ஜெகெர்மிஷும் சுக்மானும் ஒன்றிணைந்து போரிட்டு, பிறகு பிணக்கு ஏற்பட்டுத் தத்தம் வழியே பிரிந்து விட்டாலும் அவர்கள் பாலிக் போரில் ஈட்டிய வெற்றி முஸ்லிம்களுக்குப் பெரியதொரு நன்மையை விளைவித்திருந்தது. கிழக்கே மேற்கொண்டு ஊடுருவி, முஸ்லிம்களின் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்த நினைத்த சிலுவைப் படையினரின் பெருங் கனவை, முஸ்லிம்களின் வெற்றி கலைத்துப் போட்டிருந்தது.
முஸ்லிம்களுக்கோ இந்த வெற்றி பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி, சிலுவைப் படையினரை மேற்கொண்டு எதிர்க்கும் எண்ணத்தை வலுப்படுத்தியது. ஆனால், தாங்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கியதால்தான் அது சாத்தியமானது என்ற அடிப்படை சூத்திரத்தை மட்டும் அவர்கள் உணர மறுத்தார்கள்; அல்லது தன்னகங்காரம் அவர்களை இணையவிடாமல் தடுத்துவிட்டது.
சிலுவைப் படைத் தரப்பிலோ தோல்வியிலும் ஓர் இலாபமாக டான்க்ரெட்டுக்குத்தான் மற்றொரு வாய்ப்பு அமைந்தது. பொஹிமாண்ட் விடுதலை அடைந்து வந்த பின், தம் வசம் இருந்த அந்தாக்கியாவின் ஆட்சிப் பொறுப்பு முடிவுற்றதும் தமக்கென நிலம், அதில் தம்முடைய ஆட்சி இல்லாத குறை அவருக்கு இருந்தது. முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்ட பால்ட்வின் IIஐ மீட்க அருமையான வாய்ப்பு அமைந்தபோதும் பொஹிமாண்டுடன் சேர்ந்து பணத்தை வாங்கி முகர்ந்து விட்டு, பால்ட்வினை மீட்டெடுக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, எடிஸ்ஸாவைத் தம் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் டான்க்ரெட்.
பாலிக் யுத்ததிற்குப் பின் ஜெகெர்மிஷுக்குச் சில பின்னடைவுகள் ஏற்பட்டன என்று பார்த்தோம். ஆயினும் அவர் சிலுவைப் படையினருக்கு எதிரான தமது போராட்டத்திலும் போரிலும் ஆர்வமாகத்தான் இருந்தார். அதற்கேற்ப ஹி. 499 / கி.பி. 1106ஆம் ஆண்டு, அவர்களை எதிர்த்துப் படையெடுப்பு ஒன்றை நிகழ்த்தும்படி சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்ஷாவிடமிருந்து ஜெகெர்மிஷுக்குத் தகவலும் வந்தது. உடனே காரியத்தில் இறங்கினார் ஜெகெர்மிஷ்.
பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.
நல்ல விஷயம் இல்லையா? அனைவரும் உடனே கைகோர்த்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால், நடந்தது வேறு. மோஸுலை ஆளும் ஜெகெர்மிஷ் மீது இல்காஸிக்கு ஏற்கெனவே மனக் கசப்பு இருந்து வந்தது. அதனால் அவர் மற்றவர்களிடம், “மோஸுலை ஜெகெர்மிஷிடமிருந்து கைப்பற்றுவோம். அங்குள்ள கஜானாவையும் இராணுவ பலத்தையும் நமதாக்கிக் கொள்வோம். சுல்தான் முஹம்மதுக்கு ஜெகெர்மிஷ் மீது ஒருவித அதிருப்தி உள்ளது. அதனால் மோஸுலை நாம் ஜெகெர்மிஷிடமிருந்து அபகரித்து சுல்தானிடம் ஒப்படைத்தால் அவர் மகிழ்வார்; நமது கூட்டணியை அங்கீகரிப்பார்” என்று பேசி, அவர்கள் மனங்களையும் மாற்றி, தம் திட்டத்திற்கு இணங்க வைத்துவிட்டார். அதனால் அவர்களின் அந்தப் புதிய கூட்டணிப் படை, ஜெகெர்மிஷின் கட்டுப்பாட்டில் இருந்த நுஸைபின் நகரைத் தன் முதல் இலக்காக்கிக் கொண்டு தாக்கியது.
ஆனால், அங்கிருந்த ஜெகெர்மிஷின் ஆதரவாளர் படை அதை மிகத் தந்திரமாக முறியடித்தது. எப்படி? அலெப்போவிலிருந்து வந்திருந்த ரித்வானிடம் நைச்சியமாகப் பேசி அவரை இல்காஸிக்கு எதிராகத் திருப்பிவிட, கட்சி மாறினார் ரித்வான். இரவு விருந்தொன்றின்போது இல்காஸியைக் கடத்தி, அவரைச் சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டார். இல்காஸியின் படையினர் அதைப் பார்த்துவிட்டு அமைதியாகவா இருந்து விடுவார்கள்? கிளம்பிச் சென்று ரித்வானின் படைப் பகுதியில் புகுந்து தாக்கி, இல்காஸியை மீட்டு வந்துவிட்டனர். அவர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத ரித்வான், எனக்கு யாருடைய கூட்டணியும் வேண்டாம் என்று தமது படையினருடன் அலெப்போ திரும்பிவிட்டார். இப்படியாக, சிலுவைப் படையினருக்கு எதிரான ஒருங்கிணைந்த கூட்டணி என்று ஜெகெர்மிஷ் வகுத்த திட்டம், தன் முதல் அடியை எடுத்து வைப்பதற்குள் அவர்களுக்குள் இத்தனை அடிதடி; குத்து வெட்டு; குழி பறிப்பு.
இந்தச் சோதனைகளைக் கண்டு ஜெகெர்மிஷ் துவண்டு விடவில்லை, முஸ்லிம்களின் பொது எதிரியான சிலுவைப் படையை விட்டு அவரது கவனம் விலகிவிடவில்லை என்பது மட்டும்தான் ஆறுதலான விஷயம். ஆனால் அவரது போர்த் திட்டங்களின் ஆயுட் காலம் சுருக்கமாக முடிந்துவிட்டது. அவருக்கான சோதனை மோஸுலில் காத்திருந்தது ஜவாலி என்பவரின் பெயரில். அந்நகரில் இருந்த ஸெல்ஜுக்குகளை ஜெகெர்மிஷுக்கு எதிராக ஜவாலி திருப்பி, அதனால் அவர்கள் அளித்த உபத்திரவமும் அவர்களது விரோத நடவடிக்கையும் அவருக்குப் பெரும் சவாலாக மாறிவிட்டன. அச்சமயம் பார்த்து, வடக்குப் பகுதியில் இருந்து எடிஸ்ஸாவைத் தாக்கக் கிளம்பி வந்தார் கிலிஜ் அர்ஸலான்.
ஹர்ரான் நகரம் சிலுவைப் படையினரிடமிருந்து காப்பாற்றப்பட்ட பின் அங்கு காவலுக்கு இருந்த ஜெகெர்மிஷின் படையினர், கிலிஜ் அர்ஸலானின் வருகையை அறிந்ததும் ‘தயவுசெய்து நீங்கள் இங்கு வாருங்கள். நாங்கள் இந்நகரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்’ என்று தகவல் அனுப்பி விட்டார்கள். ஹர்ரான் நகரம் கிலிஜ் அர்ஸலானின் ஆட்சிக்குள் வந்து சேர்ந்தது. பிறகு சிலநாள் அங்கு தங்கியிருந்தவருக்கு, உடல் சுகவீனம் ஏற்பட்டதும் தமது படையினரிடம் ஹர்ரான் நகரின் காவல் பொறுப்பை அளித்துவிட்டு, தமது ஊருக்குத் திரும்பினார்.
மோஸுலில் ஜெகெர்மிஷுக்கு எதிரான ஸெல்ஜுக்குகள் பிரச்சினை முற்றி, முதிர்ந்தது. இறுதியில் அது ஜெகெர்மிஷின் கொலையில் போய் முடிந்தது. அதற்குக் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தவர்தாம் ஜவாலி. இதைத் தொடர்ந்துதான் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்றார் ஜெகெர்மிஷின் மைந்தர் ஸெங்கி இப்னு ஜெகெர்மிஷ். அவரை 29ஆம் அத்தியாயத்தின் இறுதியில் நாம் பார்த்தோம்.
“விரோதிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். மோஸுலையும் அதன் சுற்று வட்டாரத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்” என்றார் அவர்.
கிலிஜ் அர்ஸலான், சிலுவைப் படையினரை எதிர்த்து டானிஷ்மெண்ட் காஸியுடன் இணைந்து நிகழ்த்திய வெற்றி, அவரது புகழை ஓங்கச் செய்திருந்தது. இதர குறுநில ஆட்சியாளர்கள் அவரது வலிமையை உணர்ந்தனர். ஒருவிதத்தில் அவரது தலைமையின் கீழ் திரளவோ, அவருடன் இணையவோ விரும்பினர். கிலிஜ் அர்ஸலானும் சிலுவைப் படையினருக்கு எதிரான ஒருங்கிணைந்த முஸ்லிம் கூட்டணியை உருவாக்க முனைந்ததாகத்தான் அறிய முடிகிறது. அது தொடர்ந்திருந்தால் வரலாறு மாறியிருக்கக் கூடும். ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. அத்தகு வெற்றியை சுல்தான் ஸலாஹுத்தீனுக்காக அவன் சித்தப்படுத்தியிருந்ததால் கிலிஜ் அர்ஸலானின் விதி வேறு விதமாக முடிந்தது.
தாமாக வந்து சேர்ந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தாமதிக்காமல் உடனே மோஸுலுக்கு அணிவகுத்தார் கிலிஜ் அர்ஸலான். ஜெகெர்மிஷைக் கொன்றுவிட்டு மோஸுலைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஜவாலிக்கு கிலிஜ் அர்ஸலான் படையுடன் வரும் தகவல் கிடைத்தது. அவரை எதிர்த்துத் தம்மால் தனியாக ஒன்றும் செய்யமுடியாது என்பது ஜவாலிக்குத் தெரியுமாதலால் அவசர அவசரமாக கிலிஜ் அர்ஸலானுக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்க முனைந்தார் அவர். அது உடனே சாத்தியமாகவில்லை. எனவே ஜவாலி சின்ஜாருக்குத் தப்பி ஓடினார்.
வந்து சேர்ந்த சுல்தான் கிலிஜ் அர்ஸலானை மகிழ்ந்து வரவேற்ற மோஸுல் மக்கள், ‘வாருங்கள் ராஜாவே’ என்று அவரிடம் நகரை ஒப்படைத்தனர்.
சின்ஜார் நகருக்குத் தப்பி ஓடிய ஜவாலி பிழைத்தது போதும் என்று அமைதியாக இருந்து விடவில்லை. அங்கு இல்காஸி அல்-அர்துகி, ரித்வான் ஆகியோரை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். கூடிப் பேசினர். திட்டமிட்டனர். கூட்டணி உருவானது. ஜெகெர்மிஷுக்கு எதிராக முன்னர் இணைந்த அவர்கள் இப்பொழுது கிலிஜ் அர்ஸலானுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். முதலில் கிலிஜ் அர்ஸலானை மோஸுலில் இருந்து விரட்டியடிப்போம். அதன்பின் அந்தாக்கியாவைத் தாக்கி அதைக் கைப்பற்றுவோம் என்று முடிவெடுத்தனர்.
ஹி. 500/கி.பி. 1107ஆம் ஆண்டு. அந்தக் கூட்டணிப் படை கிலிஜ் அர்ஸலானை எதிர்த்துப் போர் தொடுத்தது. சண்டை நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் காபூர் ஆற்றில் மூழ்கி இறந்து போனார் கிலிஜ் அர்ஸலான். ஸெல்ஜுக் ரோம ஸல்தனத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளர், சிலுவைப் படையினரைத் தோற்கடித்து முக்கியமான வெற்றிகள் ஈட்டியவர், அந்தப் போரின்போது ஆற்றில் மூழ்கி மரணமடைந்தார்.
கிலிஜ் அர்ஸலானின் இழப்பு முஸ்லிம்களுக்குப் பாதகத்தை அதிகப்படுத்தியது. சிலுவைப் படைக்கும் பைஸாந்தியத்திற்கும் எதிராக வலிமையுடன் நின்ற அவரது மறைவை ஈடுகட்ட அப்பகுதியில் வலிமையான சுல்தான் யாரும் இல்லை. இதை பைஸாந்தியச் சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் நன்றாக அறிந்திருந்தார். முஸ்லிம்களுக்கு இடையேயான இந்த மோதலால் தமக்கு அமைந்த நல்வாய்ப்பை அவர் தவற விடுவாரா என்ன? ஆசியா மைனரின் மேற்குப் பகுதி, தென்கடலோரப் பகுதி ஆகியனவற்றை வெகு வேகமாகத் தம் கட்டுப்பாட்டிற்குள் எளிதாகக் கொண்டு வந்தார்.
கிலிஜ் அர்ஸலானின் மறைவால் அவரது ஆபத்து விலகியதும் மோஸுலுக்குள் நுழைந்தார் ஜவாலி. இனி இங்கு என் ஆட்சி என்று அவர் தமது அதிகாரத்தை நிறுவினாலும் திறமையமற்ற அவரது நிர்வாகப் போக்கு அம்மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. தவிர, அவர்மீது அவர்களுக்குப் பெரும் அபிமானமும் இல்லை. சுல்தான் மாலிக்ஷாவின் மறைவிற்குப் பின் அவருடைய மைந்தர்கள் முஹம்மதுக்கும் ருக்னுத்தீன் பர்கயாருக்கும் இடையே வாரிசுப் போர் நீண்ட காலம் நிகழ்ந்து வந்தது என்று எட்டாம் அத்தியாயத்தில் பார்த்தோம். அந்த சுல்தான் முஹம்மதின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுகிறேன் என்று தெரிவித்துவிட்டு, அவரது பெயரை ஜும்ஆ பேருரையில் சேர்த்துக்கொண்டார் ஜவாலி. சுல்தான் முஹம்மதின் அங்கீகரிப்பட்ட ஆட்சியாளர் போன்ற தோற்றத்தைத் தமக்கு ஏற்படுத்திக்கொண்டாலும் அவருடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்.
சுல்தான் முஹம்மது இப்னு மாலிக்ஷா இவற்றையெல்லாம் பார்த்தார். ஜவாலியின் மீது அதிருப்தியும் கோபமும் அவருக்கு அதிகமானது. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் என்பவரை அழைத்தார். ‘மோஸுலுக்குச் செல்லுங்கள். அந்த ஜவாலியை விரட்டியடித்துவிட்டு, நீங்கள் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘அப்படியே ஆகட்டும் சுல்தான்’ என்று படை திரட்டி மோஸுல் நோக்கி நகர்ந்தார் மவ்தூத் பின் அத்-தூந்தகீன்.
இச்செய்தி கிடைத்ததும் இப்பொழுது இரண்டாம் முறையாக மோஸுலை விட்டுத் தப்பித்து ஓடினார் ஜவாலி. அப்படி ஓடியவர் அடுத்து என்ன செய்வார்? இப்போது மவ்தூத் பின் அத்-தூந்தகீனுக்கு எதிராக இதர முஸ்லிம்களுடன் கூட்டணியை உருவாக்கினார். அதிகப்படியான முன்னேற்றமாக அண்டைப் பகுதியில் இருந்த ‘சிலுவை படையினரை’யும் தம் கூட்டணியில் இணைத்துக் கொண்டார். அதற்கான விலையாக, சிறை பிடிக்கப்பட்டிருந்தாரே எடிஸ்ஸாவின் பால்ட்வின் II, அவரை விடுவித்தார், அவரையும் ஸெல்ஜுக் சுல்தானுக்கு எதிரான தமது கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.
இத்தகு சூழ்நிலையில் ஹி. 502/ கி.பி. 1108. மோஸுலுக்குள் வந்து நுழைந்தார் மவ்தூத் பின் அத்-தூந்தகீன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் சிலுவைப் படையினரை எதிர்த்து நிகழ்த்திய ஜிஹாதும் ஈட்டிய வெற்றிகளும் முக்கியமானவை, விறுவிறுப்பானவை. பார்ப்போம்.
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன்
|