதி உண்டு.
▪ இன்னும் ஒரு சில விதிவிலக்குகள்!
செக்யூரிட்டி - இரவுக் காவலர்களாக பணி புரிபவர்களுக்கும் இரவுத் தூக்கத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. ஏனெனில், யுத்த நேரங்களில் நபியவர்கள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள, தோழர்களை இரவுக் காவலர்களாக நியமித்துள்ளார்கள். அதற்கு இறைவனிடம் மிகப்பெரும் நன்மை உண்டு எனவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
▪ கால்சென்டர்களில் பணிபுரிவது
அமெரிக்க முதலாளிகளுக்காக இங்கிருந்து சிலர் இரவு நேரங்களில் விழித்திருந்து கால்சென்டர் களில் பணி செய்கின்றனர். அங்கே ஆண்களும் பெண்களும் எல்லை மீறி கலந்துறவாடுகின்றனர்.
அதனால் பல பாலியல் குற்றங்கள், கொலைகள் எல்லாம் நடப்பதை மீடியாக்கள் வழியாக அறிகிறோம். இது தேவையா என்று நாம் யோசிக்க வேண்டும்.
▪ உளூவுடன் உறங்கச் செல்வோம்
இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு உளூ என்ற அங்க சுத்தம் செய்து விட்டு படுப்பது நபியவர்கள் நடைமுறை சுன்னா. இரவில் தூக்கத்தில் மரணம் ஏற்பட்டாலும், தூயநிலையில் இறைவனைச் சந்திக்கும் நற்பேறு இதன்மூலம் நமக்கு கிடைக்கும்.
▪ ஆடம்பரம் தவிர்ப்போம்!
ஒரு சிறிய குடும்பத்தில்... கணவனுக்கு ஒரு விரிப்பு, மனைவிக்கு ஒரு விரிப்பு, விருந்தினருக்கு ஒரு விரிப்பு என மூன்று போதுமானது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
- அதிக சொகுசு தவிர்ப்போம்!
நபியவர்கள் ஈத்தமர ஓலையால் வேயப்பட்ட கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்க, அதன் வரிகளை முதுகில் கண்ட உமர் (ரளி) கண்ணீர் விட்டு அழுது, ரோம பாரசீக மன்னர்களெல்லாம் பஞ்சணையில் படுத்து உருளும்போது தங்களது நிலை இப்படி உள்ளதே என்று வருத்தத்துடன் வினவினார்.
அதற்கு நபியவர்கள், 'அவர்கள் நிரந்தரமற்ற இம்மையை விரும்புகின்றனர். நான் நிரந்தரமான மறுமையை விரும்புகிறேன்' என்றார்கள்
- தூக்கம் தொடரும்...
No articles in this category... |