Tamil Islamic Media

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

  அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

  தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

  அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.

  வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.

  ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.

  இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.

  அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார்.  

பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

  தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது.

  ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

  தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

  அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

  அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

  அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:

  “அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.

  திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!”

  அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

  

  தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

  (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

  “பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

  பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான். பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

  மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

  “இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

  அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

  “அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

  “என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

  அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

  “என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

  அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  “இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

  பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

  “துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

  “மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

  பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  “அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)  

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.  

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)  

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)  

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

  1. நோன்பு துறக்கும்பொழுது.   2. லைலத்துல் கத்ர் இரவு.   3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).   4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.   5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.   6. அரஃபா தினத்தில்.   7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.   8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.   9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.   “உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)   “ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)   10. சேவல் கூவும் பொழுது.   “சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)   11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)   12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.

  “ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

  எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படி பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள்.

  “உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்)

  இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது.

  “யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்:

  1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,   2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,   3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்   என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,

  “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்)  

ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் பன்னிப் பன்னி மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள்.

  ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ, நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி, முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான்.

  கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்கு பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.  

அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டு பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும்.

  பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

  “உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ)

  மனிதனுக்கு பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும்.

  இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும்.

  இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக!  

Thanks: http://kayalpatnam.com/columns.asp?id=55






No articles in this category...