Tamil Islamic Media

இஸ்திஃகாராவின் சிறப்பு

உலகப் பிரச்சினைகளில் தெளிவு பெற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையும் துஆவும்.

இஸ்திஃகாராவின் சிறப்பு

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! யா அல்லாஹ்! அருமை நாயகம் முஹம்மது ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீது நித்திய சாந்தியையும் சமாதானத்தையும் இறக்கியருள்வாயாக!

முஸ்லிம்களுக்கு அன்றாடம் தீன், துன்யா சம்பந்தமான எத்தனையோ தேவைகள் ஏற்படுகின்றன.  அவைகளை மார்க்கத்தில் சொல்லப்பட்ட முறைகளில் நிறைவேற்றும் வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது ஒரு மேலான சேவையாக இருக்கும்.  ஏனெனில் அடியான் தன்னுடைய தேவைகளை தீனில் சொல்லப்பட்ட முறையில் அடைந்து கொள்ளும்போது அது ஒரு பக்கம் இபாதத் ஆகி மறுமைக்கும் நற்பலன் அளிப்பதுடன் உலகிலேயே அல்லாஹ்வின் மறைமுகமான உதவிகளைப் பெற்று தரக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது.  ஆனால் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையைப் பார்க்கையில் அவர்கள் தமது முக்கிய பிரச்சினைகளை தமது நாட்டங்களை நிறைவேற்ற தீனுக்குப் புறம்பான தவறான வழிகளை மேற்கொண்டு படைத்துப் பரிபாலிக்கும் போஷகனான அல்லாஹ்வை மறந்து யார் யாரின் கால்களையோ படித்து எவர் எவருடைய வாசல்களிலோ காத்துக்கிடந்து தீனை மறந்து நேர்வழியைத் துறந்து மகத்தான தவற்றில் வீழ்ந்துவிடுகின்றனர்.

ஆனால் அருமை நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களோ உலக மாந்தர் அனைவருக்கும் தீன் துன்யா இரண்டிற்கும் வெற்றிக்கான வழியைக் காட்டித் தந்துள்ளார்கள்.  உலகக் காரியங்கள் அனைத்திலும் அவர்களின் சொல், செயல், நமக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.  நமது தேவைகளை அடைய, கஷ்டங்கள் அகல, கவலைகள் நீங்க, கடன்கள் தீர, தடுமாற்றமும் குழப்பமும் தீர்த்து வைக்க மேலான வழிமுறைகள் அனைத்தையும் அன்னார் நமக்குக் காற்றுத் தந்துள்ளார்கள்.  இன்று நாம் பின்னடைந்து தோல்வி அடைவதற்குரிய காரணம் அவர்களின் வழிமுறையை அறியாது இருப்பது, அல்லது அறிந்திருந்தாலும் அமல் செய்யாமல் மறந்திருப்பதுமே ஆகும்.

நமக்கு அன்றாடம் உண்டாகும் பிரச்சினைகளுக்கான சுன்னத்தான வழிமுறை இன்னது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து, அறிந்தவர் மற்றவர்களுக்கும் எத்திவைத்துச் செயல்பட வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

ஆல்லாஹு தாஆலா நம் அனைவருக்கும் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை வாழ்க்கையின் சகல துறைகளிலும் கடைப்பிடித்து ஒழுகி ஈருலகிலும் வெற்றி அடையும் பாக்கியசாலிகளாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

இஸ்திகாராத் தொழுகையின் விளக்கம்

ஒருவர் ஏதேனுமொரு முக்கியமான காரியத்தைச் செய்ய நாடும்போது அதைச் செய்யலாமா அல்லது விட்டுவிடலாமா என்று மனத்தில் குழப்பமும் பிரச்சினைகளும் ஏற்படும் அதில் தன்னால் தீர்க்கமானதொரு முடிவுக்கு வர முடியாத கட்டத்தில் அவர் அல்லாஹு தஆலாவின் பக்கம் தம் கவனம் முழுவதையும் செலுத்திப் பணிவுடனும் மனத் தெளிவுடனும் அக்காரியத்தில் அல்லாஹ்வின் கிருபை நிறைந்த வழிகாட்டுதலையும் நல்லதொரு முடிவையும் கொடுக்குமாறு அவனைத் தொழுது அவனிடமே இறைஞ்சவேண்டும்.  இதற்கு இஸ்திகாரா (நன்மையைத் தேடி இறைஞ்சுதல்) என்று பொருள்.

மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட காரியங்களில் இஸ்திகாரா செய்வது தேவையில்லை.

இஸ்திகாரா தெழுகையின் சிறப்பு

இஸ்திகாரா என்பது நமது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின உயர்வான போதனையிலுள்ள ஒரு சிறப்பான அம்சமாகும்.  இது முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட ஒரு பெரும்பேறு ஆகும்.  கிடைத்தற்கு அரிதான இம்மாபெரும் பொக்கிஷத்தினால் பல கோடி முஸ்லிம்கள் காலங் காலாமாகப் பல நன்மைகளை அடைந்து வந்திருக்கின்றனர்.  ஹஜ்ரத் ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “அண்ணல் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு எவ்வாரு திருக்குர் ஆனின் சூராக்களைப் போதித்து வந்தார்களோ அவ்வாறே இஸ்திகாராவையும் மிக முக்கியத்துவத்துடன் போதித்தார்கள்.  மேலும் ஏதேனுமொரு மிக முக்கியமான காரியம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்போது இஸ்திகாரா நிய்யத்துடன் இரண்டு ரக்அத் தொழுது முடிவில் துஆ ஓதிகொள்ளுமாறு கூறவார்கள்”.

மற்றுமொறு ஹதீதில் இஸ்திகாரா செய்யக்கூடியவர்கள் தோல்வியடைவதில்லையென்றும் மனச்சஞ்சலமும் துயரமும் அடைய மாட்டார்களென்றும் மாறாக சிறப்பான நன்மைகளும் கண்ணியமான அனுபவமும் நல்ல முடிவும் அடையப்பெறுவார்கள் என்றும் வருகிறது.  மேலும் அல்லாஹ்விடம் பரஞ்சாட்டி தனது காரியத்தில் ஆலோசனையைக் கேட்டால் வல்ல நாயன் தனது சம்பூர்ண அறிவு ஞானத்தாலும் தனது பெருங்கிருபையாலும் நிச்சயமாக நல்லதொரு முடிவைத் தந்தருளுவான்.  அல்லாஹ் நாடுவதேயன்றி வேறெதுவும் நடக்காது. இந்த விதமாக தன்னிடம் இஸ்திகாரா செய்பவருக்கு நிச்சயம் நன்மையையே நாடுவான்.  இதனால் வெளிப்படையாக உடனே கைமேல் பலன் ஏற்படாவிட்டாலும் அந்தரங்கத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாவது நிச்சயம்.  மனிதர்களின் நற்பாக்கியம் இஸ்திகாராவில் அமைந்துள்ளது. அவர்களின் துர்பாக்கியம் இஸ்திகாராவைப் புறக்கணிப்பதில் அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்திகாரா செய்யும் முன்பாக சுன்னத்தான முறைகளப்பேணி உளு செய்து கொண்டு இரண்டு ரக்அத் இஸ்திகாரத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத்துச் செய்து தக்பீர் கட்டி முதல் ரக்அத்தில் வஜ்ஜஹத்து தனாவுக்குப் பின் அல்ஹம்தும் குல்யா அய்யுஹல் காபிரூன் சூராவும் ஓதி இரண்டாம் ரக்அத்தில் அல்ஹம்தும் குல்ஹு வல்லாஹு சூராவும் ஓதித் தொழுது முடித்த பின் கீழ்க்கண்ட துஆவை ஓதி அல்லாஹ்விடம் துஆ இறைஞ்ச வேண்டும்.

இஸ்திகாரா துஆ  

துஆவின் பொருள்

யா அல்லாஹ்! உன் அறிவின் பொருட்டால் நான் உன்னிடம் நன்மையைத் தேடுகிறேன். உன்னுடைய சக்தியின் பொருட்டால் உன்னிடம் நான் சக்தியைத் தேடுகிறேன்.  உன்னுடைய மகத்தான கருணையை உன்னிடம் நான் வேண்டுகிறேன்.  நிச்சயமாக நீ (அனைத்தின் மீதும்) சக்தி பெற்றவன்.  நான் (எவ்வேலையைச் செய்வதற்கும்) சக்தியற்றவன்.  நீ (அனைத்ததையும்) அறிந்தவன்.  நான் (எதனையும்) அறியாதவன்.  நீ மறைவானவற்றை எல்லாம் அறிந்தவன்.  யா அல்லாஹ்! இந்த காரியத்தை * என்னுடைய தீனுக்கும் உலக வாழ்விற்கும் என்னுடைய மறுமைக்கும் நல்லதென்று நீ அறிந்திருந்தால் அதைச் செய்ய எனக்கு நீ சக்தியளித்து அதனை எனக்கு இலேசாக்கி வைப்பாயாக! மேலும் இந்தக் காரியத்தில் எனக்கு (பரக்கத்) அபிவிருத்தியையும் தந்தருள்வாயாக! இந்தக்  காரியத்தை * என்னுடைய தீனுக்கும் உலக வாழ்விற்கும் மறுமைக்கும் தீமையானது என நீ அறிந்திருந்தால் என்னை விட்டும் இக் காரியத்தை நீ திருப்பி விடுவாயாக! இக் காரியத்தை விட்டு என்னையும் நீ திருப்பிவிடுவாயாக! எனக்கு எது நல்லதோ அது எங்கிருப்பினும் அதைச் செய்யச் சத்தியைக் கொடுத்து என்னை அதன் மீது பொருந்திக் கொண்டவனாக ஆக்குவாயாக!

(நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி சுன்னத்தான முறையில் நாம் நாடிய காரியங்களை அடைந்துகொள்ள அல்லாஹ் நம்மனைவருக்கும் நற்கிருபை செய்வானாக)

 * இந்தக்காரியத்தை என்று வரக்கூடிய இரு இடங்களிலும் தான் நாடியுள்ள காரியத்தைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டும்.

 
 


துஆ பொருளுடன் (As a single Image)

தொகுப்பு: முகம்மது ஃபைரோஸ், கும்பகோணம்






No articles in this category...