சூஃபிக்களும் புனித போர்களும்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் வரலாறு அதிமுக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருந்தது. எகிப்து மீதான நெப்போலியனின் படையெடுப்போடு துவங்கிய மேற்கத்தேய காலனித்துவம், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அந்த நாடுகளில் இருந்த முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் இப்புதிய சவாலை எதிர்கொள்வதற்கு திராணி பெற்றதாக இல்லை.
எனினும், தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய வெகுஜனப் போராட்ட இயக்கங்கள் காலனியவாதிகளின் அமைதியைச் சிதறடித்தன. அடிக்கும் கொள்ளையை திருப்தியாக அனுபவிப்பதற்கு அவர்களை அவை அனுமதிக்கவில்லை. கைவசமிருந்த வெகு சொற்ப வளங்களைக் கொண்டே முஸ்லிம்கள் இத்தீரமிகு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
இப்போராட்டங்களுள் மிகப் பெரும்பாலானவற்றைத் தலைமையேற்று நடத்தியது சூஃபி மரபில் வந்த முஜாஹிதுகளே. இதற்கான உதாரணங்களாக பின்வருவோரைக் குறிப்பிடலாம்:
1. சீக்கியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிராக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லை மாகாணப் பகுதிகளில் ஜிஹாது இயக்கத்தை முன்னெடுத்த ரேபரேலியின் சையித் அஹ்மது (1786-1831); இவர் சிஷ்திய்யா, காதரிய்யா மற்றும் நக்ஷ்பந்திய்யா சூஃபி மரபில் வந்தவர்.
2. ரஷ்யாவின் ஜார் சாம்ராஜ்யத்தை எதிர்த்துச் சுமார் அரை நூற்றாண்டு காலம் வீரப்போர் தொடுத்த தாகிஸ்தானின் இமாம் ஷாமில் (1797-1871); இவர் நக்ஷ்பந்திய்யா மரபின் முரீது இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்.
3. முசோலினியின் ஃபாசிஸ இத்தாலிய இராணுவத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த உமர் முக்தார் (1862-1931); இவர் சனூசிய்யா சூஃபி மரபைச் சேர்ந்தவர்.
4. அல்ஜீரியாவின் மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய அப்துல் காதிர் அல்-ஜஸாயிரி (1808-1883); இவர் காதரிய்யா சூஃபி ஒழுங்கை சேர்ந்தவர்.
5. பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராகப் போராடிய செனிகலின் ஷெய்க் அஹ்மதூ பம்பா (1853-1927); இவர் முரீதிய்யா சூஃபி ஒழுங்கின் நிறுவனர்.
6. மொரோக்கோவில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த சூஃபி ஷெய்குகளான சித்தி முஹம்மது இப்னு அப்துல் காதிர் அல்-கத்தானி மற்றும் அஹ்மது ஹிபா.
7. ஸ்பானிய மற்றும் பிரெஞ்சுக் காலனியத்திற்கு எதிராக வட ஆப்பிரிக்காவில் வெடித்த ‘ரிஃப் கிளர்ச்சியை’ தலைமையேற்று நடத்திய முஹம்மது அப்துல் கரீம் (1882-1963);
8. பிரிட்டிஷ், இத்தாலிய மற்றும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக இருபதாண்டுகள் போராடிய தெர்வீஷ் அரசை நிறுவிய சூஃபி தலைவர் முஹம்மது அப்துல்லாஹ் ஹசன் (1856-1920).
9. செனிகாம்பியாவில் காலனியத்திற்கு எதிரான பெரும் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஷெய்க் உமர் இப்னு சயீத் அல்-ஃபூதி (இ.1864).
10. கினியா, செனிகல் மற்றும் மாலியில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய திஜானிய்யா சூஃபி ஒழுங்கின் தலைவர் அல்-ஹாஜ் உமர் தல் (1797-1864).
மலேசியாவில் சூஃபி ஷெய்குகளும் உலமாக்களும் மக்களை காலனியத்திற்கு எதிராக அணிதிரட்டினார்கள். இந்தோனேசியாவின் சுமத்ராவில் டச்சுக்காரர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதும் சூஃபிகளே. பட்டியல் முடியாது நீண்டு கொண்டே செல்கிறது.
நூல்: சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்: அந்நிய ஆட்சிக்கு எதிரான அவர்களின் விடுதலைப் போராட்டம்
ஆசிரியர்: மரியம் ஜமீலா
No articles in this category... |