Tamil Islamic Media ::: PRINT
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி

சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்! இத்தனை ஆண்டுகளாய் பொஹிமாண்ட், டான்க்ரெட், ரோஜர் என்று சிலுவைப் படைத் தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவருக்கு அஞ்சி, அலெப்போ அவர்கள் வசமாகி விடுமோ, உயிர் பிழைப்போமோ, அல்லது அகதியாகி விடுவோமோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கிடந்த அம்மக்களுக்கு, வெற்றி — அதுவும் தலைவர் ரோஜரும் படையினர் அனைவரும் கொல்லப்பட்ட மாபெரும் வெற்றி — என்ற செய்தி வந்து சேர்ந்ததும் திக்குமுக்காடிப் போனார்கள். அலெப்போ பெருநாள் கோலம் பூண்டது.

இக்கொண்டாட்டம் முடிவதற்குள் நாம் சற்றுப் பின்னோக்கிச் சென்று மற்றொருவரை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்துவிடுவோம். சர்மதா போர் தொடங்குவதற்கு முன் முஸ்லிம் படையினர் மத்தியில் அலெப்பொவின் காழீ ஒருவர் வீராவேச உரை ஒன்றை நிகழ்த்தியதைக் கவனித்தோம். பரங்கியர்கள் வந்து புகுந்த நாளாய், அவர்களுக்கு எதிராகப் பணியாற்றுவதைத் தமது கடமையாகவே வரித்து, வரிந்து கட்டிக் கொண்டவர் அவர். பெயர் அபூஃபள்லு இப்னில் ஃகஷ்ஷாப். சுருக்கமாக இப்னில் ஃகஷ்ஷாப்.

அவர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். அவர்களது குடும்பத் தொழில் மர வணிகம். அக்குடும்பத்திலிருந்து காழீயாக உருவெடுத்த இப்னில் ஃகஷ்ஷாபுக்கு மக்களின் சொத்துப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை போன்றவற்றைக் கேட்டுத் தீர்ப்பு வழங்குவது, ஆலோசனை வழங்குவது என்பன தொடர் சமூகப் பணி. அதனால், அலெப்போ மக்களிடம் அவர் மீது பெரும் மதிப்பு, மரியாதை. பொதுமக்களின் தலைவராகச் செயல்பட்ட அவரை அலெப்போவின் வணிகர்களும் தங்களின் தலைவராக ஆக்கிக்கொண்டார்கள். மன்னரிடம் அளிக்க வேண்டிய புகார், விண்ணப்பம், கோரிக்கை எதுவாக இருந்தாலும் அவரைத்தான் அரசவைக்கு அனுப்புவார்கள். இவையன்றி அவரது கட்டுப்பாட்டில் ஆயுதப் போராளிகளின் குழுவும் இருந்தது.

இவ்விதம் மக்களுக்குப் பணியாற்றி, சேவை செய்துகொண்டிருந்த அவர், முதலாம் சிலுவைப் போர் தொடங்கி அதன் ஆபத்து கிளைவிடத் தொடங்கியதும் பரபரப்பாகிவிட்டார். பரங்கியர்களை எதிர்க்கத் திராணியின்றி பலவீனமாகக் கிடந்த அலெப்போ மன்னர் ரித்வானின் நிலை, அவரது செயல்பாடுகளை வெகு தீவிரமாக்கிவிட்டது. ரித்வானைச் சந்தித்து நேருக்கு நேராக அவரிடமே ‘பரங்கியர்களுக்கு இணங்கி, அடிமையாகிவிட்டீர்’ என்று குற்றஞ்சாட்டவும் அவர் தயங்கவில்லை. பொஹிமாண்டுக்குப்பின் அலெப்போவின் அதிபராக உருவான டான்க்ரெடுக்கு மன்னர் ரித்வான் அஞ்சி, அடங்கிப்போய் ‘என் ஆட்சியை விட்டு வைத்தால் போதும். நீ இடும் கட்டளைக்கு அடிபணிவேன்’ என்ற அளவிற்கு இறங்கி வந்ததும், டான்க்ரெடின் அகங்காரக் கட்டளை ஒன்று பிறந்தது. டமாஸ்கஸின் பெரிய பள்ளிவாசல் மினாராவில் நெடிய சிலுவையைப் பதிக்க வேண்டும் என்றதும் மறுப்பின்றி அதையும் நிறைவேற்றினார் ரித்வான். அலெப்போவின் முஸ்லிம்களுக்கு அது எப்பேற்பட்ட அவமானம்? மினாராவைப் பார்க்கும் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தலைமையில் அலெப்போவில் பெரும் கலவரம் வெடித்தது. அடக்க முடியாத களேபரம். பின்னர் அச்சிலுவை மினாரவிலிருந்து இறக்கப்பட்டு தேவாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டப் பிறகே அது ஓய்ந்தது.

அடுத்து அலெப்போ தமக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்ட வேண்டும் என்று டான்க்ரெட் கட்டளையிட அதற்கும் ரித்வான் அடிபணிந்திருந்தார் என்பதை நாம் நான்கு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோமல்லவா? அச்செயலால் அலெப்போவின் குடிமக்கள் ஆத்திரத்தில் துடித்தார்கள். எங்கிருந்தோ கிளம்பிவந்து, நமது நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டு, நம்மையே அடிமைகள்போல் கப்பம் கட்ட வைக்கிறார்களே என்று கொதித்துக் கொண்டிருந்தார்கள். இம்முறையும் ரித்வானை அவரது கோட்டையில் சென்று சந்தித்தார் இப்னில் ஃகஷ்ஷாப்.

“முஸ்லிம்களின் நிலங்களைப் பரங்கியர்கள் அபகரித்து விட்டார்கள். அத்தோடின்றி நம்மை அவர்களுக்குக் கப்பம் கட்ட வைத்துவிட்டார்கள். அலெப்போவுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பாதை இப்பொழுது அவர்களது கட்டுப்பாட்டில். அதனால் நம்முடைய வர்த்தகர்களுக்கு அநியாயமாக அவர்கள் வரி விதித்து அதையும் நாம் செலுத்துகிறோம். முஸ்லிம்களின் வணிகம் முடங்கிப் போய்விட்டது. அலெப்போ நகரமோ தம்மைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்குக்கூட வலுவின்றி பலவீனமடைந்து விட்டது” என்று பொரிந்துத் தள்ளி தமது ஆலோசனையைத் தெரிவித்தார்.

“அதனால், மார்க்க அறிஞர்கள், வணிகர்கள், சமூகத்தின் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்து, நான் அவர்களுடன் பாக்தாதுக்குத் தூது செல்கிறேன். நாங்கள் சுல்தான் முஹம்மதிடம் முறையிடுவோம். அவராவது உதவிப் படையை அனுப்பி நம்மை இந்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்று தீர்மானமாகப் பேசினார்.

அப்பாஸிய கலீஃபாவுடனும் இராக்கில் இருக்கும் செல்ஜுக் சுல்தானுடனும் ஒவ்வாமை கொண்டிருந்த ரித்வான் அதைக் கேட்டு மகிழ்ச்சியுற்று விடுவாரா என்ன? அதில் அவருக்கு ஒரு சிறிதும் விருப்பமில்லை. என்ற போதிலும், ‘அங்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்சினையில் இவர்களது பேச்சைக் கேட்டு அவர்கள் கிளம்பி வரப் போவதில்லை; அப்படியே வந்தால் பார்த்துக் கொள்வோம்; கொதிக்கும் உள்ளூர் உலையை இப்படி ஒரு மூடி அடக்குமாயின் அதுவும் சாதகம்தானே’ என்ற எண்ணத்தில் அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இல்லையெனில் தம் ஊரில் இவர்களது கலகம் வெடித்து, அது அடக்க முடியாமல் போய்விடும் என்ற அச்சமும் கவலையும் அவருக்கு இருந்தன.

அதையடுத்து காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தலைமையில் பெரும் குழுவொன்று பாக்தாத் சென்றது. கி.பி. 1111, பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது பள்ளிவாசலில் புகுந்து, ‘முஸ்லிம்களே, பரங்கியர்களால் அங்கு நமக்கு நிகழும் தீங்கையும் ஏற்பட்டுவிட்ட அவலத்தையும் நினைத்து துக்கப்படுங்கள். ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். பெண்களும் பிள்ளைகளும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்’ என்று பெரும் கூக்குரல் இட்டுக் களேபரப்படுத்திவிட்டார்கள். அங்கிருந்த சுல்தானின் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினாலும் அதில் அவர்களுக்குப் பெரிதும் திருப்தி ஏற்படவில்லை. பாக்தாத் தரப்பில் பெரிதாய் ஏதும் உடனே நிகழப்போவதில்லை என்பதும் அவர்களுக்குப் புரிந்தது. அதனால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை அப்பாஸிய கலீஃபா தொழும் பள்ளிவாசலுக்குள்ளேயே நுழைந்து, அவர்கள் போட்ட இரைச்சலும் பரங்கியர்கள் நிகழ்த்தும் கொடுமைகளை உணர்ச்சி பொங்க விவரித்து அங்கலாய்த்ததும் பாக்தாத் மக்கள் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. சுல்தான் முஹம்மதுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. பரங்கியர்களின் அட்டகாசம், அயோக்கியத்தனம், அக்கிரமம் உறைத்தது. அதையடுத்துத்தான் அவர் தம் தளபதி மவ்தூத் அத்-தூந்தகீனை அலெப்போ விவகாரத்தைக் கவனிக்கும்படி பிறப்பித்த உத்தரவு நிகழ்ந்தது.

பாக்தாதிலிருந்து பெரிதாய் ஏதும் உதவி வந்துவிடப் போவதில்லை என்ற நம்பிக்கையில் அசட்டையாக இருந்த ரித்வான், மவ்தூதின் தலைமையிலான படை வரப்போகிறது என்று தெரியவந்ததும்தான் சுதாரித்தார். தமது சுயரூபத்தை வெளிப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். மவ்தூதின் முகத்தில் அறைவதுபோல் அலெப்போவின் வாயில்களை இழுத்தறைந்து மூடினார். காழீ இப்னில் ஃகஷ்ஷாபும் அவருடைய ஆதரவாளர்களும் சிறை வைக்கப்பட்டனர்.

ஹி. 507/கி.பி. 1113 நவம்பர். ரித்வானின் உடல்நலம் மோசமடைந்து இறுதிக் கட்டத்தை அடைந்தது. இப்னில் ஃகஷ்ஷாபுக்கு அச்செய்தி தெரிய வந்தது. தாமதிக்காமல் உடனே அவர் தம் ஆதரவாளர்களைத் திரட்டி அடுத்த நடவடிக்கைக்கு தயாரானார். டிசம்பர் 10ஆம் நாள் ரித்வான் மரணமடைந்தார். காழீயின் தலைமையிலான குழு கிடுகிடுவென காரியத்தில் இறங்கி நகரின் முக்கியப் பகுதிகளையும் கட்டடங்களையும் கைப்பற்றியது. ரித்வானின் ஆதரவாளர்கள், முக்கியமாக அவரது அனுசரனையுடன் வளர்ந்து வந்த அஸாஸியர்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டுக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்.

இப்போரட்டத்தை முன்னின்று நடத்திய காழீ இப்னுல் ஃகஷ்ஷாபுக்குத் தாம் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. அலெப்போவிற்கு உருப்படியான தலைமை அமைய வேண்டும்; அத்தலைமைக்கு உதவியாகத் தாம் களையெடுப்பில் உதவ வேண்டும் என்றுதான் நினைத்தார். ரித்வானையடுத்துப் பதிவியேற்ற அவரின் ஊமை மகன் அல்ப் அர்ஸலானுக்கு அப்போது வயது பதினாறு. அவருக்கும் இப்னில் ஃகஷ்ஷாபின் போராட்டமும் நடவடிக்கையும் பிடித்திருந்தன; சற்றுக் கூடுதலாகப் பிடித்திருந்தன. எனவே, ரித்வானுடன் யாரெல்லாம் நட்புப் பூண்டிருந்தார்களோ அவர்கள் அனைவரையுமே கைது செய்து தலைகளை அல்ப் அர்ஸலான் கொய்யத் தொடங்கியதும் காழீ திகைத்துப் போனார்!

‘இளம் மன்னா! இவ்விதம் அனைவரையும் முண்டங்களாக்கி நகரைக் குருதியால் குளிப்பாட்ட வேண்டாம். துரோகிகளை மட்டும் களையெடுத்தால் போதும்’ என்று எச்சரிக்க, அல்ப் அர்ஸலான் அதை வாய் மூடிக் கேட்டுவிட்டு, இரு காதுகளாலும் அப்படியே வெளியே விட்டுவிட்டார். தம்முடைய இரண்டு சகோதரர்கள், பல அதிகாரிகள், சில பணியாளர்கள் என்று தொடர்ந்தது பலிப் பட்டியலின் எண்ணிக்கை. நகர மக்கள் தங்களைச் சூழ்ந்துவிட்ட புதிய ஆபத்தை உணர்ந்து, தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள். அல்ப் அர்ஸலானை யாரும் நெருங்கவே அச்சப்பட்டார்கள். ஒரே ஒருவருக்கு மட்டும்தான் அவரை நெருங்கும் அளவிற்குச் சலுகையோ துணிவோ இருந்தது. அவருடைய சேவகர். பெயர் லுலு. அவர் ஓர் அலி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கும்கூட அச்சம் ஏற்பட்டுத் தம் உயிர் தமக்கு உத்தரவாதம் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

கி.பி. 1114ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், ஓர் இரவு. உறங்கிக்கொண்டிருந்த அல்ப் அர்ஸலானக் கொன்று நிரந்தர உறக்கத்தில் ஆழ்த்தினார் லுலு. கொன்ற கையுடன் ரித்வானின் மற்றொரு மகனான ஆறு வயதுச் சிறுவனை அரியணையில் அமர்த்திவிட்டு, அவர் ராஜா, நான் மந்திரி என்று அறிவித்துவிட்டு, ஆட்சியைத் தம் வசம் எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து அலெப்போவில் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்தது. மக்கள் ஆளுக்கோர் ஆயுதம் ஏந்தித் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் நிலை.

கி.பி. 1116ஆம் ஆண்டு, அந்தாக்கியாவின் புதிய அதிபராக உருவாகியிருந்த ரோஜர், அலெப்போவின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அதைச் சுற்றி அமைந்திருந்த முக்கியக் கோட்டைகளையெல்லாம் கைப்பற்றி, அதன் பாதைகள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார். பாதை தமதானதும் அவர் அடுத்துச் செய்த காரியம், மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு விதித்த சாலை வரி.

அலெப்போவில் இருந்த போராளிகள் குழு இந்த அனைத்து இழுக்கிற்கும் ஒரு முடிவு கட்டத் திட்டமிட்டது. அதன்படி, படை வீரர்கள் முதலில் லுலுவைக் கொன்றனர். அதையடுத்து அரசவையின் மற்றோர் அடிமையிடம் அதிகாரம் சென்றது. அவரோ நிலைமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல், ரோஜரிடம் நகரை ஒப்படைத்துவிட்டு அவருடன் இணங்கிப் போகலாம் என்று முடிவு கட்டிவிட்டார். ரோஜர் அலெப்போவை முற்றுகையிடத் தயாராக, அதற்கிடையே அலெப்போவின் படை அதிகாரிகள் நகரின் படையரண் கட்டுப்பாட்டிற்காகத் தங்களுக்கிடையே சண்டையிட்டுக்கொள்ள, இந்த அத்தனைக் களேபரத்தையும் பார்த்த காழீ இப்னில் ஃகஷ்ஷாப் உறுதியான மற்றொரு தலைமையின்கீழ் அலெப்போ சென்றடைந்தால்தான் உண்டு என்று எண்ணினார். அதற்கு இல்காஸியே சரியானவர் என்று தேர்வு செய்தார். தாமே அலெப்போவின் வாயிலைத் திறந்து அவரை வரவேற்றார். அதையடுத்துத் தொடர்ந்த இல்காஸியின் செயல்பாடுகளின் உச்சம்தான் சர்மதா போரின் வெற்றி.

மாலைத் தொழுகை நேரத்தில் சர்மதாவில் இருந்து திரும்பி வந்து சேர்ந்தது முஸ்லிம்களின் படை. கொண்டாட்டம் உச்சத்தை எட்டியது. இவ்வெற்றியைத் தொடர்ந்து இல்காஸி பரங்கியர்கள் மீது எப்படிப் பாய்ந்திருப்பார்? அந்தத் திருப்பங்கள் தொடரும்.

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 3
6
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 3
8

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.