Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்

வடக்கே அந்தாக்கியா, எடிஸ்ஸா; தெற்கே ஜெருஸலம் ஆகியன மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களின் ஆளுகைக்குள் வந்துவிட்டன என்று பார்த்தோம். அவை யாவும் ‘சிலுவைப் போர் மாநிலங்கள்’ (crusades states) என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் அந்தாக்கியாவை Principality of Antioch என்றும் எடிஸ்ஸாவை County of Edessa என்றும் குறிப்பிடுகின்றார்கள். அதென்ன Principality, County? சிலுவை யுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்ட இளவரசர்களின் ஆளுகைக்குள் வரும் பகுதிகளெல்லாம் Principality. அந்த யுத்தத்தில் கலந்து கொண்ட கோமான்களின் ஆட்சிப் பகுதிகளெல்லாம் County.

அந்தாக்கியாவைத் தம் வயப்படுத்திய பொஹிமாண்ட், இத்தாலியிலுள்ள டாராண்டோவின் இளவரசர். அவருக்கு Prince of Taranto என்பதுதான் அடைமொழி. எடிஸ்ஸாவின் அதிபரான பால்ட்வின், பிரான்சு நாட்டின் கோமான். ஆகையால் அந்தாக்கியாவும் எடிஸ்ஸாவும் முறையே Principality, County ஆகிவிட்டன. என்றாலும் தமிழில் Principality என்பது மாநிலம் என்றும் County-யானது மாவட்டம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஆயினும் நாம் அவை இரண்டையும் மாநிலமாகத்தான் கருத வேண்டியுள்ளது. எனவே நாம் அவற்றை மாநிலம் என்றே குறிப்பிடுவோம். ஆனால், புனித நகரமான ஜெருஸலத்திற்கு மட்டும் தனிச் சிறப்பு. அதற்கு எப்பொழுதுமே ஜெருஸல இராஜாங்கம் (Kingdom of Jerusalem) என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அதன் ஆட்சியில் அமர்பவர் இளவரசராக இருந்தாலும் சரி, கோமானாக இருந்தாலும் சரி, அவர்தாம் ஜெருஸலத்தின் ராஜா (King of Jerusalem). இத்தொடரில் இனி ஊர்களையும் ஆட்சியாளர்களையும் குறிப்பிடும்போது இந்த முன்னொட்டுகள் ஆங்காங்கே இடம் பெறப் போவதால் இங்கு இந்த முன் குறிப்புகள் தேவையாகின்றன.

இவற்றுடன் சேர்த்து நாம் இதுவரை சந்தித்த சிலுவை யுத்த தலைவர்களின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான உறவு முறையையும் இங்குச் சுருக்கமாக மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம். ஏனெனில் இனி அவர்களுக்குள் நடைபெறப்போகும் அரசியல் நகர்வுகள், பிணக்குகள், ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அவை அவசியமாகின்றன.

துலூஸின் ரேமாண்ட் (Raymond of Toulouse), தென் கிழக்கு ஃபிரான்ஸில் அதிகாரமிக்க பிரபு. சிலுவை யுத்தத்திற்குத் தம்மை அர்ப்பணித்த முதல் இளவரசர் இவர்.

இத்தாலியின் தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்ட் (Bohemond of Taranto), இப்பொழுது அந்தாக்கியாவின் ஆட்சியாளர்

ஹாட்வில்லைச் சேர்ந்த டான்க்ரெட் (Tancred of Huteville), பொஹிமாண்டின் உடன்பிறந்தாரின் மகன்.

பெல்ஜியம் நாட்டின் போயான் நகரைச் சேர்ந்த காட்ஃப்ரெ (Godfrey of Bouillon), இப்பொழுது ஜெருஸலத்தின் பாதுகாவலர்.

காட்ஃப்ரெயின் சகோதரர் பால்ட்வின் (Baldwin of Boulogne), இப்பொழுது எடிஸ்ஸாவின் ஆட்சியாளர்.

இந்த ஐவரும்தாம் முதலாம் சிலுவை யுத்தத்தின் மிக முக்கியத் தலைவர்களாக அங்கம் வகித்தவர்கள்.

இஸ்லாமிய நிலப்பரப்பின் நடுவே வடக்கே இரண்டு மாநிலங்களும் தெற்கே ஜெருஸல இராஜாங்கமும் இலத்தீன் கிறிஸ்தவர்களிடம் பறிபோய், அவை மூன்றும் தீவுகளைப்போல் ஆகிவிட்டன. சுற்றிலும் உள்ள பகுதிகள் முஸ்லிம்கள்களிடம் உள்ளன; சுல்தான்களுக்குள் சண்டை, சச்சரவு, ஃபாத்திமீ – அப்பாஸியர்களுக்கு இடையே கிலாஃபத் போட்டி என்று முஸ்லிம்கள் சிதறுண்டு கிடந்தாலும் அவற்றையெல்லாம் நிரந்தரப் பாதுகாப்பாகக் கருதிவிட முடியாது; ‘ஆட்சியையும் கைப்பற்றிய நிலப்பரப்பையும் எப்படிக் காப்பாற்றுவது? தக்க தற்காப்பையும் உதவிக்கான வாசல்களையும் ஏற்பாடு செய்யாவிட்டால், பட்ட கஷ்டம் வீண்; அடைந்த வெற்றி அந்தகோ ஆகிவிடுமே’ என்று தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்தை நினைத்துக் கவலைப்பட்டார் காட்ஃப்ரே. ‘நம்மிடம் உள்ள இராணுவ பலம் சொற்பம். முஸ்லிம்கள் தங்களது பலவீனங்களைக் களைந்துவிட்டு, அல்லது தற்காலிகமாக ஒதுக்கிவிட்டுப் பெருமளவில் திரண்டு வந்தால் அதை எதிர்த்து நிற்பது அசாத்தியம், ஆபத்து’ என்று அவருக்குப் புரிந்தது.

அவருடைய கவலைகள் யாவும் நியாயமானவையே. அச்சமயத்திலேயே சுல்தான்கள் அனைவரும் ஓரணியில் ஒன்று திரண்டிருந்தால் வரலாறே மாறியிருக்கும். தற்காலிகமாக அவர்கள் சிலருக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின் அடிப்படையில் அவர்களால் சிலுவைப் படைக்குப் பெரும் சேதத்தை விளைவிக்க முடிந்ததையும் சிலுவைப் போரில் திருப்பத்தை உண்டாக்க முடிந்ததையும் வெற்றியை ஈட்ட முடிந்ததையும் துண்டு துண்டாக நெடுகவே நாம் காணத்தான் போகின்றோம். அவ்வளவு ஏன்? இதற்கு அடுத்த ஆண்டிலேயே இரு பெரும் வெற்றிகளைச் சாதித்து, சிலுவைப் படையை முஸ்லிம்கள்கள் துரத்தியதும் நிகழ்ந்தனதாம். ஆனால் எது பலமோ அதுவே பெரும் பலவீனமாக இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் அமைந்துவிட்டதுதான் சோகம்! தங்களுக்குள் ஏற்பட்ட போட்டி, பொறாமை, ஆட்சி அதிகார ஆசை போன்றவை ஒற்றுமை எனும் அவர்களது பலத்தைச் சிதற அடித்துவிட்டது. வரலாற்றில் நெடுக நிறைந்துள்ள நிகழ்வுகளிலிருந்து பாடம் படிக்காமல் இன்றளவும் அந்த பலவீனம் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் தொடர்வதுதான் பேரவலம்.


காட்ஃப்ரேயின் கவலை அவரை அடுத்த இராணுவ நடடிவக்கைக்கு உந்தியது. மேற்கே கடற்பகுதி நகர் ஒன்றைக் கைப்பற்றி அதைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டால் ஐரோப்பாவுடன் கடல் வழித் தொடர்பை ஏற்படுத்த முடியும்; இராணுவ உதவியோ இதர உதவிகளோ பெற முடியும் என்று அவர் முடிவு செய்தார். ஜெருஸலத்திற்கு வடமேற்கே தோராயமாய் 100 கி.மீ. தொலைவில் அர்ஸுஃப் (Arsuf) என்றொரு சிற்றூர் கடலோரம் அமைந்துள்ளது. பாதுகாப்பு அரண்களுடன் அமைந்திருந்த அத்துறைமுக ஊர் முஸ்லிம்கள் வசம் இருந்தது. தமது படையைத் திரட்டிக்கொண்டுபோய் அந்நகரை முற்றுகையிட்டார் காட்ஃப்ரே. ஆனால் அது முழுத் தோல்வியில் முடிந்து கவலையும் ஏமாற்றமுமாய் அவர் ஜெருஸலம் திரும்பும்படி ஆனது. வந்து பார்த்தால், பீஸா (Pisa) நகரத்து பேராயர் டைம்பெர்ட் (Archbishop Daimbert of Pisa) புனிதப் பயணமாக ஜெருஸலம் வந்திருந்தார்; கூடவே 120 கப்பல்களில் அவருடைய கடற்படை. சமயோசிதமாக காட்ஃப்ரே அந்த பலத்தைக் காட்டி முஸ்லிம்களை மிரட்டினார். அர்ஸுஃப், ஏக்கர், சீஸேரியா, அஸ்கலான் நகரத்து முஸ்லிம் ஆட்சியாளர்கள் கப்பம் கட்டிவிடுகிறோம் என்று கையைத் தூக்கி விட்டார்கள். ‘கைப்பற்ற முடியா விட்டால் என்ன, எங்களுக்குக் கட்டுப்பட்டால் சரி’ என்று துறைமுகப் பகுதிகளை ஜெருஸல ராஜாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் காட்ஃப்ரே.

அதன் பிறகு ஏழு மாதங்கள்தாம் கழிந்திருக்கும். ஒருநாள் முஸ்லிம் அமீர் ஒருவர் அளித்த விருந்தொன்றில் கலந்துகொண்டார் காட்ஃப்ரே. அதற்குப் பிறகு டைபாய்ட் போன்றதொரு கடும் காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டது. விருந்திலும் மிதமிஞ்சி எதையும் சாப்பிட்டு விடவில்லையே, ஆரஞ்சுகளைத்தானே அதிகம் சாப்பிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆரஞ்சுகள் காய்ச்சலைத் தூண்டினவோ இல்லையோ தெரியாது, ஆனால் உண்டான காய்ச்சல் மட்டும் குறையாமல் தீவிரமடைந்து, 18 ஜூலை 1100 அன்று காட்ஃப்ரே இறந்துவிட்டார். ஏறக்குறைய நாற்பதாவது வயதில் அவரது வாழ்க்கை முடிந்தது. இயேசுநாதரின் புனிதக் கல்லறை வாயில் வளாகத்திலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.

தமது அகால மரணம் தங்களது புதிய இராஜாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்; ஜெருஸலத்தின் அரசப் பதவியின்மீது கண் வைத்திருக்கும் மற்ற சிலுவைப் போர்த் தலைவர்களுள் மற்ற எவரும் இலேசில் விட்டுத்தர மாட்டார்கள் என்பதை அறிந்திருந்த காட்ஃப்ரே, தம்முடைய இளைய சகோதரர் பால்ட்வின் ராஜாவாக வேண்டும் என்று அறிவித்துவிட்டுத்தான் கண்ணை மூடினார். வடக்கே எடிஸ்ஸா மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தாரே அந்த பால்ட்வின்.

காட்ஃப்ரே இறந்த துர்ச்செய்தியும் அரச பொறுப்பின் நற்செய்தியும் செப்டம்பர் மாதத்தின் மத்தியில் எடிஸாவை அடைந்தன. ‘என்ன? அண்ணன் இறந்துவிட்டாரா?’ என்று கொஞ்சமாக அழுதுவிட்டு, எதிர்பாராமல் வந்து சேர்ந்த அரச பதவியை நினைத்து ஏகப்பட்ட மகிழ்ச்சியில் பூரித்துப் போனார் பால்ட்வின்! மறைக்க இயலாமல் அவர் வெளிப்படுத்திய அவ்வுணர்ச்சிகளை அவருக்கு நெருக்கமான பாதிரியாரே தெரிவித்திருக்கிறார். அடுத்து மளமளவென்று காரியத்தில் இறங்கினார் பால்ட்வின். தம்முடைய நெருங்கிய உறவினரை அழைத்து, ‘என் சார்பாக நீதான் இனி எடிஸ்ஸாவை ஆள வேண்டும்’ என்று அவரை எடிஸ்ஸாவின் அதிபராக ஆக்கினார். அந்த உறவினர் பெயரும் பால்ட்வின். Baldwin of Bourcq எனப்படும் இவரை பால்ட்வின் II என்று வரலாற்றில் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வரலாறு நெடுக ஏகப்பட்ட பாத்திரங்கள். என்றிருக்க, கிறிஸ்தவர்கள் தரப்பிலும் முஸ்லிம்கள் தரப்பிலும் ஒரே பெயர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அமைந்திருந்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தாதோ? அதனால் அப்பெயர் குழப்பத்தைத் தவிர்க்க வரலாற்று ஆசிரியர்கள் அடுத்தடுத்தவருக்குப் பெயருடன் எண்களைச் சேர்த்து விட்டார்கள். அதன்படி, பால்ட்வின், எடிஸ்ஸாவின் அதிபராக பால்ட்வின் II-ஐ அமர்த்திவிட்டு ஜெருஸலம் வந்து சேர்ந்தார் என்று எளிமையாகப் புரிந்துகொள்வோம்.

சிலுவை படைத் தலைவர்களுள் மற்றவர்களுக்கும் ஜெருஸலத்தின் அரசப் பதவியின்மீது கண் உள்ளது; டான்க்ரெட்டும் பகிரங்கப் போட்டியாளராக உள்ளார் என்பதைக் கவனித்த பால்ட்வினுக்குச் சில சவால்கள் காத்திருந்தன. அவற்றுள் முக்கியமானது ஐரோப்பிய திருச்சபையின் அங்கீகாரம், ஆசீர்வாதம். ஜெருஸலத்தின் அரசராகப் பதவி ஏற்பது என்பது, ‘முன்னவர் என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார்’ என்று தலையில் கிரீடம் சூட்டிக்கொண்டு அரியணையில் அமர்வதைப் போலன்றி, நூற்றாண்டுகாலமாக நிலவி வந்த சம்பிரதாயம் ஒன்றை நிறைவேற்றினாலே உறுதியாகும். அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் தலையில், பூமியில் தேவனின் பிரதிநிதியாக அவர்கள் கருதும் பேராயரோ பாதிரியாரோ புனித எண்ணெய்யை ஊற்றி ஆசிர்வதிக்க வேண்டும். இந்தச் சடங்குதான் ஜெருஸலத்தின் அரசரை மற்ற அரசர்கள், மாநில ஆட்சியாளர்கள், அதிபர்கள் ஆகியோரிடமிருந்து வேறுபடுத்தியது. அவருக்கு ஏராளமான அதிகாரத்தை அளிக்கும் புனித அங்கீகாரமாக அமைந்திருந்தது.


தமக்கு அந்த அசீர்வாதமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டுமென்றால் தமது பலத்தை நிரூபித்துக் காட்டுவதுதான் சரியான வழி என்று முடிவெடுத்தார் பால்ட்வின். அடுத்து, கிடுகிடுவென்று சில படையெடுப்புகள் நிகழ்த்தி, ஜெருஸலத்தின் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்திருந்த சிறுசிறு பிரதேசங்களைக் கைப்பற்றினார். எகிப்தியர்கள் வசம் இருந்த கோட்டைகளைத் தாக்கி அவர்களுக்குக் குடைச்சல், துன்புறுத்தல் தரப்பட்டன. ஜெருஸலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவ யாத்ரிகர்களுக்கான பாதை காபந்து செய்யப்பட்டது. இப்படியாகத் தமது பராக்கிரமத்தை அவர் வெளிப்படுத்தி முடித்ததும் 1100ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் பெத்லஹெமில் உள்ள ஆலயத்தில் அவருக்குப் புனிதச் சடங்கு நிறைவேற்றப்பட்டது. ஜெருஸல இராஜாங்கத்தின் முதல் பரங்கியர் அரசராகப் பட்டமேற்றார் பால்ட்வின்.

இதற்கிடையே வேறு சில பகுதிகளைப் பிடிப்பதில் மும்முரமாக இருந்த டான்க்ரெட்டுக்கு அந்தாக்கியாவிலிருந்து அவசர செய்தி ஒன்று வந்தது. சிலுவை யுத்த தலைவர்களுள் ஒருவரும் டான்க்ரெட்டின் உறவினரும் அந்தாக்கியா மாநிலத்தின் அதிபருமான பொஹிமாண்ட்டை முஸ்லிம்கள் போரில் தோற்கடித்துக் கைது செய்து சிறையிலும் அடைத்துவிட்டனர். ஆட்சித் தலைமையை இழந்த அந்தாக்கியாவைக் காப்பாற்ற அங்கு விரைந்தார் டான்க்ரெட்.

ஒருவழியாக விழித்துக்கொண்ட முஸ்லிம் சுல்தான்களும் மன்னர்களும் தத்தம் முயற்சியாகச் சிலுவைப் படையுடன் ஜிஹாது என்று மோதத் தொடங்கி, சில முக்கிய நிகழ்வுகள் வடக்கே நடைபெறப்போவதால் நாமும் இப்பொழுது டான்க்ரெடுடன் அந்தாக்கியா செல்ல வேண்டியிருக்கிறது.


 - * -

அல்ப் அர்ஸலானின் பெரிய பாட்டனாரின் பேரரான சுல்தான் என்பவர் ரோம ஸல்தனத்தை கி.பி. 1077ஆம் ஆண்டு உருவாக்கினார்; அவருடைய மகன் கிலிஜ் அர்ஸலான் ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தார் என்பதையெல்லாம் எட்டாம் அத்தியாயத்தில் நாம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். இந்த ரோம ஸல்தனத்துக்கு நேரெதிர் போட்டியாக, துருக்கிய முஸ்லிம்களுள், டானிஷ்மெண்த் என்றொரு வம்சாவளி உருவாகியிருந்தது. டானிஷ்மெண்த் காஸி (Danishmend Gazi) என்பவரால் கி.பி. 1071ஆம் ஆண்டு இது உருவானது என்பது வரலாற்றுத் தகவல். ரோம ஸல்தனத்துக்குக் கிழக்கே இவர்களது பிரதேசம் உருவாகியிருந்தது. இவர்கள் தங்களது ஆட்சி அதிபரை மாலிக் என்று அழைப்பார்கள். கி.பி. 1100ஆம் ஆண்டு, டானிஷ்மெண்த் காஸியின் மகனான மாலிக் காஸி குமுஷ்திஜின் (Gazi Gümüshtigin) இப்பகுதியை ஆட்சி புரிந்துகொண்டிருந்தார். இப்பகுதிக்குத் தெற்கே ஆர்மீனியர்கள் ஆட்சி புரிந்த சிலிசியா அமைந்திருந்தது. அதையடுத்து அந்தாக்கியா. பொஹிமாண்ட் அந்தாக்கியாவின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுமே தமது அண்டைப் பிரதேசமான சிலிசியாவின் ஆர்மீனியர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொண்டார்.

கி.பி. 1100ஆம் ஆண்டு சிலிசியாவின் வடக்கே உள்ள பகுதிகளையும் அரண்களையும் தாக்கத் தொடங்கினார் டானிஷ்மெண்த் காஸி குமுஷ்திஜின். அங்கிருந்த மெலிடீன் நகரின் அதிபருக்கு அதை எதிர்க்கும் அளவிற்கு வலிமை இல்லை. எனவே, தம்முடைய நட்பரசர் பொஹிமாண்டுக்கு, ‘உதவுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று தகவல் அனுப்பினார் அவர். பொஹிமாண்டும் தமது பரங்கியர் படையைத் திரட்டிக்கொண்டு சிலிசியாவின் மெலிடீனுக்கு அணிவகுத்தார்.


பதுங்கிக் காத்திருந்தனர் டானிஷ்மெண்த் படையினர். பரங்கியர் படை நுழைந்ததும் டானிஷ்மெண்த் படை அவர்களைத் திடீரென்று தாக்கி, திகைப்பில் ஆழ்த்தி, சிலுவைப் படை வீரர்களுள் ஏராளமானோரை வெட்டித் தள்ளிக் கொன்றனர். அர்மீனியாவின் பாதிரியார்கள் கொல்லப்பட்டனர். உச்சக்கட்டமாகச் சிலுவைப் படையின் முக்கிய தலைவரும் அந்தாக்கியாவின் அதிபருமான பொஹிமாண்ட் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிலுவைப் படை தரப்பில் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு அது பெரும் அதிர்ச்சியை அளித்தது.. முஸ்லிம்களுக்கோ, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த முதலாம் சிலுவைப் படை அப்படியொன்றும் வெட்டி முறிக்க முடியாத சக்தியன்று என்று அந்த மெலிடீன் போரின் வெற்றி (Battle of Melitene) புத்துணர்ச்சியை ஊட்டிவிட்டது.

அதே நேரத்தில் அங்கு ஐரோப்பாவில் புதிய போப் பேஸ்கல் II -வின் ஆசிர்வாதத்துடன் உருவாகிக்கொண்டிருந்தது அடுத்த சிலுவைப் படை. அவர்கள் வந்து நுழைந்ததையும் அவர்களுக்கு நேர்ந்த கதியையும் அடுத்துப் பார்ப்போம்.

 

- * -

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 26
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 28

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்

 


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி

அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
26 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
27 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
32 திருநெல்வேலி வரலாறு...!
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 அந்த இரண்டணா ......
35 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
36 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
42 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
43 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
44 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
45 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
46 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
47 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
48 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
49 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
56 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
57 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
58 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
59 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
60 சூஃபிக்களும் புனித போர்களும்
61 யார் தேச விரோதி?
62 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
63 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
64 விடுதலைப்போரில் வீரமங்கையர்
65 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
66 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
67 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
68 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
69 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
91 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்