Tamil Islamic Media

பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

 

1929  ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.*

ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை  என்ற கோசத்தை
வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (* B.l Grover,S.grover,A New Look At Modern Indian History,
P.426.)

1921 - இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில்ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்.

மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.

பூரண சுயராஜ்யம் (Complete Indepedence Nation) தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேர்ப்பாளர்கள், இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய கோசம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.*
(* Young India, May 4 , 1992; Ref; Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothers, PP.159-
60, 164-65.)

ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம் கோரிக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 - இல் கிலாபத் கமிட்டித் தலைவராகவும், 1924 - இல் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டுத் தலைவராகவும் இருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1921 அஹமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் தான் எழுப்பிய பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில்நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்

மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள், தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்திருக்கிறார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. அக்குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவன் திருமுகத்தைப் பார்க்கவும் வாரிசைக்காட்டவும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.


தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள், சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார். தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா? ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. சிறைச்சாலையில் ஹஜ்ரத் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது !*


செக்கிழுத்த செம்மல் ஹஜ்ரத் மொஹானி என்று இனியாவது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும். (*சிராஜுல் மில்லத் அ.க. அப்துஸ் ஸமது, இஸ்லாமிய தமிழர் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா உரையில், சென்னை. 18.10.1997)

 

Thanks: http://chittarkottai.com/Muslims_Indian_Freedom/muslim_freedom_fighters4.htm






No articles in this category...