சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
மறுநாள் விடிந்தது. போர் தொடர்ந்தது. முந்தைய நாள் ஏமாற்றத்துடன் பின் வாங்கிய ரேமாண்ட், படு உக்கிரமாக முன்னேற முயன்றார். ஆனால் அவர் போரிட்ட பகுதி
ஃபாத்திமீக்களின் தற்காப்பு பலமுடன் திகழ்ந்த பகுதியல்லவா? இடைவிடாது அவர்கள் எதிர்த்தாக்குல் தொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் சிலுவைப் படையின் முற்றுகைக் கோபுரம் அவர்களது எறிகுண்டுகளின் தீக்கு இரையாகி எரிந்து விழுந்தது. அதுவும் இதர உயிரிழப்புகளும் சோர்வுற வைத்து, மிகவும் நம்பிக்கை இழந்து போனார் ரேமாண்ட்.
ஜெருஸலம் இருபுறங்களிலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், அவ்விரு பக்கத்திற்கும் ஃபாத்திமீக்கள் தகுந்த அளவில் படைகளைப் பிரிக்க இயலாமல் போய், வடக்குப் பகுதியின் தற்காப்பு பலவீனமாக இருந்தது. அதனால் அப்பகுதியைத் தாக்கிக் கொண்டிருந்த காட்ஃப்ரே தலைமையிலான அணியின் தாக்குதலில் இன்றும் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்தது. முந்தைய நாள் ஃபாத்திமீக்களின் எறிகுண்டுகளின் தீ விளைவித்த சேதம், சிலுவைப் படையின் உருக்குத் தூண் அதற்கு இரையானது ஆகியன பிரச்சினைகளாக அமைந்தன அல்லவா? அதனால், தங்களது முற்றுகைக் கோபுரம் தீக்கு இரையாகிவிட்டால் போரின் போக்கே மாறிவிடுமே என்ற கவலை காட்ஃப்ரேவுக்கு ஏற்பட்டது. அதனால் அவர் சில முன்னேற்பாடுகளைச் செய்தார்.
சிலுவைப் படையினர் தடுப்பு வேலிகள் சிலவற்றை உருவாக்கினார்கள். தீப்பற்றாமல் இருக்க அவற்றைத் தோலினால் போர்த்திக் கட்டினார்கள். பாதுகாப்புக் கவசம் போல் அந்த வேலிகளைக் கோபுரத்துக்குத் தடுப்பாக அமைத்துவிட்டார்கள். இந்த வேலிகள் அவர்கள் எதிர்பார்த்தபடி சரியான பாதுகாப்பாக அமைந்துவிட்டன. அதே நேரத்தில் ஃபாத்திமீக்களும் ஓர் இரகசிய ஆயுதத்தை தயார் செய்து வைத்திருந்தார்கள். கப்பலின் பாய்மரக் கழி போன்ற ஒன்றை மிகப் பெரிய அளவில் மரக்கட்டைகளினால் உருவாக்கினார்கள் அவர்கள். இரசக் கற்பூரத்தினால் தயாரிக்கப்பட்ட இரசாயனத்தில் அந்தக் கழியை ஊறப் போட்டனர். எளிதில் பற்றும் தன்மை கொண்ட அந்த இரசாயனத் தீயை நீர் ஊற்றி அணைக்கவே முடியாது என்பது அதன் சிறப்பு. அதைத் தக்க நேரத்தில் பிரயோகிக்கத் திட்டம் வகுத்துக்கொண்டார்கள் அவர்கள்.
வடக்குப் பகுதியின் வெளிப்புற அரண் சுவரை முந்தைய நாளே சிலுவைப் படை பிளந்துவிட்டதால், அந்த வழியைப் பயன்படுத்தித் தமது முற்றுகைக் கோபுரத்தை முன் நகர்த்த உத்தரவிட்டார் காட்ஃப்ரே. அம்மாபெரும் கட்டுமானத்தைப் பெரும் சிரமத்துடன்தான் அதனுள் நுழைத்து, இழுக்க வேண்டியிருந்தது. ஆனால் போர் வெறியின் உச்சத்தில் இருந்த சிலுவைப் படை அதை நிறைவேற்றியது. அத்துடன் ஜெருஸலம் நகரின் முதற்கட்ட அரண் ஃபாத்திமீக்களுக்கு முற்றிலும் பயனற்றுப்போனது. அதனால், ஃபாத்திமீக்களின் படை சீற்றத்துடன் எதிர்த் தாக்குதல் தொடுத்தது. இடைவெளியே இன்றி விர்விர்ரென்று பறந்து வந்தன அம்புகள். அதேபோல் சிலுவைப் படையினரின் அம்புகளும் பறந்தன. வானை மேகம் போல் அம்புகள் மறைக்க, களமே இருண்டு போனது. இருதரப்பிலும் மளமளவென்று சாய்ந்தன சடலங்கள். அத்தனைக்கும் இடையே பரங்கியர்கள் வெகு கவனமாய் அந்த முற்றுகைக் கோபுரத்தை நகர்த்திக்கொண்டே செல்ல, அங்குலம் அங்குலமாக அதுவும் முன்னேறிக்கொண்டே இருந்தது. அதன் உச்சிப் பகுதியில் அமர்ந்தபடி, உத்தரவுகளை அளித்துக்கொண்டிருந்தார் காட்ஃப்ரே. அச்சமயம், ஃபாத்திமீக்கள் தங்கள் கவண் பொறியிலிருந்து வீசியெறிந்த குறும்பாறை ஒன்று பெரும் வேகத்துடன் அவரை நோக்கிப் பறந்து வந்தது. இறைவனின் நாட்டப்படி அவருக்கு ஆயுள் மிச்சமிருக்க, அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்தவனின் தலையைத் தனியே கழற்றி எறிந்துவிட்டுப் பொத்தென்று விழுந்தது கல். மயிரிழையில் உயிர் தப்பினார் காட்ஃப்ரே!
மெதுமெதுவே முன்னேறி வந்த முற்றுகைக் கோபுரம், அடுத்த அடுக்கில் இருந்த பிரதானச் சுவர்களை நெருங்கிவிட, ஃபாத்திமீக்களின் பாதுகாப்பு அரணுக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி வெகு சில மீட்டர் அளவிற்குக் குறைந்தது. ஜெருஸலம் எனும் வெற்றிக்கனி, கைக்கு எட்டும் உயரத்தில் இருப்பதைக் கண்டதும் உத்வேகம் பரவி மேலும் ஆக்ரோஷமானது சிலுவைப் படை. ஆயுதங்களும் அம்புகளும் பறந்து கொண்டிருக்க, இறுதிக்கட்ட தற்காப்பாகத் தங்களது அந்த இரகசிய ஆயுதத்தைப் பிரயோகித்தனர் ஃபாத்திமீக்கள். இரசாயணத்தில் ஊறி “சொதசொத”வென்று கிடந்த அந்த மாபெரும் தூலத்தைக் கொளுத்தி, முன்னேறி வரும் முற்றுகைக் கோபுரத்துக்கும் நகரின் சுவருக்கும் இடையே தூக்கிப் போட, பெரும் ஜுவாலையுடன் திகுதிகுவென்று எரிந்தபடி, தடை அரணாக வந்து விழுந்தது அத்தூலம். அருமையான யோசனை. சிறப்பான திட்டம். எல்லாம் சரியாகவும் நடந்தன. ஆனால் –
ஜெருஸலம் நகரினுள் இருந்த சில கிறிஸ்தவர்கள் இத்திட்டத்தைக் குறித்தும் நீருக்கு அணையாத அந்தத் தீயைக் குறித்தும் பரங்கியர்களுக்கு முன்னமேயே தகவல் அனுப்பிவிட்டார்கள். கூடவே இரகசியக் குறிப்பு ஒன்றையும் இணைத்திருந்தினர். அது, காடி! அந்தத் தீயின் மீது காடியை ஊற்றினால் தீ அணைந்துவிடும் என்ற இரகசியம் பரங்கியர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது. அதனால் காட்ஃப்ரே என்ன செய்தார் என்றால், ஒயின் சேமிக்கப் பயன்படும் தோல் துருத்திகள் ஏராளனமானவற்றில் காடியை நிரப்பி அவற்றை அந்தக் கோபுரத்தில் அடுக்கி எடுத்து வந்திருந்தார். எனவே, வந்து விழுந்த அந்தத் தீ ஆயுதம் அவர்களை அச்சுறுத்தவில்லை. அந்த நெருப்பின் மீது மளமளவென்று காடி ஊற்றப்பட அணைந்தது தீ. புகைவிட்டுக்கொண்டு நின்ற அந்த மரக்கழியைப் பரங்கிப் படையினர் நகர்த்தித் தள்ள போர்க்களத்தின் இறுதி வாசல் திறக்கப்பட்டது.
அடுத்து அவர்களுக்கு அமைந்த முக்கிய இலக்கு கோபுரங்கள். அவற்றைக் கைப்பற்றினால் விஷயம் முடிந்தது என்பதை அறிந்திருந்தனர். ஏறக்குறைய அவற்றுக்கு இணையான உயரத்தில் நின்றிருந்த தங்களது முற்றுகைக் கோபுரத்திலிருந்து ஃபாத்திமீக்களின்மீது தாக்குதல் தொடுக்கும்படி கட்டளையிட்டார் காட்ஃப்ரே. இறுதிக் கட்ட சண்டை அரங்கேறியது. பெரும் ஆரவாரத்துடன் கடுமையான போர். அந்த அமளிகளுக்கு இடையே சிலுவைப் படையினர் ஒரு விஷயத்தைக் கவனித்து விட்டனர். அண்மையில் இருந்த கோபுரம் ஒன்றும் அதன் கொத்தளத்தின் ஒரு பகுதியும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. சிலுவைப் படை இடைவிடாது தொடுத்த தீ அம்புகளாலும் கவண் பொறியிலிருந்து வீசிய தீக்கற்களாலும் அந்தப் பிரதானச் சுவரின் கீழ்க்கட்டுமானத்தின் மரப் பகுதியும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருந்தது. அதன் ஜுவாலையும் புகையின் தாக்கமும் எந்தளவு கடுமையாக இருந்ததென்றால் ஃபாத்திமீ வீரர்கள் ஒருவர்கூட அதன் அருகே நிற்க முடியவில்லை. அது ஏற்படுத்திய அதிர்ச்சியில், குழப்பத்தில், தடுமாறிப்போன அவர்களால், சிலுவைப் படையினர் தங்களுடைய முற்றுகைக் கோபுரத்திலிருந்து இடைவிடாது தொடுத்த கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போனது. ஃபாத்திமீக்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
இந்த அரிய வாய்ப்பு நெடுநேரம் நீடிக்காது என்பதை உணர்ந்தார் காட்ஃப்ரே. சட்டென்று ஒரு காரியம் செய்தார். தங்களுடைய முற்றுகைக் கோபுரத்துக்குக் கவசமாகத் தடுப்பு வேலிகள் கட்டிவைத்திருந்தார்கள் அல்லவா? அவற்றிலிருந்து ஒரு பிணைப்பை அறுக்க, வேலி ஒன்று நகரின் கோட்டை மதிற்சுவர்மீது அப்படியே சாய்ந்தது. முற்றுகைக் கோபுரத்துக்கும் நகரின் கோபுரத்துக்கும் இடையே தற்காலிகப் பாலம் உருவானது. அதன்மீது சிலுவைப் படையினர் திபுதிபுவென்று ஓடி மறுபுறம் தாவினர். மேலும் பலர் அந்தப் பாலத்தின் கீழே ஓடி ஏணிகளில் மூலம் நகரின் கோட்டைச் சுவர்களில் ஏறிவிட்டனர். காட்ஃப்ரே எண்ணியபடி அத்திட்டம் மிகச் சரியாக வேலை செய்தது. அடுத்து ஃபாத்திமீக்களின் தற்காப்புப் படையினரைத் தாக்கத் தொடங்கியது. ஃபாத்திமீப் படை வீரர்கள் பின்வாங்கி ஓடினர்.
அதே நேரத்தில் ஸியான் மலைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ரேமாண்ட் பெரும் முன்னேற்றம் இன்றித் தோல்வியின் விளிம்பிற்குச் சென்று விட்டார். ஃபாத்திமீக்களின் கையே அங்கு ஓங்கியிருந்தது. ஆனால் அச்சமயம் பார்த்து, நகரின் மறுபுறம் நிகழ்ந்த போரில் பெரும் திருப்பம் ஏற்பட்டு சிலுவைப் படை நுழைந்துவிட்டது என்ற செய்தி அவர்களை வந்தடைய அப்படியே துவண்டு போனார்கள் அவர்கள். அதுவரை உக்கிரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்த அவர்கள் மனம் தளர்ந்துபோய், பின்வாங்க ஆரம்பித்தார்கள். அச்சத்தில் சிலர் கோட்டைச் சுவர்களிலிருந்து குதித்துக் கைகால்களை உடைத்துக்கொண்டதும் உயிர்விட்டதும் நிகழ்ந்தது. கண்ணெதிரே மாயம் போல் நிகழ்ந்த இந்த மாற்றத்தைக் கண்டார் ரேமாண்ட். அடுத்து, சற்றும் தாமதிக்காமல் வேகமாக முன்னேறிய அவரின் படையும் நகரின் இப்பகுதியினுள் புகுந்தது. மறுபுறத்திலிருந்து நுழைந்த சிலுவைப் படை அணியுடன் இணைந்தது.
அது கி.பி. 1099 ஆம் ஆண்டு. ஜுலை 15 ஆம் நாள். ஜெருஸலத்தைக் கைப்பற்றியது முதலாம் சிலுவைப் படை! அடுத்து நிறம் மாறியது அப்புனித நகரம் – இரத்தச் சிவப்பில்!
oOo
இரையின்மீது பாயும் ஓநாய்க் கூட்டத்தைப் போல், புனித நகரமான ஜெருஸலத்தின் வீதிகளில் இரத்த வேட்கையுடன் அலைபோல் பாய்ந்தது சிலுவைப் படை. நகரின் உள்ளே இருந்த முஸ்லிம்களின் எதிர்ப்பு முயற்சிகளெல்லாம் அந்த சுனாமி அலைகளின் எதிரே அப்படியே அமுங்கிப் போயின. நகரினுள் இருப்பவர்களைச் சிறைக் கைதிகளாகப் பிடிக்கும் எண்ணமெல்லாம் அந்தக் காட்டுமிராண்டிக் கும்பலுக்கு அறவே இல்லை. இழு, பிடி, கொல். அவ்வளவே! வெறிபிடித்த காட்டுமிராண்டிகளாய் மிக மிகக் கொடூரமான முறையில் இனப் படுகொலைகளை நிகழ்த்தத் தொடங்கினார்கள்.
சிலுவைப் படையைச் சேர்ந்த ஒருவன் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நிகழ்வை விவரித்துள்ளான். ‘ஜெருஸலமும் அதன் கோபுரங்களும் வீழ்ந்தவுடன் அற்புதமான விளையாட்டைக் காண முடிந்தது. சிலர் இரக்கத்துடன் தலை துண்டிக்கப்பட்டனர், மற்றவர்கள் கோபுரங்களிலிருந்து எய்யப்பட்ட அம்புகளால் துளைக்கப்பட்டனர். இன்னும் சிலர் நீண்ட சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுத் தீக்கு இரையாக்கப்பட்டனர். வீடுகள், தெருக்கள் எங்கெங்கும் தலைகள், கைகள், கால்கள், அங்கங்களின் குவியல்கள். சிலுவைப் படை அணியினரும் சேனாதிபதிகளும் அந்தச் சடலங்களின் மேல் ஏறி ஓடிக்கொண்டிருந்தனர்’. சித்திரவதை ஏதுமின்றி தலையை மட்டும் கொய்தல் இரக்கம் என்பது அன்றைய விதி ஆனது.
பல முஸ்லிம்கள் அக்ஸா பள்ளிவாசல் எனப்படும் ஹரம் ஷரீஃபிற்குத் தப்பித்து ஓடினர். சிலர் அங்கு அணி திரண்டு, எதிர்த்தும் போராடினர். ஆனால், அது பயனின்றி முடிந்தது. `நகரைத் தற்காத்தவர்கள் அனைவரும் பின்வாங்கி நகரின் சுவரோரமாக ஒதுங்கிவிட்டார்கள். எங்களது படையினர் அவர்களை விரட்டிச் சென்று, கொன்றனர், வெட்டி எறிந்தனர். அப்படியே அக்ஸா பள்ளிவாசல் வரை தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். அங்கு எத்தகைய படுகொலையை நிகழ்த்தினர் எனில், எங்களது படையணியினரின் கணுக்கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் நனைந்து கொண்டிருந்தன.’ என்று சிலுவைப் படையைச் சேர்ந்த மற்றொருவன் சாட்சி பகர்ந்துள்ளான்.
அக்ஸா பள்ளிவாசலின் கூரையில் குவிந்திருந்த குழுவுக்குத் தன்னுடைய பதாகையை அளித்து அவர்கள் என்னுடைய போர்க் கைதிகள் என்று அபயம் அளிக்கப் பார்த்தார் டான்க்ரெட். ஆனால் அந்தப் பாதுகாப்பெல்லாம் அன்றைய வெறியாட்டத்துக்கு ஒத்துவரவில்லை. அந்த அத்தனை பேரும் பரங்கியர்களால் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். அன்றைய படுகொலைகளின் கொடூரம் எந்தளவு இருந்ததென்றால், ‘பீய்ச்சிப் பாய்ந்த சூடான இரத்தங்களின் ஆவியைக் கொலை செய்துகொண்டிருந்த சிலுவைப் படையைச் சேர்ந்தவனால்கூடத் தாங்க முடியவில்லை’ என்று பரங்கியன் ஒருவன் விவரித்துள்ளான். முஸ்லிம்கள், யூதர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தப் பேதமுமின்றி வெட்டிக் தள்ளிக்கொண்டே இருந்தது அந்த அரக்கக் கூட்டம்.
பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னுல்-அதிர், அந்நிகழ்வில் 70,000 முஸ்லிம்களைவரை கொல்லப்பட்டனர் என்று மதிப்பிட்டுள்ளார். இந்த எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு இருந்த போதிலும், ‘சிலுவைப் படையினரின் மனிதாபிமானமற்ற கொடுவெறிப் படுகொலைகளை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ் குறிப்பிடுகிறார்.
சிலுவைப் படையினர் அன்று நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனம் வெறுமே வெற்றிக் களிப்பில் தன்னிலை மறந்து செய்தவை அல்ல. ஆண்டாண்டுகளாய் நன்கு திட்டமிடப்பட்டு, போப்புகளால் மெதுமெதுவே ஊட்டப்பட்டு, முற்றி, தலைக்கேறியிருந்த இனவெறி நஞ்சு, கட்டவிழ்க்கப்பட்ட தருணம் அது. இரண்டு நாள் நீடித்த அந்தப் படுகொலைகளால், நகர வீதிகளில் இரத்த வெள்ளம். ஊரெங்கும் பிணக் குவியல்கள். அந்தக் கோடை வெப்பத்தில் பிண நாற்றம் சகிக்க முடியாத அளவை எட்டிப் போய், சடலங்களை இழுத்துச் சென்று நகரின் சுவர்களுக்கு வெளியே மலைபோல் குவித்துத் தீயிட்டு எரித்தது சிலுவைப் படை. ஆறு மாதம் கழித்து முதன் முறையாக ஃபலஸ்தீனுக்கு வந்த ஐரோப்பியர் ஒருவர், ‘அழுகிய பிண நாற்றம் நகரத்தில் பரவியுள்ளதை இன்றும் நுகர முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சிலுவைப் படையினரைப் பொறுத்தவரை, அவற்றை இனவெறியாகவோ, மாபாதகமாகவோ, குற்றமாகவோ, பாவமாகவோ அவர்கள் நினைக்கவே இல்லை. மாறாக, தாங்கள் தேவனின் ஊழியர்கள், இது தேவனுக்கான பணி என்று அழுத்தம் திருத்தமாக நம்பினர். அதனால்தான் அத்தகு வெறியாட்டத்தை நிகழ்த்தி விட்டு, எத்தகு சஞ்சலமும் இன்றி அன்று மாலையே தங்களின் தேவனுக்கு நெக்குருகி நன்றியுரைத்து வழிபாடும் நடத்தினர்.
இவற்றுக்கு முற்றிலும் நேர்மாறாக, 89 ஆண்டுகள் கழித்து மீண்டும் முஸ்லிம்கள் வசமானதே ஜெருஸலம், அச்சமயம் நிகழ்ந்தவை வரலாற்றில் பொன்னெழுத்துக்கு உரியவை ஆகின. அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் சிலாகித்தே தீரவேண்டிய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார் ஜெருஸலத்தை மீட்டெடுத்த மாவீரர். சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி!
அதை அறிய நீண்ட நெடும் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
- * -
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 24 |
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 26 |
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன்