வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
- பிறைமேடை தலையங்கம் (ஜுலை 1-15) - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை. இதனால் நம்முடைய சிந்தனை ஓட்டம் பாதிப்படைவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகில் வாழ்கிற குறுகிய இக்காலக்கட்டத்தில் செலவு செய்கிற செல்வத்திற்கு மாத்திரமல்ல; செலவு செய்கிற நேரம், உழைப்பு, உதவிகள் என்று எல்லாவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே என்கிற கவலை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தே ஆக வேண்டுமல்லவா!
அதனால்தான் ஒழுக்கம், கல்வி என்பதோடு இறையச்சம், தொழுகை, நற்பண்புகள், நற்செயல்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல முஸ்லிமாக வாழவேண்டும் என்பதை நாம் கடமையாக எண்ணுகிறோம். இதே சிந்தனையில்தான் சமூகப் பணி, அரசியல் என்று வருகிறபோது கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழிநின்று தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதை அந்தக் கடமையின் அங்கமாகக் கருதி பணியாற்றுகிறோம்.
நடைமுறை அரசியல்பாணி என்பது சில நேரங்களில் நமக்கு கசப்புணர்வாகத் தென்படுவதையும் இல்லை எனச் சொல்ல முடியாது. அப்படி என்ன கசப்பு? நமது சமுதாயத்தில் நாங்களும் பணியாற்றுகிறோம் எனச் சொல்லி புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு தனித்தனி அமைப்புகளாகச் செயல்படுபவர்களே நம்மைச் சீண்டுவதும், கீழான விமர்சனங்கள் செய்வதும், தவறான தகவல்களைத் தந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுமான காரியங்களில் ஈடுபடுவதைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விழைகிறேன். நம்மைச் சீண்டுவதையோ, கீழான விமர்சனங்கள் செய்வதையோ நாம் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காக பதில் சொல்ல வேண்டுமே என்று நேரம் ஒதுக்கி தரம் தாழ்ந்து விடுவதுமில்லை. ஆனால், சமுதாயத்திற்குத் தவறான தகவல்கள் தந்து குழப்பங்களை உருவாக்குகிறபோது நாம் அமைதியாக இருந்துவிடவும் கூடாது. காரணம், மக்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டித் தந்து, அரசியல் தளத்தில் சமுதாயத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது நமது கடமை என நினைக்கிறோம். அந்தப் பார்வையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு நம்முடைய இதழில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என எண்ணுகிறோம்.
சென்ற 22.06.2012 அன்று விண் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் இடஒதுக்கீடு சம்பந்தமான சில கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் அண்ணன் கமுதி பஷீர் அவர்களும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மரியாதைக்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் இன்னும் சிலரும் இடம் பெற்றதாக அறிந்தேன். விவாத ஓட்டத்தில் ��நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான பத்து சதவிகித இடஒதுக்கீடு பற்றி இன்றுவரை நாடாளுமன்றத்தில் அப்துல் ரஹ்மான் எம்.பி. ஒரு வார்த்தையாவது வாய் திறந்ததுண்டா!�� என பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கேட்டுவிட்டு, நான் ஏதோ நாடாளுமன்றத்தில் வாயே திறக்காமல் மவுனியாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை சமுதாயத்திற்குத் தெரிவித்திட முயற்சித்திருக்கிறார் என்று அறிந்தேன். மனதிற்கு சற்று கஷ்டமாக இருந்தது. ஆற்றப்பட வேண்டிய பணிகளும், சொல்லப்பட வேண்டிய கருத்துக்களும் ஏராளம் இருக்க, ஏன் இதுபோன்று தவறான தகவல்களை மீடியாக்களில் பரப்பி சுகம் காண விரும்புகிறார்கள் எனத் தெரியவில்லை. இதுபோன்ற பழிச்சொற்கள் இதற்கு முன்னரும் பலமுறை தாய்ச்சபை முஸ்லிம் லீகைப் பற்றிய கீழான விமர்சனங்களாக வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பதில்கள் சொல்லிக் கொண்டு நாமும் அதே தரத்திற்கு இறங்கிப் போக வேண்டியதில்லை என்றாலும் சில முக்கியமான விளக்கங்களை ஆரோக்கியமான கோணங்களில் தருவது நமது கடமையாகிறது. இப்போது எனது பெயரைக் குறிப்பிட்டே என்னை சிறுமைப்படுத்த முயன்றிருக்கிற பேராசிரியருக்கு பதிலுரைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு, பல தலைப்புகளிலே பேசியிருக்கிறேன்; இதுவரை 313 கேள்விகள் கேட்டிருக்கிறேன்; 55 தடவை குறுக்கிட்டிருக்கிறேன்; நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் அதிகமான நாட்கள் பங்கு கொண்டு ஜனநாயகக் கடமையினை ஆற்றியிருக்கிறேன். இவைகளையெல்லாம் நாடாளுமன்ற கணினி பதிவேட்டிலிருந்து இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
சென்ற ஏப்ரல் மாத கூட்டத் தொடர் முடிவடைந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கு கொண்டு பேசியபோது இப்படிக் கேட்டேன். ��இடஒதுக்கீடு என்று 4 சதவிகிதம் வழங்குவதாக இப்போது அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த, சீக்கிய மற்றும் பார்சிய சமூகங்களை உள்ளடக்கி அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கென்று அறிவித்திருக்கிறீர்கள். இது மிகப்பெரிய சமுத்திரத்தில் விழுந்த ஒரு மழை நீர்ச் சொட்டு போன்றது. இதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை. சிறுபான்மை முஸ்லிம்களின் உண்மையான நிலையை நன்கு ஆய்வு செய்ய நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷனும் முறையாக ஆய்வு செய்து முழுமையான அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மிக, மிகக் கீழான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அதற்குரிய சரியான தீர்வாக 10 சதவிகித இடஒதுக்கீட்டை பிரத்தியேகமாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டுமென்று பரிந்துரையும் செய்தது. அதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் நியாயத்தை நிலைநாட்ட இயலும் என்றும் குறிப்பிட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு இன்னமும் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது; மிஸ்ரா கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் உருண்டோடியும் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது; ஒருபுறம் கமிஷன்கள் அமைக்கிறீர்கள்; மறுபுறம் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறீர்கள். வேறு எதற்காகத்தான் சச்சார் கமிட்டி, மிஸ்ரா கமிஷன் என்றெல்லாம் அமைத்து அரசின் கோடிக்கணக்கான பணத்தையும், நீதியரசர்களின் நேரத்தையும், ஆய்வாளர்களின் உழைப்பையும் வீணடிக்கிறீர்கள்? மாறாக இதுபோன்ற கமிஷன்களை அமைக்காமலே இருந்து விட்டுப் போகலாமே! மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது உண்மையிலேயே அர்த்தப்பூர்வமானதாக இருக்குமேயானால் அறிக்கையின் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றுங்கள்; அதில் சொல்லப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீட்டை சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்குங்கள்�� என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டுப் பேசியது பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதையெல்லாம் மறைத்துவிட்டு வேண்டுமென்றே என் பெயரை இழுத்து வீண்பழி சுமத்தியிருப்பதை நடுநிலையாளர், சமூக சிந்தனையாளர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எனவே அடுத்த இரண்டு நாட்களில் 24.06.2012 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் இதைப் பற்றி சற்று விரிவாகவே விளக்கி ஒரு கேள்வியையும் சவாலாக வைத்திருக்கிறேன்.
நான் மிஸ்ரா கமிஷன் பற்றி வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய, குறுக்கிட்டுப் பேசிய, விவாதத்தில் பங்கு கொண்ட நிகழ்வுகளை எல்லாம் மக்களுக்கு மத்தியில், இதே லால்பேட்டை நகரில் நிரூபணம் செய்யத் தயாராக இருக்கிறேன். நிரூபிக்க முடியவில்லை என்றால் ��நாடாளுமன்றத்திற்குச் சென்று மூன்று ஆண்டுகள் ஆனபின்பும் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றி எதுவுமே பேசாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்�� என பொதுமக்களிடம் என் இயலாமையை வெளிப்படுத்தத் தயார். மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன் என்று நிரூபித்துவிட்டால் பொதுமக்களிடத்தில் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம்; குறைந்தபட்சம் தொலைக்காட்சி மூலமாக சமூகத்திற்குத் தவறான தகவல்கள் தரப்பட்டதை வாபஸ் வாங்கிக் கொண்டு ��அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்�� என்றாவது பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? என்கிற கேள்வியை வைத்திருக்கிறேன்.
மறுநாள் 25.06.2012 திங்களன்று திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்திலும் சமுதாய மக்களின் இது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் அங்கேயும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு இதே கேள்வியை விடுக்க வேண்டியதாகிவிட்டது.
பிறைநெஞ்சே! நம்முடைய போக்கில் நமது பயணத்தைத் தொடர்கிறோம். நாம் யாருக்கும் எதிரியல்ல. எல்லோரையும் அரவணைத்து அன்போடும், பண்பாட்டு உணர்வோடும் பணியாற்றவே விரும்புகிறோம். நம்மை வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? என்று மட்டும்தான் தெரியவில்லை. காலம் பதில் சொல்லும். வல்ல அல்லாஹ் போதுமானவன்.
அன்புடன், எம். அப்துல் ரஹ்மான் ஆசிரியர்.
No articles in this category... |