Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!

அந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது! முன்னர் நைக்கியாவை முற்றுகையிட்டது போல் இந் நகரையும் சுற்றி வளைக்கலாம் என்றால் அதற்கு வழியின்றி, நீண்டு நெளிந்து

உயர்ந்தோங்கியிருந்த அந்தாக்கியாவின் சுவர்கள், இயற்கை அரணாகச் சுற்றியிருந்த மலைகள், அவற்றின் கரடுமுரடு, பலத்த காவலுடன் அமைந்திருந்த முக்கிய ஆறு நுழைவாயில்கள் எல்லாமாகச் சேர்ந்து, அந்நகரை முழுவதுமாய்ச் சுற்றி வளைப்பது முடிகிற காரியமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஊக்கம் வடிந்து நின்றார்கள்!

இருந்தும் துணிந்து முற்றுகையிடலாம் என்றால், அந்தாக்கியாவைத் தாக்குவதற்கும் அவர்களுடன் போர் புரிவதற்கும் தளவாடங்கள் வேண்டும். தளவாடங்கள் என்றால் சுவர்களின் மீது ஏறுவதற்குப் பெரும் உயரமான ஏணிகள், கவண் பொறிகள், அதைச் சுமக்கும் நடமாடும் கோபுரங்கள் போன்றவை. அடுத்து அத்தகு போர் முறையில் தேர்ச்சியுடைய வல்லுநர்களும் தேவை. அப்படியான வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், அந்தாக்கியாவை வெறித்துப் பார்த்து, ‘வெல்வது அசாத்தியம்’ என்று கவலையுடன் நின்றது சிலுவைப் படை. ‘அதற்காக அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவதா?’ என்று சிலுவைப் படைத் தலைவர்கள் ஆலோசனை புரிந்தனர். நகரை முழுவதுமாகச் சுற்றி வளைக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை முற்றுகையிடுவோம் என்று முடிவாயிற்று.

அந்தாக்கியாவின் வடமேற்குப் பகுதியில் மூன்று வாயில்கள் அமைந்திருந்தன. முதல் கட்டமாக அந்தப் பகுதியை அடைத்துப் படைகளை நிறுத்தி, வழியை மறித்து, அப் பகுதியைச் சிலுவைப் படை முற்றுகையிட்டது. அதற்கடுத்துத் தெற்கே அமைந்திருந்த இரண்டு வாயில்களையும் நோட்டமிட்டார்கள். ஓரோன்தஸ் ஆற்றின் மேல் தற்காலிகப் பாலம் அமைத்து, அந்தப் பகுதியை அணுகி, அங்கும் முற்றுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட, மெதுமெதுவே நகரைச் சுற்றி அவர்களது சுருக்குக் கயிறு இறுக ஆரம்பித்தது. நகரின் ஐந்து வாயில்கள் மறிக்கப்பட்டு ஒன்றே ஒன்று மட்டும் மிச்சமிருந்தது. ஸ்டோரின், சில்பியஸ் மலைகளின் அடிவாரத்தில் பாறைகளாலான பள்ளத்தாக்கில் இரும்புப் பாலத்திற்கு அண்மையில் பாதுகாப்புடன் இருந்த அந்த ஒற்றை வாயிலை மட்டும் சிலுவைப் படையால் நெருங்க முடியவில்லை. அது, யாகி சியானுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து போனது. அந்தாக்கியா வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும் மக்களுக்குத் தேவையான உணவு, இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்கள் போன்றவற்றை நகருக்கு உள்ளே கொண்டுவரவும் பேருதவி புரிந்தது. அடுத்துப் பல மாதங்களுக்கு நீண்ட முற்றுகையைச் சமாளித்துத் தாக்குப்பிடிக்க அந்தாக்கியாவின் ஜீவநாடியாக அமைந்திருந்தது அந்த வாயில்.

கி.பி. 1097ஆம் ஆண்டு. இலையுதிர்க் காலம். வெளியே நகரின் பெரும் பகுதியை அடைத்தபடி முற்றுகையிட்டது சிலுவைப் படை. தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றி மூச்சு விட்டுக்கொள்ளப் போதுமான இடைவெளியுடன் எதிர்த்து நின்றது அந்தாக்கியா. இப்படியாக அந்த நிலம் போர்க்கோலம் பூண்டது. இத்தகைய முற்றுகையில் முழு வீச்சில் மும்முரமாகப் போர் எதுவும் நடைபெறாது என்றாலும் நாள்தோறும் சிறுசிறு சண்டை, கைகலப்பு நிகழும். இரு தரப்பிலும் சில பல தலைகள் உருளும். அவையன்றி, இரு தரப்பிற்கும் சவாலாய் அமைவது பொறுமை. அசாத்தியப் பொறுமை. தத்தம் படையினரின் மன வலிமையும் கட்டுப்பாடும் ஒழுங்கும் அமைதியும் வெற்றிக்கு முக்கிய மூலங்கள் என்பதால் இருவருமே எதிர்த்தரப்பை பலவீனப்படுத்த அவர்களுக்கு மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும் அத்தனை உபாயங்களையும் செயல்களையும் தந்திரங்களையும் தேர்வு செய்து நிகழ்த்துவார்கள்.

சிறு சண்டைகள் நடைபெறும் அல்லவா? அவற்றில் தாங்கள் கொன்ற முஸ்லிம்களின் தலைகளைக் கொய்து, ஆயுதங்களில் ஏந்தி, அரணுக்கு வெளியே சிலுவைப் படை ஊர்வலம் நடத்தும். முஸ்லிம்கள் தங்களிடம் மாட்டிய கிறித்தவர்களைக் கொன்று அவர்களுடைய தலைகளை வெளியே தூக்கி எறிவார்கள். இரத்தச் சாரலுடனான இத்தகு பரிமாற்றங்களில் முதலில் பலவீனம் அடைவது யார் என்பதே போட்டி. இது ஒருபுறமிருக்க தினசரித் தேவைக்கான வசதிகளைச் சேகரம் செய்து சமாளிப்பதுதான் அவர்களது அடுத்த முக்கியப் போராட்டம். உணவும் இதர அவசியப் பொருள்களும் தீர்ந்துபோய் உள்ளிருப்பவர்கள் சரண் என்று கையைத் தூக்க வேண்டும்; அல்லது முற்றுகையிட்டவர்கள் அந்தப் பிரச்சினையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முற்றுகையைத் தளர்த்திவிட்டுப் பின் வாங்க வேண்டும். அவ்வகையில் சிலுவைப் படைதான் பலவீன நிலையில் இருந்தது. முஸ்லிம்கள் ஒற்றை வாயில் வழியாகத் தங்களுக்குத் தேவையானவற்றை வரவழைத்துக்கொண்டு தாக்குப்பிடிக்க, சிலுவைப் படையோ தன் ஆகாரத் தேவைகளுக்குச் சுற்றி அலைய வேண்டியிருந்தது.

இந்நிலையில் அந்த ஆண்டின் குளிர் காலம் வந்து சேர்ந்தது. கடும் குளிரில், போதுமான உணவும் இன்றிக் கிடந்த சிலுவைப் படையினருள் பலர், உயிர் இழக்க ஆரம்பித்தனர். 1098 ஜனவரியில் அது உச்சத்தை எட்டியது. இறந்தவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் என்றால், நோயினாலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவித்த அவர்களின் எண்ணிக்கை மறுபுறம். அந்தக் கொடுமைகளைச் சமாளிக்க முடியாமல் பலர் படையை விட்டுத் தப்பி ஓட ஆரம்பித்தனர். அப்படி ஓடியவர்களுள் முக்கியமான ஒருவரும் இருந்தார். மக்களின் சிலுவைப் போர் என்ற ஒன்றைத் துவக்கி அதற்குத் தலைமை வகித்தாரே துறவி பீட்டர், அவரும் இரவோடு இரவாகத் தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வந்தார் டான்க்ரெட். பைஸாந்தியச் சக்ரவர்த்தி சிலுவைப் படைக்குத் துணையாக அனுப்பி வைத்த அவருடைய தளபதி டாட்டிசியஸோ, ஆசியா மைனருக்குப் போய்ச் ‘சக்ரவர்த்தியிடம் பேசி, உணவும் மேலதிகப் படையும் ஏற்பாடு செய்து வருகிறேன்’ என்று நழுவிச் சென்றார். சென்றவர் சென்றவர்தாம். திரும்பி வரவே இல்லை. ஆனால், உணவுப் பொருள்கள் மட்டும் சிலுவைப் படைக்கு வந்து சேர்ந்தன.

அடுத்து வசந்த காலம் வந்தது. நிலைமை மெதுமெதுவே சிலுவைப் படைக்குச் சாதகமாக மாறத் துவங்கியது. சிலிசியாவிலிருந்து அவர்களுக்குத் துணைப்படை ஒன்று வந்து சேர, எடிஸ்ஸாவிலிருந்த பால்ட்வின் தம் பங்குக்கு ஒரு படையை உதவியாக அனுப்பி வைத்தார். இலத்தீன் கிறித்தவர்கள் கைப்பற்றியிருந்த சிரியாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களின் வழியாக மத்திய தரைக்கடலில் நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு வந்தடைந்தன. ஆங்கிலேயர்களின் சிறு கடற்படை ஒன்று, உணவு, கட்டுமானப் பொருட்கள், மற்றும் வல்லுநர்களுடன் அந்தாக்கியாவிலிருந்த செயின்ட் சைமன் துறைமுகத்திற்கு வந்தது. பொஹிமாண்டும் ரேமாண்டும் அவற்றையும் அவர்களையும் அந்தாக்கியாவின் முஸ்லிம் படைகளின் எதிர்ப்பைச் சமாளித்து, பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியாகப் படையினரின் எண்ணிக்கை உயர்ந்து, ஆகார நிலைமை சீரடைந்து, வல்லுநர் உதவிகள் வந்து சேர்ந்து, நிலைமை வலுவடைந்து புத்துணர்ச்சி பெற ஆரம்பித்தது சிலுவைப்படை.

அதுநாள் வரை அந்தாக்கியா நகரின் பால வாயிலை யாகி சியானின் படையினரும் மக்களும் சிரமமின்றிக் கடக்க முடிந்ததால் அப் பகுதியின் சாலைகள் முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்பொழுது கிறித்தவர்கள் என்ன செய்தனரென்றால், அந்த வாயிலுக்கு எதிரே அமைந்திருந்த சமவெளியில், இந்த முற்றுகையினால் அனாதரவாகிவிட்ட பள்ளிவாசலைக் கைப்பற்றி, தங்களுக்கு வாகாய்க் கோட்டை ஒன்றை ஏற்படுத்தி அதற்கு லா மாஹெமெரி (ஆசீர்வதிக்கப்பட்ட மரியா) என்றும் பெயரிட்டுவிட்டனர். அது, அங்கு அவர்கள் இருந்துகொண்டு அப் பகுதியைக் கண்காணிக்கப் பெரும் வசதியாக அமைந்துவிட்டது. சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான ரேமாண்ட், “இந்தப் பகுதிக்கு நான் முழுப் பொறுப்பு; இதற்கான படைச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்; காவலுக்கு என் அணி தயார்” என்று அறிவித்தார். பரோபகாரமோ என்றால் இல்லை. போட்டி. யார் நகரின் செல்வத்தை முதலில் கைப்பற்றுவது என்று சிலுவைப் படைத் தலைவர்களுக்குள் தன்னிச்சையாய் எழுந்த போட்டி.

இத்தாலியின் தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்டுக்கும் ரேமாண்டுக்கும் போட்டி என்று முன்னரே அறிமுகப்படுத்திக்கொண்டோம் இல்லையா? அந்த பொஹிமாண்டின் படை அந்தாக்கியாவின் செயிண்ட் பால் வாயிலுக்கு எதிரே முகாமிட்டுக் காத்திருந்தது. நகர் வீழ்ந்ததும் உடனே உள்ளே புகுந்து செல்வங்களைக் கொள்ளையடிக்க பொஹிமாண்ட் கழுகு போல் காத்திருந்தார். முதலில் கைப்பற்றுபவர்களுக்கே அனைத்து உரிமையும் சேரும் என்று அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டிருந்தது. எனவே, அந்தப் பகுதியில் பொஹிமாண்ட் தயாராய் நிற்கின்றார் என்றதும் இப்பகுதியில் ரேமாண்ட் தம் படையுடன் நின்றுகொண்டார். அதற்குத்தான் அந்தப் பரோபகாரம்.

மற்றொரு வாயிலான செயிண்ட் ஜார்ஜிற்கு அருகே மடாலயம் ஒன்று இருந்தது. அடுத்து ஒரு மாதத்திற்குள் சிலுவைப் படை அதை வலுப்படுத்தித் தனது முற்றுகைக்கும் போர் நடவடிக்கைகளுக்கும் ஏதுவாக மாற்றியது. பொஹிமாண்டின் உடன்பிறந்தார் மகனான டான்க்ரெட் தாம் இந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி, அதற்குச் சன்மானம் பேசிக்கொண்டார். நகரம் கைப்பற்றப்பட்டதும் அனைத்தையும் நீங்கள் கொள்யையடித்து எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு சன்மானமாக வெள்ளி வேண்டும் என்று பெரும் அளவு வெள்ளியை நிர்ணயித்துச் சிலுவைப் படைத் தலைவர்களுடன் பேரம் பேசிக்கொண்டார். ஐரோப்பாவிலிருந்து படை கிளம்பியபோது பொஹிமாண்டின் தலைமையில் பணியாற்ற, படையில் இணைந்த டான்க்ரெட் இப்பொழுது தம்மளவில் முக்கியமான ஒரு புள்ளியாக உருவாக ஆரம்பித்தார்.

கி.பி. ஏப்ரல் 1098. அந்தாக்கியாவைச் சுற்றிச் சிலுவைப் படை மெதுமெதுவே தனது முற்றுகையை இறுக்க, முஸ்லிம்களின் உணவுக்கும் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

oOo

முற்றுகையிட்ட நாள் முதலாய்ச் சிலுவைப் படை பெரும் அச்சத்திலும் நடுக்கத்திலும்தான் இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அந்தாக்கியாவில் இருக்கும் தங்களது சகோதரர்களைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த முஸ்லிம் படை எந்நேரமும் திரண்டு வந்துவிடும் என்ற அச்சம். அப்படியான ஒரு படை வந்துவிட்டால் அந்தாக்கியா படையினருக்கும் வெளியிலிருந்து வரும் முஸ்லிம் படையினருக்கும் இடையே தாங்கள் நசுங்கி முற்றிலும் துடைத்து எறிப்பட்டு விடுவோம் என்று அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடந்துவிடாமல் முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுற்று, பிரிந்துபோய், தத்தம் பிரச்சினைகளில் மூழ்கி அடித்துக்கொள்ள அதன் பயனைச் சிலுவைப் படை நன்றாக அனுபவித்தது.

சிலுவைப் படை முற்றுகை இட்டதுமே சகோதரர்கள் ரித்வான், துகக் இருவருக்கும் யாகி சியான் உதவி கோரித் தகவல் அனுப்பினார் அல்லவா? அதற்கு டமாஸ்கஸில் இருந்த துகக் ஒரு சிறு படையை அனுப்பினார். அலெப்போவை ஆண்டுகொண்டிருந்த ரித்வானும் ஒரு படையை அனுப்பினார். ஆனால் அவை இரண்டும் தனித்தனிப் படையாக, எவ்வித ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இன்றி 1097 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவரின் படையும் 1098 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றவரின் படையுமாக வந்தன. ‘இவ்விரு படைகளும் ஒன்று சேர்ந்து குளிர் காலத்திலேயே சிலுவைப் படையைத் தாக்கியிருந்தால் வெகு அனேகமாக அவர்களை நசுக்கி வென்றிருப்பார்கள்’ என்கிறார் ஆங்கில வரலாற்றாசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ். ஆனால் என்ன செய்ய? ஒருங்கிணைந்து ஒற்றை எதிரியை வீழ்த்துவதைவிடத் தங்களது ஆளுமையே பிரதானம் என்று இருவருமே நினைத்தார்கள். அதற்கு விலையாக அவர்கள் சிலுவைப் படையினரிடம் தோற்று, கேவலமாய் ஊர் திரும்ப வேண்டியிருந்தது.

இது ஒருபுறமிருக்க, ஸன்னி, ஷியா பிரிவினையைப் பற்றியும் அலெக்ஸியஸ் சிலுவைப் படைத் தலைவர்களுக்குப் பாடம் புகட்டியிருந்ததால், 1097 ஆம் ஆண்டின் கோடை காலத்திலேயே வட ஆப்பிரிக்காவில் இருந்த ஃபாத்திமீக்கள் எனப்படும் உபைதிகளுடன் சிலுவைப் படைத் தலைவர்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அந்தப் பிரிவினையைத் தங்களுக்குச் சாதமாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். 1098ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஒருவழியாக அந்த முயற்சிக்குப் பலன் ஏற்பட ஆரம்பித்தது. எகிப்தின் அமைச்சராக இருந்த அல்-அஃப்தலின் தூதுக் குழு அந்தாக்கியாவின் வெளியே முற்றுகையிட்டிருந்த கிறித்தவர்களின் கூடாரத்திற்கு வந்து அவர்களைச் சந்தித்தது. ஒரு மாத காலம் அவர்களுடன் தங்கிப் பேச்சு வார்த்தை நடத்தியது. இருதரப்புக்கும் இடையே திட்டவட்டமான உடன்படிக்கை ஏற்படவில்லை என்றாலும் நட்பும் இணக்கமும் உருவாயின. தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் என்று எகிப்தியர்கள் வாக்குறுதி அளித்துக் கைகுலுக்கி விடை பெற்றுக்கொண்டனர்.

1098ஆம் ஆண்டின் கோடைக் காலம் வரை, முதலாம் சிலுவைப் படை, இப்படியான ராஜ தந்திர நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் ஈடுபட்டிருக்க, மே மாத இறுதியில் திருப்பம் ஒன்று நிகழ்ந்தது. டமாஸ்கஸ், அலெப்போவிற்குச் செய்தி அனுப்பியதைப்போல், யாகி சியான் பக்தாதுக்கும்தானே செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு உடனடியாக பதில் வரவில்லையென்றாலும் அந்தாக்கியாவின் அவல நிலைமையும் இடைவிடாது தொடர்ந்த அபயக் குரல்களும் ஒருவழியாக பக்தாதில் இருந்த சுல்தானின் கவனத்தைக் கவர்ந்து, பெரும் படை ஒன்றை அவர் திரட்டினார்.

மறைந்த சுல்தான் மாலிக்-ஷாவின் தோழர் காஸிம் அத்-தவ்லாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் கெர்போகா; அதாபேக் ஆக மோஸுலை ஆளும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது என்பதை எட்டாம் அத்தியாயத்தில் பார்த்தோமே, அவரை அப்படைக்குத் தலைமை வகிக்கச் சொன்னார் சுல்தான். கெர்போகா போர் வல்லமையும் வீரமும் செறிந்த தளபதியாக இருந்தவர். அவரது தலைமையில் மெஸப்பட்டோமியாவைச் சேர்ந்த 40,000 வீரர்கள் அடங்கிய படையணி அந்தாக்கியாவை நோக்கி வர ஆரம்பித்தது.

அதை அறிந்த உளவாளிகள் சிலுவைப் படைத் தலைவர்களிடம் ஓடி வந்து, ‘கடல் அலையைப் போல் முஸ்லிம் படை திரண்டு வருகிறது’ என்று அறிவித்து மூச்சிரைத்து நின்றனர். எதை நினைத்து அஞ்சினோமோ அது நடந்துவிட்டதே, ஸன்னி முஸ்லிம்கள் ஒன்றிணைந்து விட்டனரே என்று அத்தலைவர்களைத் திகைப்பும் திகிலும் சூழ்ந்தன. தங்களைத் தாக்கிய அச் செய்தி தங்கள் படையினர் மத்தியில் பீதியை உருவாக்கி அவர்கள் வெருண்டு ஓடிவிட இடம் கொடுக்கக் கூடாது என்று அத் தலைவர்கள் உடனே அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினர்.

அந்தாக்கியாவைச் சுற்றி வளைத்திருக்கும் நம் பிடி இறுகிக் கொண்டிருக்கிறதுதான். யாகி சியானின் போர் எதிர்ப்புச் சக்தியும் பலவீனமடைந்துள்ளதுதான். இருந்தாலும் திரண்டுவரும் கெர்போகாவின் படைக்கு எதிராக முழு அளவில் போரிடும் நிலையில் நம் படை இல்லை. அவர்கள் இருவருக்கு நாம் ஒருவர் என்ற விகிதாச்சாரத்தில் உள்ளோம். குதிரைப் படையினருக்கோ குதிரைகள் பற்றாக்குறை. இந்நிலையில் கெர்போகாவின் தாக்குதலுக்கு உள்ளானால் நாம் நசுங்கிவிடும் நிலையில்தான் இருக்கிறோம் என்று கவலையைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அத்தகு இக்கட்டான நிலையில் பொஹிமாண்ட் ஒரு தீர்வுடன் முன் நகர்ந்தார். அந்தாக்கியாவை நம்முள் யார் வீழ்த்துகிறாரோ அவருக்கே அந்நகரில் முழு உரிமை, என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு அனைத்துத் தலைவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். நன்று, இனி அந்தாக்கியாவை வீழ்த்துவது என் பொறுப்பு என்றார் பொஹிமாண்ட். தந்திர புத்தி நிரம்பிய அவர் அந்தாக்கிய நகரின் காவற்கோபுரங்களுள் ஒன்றின் காவலனான ஃபைரூஸ் என்னும் அர்மீனியன் ஒருவனை முதலில் தம் வலையில் வீழ்த்தினார். அவன் மூலமாக நகரின் காவலைப் பலவீனப்படுத்தும் திட்டம் உருவானது.

ஜுன் 2 அல்லது 3ஆம் நாள். இரவு நேரம். பொஹிமாண்டின் படை அணியினர் சிலர் எருதின் தோலினால் ஆன ஏணியை எடுத்துக்கொண்டு, நகரின் தென் கிழக்கில், அரவமற்றிருந்த பகுதியில் அமைந்திருந்த சுவரை நெருங்கினர். ஃபைரூஸ் அங்கு காத்திருந்தான். சற்று விஷயம் கசிந்தாலும் போதும், அந்தக் குழு முழுவதும் முஸ்லிம்களால் துவம்சம் செய்யப்பட்டுவிடும் அபாயமான சூழல். அந்தச் சுவரின் கீழே இருந்த பின் கதவு ஒன்றை அந்தக் குழுவினருக்கு அவன் திறந்துவிட்டான். அவ்வளவுதான். மடை திறந்தது. தடை தகர்ந்தது. அமைதி கலைந்தது. பொஹிமாண்ட் ஊதுகுழலை எடுத்து பலமாக ஊதி சமிக்ஞை அளிக்க, “தேவன் நாடினால், தேவன் நாடினால்” என்று அலறியபடி சிலுவைப் படையினர் பேரொலியுடன் ஓடி வந்தனர். திடீரென்று ஏற்பட்ட அந்த நெருக்கடியில், களேபரத்தில் இருளில் என்ன, ஏது என்று தெரியாமல் நகரினுள் முஸ்லிம் காலவர்கள் குழப்பத்துடன் திகைத்து நிற்க, அந்தாக்கியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நகரின் மற்ற வாயில்களைத் திறக்க திமுதிமுவென்று ஓடினர்.

வாய் பிளந்த வாயில்களினூடே சிலுவைப் படை ஆரவாரக் கூச்சலுடன் புகுந்தது. அத்தனை நாள் முற்றுகை ஏற்றியிருந்த வெறியில், இருள் விலகாத விடியல் நேரத்தில் சகட்டு மேனிக்கு அவர்கள் மக்களை வெட்டித் தள்ள ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, குழந்தையா, சிறியவரா, பெரியவரா என்று எவரையும் பார்க்கவில்லை. முஸ்லிம்களைக் கொன்று வீசிப் பேய் ஆட்டம் ஆடத் தொடங்கினர். கூடவே, இருளில் அடையாளம் தெரியாமல் நகரினுள் வசித்துவந்த கிரேக்க கிறித்தவர்கள், சிரியர்கள், அர்மீனியர்கள் ஆகியோருள் பலரையும் கூடக் கொன்று குவித்தனர். பெயர் கேட்டு, மதம் பிரித்துத் தலையைச் சீவுவதற்கு எல்லாம் அவர்களுக்கு நேரமில்லை. பிடி, வெட்டு, கொல். நிலமெல்லாம் இரத்த வெள்ளம். தரையெங்கும் குவியல் குவியலாய்ச் சடலங்களின் சொதசொதப்பு.

‘நகரின் ஒவ்வொரு தெருவிலும் சடலக் குவியில்கள். நடப்பதற்கே இடமில்லாமல் அவற்றின்மேல்தான் நாங்கள் நடக்கும்படி இருந்தது. எழுந்த பிண நாற்றத்தைச் சகித்துக் கொள்ள யாராலும் முடியவில்லை’ என்று சிலுவைப் படையினருள் ஒருவன் அந்நிகழ்வை விவரித்த தகவல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

பொஹிமாண்ட் தமது இரத்தச் சிவப்புக் கொடியை நகரின் மேல் ஏற்றினார். கைப்பற்றப்பட்ட பகுதிகளும் சொத்தும் தமக்கே சொந்தம் என்பதை அறிவிக்கும் சம்பிரதாயம் அது. இரும்புப் பால வாயில் பகுதியில் இருந்தாரே ரேமாண்ட், அவரும் அவருடைய படையினரும் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள், அந்தாக்கியாவின் அரண்மனை ஆகியனவற்றைக் கைப்பற்றினர். அந்தாக்கியாவின் முற்றுகை முடிவுக்கு வந்து, அந்த நகரம் சிலுவைப் படையின் வசமானது. சில்பியஸ் மலையின் உச்சியில் அமைந்திருந்த கோட்டை மட்டும் முஸ்லிம்களின் கையில் எஞ்சியது. யாகி சியானின் மகன் அதைத் தம் அதிகாரத்தில் வைத்திருந்தார்.

அடுத்த நாள், கெர்போகாவின் முன்னணிப் படை அங்கு வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் படைப் பிரிவு ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தது. வந்தவர்கள் நிலைமையைப் பார்த்தார்கள். உள்ளே சிலுவைப் படை நுழைந்துவிட்டதைக் கண்டார்கள். உடனே அவர்கள் அந்தாக்கியாவை முற்றுகையிட சிலுவைப் படை இப்பொழுது உள்ளே மாட்டிக்கொண்டது.

வரும் வழியில் கெர்போகா செயல்படுத்திய ஒரு திட்டம் அந்தாக்கியா வீழ்வதற்குக் காரணமாக அமைந்ததையும் முற்றுகைக்கு உள்ளான சிலுவைப் படை என்ன ஆனது என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 18
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 20

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி

அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
27 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
28 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
32 திருநெல்வேலி வரலாறு...!
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 அந்த இரண்டணா ......
35 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
36 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
42 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
43 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
44 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
45 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
46 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
47 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
48 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
49 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
56 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
57 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
58 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
59 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
60 சூஃபிக்களும் புனித போர்களும்
61 யார் தேச விரோதி?
62 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
63 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
64 விடுதலைப்போரில் வீரமங்கையர்
65 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
66 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
67 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
68 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
69 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
91 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்