Tamil Islamic Media

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)

- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.

இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்!

உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே.

இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றும் இடமாக மக்காவும்,உலக மக்களின் இறுதித்தூதர் கண்மணி நாயகம்(ஸல்)அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடமாக மதீனாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.  

எம்பெருமானார் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற வரி சிலருக்கு மிகையாக தெரியும்.ஆனால் உண்மை அதுதான்.

நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.நபிகளாரின் மீது அளப்பரிய அன்பை கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் மதீனாவுக்கு வந்து பார்த்தால் எனது வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவர்களுக்கு புரியும்.

எம்பெருமானார் வாழும் மதீனாவுக்கு வரும் பாக்கியத்தை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறைவன் வழங்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எனது அனுபவத்தை தொடர்கிறேன்.

எனது 11வது வயதில்புரிந்துணர்வோடு எம்பெருமானாரை நேசிக்க ஆரம்பித்த எனக்கு 43வது வயதில் தான் மதீனா சென்று (ஸல்)அவர்களை காணும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருளினான் அல்ஹம்துலில்லாஹ்......

நான் பணி நிமித்தமாக சவூதிஅரேபியாவின் தம்மாம் நகருக்கு வந்தேன்.

தம்மாம் வந்த முதல் இரண்டு மாதங்கள் வேலை கிடைக்காமல் இருந்த நான் சவூதியில் இருக்கும் எனது குடும்பத்தாரின் உதவியுடன் அந்த இரண்டு மாதத்தில் சவுதிஅரேபியாவில் உள்ள அல்-ஜுபைல்,சிஹாத்,ரியாத்,அல்-கப்ஜி,நஜ்ரான்,வாடிஅத்-தவாசிர்,ஜீஸான்,ஐனுல்ஹார்,சவூதிஅரேபியாவின் மலையரசி அப்ஹா,அல் சூதா,தாயிப்,ஜித்தா,மக்கா,மதீனா போன்ற அனைத்து நகரங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன்.

மதீனாவை தவிர்த்து மக்கா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் சொல்லி வைத்தாற்போல கரடு,முரடான,ஒழுங்கீனமான கொள்கைக்குரியவர்களாகவே பெரும்பாலான அரபு மக்களின் வாழ்க்கைச்சூழல் அமைந்துள்ளதை காணமுடிந்தது.

வெளிநாட்டு மக்களை கண்டால்,அஜ்னபி(அந்நியர்)என்று கேளி செய்வதும்,முகத்தில் எச்சில் துப்புவதும்,நமது கையில் வைத்திருக்கும் பொருள்களை பிடுங்கி கொண்டு ஓடுவதும் போன்ற ஈனச்செயலை சர்வ சாதாரணமாக அரபிகள் செய்கிறார்கள்.

விஞ்ஞான வளர்ச்சி கண்ட பின்பும் கூட காட்டுவாசிகளைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய அரபிகளின் முன்னோர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்,

1436 ஆண்டுகளுக்கு முன்பு மக்காவிலேயே பிறந்து மக்காவிலேயே வாழ்ந்து கொண்டிருந்த நமதருமை நாயகம்(ஸல்)அவர்களையே புரிந்து கொள்ளாமல் மண்ணின் மைந்தர் என்றும் கூட பாராமல் பெருமானாருக்கே சொல்லொண்ணா கொடுமைகளை செய்தவர்கள் இந்த அரபிகள்.

இந்தியாவிலிருந்து பிழைக்க வந்துள்ள நாமெல்லாம் இவர்களுக்கு எம்மாத்திரம்?என்றுதான் என் மனதை ஆறுதல் படுத்திக்கொள்ள முடிந்தது.

மக்கத்து மக்களை ஏன் நபிகள் விரும்பவில்லை என்று ஓரளவுக்கு நமக்கு புரிந்திருக்கும்.

மக்காவில் உம்ராவை முடித்துக்கொண்டு மதீனாவை மட்டும் காணாதவனாய் நான் மீண்டும் தம்மாம் திரும்பினேன்.

மக்காவிலிருந்து தம்மாம் 1250 கிலோமீட்டர் தூரம்.10 மணி நேர பயணத்தின் போது மக்கா உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் உள்ள அரபு மக்களை பற்றியும் அவர்களது துற்குணத்தை பற்றியுமே என்னை சிந்திக்க வைத்தது.

அரபிகள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல,அப்படியானால் மதீனத்து மக்களை மட்டும் ஏன் நபிகளார் நேசிக்க வேண்டும்?






No articles in this category...