எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
மனிதகுல வழிகாட்டியான அல் குர்ஆன் இறங்கிய புனித ரமலான் நம்மை ஆரத்தழுவ உள்ளது அல்ஹம்துலில்லாஹ். ரமலான் என்றாலே நம் அனைவருக்கும் உள்ளதில் ஒரு வித மகிழ்ச்சி ஒரு ஊக்கம் பிறக்கிறது. ஆம் இறை நம்பிக்கை கொண்டோருக்கு ரமலான் மாதம் சந்தேகமின்றி உற்சாகம் அளிக்கும் மாதமாகும். அன்றைய சஹாபாக்கள் பத்ருப் போரில் வெற்றி பெற்றதும் ரமலான் மாதத்தில்தான், வரலாற்று நிகழ்வான மக்கா வெற்றியும் அண்ணல் நபி ஸலலல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இம்மாதத்தில் தான் நிகழ்ந்தது.
வறண்ட நிலம் எப்படி மழையின் மூலம் உயிர்பெற்றெழுகிறதோ அப்படி வறண்டு போன நம் ஆன்மாக்கள் ரமளான் மூலம் புத்துயிர் பெறுகிறது! ஆன்மாக்கள் மட்டுமல்ல, புற்பூண்டுகள், உயிரினங்கள், ஜடப்பொருட்கள் இன்னும் சொல்லப் போனால் பூமிப்பந்தில் உள்ள அனைத்து பொருட்கள் மீதும் இம்மாதத்தில் அருள்வளம் இறங்குகிறது என்பதை நாம் அறிவோம். அப்பேற்பட்ட மாதம் ஒவ்வொரு ஆண்டும் நம்மை சந்திக்கிறது. இந்த மாதம் நமக்கு என்ன செய்தியை சொல்கிறது? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது? என்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம் தோழர்களே!
மற்ற மாதங்களை விட்டு ஏன் இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்? மற்ற மாதங்களை விட்டு ஏன் இந்த மாதத்தில் இரவுத்தொழுகை மேற்கொள்ள வேண்டும்? இந்த மாதத்தின் கடைசி பத்தில் வரக்கூடிய ஒரு இரவு மட்டும் ஏன் ஆயிரம் மாதங்களை விட சிறந்தது? ஏனெனில்
இந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய இறைவேதம் அல் குர்ஆன் இறங்கியது, எனவே யார் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என வான்மறை குர்ஆன் கூறுகிறது (அல் பகரா 2: 185 )
நோன்பின் மூலம் இறையச்சத்தை பெற்றுக்கொள்ளலாம் என அல்லாஹ் கூறுகிறான்(2:183). ரமலான் மாதத்தில் பகலில் நோன்பு நோற்கிறோம் இரவில் நின்று குர்ஆனை கேட்கிறோம், இதன் மூலம் அல்லாஹ் இந்த சமூகத்தை கீழ்ப்படிந்த உன்னத சமூகமாக வாழ்ந்து காட்டிட ஓர் ஏற்பாட்டை செய்திருக்கிறான். இது அல்லாஹ்வால் வரையறுக்கப்பட்ட திட்டமாகும். எஞ்சியுள்ள பதினோரு மாதங்களிலும் அல்குர்ஆனின் ஒளியை சுமந்தவர்களாக திகழ வேண்டும் என்பதே அவனது ஏற்பாடு.
இம்மாதத்தில் தான் இக்ஃரா ஒதுவீராக!, பறைசாட்டுவீராக! என்ற வஹீ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் மீது இறங்கியது.இம்மாதத்தை குர்ஆனின் மாதம் என்றழைக்கிறோம். நாம் அதிகமாக இம்மாதத்தில் ஓதுகிறோம் அல்ஹம்துலில்லாஹ். என்றாலும் அல்குர்ஆனின் செய்தியை உள்வாங்கி நடைமுறைப்படுத்த முயற்சிப்பது மிகக்குறைவே.
அல்குர்ஆன் என்பதே அகில உலகிற்கும் வாழ்வியல் நெறியாக நடைமுறைப்படுத்துவதற்காக இறக்கியருளப்பட்ட ஒளியாகும். யார் இந்த ஒளியை தம் நெஞ்சில் எந்துகிரார்களோ அவர்களால் தான் சோதனைகளில் வெல்ல முடியும் என்பதை வரலாறு நெடுக பார்க்கிறோம். நாம் வாழும் நிகழ்கால உலகின் பாலஸ்தீன மக்களை உதாரணமாக பார்க்கலாம். தங்கள் குழந்தைகள், தந்தைமார்கள், சகோதரர்கள், தாங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகள், தங்களின் வியாபாரங்கள் அனைத்தையும் இழந்த பின்பும் அவர்களின் உள்ளத்திலிருந்து உதிரும் வார்த்தை 'அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்' 'ஹஸ்புனல்லாஹ் வ நியமல் வக்கீல்' இவர்களின் திட உறுதியைப் பார்த்து இன்று உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. பாலஸ்தீன மக்களின் நம்பிக்கையை பார்த்து குறிப்பாக அக்டோபர் 7 - 2023 ற்கு பிறகு நூற்றுக் கணக்கானோர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள் என புள்ளிவிவரம் சொல்கிறது. அமெரிக்காவின் டிக்டோக் பிரபலம் Megan Rice, கலிஃபோர்னியா வின் பேராசிரியர் Henry Klassen, , ஸ்பெயின் நாட்டின் முன்னால் கால்பந்து வீரர்Jose Ignacio, அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் Shaun King, பாடகர் Lil Jon போன்று பலர் இதில் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் பாலஸ்தீன மக்களின் உறுதிக்கும் நிலைகுளையாமைக்கும் என்ன காரணமென்று ஆராய்கின்றனர் இறுதியில் அல் குர்ஆன் என்ற இறைவேதம் இவர்களை பண்படுத்தியுள்ளதை விடையாக பெற்று அள் குர்ஆனை படிக்க ஆரம்பித்து பின்னர் இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.
பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம்.
இந்திய திருநாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நமக்கும் சோதனைகள் இல்லாமல் இல்லை. மஸ்ஜிதுகள் தகர்கப்படுகிறது, மதரஸாக்கள் குறிவைக்கப் படுகிறது, முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களுடன் வாழ முடியவில்லை, வக்ஃப் சொத்துக்கள் சூறையாடப் படுகிறது, ஹிஜாப், தலாக் ஷரிஅத் விவகாரத்தில் தலையிடுவது என இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் பன்முனைத்தாக்குதல் நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம். இதை துணிவுடன் எதிர்கொள்ள நம்மிடம் அல்குர்ஆன் எனும் பேராயுதத்தை அல்லாஹ் வழங்கியிருக்க நாமோ பிரச்சனைக்கான தீர்வை தேடி எங்கோ அலைந்து கொண்டிருக்கிறோம்.
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வைத்தரும் ஹுதாவாக(நேர்வழி), இருளை கிழித்துக்கொண்டு வெளிச்சத்தை தரும் நூர்(ஒளி) ஆக, நோய்க்கான ஷிஃபாவாக( நிவாரணம்) அல்குர்ஆன் திகழ்கிறது என அறியத் தவறிவிட்டோம்.வரலாற்றில் எப்போதெல்லாம் நாம் அல்குர்ஆன் மற்றும் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் வாழ்ந்து வந்தோமோ அப்போதெல்லாம் தலைநிமிர்ந்து நின்றிருக்கிறோம். இன்றைக்கு நாம் சந்தித்து வரும் எல்லா பிரச்சனைக்கும் அல்குர்ஆனை பற்றிப்பிடிப்பதில் தான் தீர்வு உள்ளது.
நாம் நடமாடும் குர்ஆனாக மாறவேண்டும் அன்பிற்கினியவர்களே.... ரமலான் இதை தான் நம்மிடம் எதிர்பார்க்கிறது. ரமளான் மாதம் என்பது முடங்கி கிடப்பதற்கான மாதம் அல்ல. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூறாவளியாய் அமல் செய்வார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம், அமல் என்பது இறைவனை நெருங்கும் தனிநபர் இபாதாவில் தொடங்கி தேவையுடையோர்க்கு உதவி செய்தல், சிறைப்பட்டோருக்கு உதவி செய்தல், பிற சகோதரர்களுக்கு நலம் நாடல் என விரிந்து அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க வைக்க செய்யும் அனைத்து வித முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
இந்த உம்மத் மீண்டும் அது இழந்த கண்ணியத்தை பெற குர்ஆனிய சமுதாயமாக உருவாக தொடர்ந்து உழைப்போம்.
- Usman Khalid
No articles in this category... |
