Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஜெருசலத்தின் ராஜா ஃபுல்கு, மற்றும் அவருடைய படையில் எஞ்சியிருந்த சிலரும் ஹும்ஸு நகருக்கு வடமேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாரின் நகரிலிருந்து வேகவேகமாக ஜெருசலத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களது நாசியிலிருந்து வெளியேறிய ஆசுவாசப் பெருமூச்சும் முகத்தில் படர்ந்திருந்த திருப்தியும் உயிர் பறிபோகும் சோதனையிலிருந்து அவர்கள் தப்பிப் பிழைத்ததைத் தெரிவித்தன.

‘கொடூரமானவர்; ஈவிரக்கம் அற்றவர் என்கிறார்கள். சகாயமான விலைக்கு பேரத்தைப் பேசி ஏற்றுக்கொண்டாரே இந்த இமாதுத்தீன் ஸெங்கி. எப்படியோ போகட்டும்; பிழைத்தோம் நாம். அவரது கணக்கைப் பிறகொரு நாள் முடிப்போம்’ போன்ற எண்ணங்களுடன் குதிரைக் குளம்பொலிகளின் பின்னணியுடன் விரைந்தவர்கள் எதிரே படையொன்று திரண்டு வருவதைக் கண்டு திகைத்தார்கள். இருதரப்பும் நெருங்கின; உரையாடின; ‘அடக் கைச்சேதமே! மோசம் போனோமே’ என்று தலையில் அடித்துக்கொண்டன.

இமாதுத்தீன் ஸெங்கியின் மேம்பட்ட இராணுவத் திறனின் வெளிப்பாடு அது. விரிவாகப் பார்ப்போம்.

இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸிலிருந்து பின்வாங்கி விட்டாலும் அதன் கட்டுப்பாட்டில் இருந்த ஹும்ஸு நகரின் அமீருக்கு அச்சம் இருந்தது. ஸெங்கி இங்கு எந்நேரமும் வரக்கூடும்; தாக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அவருக்கு இருந்தது. ஆனால், ஸெங்கியை எதிர்த்து சமாளித்து நிற்கும் ஆற்றலும் அவரிடம் இல்லை; உறுதியும் இல்லை. எனவே அவர் டமாஸ்கஸின் புதிய அதிபரான ஷிஹாபுத்தீன் மஹ்மூதிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ‘இந்நகரின் ஆட்சிக் கட்டுப்பாட்டை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்; பகரமாக வேறு ஏதாவது ஒரு பகுதியை எனக்கு அளியுங்கள்; நான் அங்குச் சென்று என் பிழைப்பைக் கவனித்துக்கொள்கிறேன்’ என்று பேசி ஹும்ஸை ஒப்படைத்துவிட்டு, வேறொரு பகுதியின் அமீராகச் சென்று விட்டார்.

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்? எனவே அவரை அழைத்து, ‘நீர் இனி ஹும்ஸின் ஆளுநர்’ என்று பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி வைத்தார். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. ஹும்ஸு இமாதுத்தீன் ஸெங்கிக்குப் பெரும் சவாலாக உருவானது.

டமாஸ்கஸ் தரப்பு எதிர்பார்த்தது போலவே, ஹி. 531/ கி.பி. 1137 ஆம் ஆண்டு, தம் படை பரிவாரங்களுடன், முற்றுகைக்குத் தேவையான கவண்பொறி இயந்திரங்களுடன் ஹும்ஸைச் சுற்றியிருந்த திராட்சைத் தோட்டங்களின் அருகே வந்து இறங்கினார் இமாதுத்தீன் ஸெங்கி. நீண்ட கால முற்றுகைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன் அவரது படை பாடி இறங்கியது. நகரைச் சுற்றிக் கவண் பொறிகள் நிர்மாணிக்கப்படுவதை முயீனுத்தீன் உனுர் கவனித்தார். முற்றுகையை எதிர்த்து நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் ஸெங்கியின் படையைக் களத்தில் வெல்ல முடியாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் கத்தியை ஒதுக்கி வைத்துவிட்டு, புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளில் இறங்கினார்.

அலுவலகப் பணியாளர்களை அழைத்துப் பரங்கியர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். ‘… இவ்விதமாக இமாதுத்தீன் ஸெங்கி எங்களை முற்றுகை இட்டிருக்கிறார். எனக்கு வேறு வழி இல்லை; அவரிடம் சரணடைய முடிவெடுத்து விட்டேன். உங்களுக்குரிய பாதுகாப்பை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’

அவரது தந்திரம் சற்றும் பிசகாமல் வேலை செய்தது. ஹும்ஸு நகருக்குத் தென் மேற்கே, பரங்கியர்களின் மாநிலமாக ஆகிவிட்டிருந்த திரிப்போலி இரண்டு நாள் படை அணிவகுப்பு தூரம் மட்டுமே. அந்தளவு அண்மையில் ஸெங்கி வந்து நிலை நின்றுவிட்டால், அது எந்தளவு தங்களது ஆட்சிக்கு ஆபத்து என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே, பரங்கியர்களின் படை ஹும்ஸை முற்றுகை இட்டிருந்த இமாதுத்தீன் ஸெங்கியை நோக்கி வந்தது.

பார்த்தார் ஸெங்கி; இருமுனைத் தாக்குதலுக்குத் தம் படை உள்ளானால் வெற்றி சாத்தியமில்லை என்பது அவருக்குப் புரிந்தது. ஹும்ஸைப் பிறகு கவனிப்போம் என்று மூன்று மாத முற்றுகையை முடித்துக்கொண்டு பாரின் கோட்டையை நோக்கித் தமது படையைத் திருப்பினார். பரங்கியர் வசம் பலம் வாய்ந்த அரணுடன் இருந்த அந்தக் கோட்டை முஸ்லிம்களுக்கு ஆபத்தான ஒன்றாக நீடித்து வந்தது. ஹமாஹ்வுக்கும் அலெப்போவுக்கும் இடையில் இருந்த பகுதிகளை அக்கோட்டையின் பரங்கியர்கள் கொள்ளையடித்து அட்டகாசம் செய்து வந்தனர். அக்கோட்டையை முற்றுகையிட்டது இமாதுத்தீன் ஸெங்கியின் படை.

திரிப்போலியின் சேனாதிபதிகளுக்கு ஓணான் மடியில் புகுந்ததைப் போல் ஆகிவிட்டது. குறுக்கிடாமல் இருந்திருந்தாலாவது ஸெங்கிக்கும் ஹும்ஸுக்குமான சண்டையாக அது முடிந்திருக்கும். இப்பொழுது நாமே அவரை நம் வசம் இழுத்து விட்டுக்கொண்டோமே என்ற கவலையுடன், உதவிக்கு வாருங்கள் என்று ஜெருசலம் ராஜா ஃபுல்கிற்குத் தகவல் அனுப்பினார்கள். அவரும் தம் படையைத் திரட்டிக்கொண்டு வந்தார். இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவின் அதிபதியாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்த பின், இப்பொழுதுதான் அவரும் பரங்கியர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் போர் உருவானது. ஸெங்கியின் படைத் திறனைச் சுவைக்கும் முதல் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.

‘ஜெருசலத்திலிருந்து ராஜா கிளம்பி வருகிறாராம்’ என்று ஸெங்கியின் உளவுத் துறை உடனே அவருக்குத் தகவல் அனுப்பியது. அவர் அதற்கேற்பத் திட்டம் வகுத்துத் தயாரானார். பாரின் கோட்டையின் புறநகர்ப் பகுதியில் வந்து இறங்கியது பரங்கியர்களின் உதவிப்படை. ஸெங்கியின் படை அவர்களைப் பார்த்துவிட்டு ஓட, ‘பிடி அவர்களை’ என்று துரத்தியது பரங்கியர்களின் படைப் பிரிவு. வழியில் பதுங்கியிருந்த ஸெங்கியின் படையின் முக்கியப் பிரிவும் பரங்கியர்களைச் சுற்றி வளைத்தது; கொன்று வீசியது. பிழைத்தவர்கள், தங்கள் முகாம்களுக்குத் திரும்பி, நேர்ந்த கதியைக் கூறி வெதும்பி நிற்க, தம் படையுடன் அங்கு வந்து சொச்சம் உள்ளவர்களையும் கொன்றார் இமாதுத்தீன் ஸெங்கி.

சில மணி நேரங்களில் வெகு சுருக்கமாக, ஸெங்கிக்குத் தெளிவான வெற்றியுடன் அந்நிகழ்வு முடிவடைந்தது. பரங்கியர்களுக்குப் பெரும் பேரிழப்பு. உயிர் பிழைத்தவர்கள் வெகு சொற்பம். ஜெருசலம் ராஜாவும் பிழைத்தவர்களுள் ஒருவர். அவரும் மற்றவர்களும் தப்பித்து ஓடி, பாரின் கோட்டைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களுடன் சேர்ந்துத் தங்களை அடைத்துக்கொண்டனர். வெகு நன்று என்று இமாதுத்தீன் ஸெங்கி செய்த அடுத்த முக்கிய காரியம், தகவல் தொடர்பு துண்டிப்பு. எப்படியான முற்றுகையின் போதும் இண்டு இடுக்கில் புகுந்து ஏதேனும் வெளியுலகத் தகவல் தொடர்பு நிகழ்ந்து விடுவதுண்டு. ஆனால் இந்த முற்றுகையில் ஸெங்கி தகவல் தொடர்பை முற்றிலுமாக அடைத்ததை, இப்போரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அது அமைந்ததை, வரலாற்று ஆசிரியர் இப்னு அதீர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். உள்ளே அடைபட்டுக் கிடந்தவர்களுக்கு வெளியே என்ன நடைபெறுகிறது என்று அறிய முடியாதபடி அனைத்துப் பாதைகளும் ஸெங்கியின் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன.

ஜெருசலம் ராஜா கோட்டைக்குள் புகும்முன் உதவிப்படை அனுப்பி வைக்கும்படிப் பரங்கியர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்ப ஒரே ஒரு வாய்ப்புக் கிடைத்ததே தவிர, பாரின் கோட்டைக்குள் புகுந்ததும், வெளியுலகச் செய்தி என்ன என்பதே அவருக்குத் தெரியாமல் அவரது உலகம் அத்துடன் சுருங்கிவிட்டது. கடுமையான முற்றுகை நீடிக்க, உள்ளே இருந்தவர்களின் உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துவிட்டன. ஆகாரத்திற்கு வேறு வழியின்றிப் போய், அவர்களுக்குக் குதிரைகளை வெட்டிச் சமைத்து உண்ணும் நிலை ஏற்பட்டது.

எக்குத்தப்பாக மாட்டி, வழிவகையின்றி மூச்சுத் திணறிக் கிடந்தவர்களை, மேலும் மேலும் ஸெங்கியின் முற்றுகை இறுக்கியது. பேச்சு வார்த்தை நடத்தி, ஏதேனும் சமாதான உடன்படிக்கைக்கு வர முடிகிறதா பார்ப்போம் என்ற நிலைக்கு வந்துவிட்டார் ஜெருசல ராஜா ஃபுல்க். அதே நேரத்தில் அங்குப் பரங்கியர் தரப்பு மாட்டிக்கொண்ட ராஜாவையும் மற்றவர்களையும் மீட்க, பெரும் அளவில் படையைத் திரட்டியது. அது ராஜாவின் உதவிக்கு வரும் தகவல் இமாதுத்தீன் ஸெங்கிக்கு எட்டியது. அந்தப் படை வந்து சேர்வதற்குள் பாரின் கோட்டையைக் கைப்பற்றுவதே சிறப்பு என்று முடிவெடுத்த இமாதுத்தீன் ஸெங்கி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கினார்.

‘பாரின் கோட்டையை என்னிடம் ஒப்படைக்கவும். தங்களின் மீட்புத் தொகை ஐம்பதாயிரம் தீனார் ரொக்கம். இவற்றை அளித்துவிட்டுத் தாங்கள் வெளியேறலாம்’ என்று சுருக்கமாக நிபந்தனை விதித்தார். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைக்குச் சென்றுவிட்ட ராஜா ஃபுல்க் அந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். கோட்டை ஸெங்கியிடம் சரணடைந்தது. தீனார் கைமாறியது. ராஜாவும் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

குதிரை குளம்பொலிகளின் பின்னணியுடன் விரைந்தவர்கள் எதிரே தங்களை மீட்க உதவிப் படை திரண்டு வருவதைக் கண்டு திகைத்தார்கள். ‘அடக் கைச்சேதமே! மோசம் போனோமே’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.

பைஸாந்தியச் சக்கரவர்த்தி அலெக்சியஸின் அழைப்பின் பேரில் ஐரோப்பாவிலிருந்து வந்து நுழைந்த சிலுவைப் படை, வடக்கே அந்தாக்கியாவிலிருந்து தெற்கே ஃபலஸ்தீனம் வரை ஜெருசலத்தையும் பற்பல பகுதிகளையும் கைப்பற்றி, நான்கு மாநிலங்களை உருவாக்கி ஆட்சி அமைத்துக்கொண்டு, போரும் இழப்பும் வெற்றியுமாக சிரியாவிலும் ஃபலஸ்தீனிலும் நிலை நின்றுவிட்டது. கி.பி. 1118ஆம் ஆண்டு அலெக்சியஸ் மரணமடைந்ததும் பட்டத்திற்கு வந்த அவருடைய மகன் இரண்டாம் ஜான் காம்னெஸ் (John II Comnenus) என்பவரோ, முஸ்லிம்களுக்கும் சிலுவைப் படையினருக்கும் இடையேயான போர்களிலும் கலவரத்திலும் பங்கெடுக்காமல் வேறு பிரச்சினைகளில் கவனம் சிதறிக் கிடந்தார்.

ஆட்சிக்கு வந்து பத்தொன்பது ஆண்டுகள் ஓடிய பின்தான் சிரியாவின் மீது இரண்டாம் ஜான் காம்னெஸுக்குக் கவனம் திரும்பியது. பல்லாயிரக் கணக்கில் படை வீரர்களைத் திரட்டினார். அந்தப் படை சிரியாவின் வடக்குப் பகுதிக்கு மிகப் பிரம்மாண்டமாக அணி வகுத்து வந்தது. ஃபுல்க்கிடமிருந்து பாரின் கோட்டையைக் கைப்பற்றிய இமாதுத்தீன் ஸெங்கி, பைஸாந்தியப் படையினரின் வரவைப் பற்றி அறிந்ததும், அவர்களது இலக்கு அலெப்போவாக இருக்கும் என்று நினைத்திருக்க, சக்கரவர்த்தியின் தூதுவர்கள் வந்து அவரைச் சந்தித்தார்கள். ‘அவர்களுடைய இலக்கு அலெப்போவன்று; அந்தாக்கியா’ என்பது அவர்களுடனான பேச்சுவார்த்தையின் சுருக்கம்.

ரோமச் சக்கரவர்த்திக்கு அச்சமயம் முஸ்லிம்களைவிட, பைஸாந்தியத்தின் பெருமைமிகு பகுதிகளைப் பறித்து அதன் அதிபதிகளாகிவிட்ட பரங்கியர்கள்தாம் முதல் இலக்காக இருந்தனர். புகழ் பெற்ற தங்களுடைய நகரங்களை, பெரும் சிறப்புக்குரிய அந்தாக்கியாவைப் பரங்கியர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்களே என்று நீண்ட காலமாக வயிறு எரிந்து கொண்டிருந்த பைஸாந்தியம் களத்தில் முழு வீச்சில் இறங்கியது. சக்கரவர்த்தி ஜான், நைஸியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். கூடவே அங்கிருந்த இதர பல பகுதிகளும் அவர் வசமாகின. அடுத்து முற்றுகை இடப்பட்டது அந்தாக்கியா. தீவிர கவண் கற்கள் தாக்குதலில் அது கிடுகிடுத்தது.

கிழக்கத்திய கிரேக்க கிறிஸ்தவர்களும் மேற்கத்திய இலத்தீன் கிறிஸ்தவர்களும் தங்களுக்குள் மோதிக் கொள்ளட்டும்; நாம் விலகி நிற்போம் என்று இமாதுத்தீன் ஸெங்கி முடிவெடுத்திருக்க, வெகு விரைவில் அந்தாக்கியாவில் நிலைமை திசை மாறியது. அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக அவர்களுக்கு இடையே இணக்கம் ஏற்பட்டது.

சக்கரவர்த்தியை சாந்தப்படுத்தும் வகையில் அந்தாக்கியா கான்ஸ்டண்டினோபிளுக்குக் கட்டுப்படும் என்று இறங்கி வந்தார்கள் பரங்கியர்கள். அதற்குப் பகரமாக சிரியாவிலுள்ள முஸ்லிம் நகரங்களை உங்களுக்குப் பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் சக்கரவர்த்தி. விளைவு?

புதிய ஆக்கிரமிப்புப் போர் சூல் கொண்டது. ரோமச் சக்கரவர்த்தியின் துணை இராணுவ அதிகாரிகளாக எடிஸ்ஸாவின் புதிய கோமான் இரண்டாம் ஜோஸ்லினும் அந்தாக்கியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ரேமாண்ட்டும் அவருடன் கூட்டணி அமைத்துக் கைகுலுக்கிக் கொண்டனர்,

அலெப்போவை நோக்கி நகர்ந்தது ரோம-பரங்கியர் கூட்டணி. ஆனால் அவர்கள் இமாதுத்தீன் ஸெங்கியின் ஆற்றலை அறியாமல் போனதுதான் அவலம்.








No articles in this category...