Tamil Islamic Media

மரணம்.. ஒரு விடியல்..

என்னுயிர் போகும்போது
என் வெற்றுடல் வெளியே
எடுத்துச் செல்லப்படும்போது, நான்
இந்த உலக வாழ்வை இழந்ததாக,நீ
எண்ணலாகாது,ஒருபோதும்.

துளியும் கண்ணீர் சிந்தாதே
புலம்பாதே
வருந்தாதே;
நானொன்றும்
கொடியோனின் படுகுழியில்
குப்புற விழவில்லை.

என்னுடைய வெற்றுடல்
சுமந்து செல்லப்படும் போது
என் பிரிவிற்காக அழாதே.
நான்,பிரிந்து செல்லவில்லை;
நிரந்தரமான காதலுக்குரிய இடத்தை
நெருங்குகிறேன்…

என் மண்ணறையை விட்டுச்
செல்லும்போது, நீ (என்னிடமிருந்து)
விடைபெற வேண்டியதில்லை;
நினைவிற் கொள்:-
ஒரு மண்ணறையானது
பின்னால் உள்ள சொர்க்கத்தின்
திரைதான்.

நீ மண்ணறையின்
இறங்குமுகத்தைத்தான்
பார்க்க முடியும்.
என்னைப் பார், நான்
ஏறுமுகத்தைப் பார்க்கிறேன்.
பிறகு
எப்படி இருக்க முடியும்,
இறுதி?

சூரியன் மறையும்போது அல்லது.
சந்திரன் கீழிறங்கும்போது-

இது
ஒரு முடிவைப் போல் இருக்கிறது
ஓர் அஸ்தமனம் போல் இருக்கிறது;

ஆனால்
உண்மையில், இது
ஒரு விடியல்!

மண்ணறை உன்னை மூடுகிறதே
அப்போதுதான் உன்
ஆன்மா விடுதலையடைகிறது!

மண்ணில் விழுந்த விதை
மறுவாழ்வு பெற்று
எழாமல் இருப்பதை, நீ
எப்போதாவது பார்த்ததுண்டா?

மனிதன் என்ற பெயருள்ள
விதை விழுவதைப் பற்றி(மட்டும்)
நீ ஏன்
மயங்க வேண்டும்?

கிணற்று நீருக்குள்
இறக்கப்பட்ட வாளி,
எப்போதாவது
வெறுமனே திரும்பி
இருக்கிறதா?

கிணற்றிலிருந்து யூசூஃப் நபி போல்
மீள முடியும் எனும் போது,
ஏன் நீ ஓர்
உயிருக்காகத்
துயரப்படுகிறாய்.?

உன் வாயை நீ
கடைசியாக மூடும்போது
உன் சொற்களும் ஆன்மாவும்
இடமும் காலமும்
இல்லாத உலகுக்குச்
சொந்தமாகிவிடும்… … … !

மௌலானா ரூமி (ரஹ்)
(மொழிபெயர்ப்பு:ஏம்பல் தஜம்முல் முகம்மது)

 








No articles in this category...