Tamil Islamic Media ::: PRINT
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

லுவைப் போர்களின் விளைவாகப் பரங்கியர்களுக்கு அறிமுகமான பல விஷயங்களுள் ‘அஸ்ஸா’ எனும் பகடை விளையாட்டும் ஒன்று. எகிப்தின் ஃபிர்அவ்ன்களின் காலத்திலிருந்து மக்களுக்குப் பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்த ‘அஸ்ஸா’, பன்னிரண்டாம் நூற்றாண்டிலும்கூட மிகவும் பிரபலம்.

பைஸாந்தியச் சக்கரவர்த்தி ஜான் காம்னெஸ் தமது தங்க கிரீடத்தை அணிந்துகொண்டு, களத்தில் நேரடியாக இறங்கி முஸ்லிம் நகரின்மீது கவண் வீசக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் நட்புப் படையினராக இணைந்திருந்த ஜோஸ்லினும் ரேமாண்டும் தங்களது கூடாரங்களில் சாய்ந்து அமர்ந்து, இந்தப் பகடை விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்டு சக்கரவர்த்தி எந்தளவு விரக்தி அடைந்தார் என்பது தெரியாது. ஆனால் இமாதுத்தீன் ஸெங்கி, தம் திட்டம் பலித்ததைக் கண்டு மகிழ்ந்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.


அந்தாக்கியாவின் புதிய அதிபராகப் பட்டம் ஏற்றிருந்த ரேமாண்ட் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். புஆச்செவ் என்ற பகுதியின் பிரபுக் குடும்பத்தின் வழித்தோன்றல். அதனால் அவர் புஆச்செவின் ரேமாண்ட் (Raymond of Poitiers) என அழைக்கப்பட்டார். தம் கணவரின் மரணத்திற்குப் பிறகு அந்தாக்கியாவில் ராணி அலிக்ஸ் நிகழ்த்திய இராணுவப் புரட்சி, அதை அவருடைய தந்தை இரண்டாம் பால்ட்வின் அடக்கியது, தம் இரண்டு வயது பேத்தி கான்ஸ்டன்ஸை சம்பிரதாய அதிபதியாக்கி அம்மாநிலத்தை அவர் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, பின்னர் அவருடைய மரணத்திற்குப் பிறகு ஜெருசலத்தின் புதிய ராஜா ஃபுல்க் அந்தாக்கியாவில் தலையிட்டது. . . ஆகிய இந்த அரசியல் நிகழ்வுகளின் முடிவாக புஆச்செவின் ரேமாண்ட்டை பிரான்சிலிருந்து வரவழைத்து அந்தாக்கியாவின் மருமகனாக்கி அதிபராக்கியிருந்தார்கள். ரேமாண்ட் திருமணம் செய்துகொண்டது அலிக்ஸின் மகள் கான்ஸ்டன்ஸை. அச்சமயம் மணப்பெண் கான்ஸ்டன்ஸின் வயது எட்டு.



சக்கரவர்த்தியின் மாபெரும் படை அந்தாக்கியாவை வந்து சூழ்ந்ததும் அவரை எதிர்ப்பது சாத்தியமில்லை என்று இணக்கமாகிவிட்டார் புதிய அதிபர் ரேமாண்ட். முந்தைய காலத்தில் அந்தாக்கியாவில் திருச்சபை முதல்வராக கிரேக்கர்கள்தாம் இருந்து வந்தனர். பரங்கியர்கள் அந்நகரைத் தங்கள் வசமாக்கியபின் அவ்வழக்கம் தேய்ந்து ஒழிந்துபோய், பரங்கியர் வசம் அப்பதவி வந்துவிட்டது. சக்கரவர்த்தியுடன் இணக்கமாகியதன் அடையாளமாக, ரேமாண்ட் அப்பதவியை மீண்டும் கிரேக்கர் வசம் திருப்பித் தந்துவிட்டார்.

எடிஸ்ஸாவின் புதிய கோமான் இரண்டாம் ஜோஸ்லினும் சக்கரவர்த்தியிடம் நேசக்கரம் நீட்டிவிட்டார். இவ்விரு அதிபர்களையும் இணைத்துக்கொண்டு, கிரேக்கர்களின் படை புஸாஆ கோட்டையை முற்றுகை இட்டது; ஹமாஹ்வின் புறநகர் பகுதிகளில் படையெடுத்தது; முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது. தப்பித்து வெளியேறிய பலர் தலைதெறிக்க அலெப்போவுக்கு ஓடிவந்து, அணிவகுத்து வரும் கிரேக்கர்களின் ஆபத்தை அறிவித்து எச்சரித்தனர். தாமதிக்காமல் அலெப்போ தற்காப்புக்கு தயாரானது. போர் அச்சம் இல்லாத நேரத்தில் மக்கள் அலட்சியமாகக் குப்பைகளைக் கொட்டி நிரப்பிவிடும் அகழி தூர்வாரப்பட்டது. ஹும்ஸுப் பகுதியில் இருந்த இமாதுத்தீன் ஸெங்கிக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

இதற்குள் அங்கு கிரேக்கர்களின் முற்றுகையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் புஸாஆ கோட்டை சரணடைந்தது. மகிழ்ச்சிக் களிப்பில் அந்நகரில் இருந்த மக்கள் 5300 பேரைக் கொன்று தீர்த்துத் தம் வெற்றியைக் கொண்டாடினார் பைஸாந்திய சக்கரவர்த்தி. ஏராளமான எண்ணிக்கையில் பலர் அவருக்கு அடிமைகளானார்கள். அந்த வெற்றியின் உற்சாகத்துடன் அலெப்போவை நோக்கி அணிவகுத்து வந்து அதன் எதிரே பாடி அமைத்தார்.

அலெப்போவின் ஆட்சியாளர் இமாதுத்தீன் ஸெங்கி ஹும்ஸுப் பகுதியில் இருக்க, இங்கு அந்நகரம் முற்றுகைக்கு உள்ளானால் அதன் கதி? ஆனால், அதைத் திறமையாக எதிர்கொள்ள ஒருவர் இருந்தார். பெயர் சவார். முன்னர் பக்தாதில் நிகழ்ந்த அரசியல் களேபரங்களால் இமாதுத்தீன் ஸெங்கிக்கு இராக்கில் அதிகப்படியான கவனம் தேவைப்பட்டு, சிரியாவில் ஒருகாலும் இராக்கில் ஒருகாலுமாக அவர் நிற்கும்படி ஆனதும் அலெப்போவில் தம் நம்பிக்கைக்கு உகந்த துருக்கிய தளபதிகளை நியமித்திருந்தார் ஸெங்கி. அதில் முக்கியமானவர் சவார்.

பரங்கியர்களுக்கு எதிராக சவார் நிகழ்த்திய சாகசங்கள் தனிப்பெருமைக்கு உரியவை. இமாதுத்தீன் ஸெங்கி பக்தாத் பிரச்சினைகளில் தலைமூழ்கிக் கிடந்தபோது சிரியாவில் சவார் தலைமையில் கொரில்லா யுத்தம் பரங்கியர்களைச் சித்திரவதைப் படுத்தியது. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பரங்கியர் பகுதிகளில் பாய்வது, அவர்களைக் கொல்வது, சிறைபிடிப்பது என்று அவரால் பரங்கியர்களுக்கு ஓயாத, ஒழியாத தொல்லை. முஸ்லிம்கள் தரப்பிலும் இழப்புகளும் உயிர்சேதமும் ஓரளவு இருக்கத்தான் செய்தன. ஆனால் பரங்கியர்கள் சந்தித்த இழப்பு ஏராளம். அலெப்போவிலிருந்து கிளம்பிச் சென்று திரும்பும் போதெல்லாம், அங்காடிக்குச் சென்று கைகொள்ளாமல் பரிசுப் பொருள்கள் வாங்கி வருவதைப்போல், கொய்யப்பட்ட பரங்கியர்களின் தலைகள், கைதிகள், போரில் கைப்பற்றப்பட்ட செல்வங்களுடன் சவார் சவாரி வந்தார்.

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

அந்தத் தளபதி சவாரின் தலைமையில்தான் இப்பொழுது கிரேக்க-பரங்கியர் கூட்டணிப் படையை அலெப்போ எதிர்த்து நின்றது. ஆனால் அலெப்போவைச் சூழ்ந்த அந்தப் பெரும் படை சிறுசிறு சண்டைகளில் ஈடுபட்டதே தவிர, பெரிய அளவில் போர் எதுவும் நிகழவில்லை. வந்த வேகத்தில் அலெப்போவை வெற்றி கொள்ள முடியாமல் தாமதமாகிறது; ஹும்ஸிலிருந்து இமாதுத்தீன் ஸெங்கி வந்து சேர்ந்துவிட்டால் அது நமக்கு பாதகம் என்று சக்கரவர்த்தி கணக்கிட்டாரோ என்னவோ, அடுத்த சில நாள்களில் அலெப்போவுடன் சண்டையை முடித்துக்கொண்டு கிரேக்க-பரங்கியர் கூட்டணிப் படை அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அங்கிருந்து தென்மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் இருந்த அல்-அதாரிப் கோட்டையைக் கைப்பற்றி, புஸாஆவில் தாம் சிறைபிடித்திருந்த முஸ்லிம் கைதிகளை எல்லாம் அங்கு இழுத்து வந்து அவர்களுக்குக் கடுமையான காவலையும் ஏற்படுத்தினார் சக்கரவர்த்தி. அத்தகவல் சவாருக்கு வந்து சேர்ந்தது. தம் படையினருடன் கிளம்பி வந்த அவர் கிரேக்க-பரங்கியர் படையினரைத் தாக்கி, கைதிகளுள் பெரும்பாலானவர்களை மீட்டு, பத்திரமாக அலெப்போவுக்கு அழைத்து வந்துவிட்டார். வெற்றிகரமான அந்தப் படையெடுப்பு அவருடைய போர்த் திறமைக்கு மற்றொரு சான்றாக இடம்பெற்றுவிட்டது.

சக்கரவர்த்தியின் படை அடுத்து அங்கிருந்து தெற்கு நோக்கி அணிவகுத்து வந்து நின்ற இடம் ஷைஸர். அலெப்போ நகரமோ இமாதுத்தீன் ஸெங்கியின் கோட்டை. அதை இழப்பது அவருக்கு மானப் பிரச்சினை. ஆனால் ஷைஸர் போன்ற இதர பகுதிகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்படப் போவதில்லை என்ற எண்ணத்துடன் பலமான முற்றுகை இட்டது பைஸாந்திய-பரங்கியர் கூட்டணிப் படை. ஆனால் அந்தக் கணிப்பு முற்றிலும் தவறாக அமைந்துவிட்டது. இமாதுத்தீன் ஸெங்கி தம் ஆற்றலை வெளிப்படுத்த அது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்து அவரது புகழ் சிரியாவில் ஓங்கக் காரணமாக ஆகிவிட்டது!


ஷைஸரைச் சுற்றிப் பதினெட்டுக் கவண் பொறிகள் நிர்மாணிக்கப்பட்டன. படைகள் சுற்றி வளைத்தன. தாக்குதல் தொடங்கியது. முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். கிடுகிடுத்தது ஷைஸர். அந்நகரின் அமீராக இருந்தவர் முதியவர் சுல்தான் இப்னு முன்கித். சிலுவைப் படையினரின் படையெடுப்பிற்கு முந்தைய காலத்திலிருந்தே அந்நகரின் ஆளுநராக ஆட்சி புரிந்து வந்தவர். பைஸாந்தியர்-பரங்கியர் கூட்டுப் படையை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் அவரிடம் படை வலிமை இல்லை. அவருக்கு இரண்டு வாய்ப்புகள்தாம் இருந்தன. ஒன்று அவர்களிடம் சரணடைந்து ஷைஸரை தாரை வார்க்க வேண்டும்; அல்லது, தமது உதவிக்கு வலிமையான முஸ்லிம் ஆட்சியாளரை அழைக்க வேண்டும். சுல்தான் இப்னு முன்கித் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். இமாதுத்தீன் ஸெங்கிக்குத் தகவல் அனுப்பினார். காலம் தாழ்த்தாமல் ஸெங்கியின் படை உடனே ஷைஸருக்குப் புறப்பட்டு வந்தது.

சக்கரவர்த்தியின் படை எண்ணிக்கை அதிகம் என்பதை ஸெங்கி நன்றாகவே அறிந்து இருந்தார். அதனால் நேரடியாக அவர்களிடம் மோதாமல் அவர்களுக்கு அண்மையில் பாடி இறங்கினார். முதல் வேலையாக அவர்களுக்கு உணவும் உதவியும் வந்து சேரும் பாதைக்கு முழுத் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. உணவுப் பற்றாக்குறையினால் தொல்லைக்கு ஆளானது பைஸாந்திய-பரங்கியர் கூட்டணிப் படை.

அடுத்ததாக, தம் காழீ கமாலுத்தீனை அழைத்து, பக்தாத் சென்று சுல்தான் மஸ்ஊதைச் சந்தித்துப் படை உதவி கோரும்படி தூது அனுப்பினார். கமாலுத்தீன் பக்தாத் வந்தார். முன்னர் காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தலைமையில் பக்தாதில் நிகழ்ந்த அதே களேபரம் இப்பொழுது காழீ கமாலுத்தீன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்டது; சுல்தானுக்கு சிரியாவின் விபரீதத்தைப் புரிய வைத்தது. பக்தாதிலிருந்து பத்தாயிரம் வீரர்களுடன் குதிரைப் படை ஷைஸரை நோக்கிப் பறந்தது.

பக்தாதிற்கு காழீ கமாலுத்தீனை அனுப்பிவிட்டு, வேறு சில தூதுவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் ஒரு திட்டத்தைத் தெரிவித்து அனடோலியாவிற்கு அனுப்பி வைத்தார் ஸெங்கி. அவர்கள் டானிஷ்மெண்த் தலைவர்களைச் சந்தித்துப் பேசினர். ஸெங்கியின் திட்டத்தைத் தெரிவித்தனர். அதன்படி டானிஷ்மெண்த் படை அங்கிருந்த பைஸாந்தியப் பகுதிகளின் மீது கடும் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது. அத்தகவல் ஷைஸரில் இருந்த பைஸாந்தியப் படைகளுக்கு வந்து சேர்ந்து, அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

அடுத்து, சிரியாவிலும் ஜஸீராவிலும் உள்ள அமீர்களுக்கு, இந்தப் புதிய ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து விரட்டி அடிக்க ஒன்று திரண்டு வர வேண்டும் என்று கடிதம் எழுதி அனுப்பினார் ஸெங்கி. நம்பிக்கைக்கு உரிய சிரியாவின் கிறிஸ்தவர்கள் உளவாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டது. அவர்கள் எதிரிப் படையினருடன் கலந்து, பாரசீகத்திலிருந்தும் இராக்கிலிருந்தும் அனடோலியாவிலிருந்தும் ஸெங்கிக்கு மாபெரும் எண்ணிக்கையில் உதவிப் படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று செய்தியைப் பரப்பத் தொடங்கினர். கிரேக்கப் படையினர் மனத்தில் அது தம் பங்கிற்குக் கலக்கத்தை உருவாக்கியது.

இவற்றை அடுத்து, ஸெங்கி மேற்கொண்ட திட்டங்கள்தாம் மேலும் சிறப்பு. எதிரிப் படையினரிடம் தம் தூதர்கள் சிலரை அனுப்பி, “மலையை அரணாக அமைத்துக்கொண்டு பாதுகாப்பாக அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களுக்குத் துணிவு இருந்தால் நேரடியாகக் களத்தில் இறங்குங்கள். போரிடுவோம். நீங்கள் வென்றால் ஷைஸரும் மற்ற நகரங்களும் உங்களுக்கு. நான் வென்றால், உங்களுடைய தீமைகளிலிருந்து முஸ்லிம்களை விடுவித்தப் பெருமை எனக்கு” என்று தூண்ட, கொதித்தனர் அவர்கள். “ஷைஸர் இருக்கட்டும். முதலில் இந்த ஸெங்கியை உண்டு இல்லை என்று ஆக்குவோம்” என்று அவர்கள் சக்கரவர்த்தியிடம் சென்று குதிக்க, கை அமர்த்தினார் அவர்.

“நம் எதிரே தென்படும் இந்தச் சொற்பப் படைதான் ஸெங்கியினுடையது என்று நினைக்கின்றீர்களா? நமக்குத் தூண்டில் போட்டு இழுக்கிறார் அவர். நாம் அவரை வெல்வதற்குள் அவருடைய உதவிப் படைகள் பல தரப்பிலிருந்தும் வந்து நம்மைச் சூழ்ந்து விடும். பொறுமையுடன் இருங்கள்” என்றார் சக்கரவர்த்தி.




சக்ரவர்த்திக்கு நேரடியாகவும் ஸெங்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. “பரங்கியர் உங்களுடன் மனம் ஒப்பி இணைந்திருப்பதாகவா நினைக்கின்றீர்கள்? உங்களுக்கு அஞ்சியுள்ளனர். நீங்கள் எப்பொழுது சிரியாவை விட்டுச் செல்வீர்கள் என்று பொறுமையின்றிக் காத்திருக்கின்றனர். மற்றபடி அவர்கள் உங்களுக்குப் பூரண ஒத்துழைப்பு எதுவும் அளிக்கப் போவதில்லை” என்றது அம்மடல். அது ஓரளவு உண்மையுங்கூட. வேண்டா வெறுப்புடன்தானே பரங்கியர் சக்கரவர்த்தியுடன் கிளம்பி வந்திருந்தனர்?

பரங்கியர்களின் படைத் தலைவர்கள் ஜோஸ்லினுக்கும் ரேமாண்டுக்கும் ஒரு கடிதம் வந்தது. ‘ரோமர்கள் சிரியாவில் இந்த ஒரு கோட்டையைக் கைப்பற்றிவிட்டு, உங்களை உங்கள் பகுதிகளில் அப்படியே விட்டுவிடுவர் என்றா நினைக்கின்றீர்கள்? அடுத்து உங்களுடைய அத்தனை நகரங்களையும் விரைந்து கைப்பற்றிவிடுவர் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?’ என்று அது எச்சரிக்க, அத்திட்டம் வெகு சிறப்பாக வேலை செய்தது.


சக்கரவர்த்தி ஜான் காம்னெஸ் தமது தங்க கிரீடத்தை அணிந்துகொண்டு, களத்தில் நேரடியாக இறங்கி முஸ்லிம் நகரின்மீது கவண் வீசக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருக்க, ஜோஸ்லினும் ரேமாண்டும் தங்களது கூடாரங்களில் சாய்ந்து அமர்ந்து, பகடை விளையாட ஆரம்பித்து விட்டனர். இதனிடையே தம்மிடம் சிக்கும் எதிரிப் படையினரையும் ஸெங்கியின் படை கொன்று போட்டபடி இருந்தது.

இவை யாவற்றாலும் கிரேக்கப் படையினர் மனத்தாலும் உடலாலும் சோர்ந்து போயினர். இறுதியில் இருபத்து நான்கு நாள் முற்றுகைக்குப் பிறகு, போர் ஆயுதங்களையும் மற்றவற்றையும் போட்டது போட்டபடி வெளியேற ஆரம்பித்தார்கள். கணக்கிட இயலாத அளவு போர்ச் செல்வம் முஸ்லிம்கள் வசமானது.

இவ்வாறாக, பைஸாந்திய சக்கரவர்த்தியின் அலெப்போ, ஷைஸர் படையெடுப்புகள் முழுத் தோல்வியில் முடிந்து, பெருவெற்றி அடைந்தார் இமாதுத்தீன் ஸெங்கி. பைஸாந்தியர்-பரங்கியர் கூட்டணியினால் பேரச்சம் கொண்டிருந்த அரபுலகம் இமாதுத்தீன் ஸெங்கி சாதித்துக் காட்டிய வெற்றியால் மகிழ்ந்து, அவரை வியந்து பார்க்க ஆரம்பித்தது! அவர்களுக்கு எதிரான சரியான தலைவர் இவரே என்று தங்களின் பாதுகாவலராக அவரைக் கருதியது. இமாதுத்தீன் ஸெங்கியின் புகழ் பரவியது.

அதன்பின் கி.பி. 1142ஆம் ஆண்டு கிரேக்கம் திரும்பிவிட்டார் ஜான். தம் மகன் மேனுவலின் நேரடி ஆட்சியின்கீழ் அந்தாக்கியாவில் பைஸாந்திய அரசை நிறுவ அவருக்கு ஒரு திட்டமிருந்தது. ஆனால் 1143ஆம் ஆண்டு வேட்டையின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் சக்கரவர்த்தி ஜான் மரணமடைந்தார். அந்தத் திடீர் நிகழ்வும் இழப்பும் பைஸாந்தியர்களின் படையெடுப்புத் திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டன.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.