பைஸாந்தியத்தில் சிலுவைப்படை
கி.பி. 1096ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். அலை துவங்கியது. முதலாம் சிலுவை யுத்தப் படை, அணியணியாக கான்ஸ்டன்டினோபிள் (இஸ்தான்புல்) நகரை வந்து அடைய ஆரம்பித்தது.அடுத்த ஆறு மாதங்களும் அந் நகரில் முதலாம் சிலுவை யுத்தப் படையினரின் அந்த அலைதான் அடித்துக்கொண்டிருந்தது. பைஸாந்திய ராஜாங்கத்தின் தலைநகரமான கான்ஸ்டன்டினோபிள் நகரம்தான் கிழக்கத்திய தேசங்களின் நுழைவாயில். கிறிஸ்தவப் பயணிகள் ஜெருசலத்திற்குச் செல்லும் பாதையும் அதுதான். அவை ஒருபுறமிருக்க-
பைஸாந்தியச் சக்கரவர்த்தி விடுத்த உதவிக் கோரிக்கையினால் அல்லவா சிலுவைப்படை உருவானது? அவர்களது இலக்கு ஜெருசலம் என்று போப் அர்பன் திட்டத்தை உருமாற்றியிருந்தாலும் முதல் சேவையாக அலக்ஸியஸின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லையா? தவிர, அலக்ஸியஸையும் அவரது கோரிக்கையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அவரது உதவி இல்லாமல் சிலுவைப் படை ஜெருசலத்தை அடைந்துவிட முடியாதல்லவா? அதனால் அவர்களது அணிவகுப்பின் முதல் இலக்காக , கான்ஸ்டன்டினோபிள் வந்து இறங்கியது படை.
இன்று ஐரோப்பாவும் மேற்குலகும் தாங்கள்தாம் உயர்வான நாகரிக சமூகம் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். அதை உலகமும் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் பதினோராம் நூற்றாண்டில் கிழக்கத்திய தேசமான பைஸாந்தியம்தான் கிறிஸ்தவர்களின் நாகரிகத்திற்கு மையப்புள்ளியாக அமைந்திருந்தது. கிரேக்க, ரோம சாம்ராஜ்ஜியங்களின் பெருமையையும் மகிமையையும் கைப்பற்றி வைத்திருந்தது. சக்ரவரத்தி அலக்ஸியஸோ தமது வம்சாவளியை முற்காலத்து அகஸ்டஸ் சீஸர், கான்ஸ்டன்டைன் வரை நூல் பிடித்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டிருந்தார். அவையெல்லாம் சேர்ந்து, பரங்கியர்களின் மனத்தில் சக்ரவர்த்தியையும் அவரது ராஜாங்கத்தையும் பற்றிய வியப்பும் மதிப்பும் கலந்த பிரமிப்பாக உருவாகியிருந்தன.
கான்ஸ்டன்டினோபிள் நகரை அடைந்த படை அதன் வாசலை நெருங்கினால் மாபெரும் வெளிச் சுவர் நான்கு மைல்களுக்கு நீண்டிருந்தது. பதினைந்து அடி தடிமன், அறுபது அடி உயரம் கொண்ட அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அவர்கள் தம் மூக்கில் விரல், உள்ளங்கை, முழங்கை வைத்துப் பிரமிக்காத குறை. உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது வியப்பு மேலும் பெருகியது. இலத்தீன் ஐரோப்பாவின் பெரும் ஜனத்தொகை கொண்ட நகரங்களுடன் ஒப்பிட்டால்கூட ஐந்து இலட்சம் மக்கள் தொகை கொண்டிருந்த கான்ஸ்டன்டினோபிள் நகர் பத்து மடங்கு பெரியது. எனும்போது, பரங்கியர்களுக்கு எப்படி இருக்கும்? விழி விரிந்து போனார்கள்.
சக்ரவர்த்தி கூட்டுப் படையணிக்குத் தலைமை தாங்குவார். நாம் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டுச் சேவையாற்றப் போகிறோம் என்று சிலுவைப் படையினர் நம்ப ஆரம்பித்தார்கள். தங்களது படை அணிகளுக்கு அலக்ஸியஸ் தலைமை தாங்க வேண்டும்; ஒன்றிணைந்த பெரும் படையாகத் தங்களை அவர் ஜெருசலம் நகரத்திற்கு வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அப்படியான திட்டமோ, நோக்கமோ அலக்ஸியஸுக்குத் துளியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்குத் தம் பைஸாந்தியத்தின் இலட்சியமே முதன்மையானதாக இருந்ததேயன்றி, சிலுவைப்படையின் ஜெருசலம் என்பது அவரது செயல்திட்டத்தில் இரண்டாம், மூன்றாம் இடத்தில்கூட இல்லை.
அலெக்ஸியஸ் சிலுவைப் படையினரை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வரவேற்றார். வெளிச் சுவரிலிருந்து தலைநகர் வரை அவர்கள் பலத்த கண்காணிப்புடன் அழைத்து வரப்பட்டனர். தமது நோக்கத்தில் அலெக்ஸியஸ் மிகத் தெளிவாக இருந்தார். வந்திருப்பவர்கள் தமது படைக்கும் முஸ்லிம் சுல்தான்கள் மீதான படையெடுப்பிற்கும் உதவ வந்திருக்கும் இராணுவச் சாதனம் என்ற கண்ணோட்டத்துடனேயே அவர்களை அவர் அணுகினார். அப்படித்தானே அவர் போப் அர்பனுக்கு வேண்டுகோள் அனுப்பியிருந்தார்? ஆனால் வந்து சேர்ந்திருந்தது அவரது எதிர்பார்ப்பை மீறிய பெரும் சாதனம்; கட்டுக்கடங்காத கொடூரர்களின் கூட்டம் என்ற பிம்பம் அவரது மனத்தில் ஏற்பட்டிருந்தது. இருக்கட்டும். பரங்கியர்களின் அந்த முரட்டு உற்சாகத்தைச் சேணம் பூட்டிக் கையாண்டுவிடலாம், தம் சாம்ராஜ்யத்தின் நலனுக்குப் பயன்படுத்திவிடலாம் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது.
சிலுவைப் படை துருக்கியர்களை எதிர்த்து எத்தகு வெற்றி அடைந்தாலும் சரி. அது பெரு மகிழ்ச்சி. எனவே வெகு தாராளமாய் அவர்களுக்கு உதவி புரியலாம். தமது ராஜாங்கத்திற்கு இஸ்லாம் தோற்றுவித்துள்ள அச்சுறுத்தலை விரட்டி, வெகு முக்கிய நகரமான அந்தாக்கியவை மீட்டுத் தந்தால் போதும், செல்வத்தை அள்ளி அள்ளி அவர்களுக்கு இறைக்கலாம் என்று அவர் தயாராக இருந்தார். ஆனால், தொலைதூரத்தில் உள்ள புனித நகரை மீட்கிறேன் பேர்வழி என்று நீண்ட நெடிய போருக்கு உட்பட்டு, அதில் தலைகொடுத்து, தம் ராஜாங்கம் முஸ்லிம்களின் படையெடுப்புக்கு ஆளாகி, தூக்கி வீசப்படும் அபாயத்திற்கு அது உள்ளாக அவர் சிறிதும் தயாராக இல்லை. நோக்கத்திலும் எதிர்பார்ப்பிலும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டிருந்த இந்தப் பிளவு பின் தொடரப்போகும் வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்தது.
எது எப்படியிருப்பினும் பரங்கியர்களின் மீதான தமது ஆளுமையைத் திட்டவட்டமாகச் செலுத்த அலெக்ஸியஸ் முடிவெடுத்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் பல இனக் குழுக்களிலிருந்தும் துண்டு துண்டாகத்தானே சிலுவைப் படை உருவாகியிருந்தது? அந்த விரிசல் கோட்டை, தமக்கேற்ப, அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். எப்படி? ஒவ்வோர் இளவரசனையும் கோமானையும் தனித்தனியே அழைத்து, சிறப்பாக உபசரித்தார். அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்திக் கட்டுப்படுத்த, தம் தலைநகருக்கு இயல்பாகவே அமைந்திருந்த தோற்றப் பிரம்மாண்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் அலக்ஸியஸ்.
ஜனவரி 20, 1097ஆம் ஆண்டு போயானின் காட்ஃப்ரெ முதலில் வந்து சேர்ந்தார். அவரும் அவரைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் செல்வச் செழிப்பான அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர். பெரும் சிம்மாசனத்தில் அலக்ஸியஸ் கம்பீரமாக அமர்ந்திருந்தார். தம்மையோ தம்முடன் வந்திருப்பவர்களையோ முத்தமிட்டு வரவேற்க, சக்ரவர்த்தி எழுந்து வராததை பிரமிப்புடன் கவனித்தார் கோமான் காட்ஃப்ரெ. அந்தப் பிரமிப்பு அவரைவிட்டு விலகிவிடாத வகையில் பேசத் தொடங்கினார் அலக்ஸியஸ்.
‘போரில் நீங்கள் கைப்பற்றப்போகும் கோட்டைகள், நகரங்கள், நாடுகள் ஆகியனவற்றை நாம் நியமிக்கும் அதிகாரியின் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். அவையாவும் இதற்குமுன் எங்களுடைய உடைமையாக இருந்தவை.’
அதாவது சிலுவைப்படை கைப்பற்றும் அனைத்தும் பைஸாந்தியர்கள் வசம் வந்தாக வேண்டும். இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு காட்ஃப்ரெ சத்தியப் பிரமாணம் அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. வேறு வழியின்றி, குத்தகைதாரர் நில உரிமையாளருக்கு அளிப்பதைப்போன்ற சத்தியப் பிரமாணம் அளித்தார் காட்ஃப்ரெ. சிலுவைப் போரை வழிநடத்தும் உரிமையை அலக்ஸியஸுக்கு அளிக்கும் விசுவாசப் பிரமாணம் உருவானது. ஆனால் பதிலுக்கு அலக்ஸியஸ் காட்ஃப்ரெவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஆலோசனையையும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தமானது.
அதையடுத்து, இதோ பார் பைஸாந்தியத்தின் வள்ளல் குணம் என்பதைப்போல் அந்த இளவரசருக்குத் தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த துணிமணிகள், குதிரைகள் என்று அள்ளி அள்ளி வழங்கினார் அலெக்ஸியஸ். அதில் திக்குமுக்காடிய காட்ஃப்ரெ சுதாரிப்பதற்குள் அப்படியே அவரையும் அவருடைய படையையும் பாஸ்போரஸ் ஜலசந்தியைத் தாண்டி ஆசியா மைனருக்கு அனுப்பி வைத்துவிட்டார் அலெக்ஸியஸ். மத்தியதரைக் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் பாஸ்போரஸ் இடைகழிதான் ஐரோப்பாவையும் ஆசிய கண்டத்தையும் பிரிக்கிறது.
அடுத்து வந்த மாதங்களில் கோமான் காட்ஃப்ரெவுக்கு நிகழ்ந்த அனுபவமே இதர அனைத்து இளவரசர்களுக்கும் வாய்த்தது. தரான்தோவைச் சேர்ந்த பொஹிமாண்டுக்கு சக்ரவர்த்தி அளித்த வெகுமதியைக் கண்டு பொஹிமாண்டின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிட்டன என்று எழுதி வைத்துள்ளார் அன்னா.
ஆனால், சில இளவரசர்கள் அலக்ஸியஸ் வலையில் விழாமல் அவருக்குப் பிரமாணம் அளிக்காமல் தப்பிக்க நினைத்து நேராகவே பாஸ்போரஸ் ஜலசந்தியைக் கடந்தனர். ஆனால் அவர்களையும் விடாமல் பிடித்துக் கட்டுப்படுத்தினார் அலெக்ஸியஸ். துலூஸின் கோமான் ரேமாண்ட் ஓரளவு பிடிவாதம் பிடித்து, இறுதியாகச் சற்று மாற்றி வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டார். அந்த ஒப்பந்தத்தின் அடிநாதம் ரேமாண்ட் எவ்வகையிலும் அலெக்ஸியஸின் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாய் விளங்கமாட்டார் என்ற உறுதிமொழி.
இப்படியாக, முதலாம் சிலுவை யுத்தப் படையினர் பிப்ரவரி 1097ஆம் ஆண்டு, ஆசியா மைனர் பகுதியில் சிறு சிறு அளவில் குழுமத் தொடங்கி, அடுத்தச் சில மாதங்களில் அவர்களது எண்ணிக்கை 75,000 வரை எட்டியது. அதற்குச் சில மாதங்கள் முன் `மக்களின் சிலுவைப் போர்’ படையை எளிதாக விரட்டியடித்திருந்த கிலிஜ் அர்ஸலான் இந்த அபாயத்தை அதன் வீரியத்தைச் சற்றும் உணரவில்லை. முந்தைய படைகளைப் போவே இவர்களையும் எளிதாகச் சமாளித்துவிட முடியும் என்ற எண்ணத்தில் முஸ்லிம் சுல்தான்களுக்கும் தமக்கும் இடையே ஏற்பட்டிருந்த மற்றொரு பிரச்சினையைக் கவனிக்கத் தம் பகுதியிலிருந்து கிழக்கே தொலைதூரம் சென்றுவிட்டார் அவர். பாஸ்போரஸ் ஜலசந்தியைக் கடக்க வேண்டியிருந்த சிலுவைப் படையினருக்கு அது பெரும் வசதியாகிவிட்டது. முஸ்லிம் தரப்பிலிருந்து எந்தவொரு சவாலும் பிரச்சினையும் இன்றி, சுற்றுலாப் பயணிகளைப் போல் சாரிசாரியாக வந்து சேர்ந்தனர்.
‘அடுத்து?’ என்று அலக்ஸியஸை ஏறிட்டு நோக்கியது சிலுவைப் படை. ‘நைஸியா’ என்று கைகாட்டினார் சக்ரவர்த்தி. பைஸாந்தியர்களிடமிருந்து கைப்பற்றி, ரோம ஸல்தனத்தின் தலைநகராக கிலிஜ் அர்ஸலான் அறிவித்திருந்த நைஸியா!
இந்தக் கட்டுரையின் மூலம்: சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்: நூருத்தீன் |