அந்தாக்கியா என்பது பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று. கி.மு. 300ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் தளபதிகளுள் ஒருவரான அண்டியோகஸ் உருவாக்கிய அந்நகரம் மத்திய தரைக்கடலுக்கு அப்பாலுள்ள வர்த்தகத்திற்கு ஏதுவாக அமைந்திருந்தது. கிழக்கு-மேற்குப் பகுதிகளுக்கு இடையே குறுக்குச் சாலையாக அமைந்து, புகழடைந்து, பரபரப்பான பகுதியாக உருமாறியது. ரோம சாம்ராஜ்யத்தின் முக்கிய மூன்றாம் நகரமாகி, அவர்களின் வர்த்தகத்திற்கும் பண்பாட்டிற்குமான மையமானது அந்தாக்கியா நகரம்.
கிறிஸ்துவுக்குப் பிறகான ஆண்டுகளில் இயேசு நாதரின் சீடர்களுள் முதன்மையானவரான புனித பீட்டர், முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை அந்நகரில்தான் உருவாக்கினார் என்பது ஐதீகம். புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபமும் அந்தாக்கியாவின் பெருமைகளில் ஒன்றாகச் சேர்ந்துகொள்ள, அந்நகருக்குப் புனித அந்தஸ்தும் ஏற்பட்டுவிட்டது.
- * -
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவில் விரிவடைய ஆரம்பித்திருந்த இஸ்லாமியப் பேரரசு ஒரு கட்டத்தில் அந்தாக்கியா நகரை எட்டியது. கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஜெருசலம் முஸ்லிம்கள் வசமானபின், 17,000 வீரர்கள் கொண்ட படையுடன் அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி), காலித் பின் வலீத் (ரலி) இருவரும் சிரியாவின் வடக்குப் பகுதிகளை நோக்கிச் சென்றனர். கினாஸ்ஸரீன், அலெப்போ நகரங்களைக் கைப்பற்றி, பின் அங்கிருந்து மேற்கு நோக்கித் திரும்பி அந்தாக்கியாவை நெருங்கினர். நகரிலிருந்து 12 மைல் தொலைவில் ஓரோன்திஸ் ஆறு. அதன் மீது இரும்புப் பாலம். வரலாற்றுப் புகழ் மிக்கப் பாலப் போர் நடைபெற்று, எண்ணற்ற ரோமர்கள் கொல்லப்பட்டு, பெரும் வெற்றி அடைந்தது முஸ்லிம்களின் படை. அதன் பிறகு சிலநாள் முற்றுகையில் அந்தாக்கியா முஸ்லிம்களிடம் சரணடைந்தது. அது கி.பி. 637ஆம் ஆண்டு. பிறகு முந்நூறு ஆண்டுகளுக்குப்பின் கி.பி. 969ஆம் ஆண்டு பைஸாந்தியர்கள் அதை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றினர். அடுத்து நூறு ஆண்டுகள் கழிந்தபின் ஸெல்ஜுக் துருக்கியர்கள் நிகழ்த்திய படையெடுப்புகளின்போது கி.பி. 1085ஆம் ஆண்டு அந்தாக்கியா மீண்டும் முஸ்லிம்கள் வசமானது.
எனவே அந்நகரை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பது சக்ரவர்த்தி அலக்ஸியஸின் இலட்சியம். சிலுவைப்படையினரோ, அந்நகருக்குப் புனித அந்தஸ்து உள்ளது என்ற அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில்அதை மீட்பது தங்களது ஆன்மீகக் கடமை என்று கருதினார்கள். இவ்விதம் அவர்களது நோக்கம் ஒருமுகப்பட்டது. போதாததற்குச் சிலுவைப் படையினரின் உதவியுடன் அந்தாக்கியாவை எப்படியும் மீட்டுவிட வேண்டும் எனும் திட்டத்துடன் அவர்களுக்கு வெகு தாராளமாக உதவி புரிந்து ஆதரவைப் பொழிந்தார் அலெக்ஸியஸ்.
கி.பி. 1097ஆம் ஆண்டு. இலையுதிர் காலத்தின் தொடக்கம். முதலாம் சிலுவைப் படை வடக்குத் திசையிலிருந்து சிரியாவின் உள்ளே நுழைந்து, அந்தாக்கியாவை எட்டியது. ஏறக்குறைய ஜெருசலத்தின் எல்லைப் புறத்தைத் தொட்டுவிட்டதை உணர்ந்தார்கள் அவர்கள். அங்கிருந்து தெற்கே மூன்று வார நடை தூரத்தில் இருந்தது ஜெருசலம். அந்நகருக்கான நேரடிப் பாதை, அந்தாக்கியாவின் ஊடே ஓடியது. அதுதான் யாத்ரீகர்களின் பண்டைய சாலை. அங்கிருந்து மத்திய தரைக்கடலின் கடலோர மார்க்கத்தை அடைந்து லெபனான், ஃபலஸ்தீன் வழியே சென்றால் ஜெருசலம். ஆனால் அவை யாவும் முஸ்லிம்களின் நகரங்கள். நெடுக அவர்களின் கோட்டைகள், கொத்தளங்கள்.
ஜெருசலம் இலக்கு என்று கிளம்பி வந்தவர்கள் அந்தாக்கியாவை அப்படியே விட்டுவிட்டு, அதனுள் நுழையாமல், மாற்றுப் பாதை வழியே ஜெருசலத்திற்குப் படை அணிவகுத்துச் சென்றிருக்க முடியும்தான். ஆனால் ‘அந்தாக்கியா முற்றுகை’ என்பது சிலுவைப் படை-பைஸாந்தியக் கூட்டணியின் மைய நோக்கமாக அமைந்துவிட்டது. பைஸாந்தியர்களின் இலட்சியமும் அந்தாக்கியாவிற்கு ஏற்பட்டிருந்த ஆன்மீக அந்தஸ்தும் ஒருபுறமிருக்க, மேற்கொண்டு தாங்கள் தொடரப் போகும் போர்களுக்கும் மேற்கிலிருந்து வந்து சேரப்போகும் தங்கள் படையினருக்கும் வசதியான ஒரு தலமாகச் சிலுவைப் படை அந்தாக்கியாவைக் கருதியது. ஆசியா மைனரிலிருந்து சிரியாவுக்குள் நுழைய நேரடியான, பாதுகாப்பான பாதை அதுதான் என்பதால் அவர்கள் எப்பாடு பட்டாவது அந்தாக்கியாவைக் கைப்பற்ற நினைத்தார்கள். ஆனால், சிலுவைப் படையின் தலைவர்களாகிய பொஹிமாண்ட், தூலூஸின் ரேமாண்ட் ஆகியோருக்கு அந்தாக்கியாவின் மீது தங்களின் சுய இலாபம் சார்ந்த ஆசையும் ஆர்வமும் உருவாகி வளர ஆரம்பித்தன. அவை பைஸாந்தியர்களின் எதிர்பார்ப்புடன் மோதியதும் அதன் விளைவுகளும்தாம் நாம் பின்னர் காணப்போகும் நிகழ்வுகள்.
பலமான பாதுகாப்பு அரணுடன் அமைந்திருந்தது அந்தாக்கியா. ஓரோன்திஸ் ஆறு, ஸ்டோரின், ஸில்பியஸ் மலைகளின் அடிவாரம் என இயற்கையாகவே பலத்த அரணுடன் அந்நகரம் அமைந்திருந்தது. ஆறாம் நூற்றாண்டில் ரோமர்கள் அதன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியிருந்தனர். சுற்றி வளைத்து மூன்று மைல் நீளம் அறுபது அடி உயரத்திற்குச் சுவர் எழுப்பி, அறுபது கோபுர அரண்கள் அமைத்து வலு மிகுந்த அரணாக உருவாக்கியிருந்தனர். அந்த நெடிய சுவர் செங்குத்தாகச் சரிந்த இரு மலைகளிலும் ஆற்றின் கரையோரமாகவும் வளைந்து நெளிந்து நீண்டிருந்தது. இவற்றுக்குக் கிரீடம் வைத்தாற்போல் பல நூறு அடி உயரத்தில் சில்பியஸ் மலையின் முகட்டில் வெகு வலுவான கோட்டை கட்டப்பட்டிருந்தது.
ஐநூறு ஆண்டுகள் கழிந்து, முதலாம் சிலுவை யுத்தம் நிகழ்ந்த அந்தப் பதினோராம் நூற்றாண்டின் இறுதியில், காலப் போக்கினாலும் பல பூகம்பங்களாலும் அவை யாவும் பழுதடைந்திருந்தாலும் எளிதில் தாக்கித் தகர்த்துவிட முடியாதபடி, ‘அசைத்துத்தான் பாரேன்’ என்று கம்பீரமாக நின்றிருந்தது அந்த அரண். அனைத்தையும் பார்த்துப் பிரமித்துப்போன பரங்கிப்படை வீரர் ஒருவர், ‘இயந்திரங்களாலோ, மனிதர்களாலோ தகர்க்க முடியாததாக அது இருந்தது’ என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் –
சிலுவைப் படையினருக்கு முக்கியமான அனுகூலம் வாய்த்திருந்தது. ஸெல்ஜுக் சுல்தான்கள் ஆளுக்கொரு பக்கம் அடித்துக்கொண்டு ஒற்றுமையின்றிப் பிரிந்து கிடந்தார்களே அந்த அவலம். ஐரோப்பாவிலிருந்து கிளம்பி, கண்டம் விட்டுக் கண்டம் கடந்து, கடந்து வந்த பாதையில் முஸ்லிம்களிடமிருந்த பகுதிகளைக் கைப்பற்றி, சிரியாவின் வாசலில் சிலுவைப் படை வந்து நின்ற அந்த நேரத்தில், துதுஷின் மகன்கள் ரித்வான் அலெப்போ நகரையும் துகக் டமாஸ்கஸ் நகரையும் கைப்பற்றித் தனித்தனி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தனர். அந்தாக்கியாவை யாகி சியான் (Yaghi Siyan) என்ற துருக்கியர் ஆட்சி நிர்வாகம் புரிந்துகொண்டிருந்தார். முன்னர் அலெப்போவிற்குக் கட்டுப்பட்டிருந்த அந்தாக்கியா அதனிடமிருந்து பிரிந்து பக்தாதில் தடுமாறிக்கொண்டிருந்த ஸெல்ஜுக் அரசுடன் எல்லை உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு, தன்னாட்சிப் பிராந்தியமாக இருந்தது.
சிலுவைப் போர் ஆபத்துச் சூழ்ந்ததும் தமது சூழ்நிலையை ஆராய்ந்தார் யாகி சியான். 5000 படை வீரர்கள் இருந்தனர். முற்றுகையைத் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு, மக்களுக்குத் தேவையான ஆகார வசதிகள் இருந்தன. கோட்டையும் அவரது கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆனால் அவையாவும் நகரின் தற்காப்புக்குப் போதுமானவையாக இருந்தனவே தவிரச் சிலுவைப் படையைப் போரில் எதிர்க்கும் அளவிற்கு அவரிடம் படை பலம் இல்லை. தாக்குப் பிடிப்பதற்கு அந்தாக்கியாவின் தற்காப்பு அரணை மட்டுமே அவர் நம்பியிருக்க வேண்டிய நிலை. அதே நேரத்தில் அவருக்கு மற்றொரு முக்கியப் பிரச்சினையும் இருந்தது. கிரேக்கர்கள், அர்மீனியர்கள், சிரியா நாட்டின் கிறிஸ்தவர்கள் ஆகியோரும் அந்தாக்கியாவில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமக்கு எதிராகத் திரும்பிவிடுவார்களோ, சிலுவைப் படையுடன் சேர்ந்துகொண்டு தமக்குத் துரோகம் இழைத்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால் போர் ஆபத்துச் சூழ்ந்துள்ள நிலையில் அவர்களை அதிகப்படியாகக் கண்காணிக்க வேண்டியிருந்தது.
சிலுவைப் படை அந்தாக்கியவை நெருங்கியதும் சகோதரர்கள் ரித்வான், துகக் இருவருக்கும் யாகி சியான் உதவி கோரித் தகவல் அனுப்பினார். பக்தாதுக்கும் செய்தி பறந்தது. நற்செய்தி வரும், உதவிப் படைகள் வந்து சேரும் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு காத்திருந்தார் யாகி சியான்.
நம்பிக்கை என்னாயிற்று?
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன் |