ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ரமழான் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதலாக இறை வழிபாட்டில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு கொடையளிக்க வேண்டும் என்பது மனதில் கொள்ள வேண்டிய அம்சமாகும் . சம்பளம் வாங்கும் வைலைக்கு போவோர் ரமழான் மாத இபாதத்துகளை செய்ய வேண்டுமெனில் கண் டிப்பாக அவர்களுடைய ஊதியம் குறைந்துவிடும். அன்றாட வாழ்வு கேள்விக்குறியாக ஆகிவிடும் . அவ்வாறே இஃதிகாஃப் இருப்போர், குர்ஆன் கற்க நாடுவோர், குர்ஆனையும் இறைமார்க்கத்தையும் கற்றுக் கொடுப்போர், ரமழானை சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ள விழைவோர், இறையில்லப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர், முஸ்லிம் உம்மாவின் நலனுக்காக உழைப்போர் போன்றவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பணவுதவி செய்யவேண்டும் . ஆக, உலக அளவில் தன்னுடைய நிலை எப்படியிருப்பினும் அதைக் கருத்தில் கொள்ளாமல் வசந்தமாய் வரும் அருள்பெரு ரமழானைப் பயன்படுத்தி தன்னுடைய மறுமை வாழ்க்கையை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கை கொடுப்பது தான் ‘ரமழான் கொடை’ யின் முக்கிய நோக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது . ரமழான் மாதத்தில் மகத்தான இரவு ஒன்று வருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஓர் இறை யடியான் அவ்விரவை நன்கு பயன்படுத்திக்கொள்ள நாடுகிறார். அவரோ ஏழை. தினந்தோறும் உழைத்தால்தான் உணவு என்னும் நிலையில் இருக்கும் இறைவனின் எளியதோர் அடியான் அவ்விரவை பயன்படுத்தாமலேயே போய்விடுவான் இல்லையா? அது எவ்வளவு பெரிய இழப்பு என்பது உணர்ந்தோரால் மட்டுமே அளவிட முடியும் . ஒரே ஒரு அடியானுடைய சிறு தேவையை நம்மால் நிறைவேற்ற முடியும் என்றால், அவருக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் அவர் எவ்வளவு சந்தோஷமடைவார்? அவர் மூலமாக இறைவன் எவ்வளவு சந்தோஷம் அடைவான்? கொஞ்சம் கஷ்டப்பட்டால் நம்மால் இந்த இரண்டு சந்தோஷங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றிருக்கும் போது அதை ஏன் இழக்க வேண்டும்? . சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றைப் போல் அண் ணலார் செலவிட்டு உள்ளார்கள் என படிக்கிறோம். பயானில் கேட்கிறோம். அண்ணலார் என்ன பெரிய பணக்காரரா? சொத்தும் சுகமும் அண்ணலாரிடம் கொட்டிக் கிடந்தனவா? கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா? . சாதாரண காலங்களில் செய்யப்படும் பொதுவான தான தருமங்களைப் போன்றே ரமழான் மாதத்து சதக்காக்களையும் நாம் எடைபோட்டு வைத்துள்ளோம். அதனால்தான் ஃபுகராக்களும் ஏழைகளும் ரமழான் மாதத்தில் வீதிதோறும் திரிந்து கொண்டிருக்கும் அவல நிலை நிலவுகின்றது . முஆத் இப்னு ஜபல் (ரழி) அபு தஹ்தாஹ் (ரழி) போன்ற ஸஹாபாக்களுக்கு உமர் (ரழி) போன்றோர் பன்முறை நிதியுதவி செய்துள்ளார்கள். இதன் பின்னணியில் இத்தகைய காரணங்களே இயங்குகின்றன . இவ்வரிசையில்தான் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவுதல் வருகின்றது. இதை ஏதோ பொதுவான நற்செயல் என வகைப்படுத்தாமல் நோன்பு நோற்றும் சரியான முறையில் நோன்பைத் திறக்கும் வசதியற்றோருக்கான உதவி என்னும் கோணத்தில் பார்க்கவேண்டும். பள்ளிக்கு வந்து நோன்பு திறக்கும் ஆண்கள் மட்டும்தான் இதற்கு தகுதியானவர் களா? வீடுகளில் இருக்கும் ஏழை, எளிய பெண்கள் இவ்வுதவியைப் பெற தகுதியற்றவர்களா? . இறைவனின் திருப்திக்காக தன்னுடைய வருமானத்தை இழந்து இறை வழிபாட்டில் ஈடுபடும் இறையடியானுக்கு இறைவனின் புறத்தில் இருந்து உதவியும் ஒத்தாசையும் வருகின்றது. அது எங்கிருந்து வரும்? எவ்வடிவில் வரும்? என்பதை யெல்லாம் யோசித்துப் பார்க்கவேண்டும் . நாம்தாம் அந்தக் கருவிகள். நம்மைப் பயன்படுத்தித்தான் நம் மூலமாகத்தான் இறைவன் அவர்களுக்கு உதவுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . இறைவனுடைய கருவிகளுள் நாமும் உள்ளோம் என்பதை உணர்ந்து நம் வழியாகவும் இத்தகையோருக்கு இறைவன் உதவக் கூடும் என்பதை ஏற்று உதவவும் ஒத்தாசை செய்யவும் முன்வரவேண்டும். நம்மால் இயன்றதை வழங்க வேண்டும். இத்தகையோரைத் தேடிக்கண்டறிந்து உதவ வேண்டும். உம்மத்தில் உள்ள பணம் படைத்தோர் மீதும் தேவைக்கு மேல் சிறிதளவு பணத்தைக் கொண்டுள்ளோர் மீதும் இது கட்டாயக் கடமையாகும் . இதன் காரணமாகத்தான் நோன்பாளிகளுக்கும் இறைவழியில் ஈடுபடுவோருக்கும் உதவுபவர்களுக்கும் அதே அளவு கூலி கிடைக்கும் என்னும் உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவர்களுடைய கூலியில் ஒருசிறிதும் குறைக்கப்படாது.
- அப்துர் ரஹ்மான் உமரி |