Tamil Islamic Media ::: PRINT
வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.

ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), தம் தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த போது, ஒரு மனிதர் அங்கு வந்து, "உங்களில் யார் முஹம்மது?" என்று கேட்டார்.

பாடம் முடிந்தது!

பணிவு குறித்து படுவேகமாக நடந்து முடிந்த பாடம் அந்நிகழ்வு தான்.

அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களிடம், "இறையில்லம் கஅபாவுக்கு பட்டுப்போர்வை அணிவிக்கக் கூடாதா?" என்று கேட்கப் பட்டது.

"முஸ்லிம்களின் வயிறு தான் முதன்மையானது!" என்று பதிலளித்தார்கள்.

ஆட்சி மாட்சிமை பெற்றது.

ஹஸனுல் பஸரீ (ரஹ்), பள்ளிவாசலில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு மனிதர் வந்து, அவர்களின் ஏதோ இரண்டு வார்த்தைகள் கிசுகிசுத்தார்.

தொடர்ந்து பாடத்தை முழுமையாக நடத்தி முடித்த ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்களின் முக நிறம் மாறியிருந்தது.

பிறகு மக்களை நோக்கி, "முஸ்லிம் சகோதரர்களே! என் மகனுக்கு மரணம் ரிஜ்காக- அருள்வளமாக இப்போது வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அவரைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவருக்கு ஜனாஸா தொழ வைக்கும் வரை காத்திருங்கள்!" என்றார்கள்.

வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
..

1960- ம் ஆண்டு...

சூடானிய அறிஞர் ஷைக் அப்துல் பாகீ முகாஷிஃபி ஆற்றிய வரலாற்றின் மிகச் சிறிய உரை:

"முஸ்லிம்களே! ஆயிரம் பள்ளிவாசல்கள் கட்டுவதை விட பசித்தவனின் வயிற்றுக்கு ஒரு கவளம் உணவு வழங்குவது சிறந்தது; தொழுகைக்கு எழுந்து நில்லுங்கள்!"

அவ்வளவு தான்; உரை முடிந்து மக்கள் தொழுகைக்கு எழுந்தனர்.

துனீஷியா ஸைத்தூனா பள்ளிவாசலில் தாஹிர் பின் ஆஷூர் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்:

"உங்கள் பெண்கள் நிர்வாணிகளாக இருக்கும் நிலையில் உங்கள் தொழுகையால் எந்த நன்மையுமில்லை; தொழுகைக்கு எழுந்து நில்லுங்கள்" என்றார்.

நவீனகால வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட
மிகச்சுருக்கமான பொருட்செரிவுடன் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ உரை இதுவும் ஒன்று.

நம் காலத்து உரையாளர்கள் மணிக்கணக்கில் நிகழ்த்தும் உரைகளின் பலன் பெரும்பாலும் கேள்விக்குறிதானே!
..

நாட்டுப்புற அரபியொருவர் புனித கஃபாவை தவாஃப்- வலம் வந்தபின் இரண்டு ரகஅத் தொழுதார். எழுந்து சென்று விட்டார்.

"அல்லாஹ்விடம் உனக்கு எந்தத் தேவையுமில்லையா?" என்று அவரிடம் கேட்டார்கள்.

"இருக்கிறதே, அவனிடம் கேட்டுவிட்டேனே!" என்றார்.

"என்ன கேட்டாய்?"

"அல்லாஹ்... நீ என் பாவங்களைக் கணக்கெடுத்து வைத்துள்ளாய்; அவற்றை மன்னித்து விடு! என் தேவைகளை அறிந்து வைத்துள்ளாய்; நிறைவேற்றிக் கொடு! என்று கேட்டேன்."

துஆவிலும் தான் எவ்வளவு நேர்த்தி!

உன் இறைவனிடம் நீ அழகாக துஆ- பிரார்த்தனை செய்வாயாமே? என்று மற்றொரு நாட்டாரிடம் கேட்டார்கள்.

'ஆமாம்!' என்றார்.

"கேள்... பார்க்கலாம்!"

"அல்லாஹ்... நாங்கள் கேட்காமலே எங்களுக்கு இஸ்லாத்தை வழங்கினாய்... நாங்கள் சொர்க்கத்தைக் கேட்கிறோம்; கொடுக்காமல் விட்டு விடாதே!"
..

ஏமன் பிரதேசத்திற்கு முஆது (ரழி) அவர்களை ரஸூலுல்லாஹி (ஸல்), அனுப்பி வைத்தபோது, "யா ரஸூலல்லாஹ்! எனக்கு அறிவுரை கூறுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார்.

"உன் மார்க்க நடைமுறைகளைத் தூய்மையாக அமைத்துக் கொள்; குறைந்தளவு செயல்பாடே உனக்குப் போதுமாகி விடும்!" என்று அறிவுறுத்தினார்கள்.
(தர்ஃகீபு வத்தர்ஹீபு 1/39)

அரபு வணிகர் ஒருவர் இந்தோனேஷியா சென்றார். அவர் குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா', அல்ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்களை மட்டுமே மனனம் செய்திருந்தார்.

மக்கள் அவரின் முகத்தில் இருந்த ஒளியைப் பார்த்தார்கள்.

உண்மை, நம்பகத்தன்மை கொண்ட அவரின் பண்புகளைப் பார்த்தார்கள்.

பூமியில் நடந்துளவும் குர்ஆனாக அவரின் பொருளாதார பரிவர்த்தனையையும் பார்த்து அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைந்தார்கள்.

வாளுக்கோ, ஈட்டிக்கோ வேலையில்லை; மார்க்கமென்பது நடைமுறை தானே!
..

ஒரு மருத்துவமனையில் இப்படி எழுதி வைத்திருந்தார்கள்:

"எப்டி இருக்கீங்க?" என்று கேட்பவர்களுக்கெல்லாம் உங்கள் சிகிச்சை சிரமங்களை விவரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அவர்களின் கேள்வியில் தொக்கி நிற்பது நலம் பெறுவதற்கான வாழ்த்துச் செய்திதான்; விசாரணை அல்ல!"

ஆனால் விசாரிப்பவர்களிடம் நம் நிலையைப் பட்டியலிடாமல் விடுவோமா!?

இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம், "இமாம்! எப்போது ஓய்வு கிடைக்கும்? என்று கேட்டார்கள்.

"சொர்க்கத்தில் நீ முதல் அடி எடுத்து வைக்கும் போது..." என்றார்.

நபித்தோழர்களின் மாணவரான 'தாபிஈ' ஒருவரிடம், "நான் எப்பொழுது நிம்மதியடைவேன்?" என்றொருவர் கேட்டார்.

"மறுமையின் சோதனைக்களமான "ஸிராத்துல் முஸ்தகீம்" உனக்குப் பின்னால் இருக்கும் போது..." என்றார்.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம், "விடிந்த பொழுது எப்படி இருக்கிறது?" என்று கேட்கப்பட்டது.

"இரண்டு அருட்கொடைகளுடன் விடிந்திருக்கிறது; அவற்றில் எது சிறந்ததென்று எனக்குத் தெரியாது.

ஒன்று, என் பாவங்களை அல்லாஹ் மறைத்திருக்கிறான். அவன் படைப்பினங்களில் யாரும் அதனைக் குறை காணவில்லை.

இரண்டாவது, அடியார்களின் உள்ளங்களில் என் மீது அல்லாஹ் நேசத்தைப் போட்டிருக்கிறான்; என் செயலால் அதனை நான் அடையவில்லை." என்றார்.

விசாரிப்பவர்களுக்கும் கேள்வி கேட்பவர்களுக்கும் மன நிறைவடையும் பதில் கூறுவது ஒரு கலை; அதை அறியாதவர்கள் மௌனம் காப்பது சிறந்தது.
..

சர்க்கார் கிப்லா ஸைய்யது நிஜாமிஷாஹ் நூரி தாமத் பரக்காத்துஹு அவர்களிடம் ஆன்மிக அன்பர்கள் அதிகம் உரையாடுவதில்லை; ஆனால் அவர்களின் உள்ளங்களில் அலையடிக்கும் கேள்விகள் அமைதியடைந்து விடும்.

ஆன்மிகப் பாதையில் "ஸீனா ப ஸீனா- நெஞ்சோடு நெஞ்சம்" என்பார்கள். மனமும் மனமும் பேசிக் கொள்ளும் போது வார்த்தைகளுக்கு என்ன வேலை?!

இது ஒருவகையான கட்டுப்பாட்டுப் பயிற்சி; நினைத்ததையெல்லாம் பேசி மற்றவரின் மனத்தைப் புண்படுத்தி, தன் வாழ்க்கையை சீரழிவில் தள்ளுவதிலிருந்து இதனால் காத்துக் கொள்ளலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதா(ன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளதா(ன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்."
(ஸஹீஹ் புகாரி 6474)
..

ஆன்மிகப் பயிற்சிகள், புனிதவேதம் குர்ஆனுடன் நமக்கு இணைப்பை ஏற்படுத்தி, குர்ஆனிய கட்டமைப்புக்கு நம்மைப் பழக்கப்படுத்தி விடுகின்றன.

وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌
"மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்." (அல்குர்ஆன் : 17:37)
என்று நம் நடையையும்,
وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌
"உன் குரலையும் தாழ்த்திக் கொள்."
(அல்குர்ஆன் : 31:19) என்று நம் குரலையும்,
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ
"நீர் உமது கண்களை நீட்டாதீர்."
(அல்குர்ஆன் : 15:88) என்று நம் கண்களையும்,
وَّلَا تَجَسَّسُوْا
"(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்."
(அல்குர்ஆன் : 49:12) என்று நம் செவிப் புலனையும்,
وَلَا تُسْرِفُوْا‌
"எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 7:31) என்று நம் உண்ணுதலையும்,
وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا
"மனிதர்களிடம் அழகானதைப்
பேசுங்கள்." (அல்குர்ஆன் : 2:83) என்று
நம் வார்த்தைகளையும்,
وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌
"அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்."
(அல்குர்ஆன் : 49:12) என்று நம் சபைகளையும் குர்ஆன் கட்டுப் படுத்துகிறது.

குர்ஆன் நம் வாழ்க்கைக் கோட்பாடு என்பது வெற்று முழக்கமாகி விடாமல் நம் வாழ்க்கை நடைமுறையாக வேண்டாமா; அப்படியானால் நாம் கொஞ்சம் பயிலவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் தான் வேண்டும்.

#முஸ்தஃபா_காசிமி

#குர்ஆனின்_நிழலில்...- 28

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.