Tamil Islamic Media

அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02

▪ மெத்தையால் தொழுகை பாழாகக் கூடாது

 

நபி (ஸல்) அவர்களது படுக்கை விரிப்பு எவ்வாறு இருந்தது என்று அன்னை ஹஃப்ஸாவிடம் (ரளி) வினவப்பட்ட போது, அது ஒரு சாக்குப் பை. அதை இரண்டாக மடித்து நபியவர்களுக்கு படுக்கை யாக்கி விடுவோம் என்று அவர் கூறினார்.

 

ஒருமுறை நபியவர்கள் காலையில் எழுந்ததும் படுக்கையை விரித்தது யார் என்றார்கள். நான்தான் விரித்தேன் என்றேன். எதை விரித்தீர்கள் என்றார்கள். எப்போதும் விரிக்கும் சாக்குப் பைதான். ஆனால் சற்று மிருதுவாக இருக்கட்டுமே என்று நான்காக மடித்து விரித்தேன் என்றேன்.

 

இனி இரண்டாகவே மடித்து விரியுங்கள். ஏனெனில், அதன் மிருதுத் தன்மை, தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழ எனக்கு இடையூறாக இருந்தது என்றார்கள் நபியவர்கள். [ஷமாயில் திர்மிதி]

 

நீண்ட தொழுகையால் தூக்கம் பாழாகி விடக்

கூடாது என்பது போலவே, மென்படுக்கையால் தொழுகைக்கும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது.

 

▪ கைலூலா என்ற சிறு பகல் தூக்கம்

 

நண்பகலில் அதாவது லுஹர் தொழுகைக்கு முன்பு சிறிது (அரைமணி) நேரம் தூங்குவது நபியவர்களது சுன்னாவாகும். இதற்கு அறபு சொல்வழக்கில் 'கைலூலா' என்றும் ஆங்கிலத்தில் NAP சிறு கோழித் தூக்கம் என்றும் கூறப்படுகிறது.

▪ கைலூலா தூக்கத்தின் பயன்

 

பொதுவாக சூரிய உதயத்திற்கு முன்பு எழும் பழக்கமுள்ளவர்களுக்கு சூரிய உச்சம் ஏற்பட்டதற்கு பிறகு இந்த சிறு தூக்கம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் தஹஜ்ஜுத் தொழுகையை மேற்கொள்பவர்களுக்கு முற்பகல் நேரத்தில் இயற்கையான களைப்பு, உறக்கமாக ஏற்படும்.

 

இந்த தூக்கம் லுஹர் நேரத்துக்குப் பிறகுண்டான மாலை நேரப் பணிகளுக்கு புத்துணர்வை வழங்கும். இதனால்தான் ஜப்பான் போன்ற சில நாடுகளில் உள்ள அலுவலகங்களில் அந்த நேரத்தில் பணியாளர்களுக்கு சிறிது ஓய்வு அளிக்குமாறு அரசாங்கமே வலியுறுத்தி உள்ளது. அதன் மூலம் பணியாளர்களது உற்பத்தித் திறன் அதிகப்படுவதையும் கண்டுபிடித்துள்ளனர்.

 

▪ எப்படி தூங்குவது..?

 

மல்லாக்கப் படுப்பது

குப்புறப் படுப்பது

இடது பக்கம் சாய்ந்து படுப்பது

வலது பக்கம் சாய்ந்து படுப்பது

 

இந்த நான்கு முறையில் குப்புறப் படுத்தல், இடது பக்கம் சாய்ந்து படுத்தல் இரண்டும் தடை செய்யப்பட்டவை. ஏனெனில், அவை இறைவன் விரும்பாத, நரகவாசிகளின் படுக்கை முறைகள் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

மல்லாக்கப் படுப்பது தடை இல்லை. ஆனால் அவ்வாறு படுக்கும்போது கால் மேல் கால் போட்டு மறைவிடம் வெளிப்படும் வண்ணம் தூங்குவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள். [முஸ்லிம் 4263]

 

வலது பக்கம் சாய்ந்து படுப்பதே நபியவர்களது சுன்னா நடைமுறை. (தூக்கத்தின் இடையில் நம்மையறியாமல் படுக்கை நிலை மாறி விடுவதால் குற்றமில்லை.)

 

இதயம் இடது பக்கம் உள்ளது. வலது பக்கம் சாய்ந்து படுக்கும்போது இதயம் அழுத்தப் படாமல் இருக்கும் என்பதுடன், ஆழ்ந்த தூக்கத்துக்கு அதுவே சிறந்தமுறை என்பது நவீன மருத்துவக் குறிப்பு.

 

▪ எவ்வளவு நேரம் தூங்குவது?

 

அளவுக்கு அதிகமான தூக்கமும் ஆரோக்கிய மானதல்ல. தேவைக்குக் குறைவான தூக்கமும் முறையல்ல. குழந்தைகள் கூடுதலாகத் தூங்குவார்கள்; தூங்க வேண்டும்.பொதுவான மனிதர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

 

முதலில் தினமும் ஒருவர் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், தொலைக்காட்சி வந்த பிறகு இரண்டு மணி நேரத்தைக் குறைத்து ஆறு மணி நேரமாக்கி விட்டனர். ஆனால், ஸ்மார்ட் போன் அறிமுகமான பிறகு அதுவும் குறைந்து விட்டது.

 

இரவில் ஒன்பது அல்லது பத்து மணிக்கு படுத்து, இரவின் இறுதிப் பகுதியில் தொழும் தஹஜ்ஜுத் தொழுகைக்காக மூன்று அல்லது நான்கு மணிக்கு எழும் நபி நடைமுறையை வைத்துக் கவனிக்கும் போது, குறைந்த பட்சம் ஆறுமணி நேரம் தூங்க வேண்டும் என்று தெரிகிறது.

 

ஆறு மணி நேரம் தொந்தரவில்லாமல் ஒருவன் தூங்கினால், அவனது உடல் ஆயிரம் கலோரி களை எரித்து விடும் நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

▪ தூங்கும் முன் சில எச்சரிக்கை நடவடிக்கைகள்

 

விளக்குகளை (எண்ணெய் விளக்கு எனில் அவசியம்) அணைத்து விட வேண்டும். ஏனெனில், அது ஆபத்தானது.)

கதவுகளைத் தாழ்ப்பாளிட்டு விட வேண்டும்.

தண்ணீர்ப் பைகளை சுருக்கி மூடிவிட வேண்டும்.

உணவு, பானங்களை மூடி வைக்கவேண்டும்.

 

மூடுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், குறைந்த பட்சம் அதன் மீது ஒரு குச்சியையாவது குறுக்கே வைக்க வேண்டும். [புகாரி 5624, 6294]

 

படுக்கைக்குச் செல்லும் போது படுக்கை விரிப்புகளை மூன்று முறை தட்டி விட்டுக் கொள்ள வேண்டும். அவற்றில் விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. [புகாரி 7393, 5257]

 

இறைநம்பிக்கை என்ற பெயரில் அஜாக்கிரதை யாக இருந்து விடக்கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒட்டகத்தைக் கட்டிப் போட்டு விட்டு இறைவன் மீது தவக்குல் வைக்க வேண்டும் என்பதே ஈமானியப் பாலிஸி!

 

- தூக்கம் தொடரும் இன்ஷா அல்லாஹ்!






No articles in this category...