வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
பொது சிவில் சட்டம் பற்றிய ஆய்வுக் கட்டுரை:
ஆக்கம்: உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)
Kayalpatnam. com
எழுத்து மேடை பகுதி
கடந்த சில நாட்களாக “முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்” என்றும், “முஸ்லிம் பெண்கள் சீரழிவதை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது” என்றும் பிரதம மந்திரி முதல் முக்கிய அமைச்சர்கள் வரை ஆபத்பாந்தவன்களாக அவதாரமெடுத்து அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருகிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்... பதினான்கு நூறாண்டுகளுக்கு முன்பே முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் உரிமைகளை, புதிதாக என்ன செய்து பாதுகாக்கப் போகிறார்களோ தெரியவில்லை...!
இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகளை நெல் மணியும், கள்ளிப்பாலும் கொண்டு வரவேற்கும் கல்நெஞ்சக் கிராமங்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இன்னமும் இருக்கின்றனவே...? அதனை முற்றிலுமாக ஒழிக்க என்ன செய்தோம்...?
வருடத்திற்கு சராசரியாக ஒரு மில்லியன் பெண் கருக்கள் வயிற்றுக்குள்ளேயே அழிக்கப்படுகிறதாம் .... இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை ஐந்து மில்லியன்களையும் தாண்டும் என்று புள்ளி விபரங்கள் எச்சரிக்கின்றனவே...? இதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன...?
கடந்த மூன்று தலைமுறைகளில் தோராயமாக ஐம்பது மில்லியன் பெண்கள் இந்திய மக்கள்தொகையிலிருந்து பெண்கள் என்ற காரணத்திற்காகவே அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்புக்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனவே...? அவற்றையெல்லாம் உங்கள் அறிக்கைகளில் என்றாவது கண்டு கொண்டதுண்டா....?
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பை உங்கள் சட்டங்களாலும், ஆட்சியாலும் நிச்சயம் வழங்கிட முடியாது... காரணம் உங்கள் சட்டங்கள் ஏட்டில் ஏற்றப்பட்டவை... இஸ்லாமிய இறைச்சட்டங்களோ எங்கள் இதயங்களில் ஊட்டப்பட்டவை...
பெண் குழந்தைகளின் பிறப்பை நற்செய்தி என்றும்... பெண் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, கல்வி தந்து, திருமணமும் செய்து வைப்பவர்கள் - சுவர்க்கத்தில் நபிகளாரோடு இணைந்து இருப்பார்கள் என்பதாக வாக்களிக்கப்பட்டும்..., இழிவென்று கருதியோ, வறுமைக்குப் பயந்தோ பெண் குழந்தைகளைக் கொல்பவனைக் கடுமையாக எச்சரித்தும், இஸ்லாம் 1438 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் பாதுகாப்பை அழுத்தமாக உறுதி செய்துவிட்டது.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”
என்று பதினெட்டாம் நூற்றாண்டு பாரதி பெண் கல்வியை வலியுறுத்தினான்.
“கல்வியில்லாத பெண்கள் களர் நிலம், அந்நிலத்தில் புற்கள் முளைக்கலாமே தவிர நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை.”
என்று பத்தொன்பதாம் நுற்றாண்டு பாரதிதாசன் தன் பங்கிற்கு பாடிவைத்தான்.
ஆனால் பதினான்கு நுற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்குச் சமமாய் பெண்களும் அறிவிலோங்கி இவ்வையகம் தழைத்திட பெண்களுக்கு கல்வியில் சம உரிமை தந்தது மட்டுமல்ல... கல்வியைக் கட்டாயக் கடமையாகவும் ஆக்கியது இஸ்லாம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் எங்களிடம் ஏராளமாய் உண்டு... இருந்தாலும் தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் காயலில் இருந்து வருடந்தோறும் வெளியாகும் பெண் மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பட்டதாரிகளும்,பெண் சன்மார்க்க அறிஞர்களும், உங்கள் கண் முன்னால் இருக்கும் சாட்சிகள்... கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று ஒப்பாரி வைப்பவர்கள் கவனிக்கவும்.
“வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்” என்று இன்னமும் பெண்ணுரிமைகளை மீட்டெடுக்கும் நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும், உங்கள் அடக்குமுறைகளும், ஆணவக் கொலைகளும் அடங்கப் போவதில்லை! ஆனால்... வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழமையை அன்றே தள்ளி மிதித்து... பெண்ணின் அனுமதியின்றி நடத்தப்படும் திருமனங்களை ரத்து செய்யவும் அனுமதி வழங்கி... பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது இஸ்லாம்... அகன்ற மனதோடு அகக்கண்ணைத் திறந்து அணுகிப்பாருங்கள்! இஸ்லாமில் ‘உள்ள நிலை – உண்மை நிலை’ உங்களுக்குப் புரியும்.
கண்ணாடி பாட்டில்களைப் போன்று பெண்களைக் கையாள வேண்டும்... சற்றே கவனம் பிசகினாலும் நீங்கள் கைசேதப்பட வேண்டும் என எங்களை கவனமாய்ப் பாதுகாக்கிறது இஸ்லாம்... “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே..” என்று ஆண்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் நீதிபதிகளாக பெண்களை முன்னிறுத்திய இஸ்லாம் நபிகளாரின் சொற்களால் மட்டுமல்ல.. “நான் எனது மனைவியிடத்தில் சிறந்தவனாக உள்ளேன்” என அவர்களது வாழ்க்கையாலும் அதனை நிரூபித்தது...
பெண்களைப் பேய்களுக்குச் சமமாகவும், ஷைத்தானின் அங்கமாகவும், உயிருள்ள ஜடமாகவும், போகப்பொருளாகவும், பெண்களுக்கென்று சுதந்திரமான சிந்தனைகள் இருக்கக் கூடாது, என்றுமாக நினைத்தவர்களும், நடந்தவர்களும்தான் இன்று வேதம் ஒதும் சாத்தான்களாய் “இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது...” என்று ஏ......ங்குகிறார்கள்.
ஆமாம்! இஸ்லாம் எங்களை அடிமைப்படுத்தித்தான் வைத்துள்ளது என்பதைப் பெருமையோடு ஒப்புக்கொள்கிறோம்.. எங்கள் தந்தைகளின் அன்புக்கும், கணவரின் அன்புக்கும், சகோதரர்களின் அன்புக்கும் என்றுமே நாங்கள் அடிமைகள்தான்! அதனால்தான் தங்களது இறுதி மூச்சின்போதும், “பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...! பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...!! பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...!!!” என்று ஆண்களிடம் திரும்பத் திரும்ப அறிவுரைத்து எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.
இஸ்லாம் பெண்களுக்குப் பல சிறப்புரிமைகளைத் தந்துள்ளது. கீழ்த்திசை கம்யூனிஸ்ட் நாடுகளிலும், மேற்றிசை முதலாளித்துவ நாடுகளிலும், இன்னபிற ஜனநாயக நாடுகளிலும் பெண்களின் நிலைகளை நாம் ஆராய்ந்து நோக்கினால், அது அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. உரிமைகளைப் பெற்றுவிட்டோம் என்ற பெயரில், கடுமையாக உழைத்து ஆணுக்கிணையாக சம்பாதிப்பதைத்தான் சாதனையாகப் பேசுகிறார்கள்... அந்தோ பரிதாபம்!
ஆனால் இஸ்லாமோ அலைந்து.. திரிந்து.. நைந்து.. அடிபட்டு.. மிதிபட்டு.. பொருளீட்டுவது ஆணின் கடைமை என்றே கட்டாயமாக்கியது... பெண்டு பிள்ளைகளை வீட்டில் உட்காரவைத்து சோறூட்டுமாறு கட்டளையிடுகிறது.
வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள்தான் வேண்டும் என்று திருமணச் சந்தையிலே அவளது உழைப்பை உறிஞ்சி, மனைவியின் காசில் E.M.I. கட்டி, காரும் வீடுமாய் வாழக் கனவு காணும் அட்டைப் பூச்சிகளெல்லாம் பெண்ணுரிமைக் காவலர்களா...? அல்லது திருமணத்திற்குப் பின்னால் வேலைக்குப் போக வேண்டாம். எங்களது பெண்டு பிள்ளைகள் மீது ஒரு தூசு படியவும் அனுமதிக்க மாட்டோம் என்று தங்கத் தட்டில் தாங்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நீதி பெண்ணுரிமை பாதுகாக்கிறதா..??
பெண்களாகிய நாங்கள் இஸ்லாமில் பெற்றிருக்கும் உரிமைகள் போராட்டங்களாலும், தியாகங்களாலும் கிடைத்ததல்ல! இறைக் கட்டளையின் பேரில் இலகுவாக எங்கள் கரங்களில் தூக்கித் தரப்பட்டவை அவை.
இன்று ‘முத்தலாக்... முத்தலாக்... முத்தலாக்...’ என்று முச்சந்தியில் நின்று மூக்கு சிந்துபவர்கள்.. ‘குலா’ என்னும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளதைப் பற்றி அறிவார்களா? ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆங்காங்கே சலசலப்பு ஏற்படுமளவுக்கு முஸ்லிம் பெண்கள் இன்று இவ்வுரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே...? அதெல்லாம் இவர்களது காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லையா?
பெண்களை கணவன்கள் தலாக் விடாமலும், அதே நேரத்தில் அவர்களோடு வாழாமலும் இருந்து வஞ்சிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. கட்டிய மனைவியையே கண்டுகொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் வஞ்சிக்கும் இவர்கள், இன்று எங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. உங்கள் பெண்களுக்கும் சேர்த்து நாங்கள்தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது போங்கள்!
பெண்களை அடித்துத் துன்புறுத்துவதையும், அவர்கள் தவறுகளே செய்திருந்தாலும் நான்கு பேருக்குத் தெரிவது போல் பொது இடங்களில் வைத்து அவர்களைக் கண்டிப்பதையும், திட்டுவதையும், கடுமையாகக் கண்டித்துள்ள இஸ்லாம், அதனை வாழ்வியல் நெறிமுறையாகவே கணவர்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. அறிவுரைகள் சொல்லும் சித்தாத்தங்களை நாம் அறிவோம். வாழ்வியல் நெறிமுறையாகவும், மார்க்கமாகவும் ஆக்கிய இஸ்லாமை முழுமையாகப் படியுங்கள். இஸ்லாமியச் சட்டங்களிலிருந்து இந்தியச் சட்டங்களை உருவாக்கக் கூட முன்வருவீர்கள்.
“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறும் பார்த்ததுண்டோ...”
என்று பாரதிதாசன் பாடியதைப் போல கணவனை இழந்தப் பெண்களை கைம்பெண்கள் எனக் கூறி பூவழித்து, பொட்டழித்து, மறுமணம் கூடாது என்று கூறி, மங்கள காரியங்களிலிருந்து இன்றும் ஒதுக்கி வைக்கிறீர்களே...?
ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்...! நபிகள் நாயகம் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் மணமுடித்த பெண்களுள், ஆயிஷாவைத் தவிர மற்ற அனைவருமே கைம்பெண்கள்தான்... கணவனை இழந்த பெண்கள் அவர்களது இத்தா காலத்திற்குப் பின்னால் மறுமணம் செய்யும் உரிமை உண்டு என்று வார்த்தைகளால் மட்டுமல்ல! முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையிலும் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்ததேயில்லையா...?
ஆண்களை போலவே பெண்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இஸ்லாமில் நிறையவே உண்டு. பெண்களின் கருத்துக்களை அவள் பெண் என்பதற்காக இஸ்லாம் ஒருபோதும் புறந்தள்ளியதேயில்லை. ஆட்சியாளர்களையே எதிர்த்து வாதிட்ட பெண்களும், சிக்கலான பிரச்சனைகளில் ஆலோசனை வழங்கக் கூடிய பெண்களும் என, எண்ணற்ற உதாரணங்களை நாம் வரலாற்றில் காண முடிகிறது. அதனை வலியுறுத்தும் திருக்குர்ஆன் வசனங்களை {58:1-4,60:10-12 ஆகிய எண்களில்} நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாழ்விலும், சமூகச் சேவைகளிலும் ஈடுபடுவதில் இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை என்பது பலரின் புருவத்தை உயர்த்தக்கூடும். நெருக்கடி காலங்களின்போதும், போர்க்களங்களிலும், காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல், நீர் புகட்டுதல், உணவு வழங்குதல், தேவைப்பட்டால் எதிரிகளை எதிர்த்துக் களமாடுதல் எனப் பெரும்பணியாற்றிய பெண்களின் வரலாற்று உதாரணங்களைக் கொண்டவர்கள் நாங்கள்... இரும்புத்திரை கொண்டு இஸ்லாம் எங்களை அடக்கவுமில்லை...பயனற்றவர்கள் நாங்கள் எனப் புறக்கணிக்கப்படவுமில்லை.
வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக சாட்டையைச் சுழற்ற முடியாதவர்கள் திருமணத்தின்போது மஹரை நிர்ணயித்துக் கேட்டுப் பெறும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பற்றி வாய் திறந்திருப்பார்களா...? மஹர் இஸ்லாமியப் பெண்களின் உரிமையில் ஒரு மணிமகுடம். ஒரு பொற்குவியலையே மஹராகப் பெற்றாலும் அதிலிருந்து ஒரு துரும்பும் கேட்கவோ, எடுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை என்பது அவள் பெற்ற உரிமையையைப் பாதுகாக்கும் வேலி.
பெற்றோர் மற்றும் உறவினர்களின் சொத்துகளில் உரிமை... வீட்டுச்செலவுக்கு கணவன் பணம் தரவில்லையெனில் அவரது சட்டைப்பையில் இருந்து தேவையான அளவு எடுத்துக்கொளும் உரிமை...என அனைத்து வகையிலும் பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை இஸ்லாம் உறுதி செய்துள்ளது. இஸ்லாம் எனும் நந்தவனத்தில் பாதுகாப்பாக நாங்கள் இளைப்பாறுகிறோம்... “நந்தவனத்தில் நரிகளுக்கு என்ன வேலை?” என்பது எங்கள் நாகரிகமான கேள்வி.
ஆடைச் சுதந்திரம் என்ற பெயரிலே அரைகுறை ஆடைகளோடு பெண்களை இரசிக்கக் காத்திருக்கும் வல்லூறுகள்தான் - இஸ்லாம் எங்களை முக்காடிட்டு மறைக்கிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்... முக்காடு எங்கள் உடலுக்கும், முகத்திற்கும்தானே தவிர மூளைக்கல்ல... என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
மேலை நாடுகளில் வருடத்திற்கு சராசரியாக ஐம்பதாயிரம் நபர்கள் இஸ்லாமைத் தழுவுகின்றனராம்! அவர்களுள் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்தானாம்!! அந்தப் பெண்களிடம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்திய ஓர் ஆய்வில்... அவர்கள் இஸ்லாமைத் தழுவியதற்கான காரணம் பற்றிக் கேட்கப்பட்டபோது, “நாங்கள் விரும்பும், எங்களுக்குத் தேவையான பாதுகாப்பை இஸ்லாம்தான் எங்களுக்கு வழங்குகிறது.” என்று பதிலளித்துள்ளார்கள். அந்த பதில் இந்தியப் பெண்களிடமிருந்தும் ஒலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முஸ்லிம் பெயர் தாங்கிப் பெண்களைத் தூண்டி விட்டு, சந்திலே சிந்து பாடலாம் என்றும், பற்ற வைத்துவிட்டு எரியும் தணலிலே குளிர் காயலாம் என்றும் இலவு காத்த கிளியாக உளவு வேலை பார்த்துக் காத்திருக்கும் உங்கள் தந்திரம் எங்களிடம் பலிக்காது.
நாங்கள் வைரங்கள்... விலைமதிக்க முடியாதவர்கள் என்று பொத்திப் பாதுகாக்கப்பட்ட வைரங்கள்...! அதே நேரத்தில் உங்கள் சித்து வேலைகளை முளையிலேயே அறுத்தெறியும் உறுதி மிக்க வைரங்கள்... இறைமறையும், நபிமொழியும் என்ற இரு கூர்முனைகளால் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்... வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்... உங்களுடைய சித்தாத்தங்களும், சட்டங்களும் வைரங்கள் அல்ல... கூழாங்கற்கள்.... அவற்றைக் கொண்டு குளத்தில் கல்லெறிந்து சிறு சிறு சலசலப்புகளைத்தான் ஏற்படுத்த முடியுமேயன்றி பேரழிவு உருவாக்க ஒரு யுகமானாலும் உங்களால் முடியாது. காரணம், எங்கள் இதயங்களில் நிறைந்திருப்பது மனிதச் சட்டங்கள் அல்ல... இறைச்சட்டங்கள்... அந்த இறைச்சட்டங்கள் எங்கள் இதயத்தில் இருக்கும் வரை உங்களது அடுத்த அஸ்திரம் பிரம்மாஸ்திரமாய் இருந்தாலும் ஒரு அணுவையும் கூட எங்களிடம் இருந்து நீங்கள் பெயர்த்தெடுக்க முடியாது.
நன்றி : Kayalpatnam.com