சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா ஸுலைமான் வசம் அலெப்போவின் ஆட்சி சென்று சேர்ந்தது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பஹ்ராம் என்பவரின் மகனான பலக், இல்காஸியுடன் இணைந்து சிலுவைப் படையினருக்கு எதிரான ஒரு படையெடுப்பில் கலந்துகொண்டார் என்பதையும் பார்த்தோம். இந்த பலக், இல்காஸியின் வாரிசுகளைப் போலன்றி இவர்தாம் பரங்கியர்களை எதிர்ப்பதில் பெரும் முனைப்புடன் களத்தில் நின்றார். அராஜகமாகத் தங்களைச் சூழ்ந்துவிட்ட சிலுவைப் படையினர்மீது அவருக்குத் தீவிர வெறுப்பு. பரங்கியர்களை மெஸோபோட்டோமியாவிலிருந்தும் சிரியாவிலிருந்தும் விரட்டியடிக்க வேண்டும் என்பது அவரது இலட்சியமாகவே இருந்தது.
பலக் இப்னு பஹ்ராம் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டுத் தமது களப்பணியைத் தொடங்கினார் ஆனால் முற்றுகைதான் நீண்டதே தவிர வீழ்வேனா என்று நின்றது எடிஸ்ஸா. தாக்குப்பிடித்து நின்றாலும் அவர்கள் ஜோஸ்லினுக்குத் தகவல் அனுப்பினர். அச்சமயம் ‘பிரா’ எனும் பகுதியில் இருந்தார் ஜோஸ்லின். அவர் அங்கிருந்து கிளம்பி வரப்போகிறார் என்று தெரிந்ததும் சிறப்பான திட்டம் ஒன்றைத் தீட்டி அவருக்கு வலை விரித்தார் பலக் இப்னு பஹ்ராம். ஜோஸ்லினும் படையினரும் பிராவிலிருந்து எடிஸ்ஸா வரும் வழியில் சேறும் சகதியும் நிறைந்த பகுதி ஒன்று இருந்தது. அதைச் சுற்றி பலக் இப்னு பஹ்ராமின் படை பதுங்கியது. நாலாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட வலுவான படை. ஜோஸ்லினின் படை அப்பகுதியில் நுழைந்ததுதான் தாமதம், சரசரவென்று அம்புகள் பறந்து வந்து தாக்கின. நிலை தடுமாறி ஓட எத்தனித்த பரங்கியர்களின் குதிரைகளும் படையினரும் சேற்றில் வழுக்கி விழுந்து பெரும் குழப்பம், இரைச்சல் உருவானதால் எதிர்த்துப் போரிடவும் முடியாமல் தப்பித்து ஓடவும் இயலாமல் அனைவரும் வசமாகச் சிக்கினர்.
வெகு முக்கியமாகச் சிலுவைப் படைத் தலைவர் ஜோஸ்லின், அவருடைய தாயாரின் சகோதரி மகன் காலெரன், பல முக்கியத் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். பலக் இப்னு பஹ்ராம் சாதித்த அமோக வெற்றி அது. பரங்கியர்களின் முக்கியத் தலைகள் பிடிபட்டதில் முஸ்லிம்கள் மத்தியில் ஏக உற்சாகம்; கொண்டாட்டம். சிலுவைப் படையினருக்கோ பெரும் மனத் தளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து போனது அந்நிகழ்வு. பலக் இப்னு பஹ்ராம் ஜோஸ்லினிடம் அவரது விடுதலைக்கான ஈட்டுத் தொகையாக, “எடிஸ்ஸாவை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். தாங்களும் மற்றவர்களும் விடுதலை” என்று பேரம் பேசினார்.
ஜோஸ்லின் அதற்கு இணங்கவில்லை. சற்று ஆணவமாகத்தான் பதில் வந்தது. “நாங்களும் இந்நிலமும் ஒட்டகங்களும் சேணமும் போல். ஒட்டகம் ஒன்று இறந்தால் அதன் சேணம் மற்றொன்றுக்கு மாற்றப்படும். எங்கள் வசம் எது இருந்ததோ அது இப்பொழுது மற்றொருவர் கைவசம்”
எனில் சிறை உங்கள் விதியாகட்டும் என்று ஒட்டகத்தின் தோலைக்கொண்டு அவரைச் சுற்றி மூடி, அதைத் தைத்து, கார்பெர்தில் உள்ள கோட்டையில் அடைத்தார் பலக் இப்னு பஹ்ராம். இதர கைதிகளும் அங்கேயே அடைக்கப்பட்டனர். பலத்த காவல் போடப்பட்டது. அங்கிருந்து கார்கார் கோட்டையைக் கைப்பற்றத் தம் படையினருடன் அணிவகுத்தார் பலக்.
ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வினுக்கு இச்செய்திகளால் இருப்புக் கொள்ளவில்லை. கார்காரைக் காக்க, ஜோஸ்லினை மீட்கத் தாமே தம் படையுடன் கிளம்பினார். யூப்ரட்டீஸ் நதியின் கிளையாக சன்ஜா என்றோர் ஆறு பிரியும். அதன் கிழக்குக் கரை சதுப்பு நிலப்பகுதி. இரண்டாம் பால்ட்வினின் படை ஓர் இரவு நேரத்தில் அங்கு வந்து பாடி இறங்கியது. இத்தகவலையும் முற்கூட்டியே அறிந்து, அப்படையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தார் பலக். முன்னரே ஆயத்தமாய் இருந்த அவரது படை, அதே இரவோடு இரவாகச் சிலுவைப் படையினரின் கூடாரங்களை ஓசையின்றி முற்றிலுமாகச் சுற்றி வளைத்தது. போரிடுவதற்குக் கூட வாய்ப்பின்றி ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின் ஆயுதங்களை எறிந்துவிட்டு அவர்களிடம் சரணடைந்தார்; சிறை பிடிக்கப்பட்டார். பலக் இப்னு பஹ்ராம் சாதித்த அடுத்த பெரும் வெற்றி இது. ராஜா இரண்டாம் பால்ட்வினும் ஜோஸ்லின் சிறை வைக்கப்பட்டிருந்த அதே கொட்டடியில் அடைக்கப்பட்டார்.
oOo
ரோஜர் கொல்லப்பட்டுத் தம் அதிபரை இழந்திருந்தது அந்தாக்கியா. எடிஸ்ஸாவின் ஜோஸ்லினும் ஜெருசலத்தின் இரண்டாம் பால்ட்வினும் சிறையில். முஸ்லிம் படை வீரர்களின் மத்தியில் உற்சாகம் பொங்கி வழிந்த நேரம். சிலுவைப் படையினரோ மனத்தாலும் பலத்தாலும் பலவீனப்பட்டிருந்த தருணம். செவ்வனே கனிந்திருந்தது கால நிலை. பலக் இப்னு பஹ்ராமும் தமது அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார். ஆனால் அது பரங்கியர்கள் வசம் இருந்த மாநிலங்களை நோக்கி அல்லாது சிரியாவின் அலெப்போவை நோக்கித் திரும்பியது. அலெப்போ தம் வசமாகாத வரை, வலுவான ஆட்சித் தலைமை அங்கு அமையாதவரை, பரங்கியர்களுக்கு எதிரான தமது வியூகங்கள் அனைத்தும் வீண் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இவற்றைச் சரிசெய்தபின், தம்மை மேலும் வலுவாக்கிக் கொண்டபின் முழுவீச்சில் அவற்றை நோக்கிப் பாயலாம் என அவர் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் காலம் அவகாசம் அளிக்க வேண்டுமில்லையா? அதையும் பார்ப்போம்.
பலக் வந்து அலெப்போவை முற்றுகையிட்டதும் பத்ருத் தவ்லா ஸுலைமான் பெரிதாக எதுவும் எதிர்த்து நின்றதாகத் தெரியவில்லை. அலெப்போ வெகு விரைவில் சரணடைந்தது. ஹி. 517 / கி.பி. 1123 ஆம் ஆண்டு அலெப்போவினுள் வெற்றிகரமாய் நுழைந்தார் பலக் இப்னு பஹ்ராம். ஜோஸ்லின், இரண்டாம் பால்ட்வின் ஆகியோரைக் கைது செய்தது, சாதித்திருந்த இதர உபரி வெற்றிகள் ஆகியனவற்றால் அவருக்கு அலெப்போ மக்கள் மத்தியில் புகழும் மதிப்பும் ஏற்பட்டிருந்தன. உவந்து அவரை வரவேற்றது அந்நகரம். அடுத்த சில நாள்களில் அலெப்போவின் முந்தைய ஆட்சியாளர் ரித்வானின் மகளைத் திருமணம் புரிந்துகொண்டு அந்நகரின் மருமகனாகவும் அவர் தம்மை ஆக்கிக்கொண்டார். அதன்பின் வெகு நேர்த்தியாகத் திட்டமிட்டு, அலெப்போவைச் சுற்றியிருந்த பகுதிகளைப் பரங்கியர்களிடமிருந்து மீட்கத் தொடங்கினார்.
அலெப்போவில் இவ்விதம் இவர் மும்முரமாக இருக்க, அங்கு கார்பெக் கோட்டையில் அடைப்பட்டிருந்த ஜோஸ்லின் அங்கிருந்த அர்மீனியர்களிடம் எப்படியோ என்னவோ பேசி வளைத்து, அவர்களது உதவியுடன் தப்பித்து ஓடிவிட்டார். இவ்விஷயம் வந்து சேர்ந்ததும் உடனே கார்பெக் வந்தடைந்த பலக் இப்னு பஹ்ராம் ஜோஸ்லின் தப்பிக்க உடந்தையாக இருந்தவர்களை எல்லாம் முறைப்படி தண்டித்து, அவர்களது கதையை முடித்துவிட்டு, இரண்டாம் பால்ட்வினையும் மற்ற கைதிகளையும் அங்கிருந்து ஹர்ரானுக்கு இடம் மாற்றினார்.
தப்பி ஓடிய ஜோஸ்லினுக்குத் தமது அவமானத்தைத் துடைக்க வேண்டிய ஆத்திரம், அவசரம். ஜெருசலத்திலிருந்தும் அந்தாக்கியாவிலிருந்தும் சிலுவைப் படையை வரவழைத்து அணி திரட்டிக்கொண்டு நேரே அலெப்போவை நோக்கிச் சென்று அதை முற்றுகையிட்டார். தலைக்கு ஏறியிருந்த அவரது ஆத்திரம் தகாத இழி செயலையும் செய்யத் தூண்டியது. சுற்றுப்புறங்களில் இருந்த முஸ்லிம்களின் கல்லறைகளைத் தோண்டி அதன் உள்ளிருந்த சடலங்களை எல்லாம் சின்னாபின்னப் படுத்தினார். அவ்வளவு வெறி. ஆனால், அத்தனை களேபரங்களையும் சமாளித்த அலெப்போ அவரது முற்றுகையையும் வலிமையுடன் எதிர்த்து நின்றது. இறுதியில் ஜோஸ்லினுக்கு அம்முற்றுகை தோல்வியில்தான் முடிந்தது. அதன்பின், ஹர்ரானுக்கு இடம் பெயர்த்து வைத்திருந்த சிலுவைப் படைக் கைதிகளை இப்பொழுது அலெப்போவிற்குக் கொண்டு வந்து பத்திரப்படுத்தினார் பலக் இப்னு பஹ்ராம்.
அவருக்கு அச்சமயம் நாற்பது வயது. தேர்ந்த இராணுவத் திறம், திட உறுதி, தெளிவு, நிதானம், பரங்கியர்களுடன் சமரசத்திற்கு இடம் கொடுக்காத போக்கு யாவும் அவரிடம் அமைந்திருந்தன. அச்சமயம் கோலோச்சிய இதர முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து அவை யாவும் அவரைத் தனித்துச் சிறப்புப் படுத்தின. தெற்கே ஜெருசலம் வரையிலும்கூட அவரது புகழ் பரவியிருந்தது. முஸ்லிம்களுக்கு அவர் மீது அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக, டைர் நகரில் எழும்பிய அபயக்குரல் அவரை வந்து சேர்ந்தது.
டமாஸ்கஸுக்கு தென்மேற்கே, ஜெருசலத்திற்கு வடமேற்கே, மத்திய தரைக்கடல் கரையில் அமைந்துள்ளது டைர் நகரம். அந்நகரைச் சுற்றிவளைத்து முற்றுகை இட்டது சிலுவைப் படை. வெனிஸ் நாட்டின் நூற்று இருபது கப்பல்கள் ஜெருசலத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு டைர் நகரை மேற்கே கடல் புறத்திலிருந்து சூழ்ந்திருந்தன. நகரின் கிழக்குப் பகுதியில் நிலத்தில் சிலுவைப் படை. கடுமையான பிடியில் டைர் நகரம் சிக்கியிருந்தது. ஆயினும் டைர் நகரின் முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் தற்காத்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஓர் இரவு தேர்ந்த நீச்சல் வீரர்களின் குழு ஒன்று கடலில் மூழ்கி நீந்திச் சென்று துறைமுகக் காவலுக்கு நின்றிருந்த வெனிஸ் நாட்டுக் கப்பலைக் கைப்பற்றி இழுத்து வந்துவிட்டது. அதிலிருந்த ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அக்கப்பலையும் அழித்தது. இவ்விதம் சிறுசிறு சாகசம் புரிந்தபடி, ‘எகிப்திலிருந்து ஃபாத்திமீக்களின் கப்பல் படை உதவிக்கு வரும்; அதுவரையாவது தாக்குப் பிடித்துவிட்டால் போதும்’ என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் வெனிஸ் நாட்டின் கப்பல்கள் நகரைச் சூழ்ந்திருந்தன. நிலைமை மோசமாகத் தொடங்கியது.
தன்னுள் பெரும் நீர் ஆதாரங்கள் இல்லாத நகரம் டைர். நகருக்கு வெளியிலிருந்து குழாய் மூலமாக நீர் வரும் கட்டுமானம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இத்தகு போர்ச் சூழலில் முதலில் அதுதானே தடுக்கப்படும்? தடுக்கப்பட்டது. அடுத்து, சிறு சிறு படகுகள் மூலம் வெளியிலிருந்து நீர் சுமந்து வந்து நகரிலுள்ள தொட்டிகளில் நிரப்புவார்கள். வெனிஸ் கப்பல்கள் கடலில் சுற்றி வரும் நிலையில் அதற்கும் வாய்ப்பின்றிப் போனது. அதனால் நகரில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு. விரைவில் இம்முற்றுகை முறியடிக்கப்படாமல் போனால் வெகு சில மாதங்களில் டைர் சரணடையும் நிலை. இத்தகு நெருக்கடியில்தான் அவர்கள் தங்களது ஒரே வாய்ப்பாக பலக் இப்னு பஹ்ராமை நம்பினார்கள்; உதவி வேண்டித் தகவல் அனுப்பினார்கள்.
அவர் அச்சமயம் அலெப்போ பிராந்தியத்தில் இருந்த மன்பிஜ் கோட்டையை முற்றுகை இட்டிருந்தார். தகவல் வந்து சேர்ந்ததும் சூழலின் கடுமையைப் புரிந்துகொண்டு உடனே செயலின் இறங்கினார். தம் படை அதிகாரி ஒருவரை மன்பிஜை முற்றுகை இட்டிருக்கும் படைக்குத் தலைவராக நியமித்துவிட்டு, தாமே டைர் செல்ல முடிவெடுத்தார். கிளம்பும்முன் தம் படையைச் சுற்றிவந்து மேற்பார்வையிட்டவர், தம் தளபதிகளுக்கு ஆலோசனைகளும் உத்தரவுகளும் அளித்தபடி இருந்தபோது, கோட்டையின் கோபுரத்திலிருந்து பறந்து வந்தது அம்பு. ஒற்றை அம்பு. அது அவரது கழுத்தின் இடதுபுறம் பாய்ந்தது. செருகி நின்றது. கொப்பளித்தது குருதி. அம்பைத் தாமே தம் கழுத்திலிருந்து பிடுங்கியவர், ‘இந்தத் தாக்குதல் முஸ்லிம்கள் அனைவருக்குமான பேராபத்து’ என்று முணுமுணுத்தார்; இறந்து விழுந்தார். முடிவுற்றது பலக் இப்னு பஹ்ராமின் ஆயுள்.
இறைவன் நிர்ணயித்திருந்த விதி, ஒற்றை அம்பின் வடிவில், ஒரு சில நிமிடங்களில் வரலாற்றின் போக்கை மாற்றிவிட்டது. சிரியா, மெஸோபோட்டோமியா முஸ்லிம்களை ஒருங்கிணைத்து வலிமையான படையை உருவாக்க முயன்ற பலக் இப்னு பஹ்ராமின் முயற்சி சிதிறிப்போனது. டைர் நகரம் வேறு வழியின்றிப் பரங்கியர்களிடம் சரணடைந்தது. நகர மக்கள் அகதிகளாக வெளியேறி, டமாஸ்கஸ் நகருக்கும் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் சிதறினர்.
டைருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. அலெப்போவின் முஸ்லிம்களுக்கும் அவரது மரணம் பெரும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது. இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் வசம் அலெப்போவின் ஆட்சி போய்ச் சேர்ந்து அதன் நிலைமை படு மோசமானது. தமர்தாஷ் பத்தொன்பது வயது இளைஞர். அவருக்கு விளையாட்டுப் போக்கு; அசிரத்தை குணம். இதென்ன பரங்கியர்களுடன் எப்பொழுது பார்த்தாலும் போர், சண்டை, சச்சரவு என்று அவர் தம் சொந்த ஊரான மர்தினுக்குத் திரும்புவதிலேயே ஆர்வமாக இருந்தார். அத்துடன் நில்லாமல் அவர் புரிந்த மற்றொரு செயல்தான் கேடான அவரது போக்கின் உச்சம்.
சிறைக் கொட்டடியில் கிடந்தாரே ஜெருசலம் ராஜா இரண்டாம் பால்ட்வின், அவரை இருபதாயிரம் தீனார் பணயத் தொகைக்கு விடுவித்துவிட்டார்! விடுவித்தது போதாது என்று அவரைக் கௌரவித்து அங்கி, தங்கக் கிரீடம், ஆபரணங்கள் பதிக்கப்பட்ட காலணி எல்லாம் அளித்து, அவர் கைதாகும்போது பயணித்த குதிரையையும் பரிசாக அளித்து, விருந்துபசரித்து, படோடாபமாக வழியனுப்பி வைத்தார் தமர்தாஷ். அலெப்போவில் இருந்த அதிகாரிகளை நோக்கித் திரும்பி, பார்த்துப் பத்திரமாக நிர்வாகம் செய்யுங்கள் என்று தெரிவித்துவிட்டுத் தாம் கிளம்பி தியார்பகிர் சென்றுவிட்டார். பொறுப்பற்றத் தன்மையின் உச்சபட்ச அவலமாக அமைந்துவிட்டது இது.
நீண்ட பல மாதங்கள் சிறையில் வாடிய இரண்டாம் பால்ட்வின், ஜெருசலம் சென்று புத்துணர்ச்சி பெற்றுக்கொண்டு, அடுத்த சில மாதங்களில் நன்றிக்கடன் செலுத்த அலெப்போ திரும்பி வந்தார். அவரது தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த சிலுவைப் படை அலெப்போவை முற்றுகை இட்டது. அதிபர் இன்றி அவல நிலையில் இருந்த தம் நகரைக் காக்க மீண்டும் களமிறங்கினார் ஒருவர். யார்? முன்னர் நாம் சந்தித்த அதே காழீ இப்னில் ஃகஷ்ஷாப்.
அவரிடம் இருந்தவர்களோ வெறுமே சில நூறு குதிரைப் படையினர் மட்டுமே . நகரை முற்றுகையிட்டிருப்பதோ ஆயிரக்கணக்கிலான பெரும் படை. என்ன செய்வது? சிந்தித்தவர் ஒரு காரியம் செய்தார். தமர்தாஷுக்குத் தகவல் தெரிவிக்கத் தூதுவன் ஒருவனை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அவனும் தனது உயிரைப் பணயம் வைத்து, எதிரிகளின் பார்வையில் படாமல் அலெப்போவிலிருந்து நழுவி, மர்தின் வந்து தமர்தாஷிடம் ஆபத்தைத் தெரிவித்தால், ‘உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?’ என்று அலெப்போவின் அத்தூதுவனைச் சிறையில் அடைத்தார் அவர்.
தலையில் அடித்துக்கொள்ளக்கூட நேரமின்றி, வேறு வழியின்றி காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தகுந்த முஸ்லிம் தலைவரை அடுத்துத் தேடும்படி ஆனது. அவர் யார்? பார்ப்போம்.
.
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 38 |
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி தொடர் - 40 |
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன்