இறுக்கமும் இரக்கமும்
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் அறிவிக்கிறார்கள் ' இரக்கம் காட்டுபவர்கள் மீது இறைவன் இரக்கம் காட்டுவான், பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானில் உள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
குர்ஆனின் முதல் வாசகமாகவும், நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம்மோடு ஒட்டி நிற்கும் ஒரு இறைவசனம் “ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ”அர்ரஹ்மான்” என்ற வார்த்தையே இந்த ஹதீஸிலும் இடம்பெற்றுள்ளது. ரஹ்மத் என்ற வார்த்தைக்கு எதிர்பார்பில்லாத கருணை என்று பொருள் ( Unconditional kindness). ஆகையால் தான் பிஸ்மில்லாஹ்விற்கு பொருள் எழுதும் வேதவிற்பன்னர்கள் ” அர்ரஹ்மான் “ என்ற வார்த்தைக்கு உலகில் நல்லவர், கெட்டவர், தனக்கு வழிபட்டவர், வழி தவறி நடப்பவர் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் இரக்கம் காட்டுபவன் என்று எழுதுகின்றனர்.
பொதுவாக இறைவனின் படைப்புகளோடு ஒரு மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எடுத்துரைக்கும் பண்பயே இந்த ஹதீஸ் காட்டுகிறது.
பொதுவாக ஒரு பெற்றோர்கள் இயற்கையாகவே தங்கள் பிள்ளைகள் மீது அதீத பாசத்தைக்காட்டுகின்றனர். ஆனால் இதே நிலையில் ஒரு மகனோ / மகளோ தங்கள் பெற்றோர்களிடம் நடந்து கொள்வார்களா? என்ற நிலை சந்தேகத்தில் இருக்கிற காரணத்தினால் தான் இறைமறை இப்படி கூறுகிறது
“ இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக' (17:24)
இன்று தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவது போன்று, தங்கள் குழந்தைகளை யாரும் காப்பகங்களுக்கு அனுப்புவதில்லை. மனிதா! உன் பெற்றோரிடமிருந்து நீங்கள் இரக்கம் காட்டுகிற பண்பை வளர்த்துக்கொள், ஏனெனில் அவர்களிடமிருந்து தான் பல பல உபகாரஙகளை நீ பெற்றிருக்கிறாய். இப்படி எதிர்பார்பில்லாமல் இரக்கம் காட்டும் பண்பை ஒரு மனிதன் வளர்த்தான் என்றால் அவன் மீது இறைவனின் இரக்கம் ஏற்படும்.
இந்த செய்தி மனித குலத்தை மட்டும் கவனித்து அல்ல. மாறாக, உலகில் படைக்கப்பட்டுள்ள அத்துணை படைப்பினங்களையும் கருத்தில் கொண்டு. ஆகையால் தான் உலகிற்கு அருட்கொடையாக வந்த நபிகள் கோமான் இப்படி கூறினார்கள் “ ஒரு தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டியதற்காக ஒரு விபச்சாரி சுவனத்தில் நுழைந்தால் என்ற செய்தி நம் கவனித்தில் பதியப்படவேண்டிய ஒன்றே.
மனித கண்ணுக்கு மறைவாக இருக்கும் இறைவனின் இரக்கம் கிடைக்கவேண்டும் என்றால், அவனுக்கு முன்னால் கண்ணுக்கு தெரிகிற கோடானகோடி படைப்பினங்களில் அவன் அன்பு செலுத்தி பழகவேண்டும்.
எத்துணை ஒரு அருமையான பட்டறை இது. இறைவன் வானம் பூமியைப் படைத்த போது நூறு ரஹம்த்துகளை படைத்தான், அவற்றில் ஒன்றைத்தான் உலகில் இறக்கினால் மீதமுள்ள 99 தை தன்னுடன் வைத்துக்கொண்டான். அந்த ஒரு ரஹ்மத்தைக்கொண்டுதான் உலகில் உள்ளவர்கள் தங்களுக்கிடையில் இரக்கம் காட்டுகின்றனர். ஒரு கோழி தன் குஞ்சின் மீது இரக்கம் காட்டுகிறது.
மனித குலத்தின் அருட்கொடையாக வந்த நபிகள் திலகம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு கூட இரக்கத்தையே பதிலாக தந்தார்கள். அதில் அழகிய செய்தி எதிர்பாப்பில்லாத இரக்கம்.
நான் உனக்கு இதை செய்தால் நீ எனக்கு என்ன செய்வாய் என்று நட்புகள் கூட வியபார யுக்தியாகிப்போன இந்த காலத்தில், எதிபார்பில்லாமல் இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் என்ற பொன்னெழுத்துக்கலால் பொறிக்கப்படவேண்டிய வாசகம் அன்றோ இது. எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக இறுக்கம் (Depression) ஆகிப்போன இந்த காலத்தில் இரக்கத்தை நம் குணமாக்கி இறுக்கத்தை இல்லாமல் ஆக்குவோம்.
நபி பெருமானாரின் வரலாறு பகிறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலையில் இதை ஒரு வாழ்வியல் உபதேசமாக ஏற்று செயல்படுவோமாக.
எதிரிகளை கூட வாளினும் கூர்மையான இரக்கம் என்ற ஆயுதத்தால் இறைவனின் நேசர்களாக ஆக்கிய நபிவழியை நம் வழியாக ஆக்குவோமாக.
உலகையே செலவழித்தாலும் அவரிகளின் இதயங்கள் நபியே நீர் ஒன்றினைக்க முடியாது என்று சொன்ன இறைமறை இஸ்லாம் என்ற இனிய மந்திரத்தால் இதயங்கள் ஒன்றாகியதை சுட்டிக்காட்டுகிறது.
இன்று இந்த இனிய மார்க்கத்தின் பெயராலே துண்டாகி நிற்கும் நமக்கு, இந்த நபி வாக்கும் சிறத்த மருந்தன்றோ.
வாருங்கள் ! எதிர்பார்பில்லா இரக்கத்தால் இணையட்டும் நம் இதயங்கள். இதே வழியில் மாற்றார்களையும் நம் வழியில் ஆக்குவோம்.
- அபூ புஷ்ரா ஹஸனீ
No articles in this category... |