கேப்டன் ஜேக் குருவி (Captain Jack Sparrow)
துனிஷீயாவிற்கு வந்திருந்தார் வில்லியம். அங்கிருந்த கிழட்டு முஸ்லிம் செல்வந்தர் யூஸுஃப் ரெய்ஸ் என்பவர் வீட்டின் விருந்தாளி அவர். செல்வந்தர் யூஸுஃபின்
மாளிகையை வீடு என்று சொல்வது பிழை. அது பெரும் மாட மாளிகை.
“எனக்கு குட்டிப் பறவையின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. தெரியுமா?” வில்லியமிடம் கிழவர் யூஸுஃப் கேள்வியில் தகவல் சொன்னார்.
வில்லியம் லித்கோ (William Lithgow) ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். அவரது தொழில் பயணமும் எழுத்தும். ஊர், நாடு, கடல் என்று பயணித்து எழுதிக் கொண்டிருந்தார். உபரியாக அவர் ஓர் உளவாளி என்ற குற்றச்சாட்டும் இருந்தது. அது உண்மையோ, பொய்யோ – 1621ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் சிக்கிக்கொண்டு, அதற்காக சித்திரவதை அனுபவித்தது வேறு விஷயம். இது 1614-ஆம் ஆண்டு. துனிஷீயா.
‘குட்டி’ப் பறவை என்பதை வில்லியம் தவறாகப் புரிந்திருக்க வேண்டும். “அட கொடுமையே! அவள் பெயர் என்ன? நான் அவளை எச்சரிக்க வேண்டுமே?”
“கிறுக்கனே! நான் சொல்வது பறவை. சிறிய பறவை.”
“சிறு பறவை? சிட்டுக் குருவியா கேப்டன் ஜேக்?”
கேப்டன் ஜேக் என்று வில்லியம் சொன்னதைக்கேட்டு கிழவர் சிரித்தார். கேப்டன் ஜேக்? பழைய நெடுங்கால வாழ்க்கை அது!
0-0-0
2003 ஆம் ஆண்டு Pirates of the Caribbean - கரீபியன் கடற்கொள்ளையர்கள் - என்றொரு ஆங்கிலத் திரைப்படம் ஹாலிவுட் தயாரிப்பில் வெளியானது. ‘இதென்ன சிறு பிள்ளைத்தனம்? கடல் கொள்ளையர்களைப் பற்றிய கதையெல்லாம் எடுபடாது. குப்புற விழுந்து உப்பைக் கவ்வும்’ என்றார்கள் திரை விமர்சன விற்பன்னர்கள். படம் வெளியானதும் பார்த்தால் அது பிய்த்துக் கொண்டு ஓடி, சக்கைப் போடு போட்டு, தயாரிப்பாளரின் கல்லாப் பெட்டியில் மில்லியன் கணக்கில் டாலர் மழை.
அவ்வளவுதான். அதன் தொடர்ச்சியாக மேலும் மூன்று படங்கள் எடுத்து வெளியிட்டு அனைத்தும் வெற்றி. தொடர் வரிசையில் ஐந்தாவது படத்திற்கும் இப்பொழுது வேலை நடந்து வருகிறது.
கடற்கொள்ளையர்களைப் பற்றிய நிகழ்ச்சியை 1967ஆம் ஆண்டின் போதே வால்ட் டிஸ்னி தன்னுடைய ‘தீம் பார்க்கில்’ உருவாக்கி விட்டார். அந்த நிகழ்ச்சியின் நவீன வடிவம் இன்றும்கூட அமரிக்காவின் டிஸ்னி லேண்டில் மிகப் பிரபலம். அந்தக் கடற்கொள்ளையர் நிகழ்ச்சியின் கருதான் இந்தத் திரைப்படம் உருவாகக் களம் அமைத்துக் கொடுத்து விட்டது. ‘தீம் பார்க்கில்’ அதை ரசித்து மகிழ்ந்த மக்கள், கற்பனையும் தொழில்நுட்ப நேர்த்தியும் இணைந்து திரையில் பிரம்மாண்டமாய் விரிந்த காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து போனார்கள். அனைவருக்கும் உள்ளே புதைந்திருக்கும் சிறு பிள்ளைத்தனமும் சாகசமும் காரணம்.
திரைப்படத்திற்கு டிஸ்னிலேண்டின் ‘தீம்’ உந்துதல் என்றால் கதையின் நாயகனாக அவர்கள் உருவாக்கிய பாத்திரத்தின் வேர் வேறு. பெயர் Captain Jack Sparrow. அதைத் தமிழில் அப்படியே பெயர்த்தால் கேப்டன் ஜேக் சிட்டுக்குருவி. இந்த கேப்டன் பதினாறாம் நூற்றாண்டில் இரத்தமும் சதையுமாக, துப்பாக்கியும் கப்பலுமாக மெய்யாகவே கடலில் மிதந்த கடற்கொள்ளையர்.
Pirates of the Carribean சினிமா விமர்சனமோ அதன் விளம்பரமோ இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் நாம் அந்த உண்மையான கடற்கொள்ளையரிடம் சென்று விடுவோம். ஏனெனில் ஹாலிவுட் சினிமா கேப்டன் ஜேக் சிட்டுக்குருவியைப் பற்றி சொல்ல மறந்த கதை நமக்குச் சுவையான கதை.
இங்கிலாந்தின் தென் கிழக்கே கெண்ட் (Kent) என்றொரு மாவட்டம். அதில் ஃபெவர்ஷாம் (Faversham) என்றொரு கடலோர வணிக நகரம். நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் லண்டனிலிருந்து 88 கி.மீ. கிழக்கே ஓடினால் போதும்; ஃபெவர்ஷாம் வந்துவிடும். என்ன கொஞ்சம் மூச்சு வாங்கும்.
அங்குதான் ஜான் வார்ட் (John Ward) பிறந்தார். அவரை ஜேக் வார்ட் (Jack Ward) என்றும் குறிப்பிடுகிறார்கள். அனேகமாய் 1553ஆம் ஆண்டு பிறந்தவர் என்று தோராயமான தகவல் உள்ளது. கடற்கரையோர ஊரில் இளைஞர்களுக்கு முக்கிய வேலை என்னவாக இருக்கும்? மீன்பிடி தொழில், அது சார்ந்த வேலை. ஜேக் வார்டும் மீனவத் தொழிலாளியாக, நல்லப் பிள்ளையாக வேலையைப் பார்த்துக் கொண்டு, மீனை உண்டு கொண்டு கிடந்தார்.
1588-இல், ஸ்பெயின் நாட்டிற்கு இங்கிலாந்தின்மேல் ஒரு காதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்புக் காதல். ஸ்பெயின் பெரும் கடல் படை ஒன்றைத் திரட்டி, கிளம்பி மிதந்து வந்தது. இங்கிலாந்து என்ன கிள்ளுக் கீரையா அடித்து பிடுங்கிக்கொண்டு போக? போரில் ஸ்பெயினுக்குத் தோல்வி.
எதிரிகளைத் தோற்கடித்து விரட்டினாலும் இங்கிலாந்தின் எலிஸபெத் மகாராணியார் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்றாகிப்போனார். ‘அது எதற்காம்? இங்கிலாந்து மட்டும் ஏகப்பட்ட நாடுகளை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதே? பேட்டா ஷோரூமில் சகாய விலைக்கு காலணி வாங்குவதைப்போல் பாரெங்கும் காலனி ஆதிக்கம் செலுத்தியதே’ என்று அபத்தமாக குறுக்குக் கேள்வி கேட்காமல் தொடர்வோம்.
இங்கிலாந்து ஒரு காரியம் செய்தது. கப்பற்படைகளை உருவாக்கியது. ஓர் அரசாங்கம் படை உருவாக்குவதில் என்ன ஆச்சரியம் என்று தோன்றுகிறதல்லவா? இவர்கள் அரசாங்கத்தின் படைகள் அல்ல. பேட்டை ‘தாதா’ வைத்துக் கொள்ளும் கூலிப்படை போல் தனியார் கப்பல்கள். இங்கிலாந்து அரசு ‘Letters of Marque’ எனப்படும் பற்றாணை உரிமையை இவர்களுக்கு அளித்துவிட்டது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது நளினமாய்த் தோன்றும் அதை எளிதாய் விளங்கிக் கொள்வதென்றால் கடலில் கொள்ளையடிக்க லைஸென்ஸ்; மீன்பிடிக்க லைஸன்ஸ் என்பதைப்போல் கடற்கொள்ளை லைஸென்ஸ்.
அதை வைத்துக் கொண்டு அந்தத் தனியார்கள் அரசாங்கத்தின் அனைத்து ஆசீர்வாதத்துடன் எதிரி நாட்டுக் கப்பல்களை மடக்கலாம்; தாக்கலாம்; கொள்ளையடிக்கலாம். அந்தக் கப்பல்களைப் பிடித்து அரசாங்க நீதிமன்றத்திடம் கொடுத்துவிட்டால் நல்ல காசு. நாட்டுப் பற்றுடன் விசுவாசமாக உழைக்கிறோம்; லாபமும் பார்க்கிறோம் என்று தனியார்களுக்கு அதில் பெருமை.
ஸ்பெயின் நாட்டுக் கப்பல்களை மறித்து, மிரட்டி, கொள்ளையடிக்க இந்தத் தனியார் படைகள் கடலில் இறங்கின. அப்படியான தனியார் கப்பற்படைகளில் ஒருவராகும் வாய்ப்பு அமைந்தது ஜான் வார்டு எனப்படும் ஜேக் வார்டுக்கு. அரசாங்க ஊழியராக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் பினாமி; கை நிறைய செல்வம், நல்ல வசதி என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த நிலையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது.
1603 ஆம் ஆண்டு முதலாம் ஜேம்ஸ் இங்கிலாந்தின் மன்னராக அரியாசனம் ஏறினார். ஸ்பெயின் நாட்டிடம் ‘நான் இனி உன்னுடன் பழம்’ என்று சொல்லிவிட, வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. அதே கையுடன், தம் நாட்டின் தனியார் கப்பற் படைகளை அழைத்து இனி அவர்கள் நமக்கு ‘தோஸ்த்’ என்று அறிவித்து, கள்ள ஆட்டத்தைக் கலைத்துவிட்டார்.
கடலில் கொள்ளை அடித்து சுகம் கண்டாகிவிட்டது. இனி ஊருக்குச் சென்று, மீன் பிடித்து சம்பாதிக்க வேண்டும்; கிடைக்கும் காசில் பிழைப்பை ஓட்ட வேண்டும் என்றானதும் தனியார் படைகளில் சிலருக்குச் சரிப்படவில்லை. ‘மாட்டேன் போ’ என்று தங்களது தொழிலைத் தொடர ஆரம்பித்தனர் – இம்முறை ‘Letters of Marque’ என்ற லைஸென்ஸ் இல்லாமல்.
அதே கடல். அதே படை. அதே எதிரி. அதே செயல். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் அவர்களைக் கடற் கொள்ளைக்காரர்கள் என்று அறிவித்துவிட்டது.
மற்ற நல்லவர்கள் ஊருக்குத் திரும்பிவிட்டனர். ஜேக் வார்டும் அன்று நல்லவராயிருந்தார். அதனால் லண்டனின் தென்மேற்கே 310 கி.மீ. தொலைவில் உள்ள ப்ளைமௌத் (Plymouth) என்ற நகருக்குக் குடிபெயர்ந்து மீண்டும் மீனவன் ஆனார். அத்தோடு விட்டிருந்தால் அப்படியே வாழ்ந்து மறைந்து போயிருப்பார். வலிய விதி வலிந்து அவர் வாழ்வில் நுழைந்தது.
இங்கிலாந்து அரசு ராயல் நேவி (Royal Navy) எனப்படும் கடற்படையை உருவாக்கியது. போர்க் கப்பல்களில் பணியாற்ற, போர் புரிய ஆள் வேண்டுமில்லையா? அதற்கு, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை மட்டும் நம்பாமல், தாங்கள் நினைப்பவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் பணியில் அமர்த்தச் செய்ததது இங்கிலாந்து. அபாக்கியமாக ஜேக் வார்டுக்கும் அப்படியான கட்டாயப் பணி. ராயல் நேவியின் போர்க்கப்பல்களுள் ஒன்றில் அவரைப் பணியில் அமர்த்திவிட்டார்கள்.
இரண்டே வாரம்தான். ‘பொங்கியெழு மீனவா’ என்று அவரும் அவருடைய சகாக்கள் 30 பேரும் சேர்ந்து அரசாங்கத்தின் போர்க்கப்பலுக்கு டிமிக்கிக் கொடுத்து வெளியேறி 25 டன் எடையுள்ள கப்பலொன்றை வெற்றிகரமாகக் கடத்திவிட்டார்கள். நம்பமுடியாத அந்த வெற்றியில் அவர்களுக்கு மகிழ்ச்சி பிய்த்துக்கொண்டது. அனைவரும் சேர்ந்து ‘நீங்கள்தான் கேப்டன்’ என்று ஜேக் வார்டை தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.
அவ்வளவுதான். அன்றிலிருந்து தொடங்கியது அவரது கொள்ளைப் பணி. தொடங்கியது இங்கிலாந்துக்கும் இதர நாடுகளுக்கும் தலையில் பிணி. ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒன்றன்பின் ஒன்றாய் பல நாட்டுக் கப்பல்களை மடக்கிப் பிடித்து, கொள்ளையடித்து, காசு, பணம், தங்கம் என்று ஜேக் வார்டின் கஜானா நிரம்பி வழிய ஆரம்பித்தது.
கடற்கொள்ளை என்பது துப்பாக்கியை நீட்டி, ‘ஹேன்ட்ஸ் அப்’ சொல்லி, கிடைப்பதை பிடுங்குவதா? எல்லாம் அநீதிச் செயல்கள். இரக்கமற்ற கொலைகள், சித்திரவதைகள், நிறைய ரத்தம் என்று கேப்டன் ஜேக்கின் கொடுஞ் செயல்களும் கடல் ஆளுமையும் வளர்ந்தோங்கின. பல நாட்டுக் கடற் பயணிகளும் சரக்குக் கப்பல்களும் கிலியில் கிடந்தன.
‘ஆளும் வளரனும் வலிமையும் வளரனும்’ என்பதுபோல் தனது கப்பலை 28 பீரங்கி ஆயுதம் தாங்கிய கலனாக வடிவமைத்திருந்தார் கேப்டன் ஜேக். அரசாங்க வேலையைவிட இதில் வருமானம் அதிகம் என்று நம்பிய ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், ஸ்பானியர்கள், துருக்கியர்கள் என 500 மாலுமிகள் சேர்ந்து கொண்டு அவரது படை வலிமையும் பெருகியிருந்தது.
ஆனால் கேப்டன் ஜேக் வார்டு வளராதவர். அதாவது உயரம் குறைவானவர். சிறிதளவு தலைமுடி, முன் வழுக்கை, கறுத்த முகம், தாடி. குறைவான பேச்சு, அதில் அதிகமான கெட்ட வார்த்தை. மொடாக் குடியர் என்பதுதான் அவரைப் பற்றிய அங்க வர்ணனை.
கப்பல்களைக் கொள்ளையிடுவது மட்டுமின்றி, அதிலுள்ளவர்களையும் அடிமைகளாக்கினார் அவர். அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அடிமையாக்கி அடிமை வியாபாரம் தொடங்கியிருந்த நேரத்தில், இவரோ ஆங்கிலேயக் கிறித்தவர்களை அடிமைகளாக்கிக் கொண்டிருந்தார். அப்படியே மத்தியதரைக் கடலுக்கு நகர்ந்து தனது ஆட்டத்தின் எல்லையை விரிவாக்கியது அந்தக் கொள்ளைக் கூட்டம்.
மத்தியதரைக் கடல் நாடுகளுள் ஒன்று துனீஷியா. ஆப்பிரிக்காவின் உச்சந்தலையில் அமைந்துள்ளது இது. அரபு வசந்தம் என்று இன்று நமக்குப் பரிச்சயமாகியுள்ளதே அதே துனீஷியாதான். அன்று அந்த நாட்டை உஸ்மான் பே (Usman Bey) என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்தார்.
என்னதான் கடலில் கொள்ளையடித்து வாழ்ந்தாலும் அவ்வப்போது கரை ஒதுங்கித்தானே ஆகவேண்டும். ‘காணி நிலம் வேண்டுமய்யா’ என்று மன்னர் உஸ்மானிடம் பேரம் பேசினார் கேப்டன் ஜேக் வார்டு. கொள்ளையடிக்கும் செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்று பேரம் படிந்தது. துனீஷியா துறைமுகம் ஜேக் வார்டுக்குத் தலைமையகமாக அமைந்தது.
ஆப்பிரிக்காவின் அல்ஜீயர்ஸ், துனீஸ், திரிபோலி நகரங்களை பெர்பர் கடற்பகுதி (Barbary Coast) என்று அன்றைய ஐரோப்பா அழைத்து வந்தது. எனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களுக்கு பார்பரி கார்ஸாய்ர்ஸ் (Barbary corsairs) என்று பெயர். ஜேக் வார்டு துனிஷீயாவுடன் ஐக்கியமான அடுத்த ஆண்டு பிரிட்டனின் நாட்டுப் பாடல்களும் துண்டுப் பிரசுரங்களும் அவர் பார்பரி கார்ஸாய்ர்ஸ் ஆகிவிட்டதைத் தெரிவித்து திட்டித் தீர்த்தன.
அதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் இருந்தது. அது ‘அருவெருப்பான துருக்கியர்கள்’ என்று மத ரீதியாக முஸ்லிம்கள் மீதிருந்த வெறுப்பு.
ஒருமுறை வெனிஸ் நாட்டு கப்பல்களை மடக்கி, அதிலிருந்த சரக்குகளான மிளகு, ஆயிரக்கணக்கான தங்கக் கட்டிகள், ஓர் இலட்சம் பவுண்டு சரக்கு என்று கொள்ளையடித்தது ஜேக் வார்டின் கொள்ளைக் கும்பல். நொந்துபோன வெனிஸ் அரசாங்கம் முதலாம் ஜேம்ஸ் மன்னரிடம் சென்று முறையிட்டது.
‘மத்திய தரைக்கடல் அபாயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், 40 ஆயிரம் பவுண்டு தந்து, பொது மன்னிப்பும் வழங்கினால் எனது கெட்டச் செயலை நிறுத்திக் கொள்கிறேன்’ என்றார் ஜேக் வார்டு.
எந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்? அதெல்லாம் முடியாது என்று ராயல் நேவியின் போர்க் கப்பலான ‘வானவில்’ தனது பீரங்கியை முறுக்கிக் கொண்டு சண்டைக்கு வந்தது. ஆனால் ஜேக் வார்டு அதை பொம்மையைப் போல் விளையாடி நொறுக்கிவிட்டார்.
அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் எனத் தெரியவில்லை - ஏதோ ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் முழுக்குப் போட நினைத்தார் ஜேக் வார்டு. பிறந்த ஊரின் பாசமும் பிரிவும் வாட்டியதோ என்னவோ, ‘ஊருக்குப் போய் ஸெட்டிலாவோம்; கடைசிக் காலத்தை அங்கேயே கழிப்போம்’ என்று ஏங்கியிருப்பார் போலும். ராச மன்னிப்பு கோரி முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு கோரிக்கை அனுப்பினார். அதைத் தூக்கி தேம்ஸ் நதியில் எறிந்து, ‘மன்னிப்பெல்லாம் கிடையாது’ என்று மறுத்துவிட்டார் ஜேம்ஸ் மன்னர்.
‘ஒன்றும் பாதகமில்லை; நான் அடைக்கலம் அளிக்கிறேன்’ என்று உஸ்மான் பே சொல்லிவிட துனீஷியாவின்மீது ஜேக் வார்டின் நெருக்கம் அதிகமானது. அது பெரும் மாற்றத்திற்கு வித்திட்டது.
ஒருநாள் இங்கிலாந்திற்கான வெனிஷியா நாட்டுத் தூதுவர், மார்கேன்டோனியோ கார்ரர் (Marcantonio Correr) ஸெனட் சபைக்கு அவசரமாகக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
“கடற் கொள்ளையர்கள் வார்டும் (ஆங்கிலேயர்களின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த) ஸர் ஃப்ரான்ஸிஸ் வெர்னேவும் துருக்கியர்களாக மாறிவிட்டனர் என்று உறுதியான செய்தி வந்துள்ளது. நமது நாட்டுக்கே இது இழிவு.”
அந்த விசித்திரம் நிகழ்ந்திருந்தது. ஜேக் வார்டும் அவருடன் இருந்த குழுவினர் அனைவரும் துனீஷியாவில் இஸ்லாத்தை ஏற்றனர். அன்றைய ஐரோப்பியர்களுக்கு துருக்கியர்களும் முஸ்லிம்களும் ஒரே வார்த்தை. அதைத்தான் வெனிஷியாவின் தூதுவர் எழுதியிருந்தார். வெந்த புண்ணில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதுபோல் ஆகிப்போனது ஐரோப்பியர்களுக்கு. கிறித்தவத்தை விட்டு வெளியேறிய ஜேக் வார்டும் கூட்டமும் ‘மதத் துரோகிகள்’ என அறிவிக்கப்பட்டனர்.
ஜேக் வார்டு தம் பெயரை யூஸுஃப் ரெய்ஸ் (Yusuf Reis) என்று மாற்றிக் கொண்டார். தம்மைப் போல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இத்தாலியின் பாலெர்மோவைச் (Palermo) சேர்ந்த உயர்குடி பெண்மணி ஜெஸ்ஸிமினாவைத் திருமணம் புரிந்து கொண்டு துனிஷீயாவின் மாளிகையில் அவரது வாழ்வின் அடுத்த கட்டம் துவங்கிது – முன்னதற்கு முற்றிலும் மாற்றமாய்.
அப்படியான அவரது வாழ்வில்தான் அவரை வந்து சந்தித்தார் ஸ்காட்லாந்து பயணி வில்லியம் லித்கோவ்.
o-o-o
கேப்டன் ஜேக் என்று வில்லியம் சொன்னதைக்கேட்டு கிழவர் யூஸுஃப் ரெய்ஸ் சிரித்தார். அவருக்கு அது முடிந்துபோன கதை. இப்பொழுது? துனிஷியாவின் சீமான். ஆங்கிலேயர்கள் கனவில் ஏங்கும் செல்வத்தை மீறிய செல்வந்தர்.
“சிறு பறவை? சிட்டுக் குருவியா கேப்டன் ஜேக்?”
“இல்லை. குஞ்சுகள்.”
“குஞ்சுகள்?”
“ஆம். குஞ்சுகள்!”
பரந்து விரிந்த கடலில் அரசாங்கங்களையும் மக்களையும் அச்சமுறுத்திய பெரும் கொள்ளைக்காரர் இப்பொழுது அமைதியாய், மகிழ்ச்சியாய், குருவி வளர்க்கிறாரா? அன்று வரை அவர் முஸ்லிம்களைப் பற்றியும் கேப்டன் ஜேக் இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றியும் அவர் ஐரோப்பிவில் கேள்விப்பட்டிருந்த ஒருதலைப் பட்சமான கருத்துகளால் வில்லியமுக்கு வியப்பு அதிகரித்தது.
வில்லியம் லித்கோ எழுதிய The Totall Discourse of the Rare Adventures and Painefull Peregrinations of long Nineteene Years Travayles from Scotland என்ற நீளமான பெயர்கொண்ட, பிற்காலத்தில் புகழ்பெற்ற, பயண நூலின் அடுத்த அத்தியாயம் அங்கு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்தது.
‘இதென்ன குஞ்சுகள் பற்றி பேசுகிறார் இந்தக் கிழவர்? நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார்?’ என்ற ஆர்வம் மேலோங்க, “எங்கே அழைத்துச் செல்கிறீர் கேப்டன் ஜேக்? போதையில் தாங்கள் தடுமாறிச் செல்லும் பாதையைத் தொடர்கிறேனா?”
“நீ இங்கு வந்ததிலிருந்து ஜின்னோ, ரம்மோ – நான் ஒரு சொட்டாவது மது அருந்தியதைப் பார்க்க முடிந்ததா?” என்று கேட்டார் யூஸுஃப். தொடர்ந்தார். “இந்தக் கேப்டனின் தொப்பி டர்பனாக மாறியபின் மதுவென்று ஒரு சொட்டும் கிடையாது.”
“கேப்டன் ஜேக் போதையின்றி நிதானமாக இருக்கிறீர். ஏசு மீண்டுவிட்டாரா?”
கிழவர் யூஸுஃப் சிரித்தார்.
சூழ்ச்சிக்காரர், மொடாக் குடியர், கொடூர குணம் அமையப் பெற்றவர். இப்பொழுது? அருந்துவது தண்ணீரும் தாவரங்கள், பழங்களிலிருந்து பிழியப்பட்ட ரசமும் என்று தலைகீழ் மாற்றம். ஆங்கிலேயர்களின் கோட்டு விடைபெற்று இப்பொழுது துருக்கியர்கள் அணியும் கோட்டு.
கேப்டன் ஜேக்கும் ஸர் ஃப்ரான்ஸிஸ் வெர்னேவும் மதம் மாறிவிட்டார்கள் என்று 1610-ல் இங்கிலாந்திற்கு முதன்முதலாகச் செய்தி வந்தபோது தமக்குப் பொது மன்னிப்பு வழங்காத முதலாம் ஜேம்ஸ் மன்னரை வெறுப்பேற்றவும் துனிஷீயாவின் அரசரான உஸ்மானைக் குளிரச்செய்து அங்கு இடம் பிடிக்கவுமே கேப்டன் ஜேக் முஸ்லிமாகியிருந்தார் என்பதுதான் வில்லியம் லித்கோவின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவரது நேரடி அனுபவம் வியப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.
முஸ்லிம் துருக்கியர்கள் எவ்வகையான மதுபானமும் அருந்துவதில்லை என்பதைக் குறித்துக் கொண்டார் வில்லியம்.
இருண்ட கிடங்கு போன்ற இடத்திற்குச் சென்றார்கள். அங்கு புழுக்கம் நிறைந்திருந்தது. பத்து பணியாளர்கள் விரைந்து வந்து ஒரு காட்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். 500 முட்டைகள். துருக்கியர்கள் அக்காலத்திலேயே வடிவமைத்திருந்த செயற்கை அடைகாப்புச் சாதனங்கள் அந்த முட்டைகளைக் குஞ்சு பொரித்தன. தம் வாழ்நாளிலேயே முதன் முறையாக அத்தகையக் காட்சியைத் தம் கண்ணால் கண்டார் வில்லியம்.
“இப்பொழுது புரிகிறது – நீங்கள் ஏன் பேர்டி (birdy) என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று.”
“வில்லியம்! பேர்டி என்பது இவர்களது மொழியில் என்ன தெரியமா? அஸ்ஃபுர். விளையாட்டாக இவர்கள் என்னை ஜேக் அஸ்ஃபுர் (Jack Asfur) அதாவது ஜேக் ஸ்பேரோ (Jack Sparrow) என்று அழைக்கிறார்கள். என்னவொரு அபத்தமான பெயர். ஆனால் வரலாற்றில் அப்படித்தான் நான் நினைவில் கொள்ளப்படுவேன் என்று நினைக்கிறேன்.”
“நான் அப்படி நினைக்கவில்லை கேப்டன். உங்களைப் பற்றிய பழைய கதைகளைச் சொன்னால், உங்களை கேப்டன் ஜேக் ஸ்பேரோ என்று சொல்ல மாட்டார்கள்.”
இங்கிலாந்தில் கேள்விப்பட்ட துருக்கியர்களின் (முஸ்லிம்கள்) அரக்கத்தனம், அட்டூழியங்கள் நிறைந்த கதைகள் எதுவுமே வில்லியம் லித்கோவுக்கு அங்கு தென்படவில்லை. துருக்கியர்கள் நாகரிகமற்றவர்கள், கொடியவர்கள் என்ற கதைகளை இங்கிலாந்தில் அவர் கேள்விப்பட்டிருந்தார். எரிச்சலைத் தூண்டும் அத்தகைய விசித்திரங்களைப் பற்றி ஒன்றிரண்டு அத்தியாயங்களாவது எழுதலாம் என்று நினைத்திருந்தவரின் மைக்கூட்டில் மை அப்படியே மீதமிருந்தது. ‘அவற்றைத் தேடித் தேடி தம் கண்கள் களைத்துவிட்டன’ என்று எழுதியிருக்கிறார் வில்லியம்.
மட்டுமல்லாது, துருக்கியர்கள் இங்கு வணிகர்களாகவும் இடைவிடாது தொழுபவர்களாகவும் மிகவும் இயல்பான மனிதர்களாகவும் இருப்பதைக் கண்டு மாளாத ஆச்சரியம் அவருக்கு. துருக்கிய ராச்சியத்தின்மீது கிறித்தவ உலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் அத்தகைய வன்மமும் கோபமும் என்ற மர்மம் இப்பொழுது அவருக்கு விளங்கியது.
துருக்கியர்கள் கொள்ளைக்காரர்கள், அற்பத் தொகைக்கு கொலையும் புரிவார்கள் என்று வில்லியம் நினைத்திருக்க, அவர்களோ பள்ளிவாசல்களில் குழுமி தொழுதுகொள்கிறார்கள். அந்த இடங்களோ ‘தாம் ஆழ்ந்து சிந்தனையில் அமர்ந்து தம்மைத் தொலைக்கும் இடங்களாக உள்ளன’ என்று எழுதியிருக்கிறார் வில்லியம்.
முஸ்லிம்கள் ப்ரொட்டஸ்டன்ட், கத்தோலிக்கர்கள் என்று எவருக்கும் தொல்லையளிப்பதில்லை. ஸ்பெயினில் யூதர்கள் கத்தோலிக்கர்களாக மாற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் மரண அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்த காலகட்டம் அது. அவர்களுக்கெல்லாம் துனீஷியா பாதுகாப்பான புகலிடமாக ஆகியிருந்தது.
‘கவனமின்மையோ, அசிரத்தையோ, மனிதன் இங்கு கடவுளால் அடையாளப்படுத்தப் படவில்லை. துனிஷியா ஒரு விசித்தரமான இடம்தான். ஆயினும் எனது நாட்டில் எனது மதச் சகோதரர்கள் கூறிய எதுவொன்றும் இங்கு இல்லை.
புகழ்பெற்ற பார்பரி கோர்ஸர், ஜேக் பேர்டி எனப்படும் ஜான் வார்டு, தனியார் படையிலிருந்து கடற் கொள்ளையனாக மாறிய, கிறித்தவத்திலிருந்து துருக்கியராக மாறிய இந்த விருந்தோம்புபவரிடமிருந்து இவை அனைத்தும் இன்று எனக்கு உறுதியாகிறது’ என்கிறது வில்லியமின் பயண நூல் குறிப்பு.
பறவைப் பண்ணையிலிருந்து நடந்தார்கள். பாதையின் இருபுறமும் மலர்கள். நீரூற்று, இருபுறமும் ஓடை. சூரியன் மறையத் துவங்கியிருந்தது. கோட்டை போன்ற கம்பீரமான கட்டிடத்தை நெருங்கினார்கள். இரும்பு பதிந்திருந்த தமது கனமான துருக்கிய பூட்ஸுகளைக் களைந்தார் கேப்டன் ஜேக். வில்லியமிடம் தமது கோட்டைக் கழற்றிக் கொடுத்தார். அது பெரும் கனம் கனத்தது.
“மன்னிக்கவும். நாம் சற்று இங்கு தாமதிக்க வேண்டும்.”
“நான் உங்களைப் பின் தொடர்ந்து காத்திருப்பேன் கேப்டன் ஜேக்”
“நான் தொழ வேண்டும்.”
அங்கிருந்த நீரூற்றின் அருகே சென்று கேப்டன் ஜேக் ஒளூ செய்தார். மினாராக்கள் உயர்ந்திருந்த அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்றார்கள்.
“வில்லியம். ஐந்து ஆண்டுகளுக்குமுன் இந்த நாளில், இதே கோட்டையில்தான் நான் முஸ்லிமானேன்.”
“அது உங்களது தேர்வு கேப்டன் ஜேக். அது எனக்கு வேதனை அளிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். கிறிஸ்து உலகத்தின் இரட்சகர் என்பதை உங்களது இதயம் அறியும், ஒவ்வொரு கணவானும் அறிவான்.”
“கூட்டாளி! மனிதனின் உள்மனதை இறைவன் மட்டுமே அறிவான். அவனது உடலின் உள்ளே உள்ளதை கடலில் அவனை உண்ண வாய்க்கும் மீன் அறியும். கடலுக்கு அந்தப் பக்கம், போப்புக்கும் மன்னருக்கும் இடையே நடக்கும் போர், அவர்கள் தங்களுக்குள் அளித்துக்கொள்ளும் அபயம் எனக்குத் தெரியும். அதில் எனக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை. அவை எனக்கு வேண்டவும் வேண்டாம்.”
கேப்டன் ஜேக் பற்றி தாம் அறிந்திருந்ததற்கு மாறாய், அவரது முந்தைய வாழ்க்கைக்கு முரணாய் இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையான பற்றும் அதை மகிழ்வுடன் பின்பற்றும் ஒரு மனிதராக கேப்டன் ஜேக்கைக் கண்டார் வில்லியம் லித்கோவ். முதுமை கேப்டன் ஜேக் ஸ்பேரோவை சோம்பலாக்கியிருந்தது. ஆனால் சீர்திருந்தியிருந்தார். அவரது மனத்தளவில் நிச்சயமான மாறுதல் நிகழ்ந்திருந்தது.
1622 ஆம் ஆண்டு ப்ளேக் நோய் கேப்டன் ஜேக் என்றழைக்கப்பட்ட யூஸுஃபுக்கு மரணத்தைப் பரிசளித்தது.
-நூருத்தீன்
Additional Info:
Jack Sparrow might be inspired by a Muslim captain | Daily Sabah
Jack Sparrow, Was Really A Muslim! His Name Was Yusuf Reis (theislamicinformation.com)
No articles in this category... |