இவைகள் கதையல்ல நிஜங்கள். அல்லாஹ் சத்தியத்தின் மீது இருப்பவர்களை ஒருபோதும் கைவிடமாட்டான். இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களது செயல்களை பார்க்கின்றனர். அல்லாஹ் நாடினால் உங்கள் மூலமும் பலர் நேர்வழி பெறமுடியும்.
பார்வையைத் தாழ்திக்கொள்ளுங்கள்:
இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ (Glasgow) நகரத்தில் தப்லீக் இளைஞர் ஒருவர் உடல் சுகவீனமடைந்து அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு இளம் நர்ஸ் அவரை அணுகி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். அதற்கு அந்த இளைஞர் கூறினார்: நானோ ஒரு முஸ்லிம், நீங்கள் ஒரு கிறிஸ்துவர் நான் எப்படி உங்களைத் திருமணம் செய்ய முடியும் என்றார். அதற்கு அந்த நர்ஸ் நீங்கள் என்னைத் திருமணம் செய்வீர்கள் என்றால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
இளைஞர் கேட்டார் இதற்கான காரணம் என்ன? அந்த நர்ஸ் கூறினார் நான் இந்த இரண்டு மூன்று நாட்களாக கவனித்து வருகிறேன். நான் உங்கள் அருகே வரும் போதெல்லாம் நீங்கள் உங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறீர்கள். எனது நர்ஸ் அனுபவத்தில் இப்படி ஒரு ஒழுக்கமுள்ளவரை பார்த்ததில்லை. எனது உள்ளத்தினால் உணர்ந்து கொண்டேன், நீங்கள் சத்தியத்தின் மீது இருக்கின்றீர்கள் என்று. பின்னர் அந்த நர்ஸ் இஸ்லாத்தினை ஏற்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கதையாசிரியரின் அனுபவம்:
அவர் கூறினார், எனக்கு தப்லீக் ஜமாத்தின் மீது நல்லெண்ணம், அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டது இங்கிலாந்தில் வைத்து தான். நான் இங்கிலாந்திலுள்ள ஒரு பார்க்கில் எனது மனைவியுடன் அமர்ந்திருந்தேன். அது மஃரிபின் நேரம். அப்போது அங்கே வந்த ஒரு தப்லீக் ஜமாத்தினர் பாங்கு கூறி தொழ ஆரம்பித்தனர். அவர்கள் தொழுது முடித்தவுடன் பார்க்கில் இருந்த சில இளம் பெண்கள் அந்த ஜமாத்தை அணுகினர். நான் எனது மனைவிடம் கூறினேன், நாமும் போவோம், அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை கவனிப்போம் என்று கூறி அங்கே சென்றோம்.
வந்த இளம் பெண்களில் ஒருவர் இமாமத் செய்த இளைஞரை அணுகிக் கேட்டார், உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று, அதற்கவர் ஆம் என்று பதிலளித்தார்.
இளம் பெண்: நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள்? இமாம்: நாங்கள் இப்போது இங்கே இறைவனைத் தொழுதோம். இளம் பெண்: இன்று உங்கள் தொழுகைக்கான நாள் (வெள்ளிக் கிழமை) இல்லையே? இமாம்: நாங்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளைத் தொழுகிறோம். இளம் பெண்: இது மிகவும் அதிகமல்லவா? நீங்கள் இதை எப்படி பின்பற்றுகிறீர்கள்.
இதற்கான பதிலை அந்த இமாமத் செய்தவர் கூறினார். மேலும் சில கேள்விகளை அந்தஇளம் பெண் கேட்க, அதற்கான பதில்களையும் அவர் கூறினார். பின்னர் அந்த இளம்பெண் அவருக்கு நன்றி கூறிவிட்டு கைகுலுக்கி விடை பெறுவதற்காக தனது கையை நீட்டினார்.
இமாம் கூறினார், மன்னிக்கவும் நான் உங்களுடன் கை குலுக்க முடியாது? இளம் பெண் ஏன் என்று கேட்க, அவர் கூறினார், எனது கை, எனது உடல் எனது மனைவிக்கானது, மற்ற பெண்களைத் தொட அனுமதியில்லை.
இதனைக் கேட்ட மாத்திரத்தில் நின்று கொண்டிருந்த அந்த இளம் தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார். சிறு பிள்ளை போல அழுதார். பின்னர், உங்களை கணவனாக பெற்ற உங்கள் மனைவி எவ்வளவு பாக்கியசாலி. இங்கிலாந்து இளைஞர்களும் இது போன்று இருக்கவேண்டுமே! என்று புலம்பிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நான் எனது மனைவியிடம் கூறினேன் லட்சக்கணக்கான தாவா புத்தகங்கள் செய்யமுடியாத வேலையை இங்கே இந்த தப்லீக் ஜமாத்தினர் சில நிமிடத்தில் செய்துவிட்டனர் என்று.
இளைஞர்களே! உங்களது நடவடிக்கையை சீர் செய்யுங்கள். இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளை வாழ்வில் கொண்டுவாருங்கள். இம்மையிலும் அல்லாஹ் கண்ணியமளிப்பான், மறுமையிலும் அல்லாஹ் சுவனத்தைக் கொடுப்பான்.
சத்தியத்தை சத்தியமாக உணர்ந்து அதன்படி வாழவும் அசத்தியத்தை அசத்தியமாக உணர்ந்து அதை விட்டும் வெருண்டோடவும் அல்லாஹ் அருள் புரிவானாக!
S. Peer Mohamed. Nellai Eruvadi. |