Tamil Islamic Media

இறைவேதம் தந்த இனிய ரமளானே வருக !

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக !

புனித ரமளான் மாதத்தை எதிர்நோக்கியிருக்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே வாருங்கள் ரமளானே ! வருக ! வருக ! என வரவேற்போம்.

இறைவன் அப்புனித ரமளான மாதத்தைப் பற்றி என்ன கூறுகிறான். ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அருள்மறையாம் அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் (அல்பகரா 185) என்று கட்டளையிடுகின்றான்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை தூய்மையான, நேரான பாதையில் கொண்டு செல்ல அல்லாஹ்விடமிருந்து வேதங்கள், திருத்தூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு வந்துள்ளன. ஏழாவது நூற்றாண்டில் வேதங்களின் இறுதியாக, இறுதிநாள் வரையுள்ள மனிதர்களுக்கு அருளப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும். பல நூற்றாண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் தான் அருளப்பட்ட காலத்தில் இருந்தது போலவே இன்றளவும் தூய்மையுடன் விளங்கும் நூல் அல்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை. அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் எந்த ஒரு கருத்தும் தவறானது என்று இது வரை எவரும் நிரூபிக்க முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் உலக அழிவு நாள் வரை அது முடியவே முடியாது.

ரமளான் மாதம் ஏன் புனிதமான மாதமாக சிறப்பிற்குரிய மாதமாக திகழ்கிறது என்றால் அம்மாதத்தில்தான் இறுதிதூதர் கண்மணி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கியருளப்பட்டதால் சிறப்பிற்குரிய மாதமாகும். மேலும் ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவும் இம்மாதத்தில் இருப்பதால் மற்றொரு சிறப்பையும் இந்த மாதம் பெறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹீரா குகையில் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமளான் மாதம், தனது 40 வது வயதை அடைந்ததும் நன்மை தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை தெளிவாகச் சொல்லிக்காட்டும் அருள்மறை திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில்தான் அருளப்பட்டது.

மக்காவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன் நூர் என்ற மலையின் உச்சியில்தான் ஹீரா குகை இருக்கின்றது. அக்குகையில் தான் (ஸல்) அவர்கள் தனிமையில் இருப்பது வழக்கம் பல நாட்கள் அவ்வாறு தியானம் செய்தார்கள். ஒரு நாள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தியானத்திலிருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் (மலக்) நபிகளாரிடம் ஓதுவீராக என்றார்கள் அதனைக் கேட்டு பயந்து நடுங்கிய நபிகளார் (ஸல்) அவர்கள் எனக்கு ஓதத் தெரியாது என்று கூறினார்கள். பின் வானவர் ஜிப்ரீல் நபிகளாரை இருக்க அணைத்து மீண்டும் ஓதுக என்றார்கள் அதற்கு நபிகளார் மீண்டும் ஓதத் தெரியாது என்றார்கள் மூன்றாவது முறையாக இருக்க அணைத்து ஓதுவீராக என்று பின்வரும் வசனங்களை ஓதிக்காண்பித்தார்கள். (யாவற்றையும் படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக – அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான் ஓதுவீராக உம் இறைவன் மாபெரும் கொடையாளி அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றும் கொடுத்தான் (96 :1 - 5) என்ற வசனங்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளார்களுக்கு கற்றுக் கொடுத்துச் சென்றது ரமளான் மாதத்தில்தான் என்பது ஒரு தனிச்சிறப்பு, அதுமட்டுமல்ல ஏனைய மற்ற நபிமார்களுக்கும் அல்லாஹ் (ஜல்ல) வேதங்களை ரமளான் மாதத்தில் தான் வழங்கினான். எனவே இம்மாதம் வேதங்கள் அருளப்பட்ட மாதம் என்ற சிறப்பை பெறுவதுடன் இம்மாதத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு அமலுக்கும் பன்மடங்கு கூலி கிடைக்கின்றது என்பது மற்றொரு சிறப்பு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதக் கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள் எவ்வாறெனில் ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களைவிட மகிமை மிக்க ஒரு இரவு உள்ளது அப்படிப்பட்ட பரக்கத் பொருந்திய மாதம் உங்களை நோக்கி வருகிறது அம்மாதத்தில் நோன்பு நோர்ப்பதை அல்லாஹ் கடைமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். மேலும் இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் (ஃபர்ளான) கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஒரு ஃபர்ளான நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்ளான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை ஸல்மான் பின் பார்ஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகி)

ரமளான் மாதம் வருவதற்கு முன்பே அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு இந்த மாதத்தின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துரைப்பார்கள். அதன் அருள் வளங்களின் செல்வக் குவியல்களில் தத்தமது பங்குகளை முழுமையாக ஈட்டிக்கொள்வதற்காக கடுமையாக பயிற்சி செய்யுமாறும் நல்ல அமல்களில் ஈடுபடுமாறும் அறிவுரை வழங்கினார்கள் என்றால் அம்மாதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது.

எனதருமை சகோதரர்களே ! உண்மையில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமான, தூய்மையான நாள் ஆகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு இரவும் அருள்வளம் மிக்க இரவாகும். இறைவனுக்காகவே இறைவனின் கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்பதற்காகவே, இறை உவப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவே, தம்முடைய ஆகுமான உடல் தேவைகளையும், இச்சைகளையும் துறந்து விட்டு இறைவனே எங்களின் அதிபதி இறை உவப்பே எங்களின் குறிக்கோள் என்றும் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்கிற ஆசையில்தான் நோன்பு நோற்று இன்பம் காண்கிறோம். இந்த புனித ரமளான் மாதத்தின் ஒவ்வொரு நொடியிலும் எந்த அளவுக்கு அருள்வளங்களின் புதையல் பொதிந்து கிடக்கின்றது என்றால் அதிகப்படியான (நஃபில்) நற்செயல்கள் கடமையன (ஃபர்ளு) நற்செயல்களின் அந்தஸ்தைப் பெற்றுத்தருகிறது. ஃபர்ளான நற்செயல்களோ எழுபது மடங்கு அதிக நன்மையை பெற்றுத் தருகின்றது என நபிகளார் நமக்கு சொல்லித்தருகிறார்கள் இதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும். எனவே ரமளானின் புனிதம் அதன் சிறப்பு எழுத்தில் அடங்காதவை அதன் சிறப்பை எனக்கும் உங்களுக்கும் இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். ஆமீன் வஸ்ஸலாம்.








No articles in this category...