Tamil Islamic Media ::: PRINT
சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்

 சோ. சாந்தலிங்கம்

நிகழ்காலச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முந்தைய வரலாறு பல நேரங்களில் நமக்குப் பயன்படக்கூடும். இன்றைய இந்தியாவில் இந்து இஸ்லாம் மக்களிடையே நல்லிணக்கமும், நேசமும் வலுப்பெற வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. இவ்விரு பிரிவினரும் எப்போதுமே மோதிக்கொண்டவர்களாக இல்லை. மாறாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இரு திறத்தாரின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து வாழ்ந்தனர் என்பதற்குக் குறிப்பாகத் தமிழகத்தில் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பல கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இந்துக்கள் இஸ்லாமியப் பள்ளிவாசல்களுக்கும், இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களுக்கும் இயன்றவரை கொடைகள் அளித்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. கோயில் கொடைகளைத் தவிர சமூக வாழ்விலும் சமூக உறவுக நிலைத்திருந்தது என்பதைக் காண்கிறோம். இவற்றிற்கான ஒரு சில சான்றுகளை மட்டும் ஆராய்வதே இக்கட்டுரை.

இந்து கோயில்களுக்கு இஸ்லாமியரின் கொடைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கொடநாட்டுக் கருப்பூர் கோயிலுக்கு இஸ்லாமியர் நிலங்களைக் கொடையாக அளித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற தலமான உத்திரக்கோசமங்கை கோயிலில் உலோகத்தாலான திருவாசி ஒன்றை இஸ்லாமியப் பெருமக்கள் செய்து அளித்துள்ளனர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமா மஹேஸ்வரர் திருமேனியை அன்வருதீன்கான் என்னும் இஸ்லாமியர் செய்தளித்துள்ளார். திருச்சி மாவட்டம் இலுப்பூர் பெருமாள் கோயிலில் கொடிக்கம்பத்தை அளித்தவர் சையத் அலிகான் என்னும் இஸ்லாமியர் என்பதை அறிகிறோம். மதுரை நாயக்க மரபில் வந்த மங்கம்மாளும், மீனாட்சி அரசியும் பள்ளிவாசல்களுக்கு காழ்ப்புணர்வு எதுவும் இன்றி கொடைகள் அளித்துள்ளனர். இரண்டாம் தேவராயர் இராமராயர் போன்ற விஜயநகர வேந்தர்கள் இஸ்லாமியப் போர் வீரர்களும், தலைவர்களும் தம்மை வணங்க வரும்போது தமக்கு முன்பாகத் திருக்குர்ஆனை வைத்திருக்குமாறு கட்டளை பிறப்பித்தனர் என அறிகிறோம். இஸ்லாம் மதத்தவர் தன்னை வணங்காது தம் மார்க்க நூலை வணங்கியதற்காக மனநிறைவைப் பெற வேண்டும் என்று கருதிய மன்னரின் தூய உள்ளமும் மாற்று மதத்தவர்பால் அவர்களின் நம்பிக்கையின் பால் அவர் காட்டிய அக்கறையும் புலப்படும்.

பைம்பொழில் செப்பேடு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டத்தில் பைம்பொழில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள திருமலை இராமசுவாமி கோயிலில் மூன்று செப்பேடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இஸ்லாமியப் பெருமக்கள் குற்றால நாதர் கோயிலுக்கும் தேல்லை காந்திமதியம்மன் கோயிலுக்கும் வழங்கிய கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இச்செப்பேடு கி.பி.1788ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

''.... குற்றாலநாத சுவாமி கட்டளைக்கு அசரத்துவாலாசாயுபு, அகமது பேட்டை மணியம் இஸ்மாயில் இராவுத்தர் முதலான பலரும் பட்டயம் எழுதிக்குடுத்தபடி பட்டயமாவது சுவாமிக்கு நித்தியல் விழா பூசைக்குக் கட்டளை வைத்து நடத்தி வரும்படி படித்தரப்படிக்கு நடத்தி வரும் வகைக்கு நாங்கள் எல்லோரும் வகைவைத்துக் கொடுத்து ஏறு சாற்று இறங்கு சாற்று, வாகைச்சை ஒன்றுக்கு மறுவுருட சட்டை ஒன்றுக்கு மாகாணிப்பண வீதமும் இன்னொன்றுக்கு அரைமாகாணி வீதமும் இந்தப் படிக்கு காந்தியமதியம்மன் சிறுகால மகமைசந்தி மகமைப்படிக்கு தென்காசி அகமது பேட்டையிலுள்ள வணிதசேகா செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைசந்தை முதலான துறையிலும் மகமை வைத்துக் கொடுத்த படியினாலே மாசம் மாசம் உள்ள பணம் துறை வாரியம் கணக்குப் பாத்து வாங்கிக் கொண்டு சுவாமிக்குக் கட்டளை என்றென்றைக்கும் நடத்திவர மோகவும்....''

இசுலாமியர் கொடுத்த கொடையைப் பட்டயமாக எழுதியவர் மாடன் செட்டியார் தானாதிபதி அம்மைநாதன் என்பவர் செப்பேட்டில் எழுதியவர் சுடலை முத்துப்பிள்ளை. இதற்குச் சாட்சி சந்திரகுமாரு பிள்ளை. செப்பேடு 'திரிகடாசலபதி சகாயம்' என்னும் தொடருடன் முடிகிறது. இச்செப்பேட்டின் மூலம் இந்துக் கோவில்களுக்கு இஸ்லாமியர் மனமுவந்து அளித்த கொடையை அறிவதோடு பல பிரிவினரும் சுமுகமாகக் கூடிவாழ்ந்த தன்மையையும் அறிகிறோம்.

ஓலைச்சுவடி கூறும் உண்மை

மதுரை நகருக்கும் அருகில் இருக்கும் சிற்றூர் களிமங்கலம் என்பது நெடுங்காலமாக இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் இது, இன்றும் இவர்கள் வேளாண் தொழிலில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். சுமார் இருநூறு ஆண்டுகட்கு முன்பும் இவர்கள் வேளாண் தொழில் செய்பவர்களாகவே இருந்தனர். இவர்கள் தம் ஊரைச்சுற்றிலும் உள்ள சிற்றூர்களில் வாழும் இந்துக்களான வேளாண்குடிகளுடன் சுமுகமாகக் கூடி வாழ்ந்தனர் என்பதற்கு இங்குக் கிடைக்கும் ஓலைச்சுவடிகள் சான்றாக அமைகின்றன.

1. விகாரிரு மாசி மிச எஉ திருமோகூர் காளமேகப் பெருமாள் சன்னதியில் கூடின சாயத்தார் மதுரைச் žற்மையில் பளங்காநந்த்து மகா சணம் அண்ணாசாமிய்யன் சொக்கலிங்கய்யன் பிள்ளையார் பாளையம் வேங்கட...

2. சிந்தாமணி சோமாசி அய்யன் திருப்பூவனம் žமையில் திருப்பூவணம் குப்பா சாஷ்த்திரியாற் மணலூற் அனந்தய்யங்கார் கொந்தகை தெய்வசிகாமணி அய்யங்கார் சொட்ட தட்டி வீரு தாகு அய்யன் திருமோகூர் தலத்தார் சடகோப பட்டர் உள்ளிட்ட....

3. சுப்பிரமணியப்பட்டர் கற்ப்பூறப்பட்டர் அனுபாநடி சுப்பிரமணியக் கவுண்டர் வண்டியூர் சாமி கவுண்டர் சங்குப் பிள்ளைப் பறவைச் சங்கவியா பிள்ளை பனையூற் சோளைக் கவுண்டர் சின்ன கண்ணியாபிள்ளை அங்காடி மங்கலம் சிவா லிங்கபிள்ளை கீழடி ராக்கப்ப கவுண்டர்ப்பள்ள...

4. ராவுத்தன் கொந்தகை மாமன் ராவுத்தன் கோளிக்குழப்பிக் கோணர் முப்பாயி திருவாதவூர் கருப்பண சேறுவைகாரன் ராக்கப்பன் சேருவைகாறன் பொய்ப்பலை யூற் சங்கிலிக் கோண் விழத்தூற் சங்க கோன் ஆண்பி கோயம்பிள்ளை...

5. யுற் வாவா ராவுத்தன் சிட்டம்பட்டி வெள்ளையன் பூலாம்பட்டி பரமசாமி முத்துப்பட்டி மீராசாயுபு திருமோகூர்ப் பேட்டைப் பலர் கூடின பஞ்சாயத்தாரும் க.கழிமங்கலத்தாருக்கு தீருவைப்பட்டையம் எழுதிக் குடுத்தபடி திருவப்பட்டயமாவது தாங்கணும்.

6. காணியாச்சி விபகாறமாய் எங்கள்கிட்ட வந்து கறை ஏறினிதில் இருவர் வாய் மொழியும் கேட்டு தொன்னூரு வருசத்துச் சாதகமு பாத்து தீத்தது தங்கள் பெரியவர்கள் குன்னத்தூற்றுற் கிட்ட உடபிடிக்கைச் žட்டு வாங்கிக் கொண்டு கிளிமங்கலத்தில் எட்டு செய்.

7. இப்பவும் விட்டுக்கொடுத்து இறைவழி வாங்கிக் கொள்ளவுந்தீத்தா கவுண்டனுக்கு ஒரு செயி உளவடை குடுத்து உள்வறியிறை வாங்கிக் கொள்ளுகிறது களிமங்கலத்தில் முக்கை போட்டு விடுகிறது நாட்டு கணக்கு உம்பலம் கன்னியாபிள்ளை...

8. சாமி அய்யனுக்கு பட்டவிருத்தி ஒரு செய்யும் விட்டு விடுகிறது. குளங்கால் வெட்டுச் சிலவு/குள்ளத்தூறாற் 3 பங்கும் களிமங்கலத்தார் ஒரு பங்குமாகப் போடுகிறது குன்னத்தூருக்கும் கழிமங்கலத்துக்கும் முன்திநட...

9. அரைவரனுபவித்துக் கொள்வாறாகவும் இந்த படிக்குக் கழிமங்கல நாட்டான்மை அதியாறி காதியாராவுத்தன் ஏமாந்தையன் மகன் வீரனன்ம்பலகாரன் சொக்க குடும்பன் உள்ளிட்டோர் குடியானறோர் இதுவே தீருவைப்பட்டைய...

10. இச் சம்மதியில் இந்த தீருவைப்பட்டையம் எழுதினது திருமோகூர் கோவில் கணக்கு காளமேகப் பிரியர் தெய்வ சிகாமணி எழுத்து.

இவ்வோலைச்சுவடியின் மூலம் களிமங்கலம் கிரமத்தின் நாட்டாண்மை அதிகாரியாக 'காதிய ராவுத்தர்' என்னும் முஸ்லிம் பணியாற்றியுள்ளார் என்பது புலப்படும். இத்தீருவைப்பட்டயத்தை எழுதுவதில் அந்தணர் கவுண்டர், பிள்ளைமார், அம்பலக்காரர், முஸ்லிம் ஆகியோர் பணிமாற்றியுள்ளனர் என்பதன் மூலம் சமய வேறுபாடுகள் எதுவும் இல்லாத நிலை தெளிவாகும். எப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கும் பல சமூகப் பெருமக்களும் கலந்து பேசி தீர்வு காணப்பட்டது என்பதற்கு மேலே காட்டப்பட்ட ஓலைச்சுவடி ஒரு சிறு சான்றாகும்.

மதமல்ல மனிதாபிமானமே

தஞ்சாவூரில் கிடைத்த செப்பேடு ஒன்று இந்து முஸ்லிம் மக்களிடையே மதம் சுவர் எழுப்பி விடாமல் மனிதாபி மானத்தையே கற்றுக் கொடுத்தது என்பதைக் காட்டுகின்றது. இச்செப்பேடு கி.பி.16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் ஒரு நாள் தஞ்சாவூர் நகரிலிருந்து வல்லத்திற்கு பக்கிரிசாயுபு என்னும் இஸ்லாமிய அன்பர் கால்நடையாகச் செல்கிறார். வல்லத்திலிருந்து பிராமணப் பெண் ஒருத்தி தஞ்சை நகருக்கு நடந்து வருகிறாள். இடையிலே கள்வர் சிலர் இடைமறித்து அப்பெண்ணைத் துன்புறுத்துகின்றனர். அவள் உதவி நாடி பக்கிரி சாயுபுவின் காலிலே விழுந்து கதறினாள். அவளுக்கு ஆதரவாகப் பேசிய சாயுபுவைக் கள்வர்கள் கொன்று விட்டனர். தனக்கு உதவி செய்யத் துணிந்த சாயுபு கொலை செய்யப்பட்டாரே என வருந்தித் தானும் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு இறந்தாள் அந்தப் பிராமணப் பெண். இதனால் கள்வர்களுக்குக் கண்பார்வை போய்விட்டது. அவர்கள் தம் தவற்றை உணர்ந்து இவ்விருவர்க்கும் கோயில்கட்டி வழிபட்டனர் என்று செப்பேடு கூறுகிறது.

''........தஞ்சாவூரு விருந்து வல்லத்துக்கு பக்கிரிசாயுபு கச்சே ஒரு பிராமணத்தியம்மாள் வல்லத்திலிருந்து தஞ்சாவூர்க்குப் போனாள் அப்போ கள்வர் வந்து பிராமணத்திலே பரிக்க வந்தா அப்போ ஓடிவந்து பக்கிரிசாயுபு காலுலே விழுந்தாள் பக்கிரிசாயபு இரந்து கொண்டு யிந்த பிராமணத்தி உங்களுக்கு தெய்வம் மாதிரி அவளே தொடவேண்டாமென்று சொன்னார் சொன்னவிடத்தில் பக்கிரி சாயுபுவை குத்தினார்கள் அந்த பிராமணத்தி எனக்கோசர அல்லோ பக்கிரி சாயுபு பெகுத்திப் போட்டார்கள் யென்று அவள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போனாள் கள்ளருக்கு யெல்லாம் கண்ணு தெரியாமல் போச்சுது....''

என்று அச்செப்பேடு தொடர்கிறது. இதன் மூலம் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்து இஸ்லாம் மக்கள் மத வேறுபாடுகளை மனங்கொள்ளாது மனிதாபிமானமே பெரிது என்ற கொள்கையோடு வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு அறிமுகமே இல்லாத நிலையிலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று துணிந்து செயல்பட்டு உயிர் துறந்த அந்த மாமனிதன் மறக்கத்தக்கவன்னல்லன்.

மேற்கூறிய சரித்திரச் சான்றுகள் வெறும் கதைவடிவங்கள் அல்ல. அவற்றிலிருந்து இன்று நாம் படிப்பினை பெற வேண்டிய நிலையிலிருக்கிறோம். நெடுங்காலமாக நேசபாவத்தோடு வாழ்ந்திருந்த இரு பெரும் சமயத்தவரும் நிச்சயமற்ற அரசியல் சமுதாயங்களுக்காக மோதிக் கொள்வது அவசியமற்றது. பண்டைய வரலாற்றைப் படிப்போம். புதிய வரலாற்றைப் படைப்போம்.

துணை நின்றவை

1.இந்து இஸ்லாமியர் ஒற்றுமை - எம்.எஸ்.ஆயிஷா பேசும். தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு. வரலாற்றுப் பேரவை 1979.

2. இஸ்லாமியத் தமிழ்க் கல்வெட்டுக்கள் ஒரு கண்ணோட்டம் புலவர்.செ.இராசு இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் கருத்தரங்கம். இளையான்குடி 1980.

3. ஒரு செப்பேட்டின் கதை. சொ. சந்திரவாணன் தமிழக வரலாற்றுப் பேரவை. 1983.

4. களிமங்கலம் ஓலைச்சுவடிகள் - சேகரிப்பு, திரு சு. இராசகோபால், தொல்பொருள் ஆய்வுத்துறை, மதுரை, தமிழ்நாடு அரசு.
 

 
http://www.intamm.com/history/sarithira.htm

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.