Tamil Islamic Media ::: PRINT
முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்

முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்

➖➖➖➖➖➖➖➖➖

அஷ்ஷெய்க். எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)

முதியோர் பராமரிப்பு தொடர்பான சில கருத்துக்களை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

 ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் மிகப் பெரும்பாலான முதியோர்கள் வீடுகளில் வைத்து பராமரிக்கப்பட்டாலும் இலங்கையில் 302 முதியோர் இல்லங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் சுமார் 6000 முதியோர்கள் இருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை.ஒரு சில மாத்திரமே சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆனால் பொருளாதார வசதிகளுக்குக் குறைவில்லை.

சிந்திக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.

  அடிப்படையில் இஸ்லாம் முதியோர் இல்லங்கள் என்ற நடைமுறையை வரவேற்பதில்லை. இஸ்லாமிய சமூக அமைப்பில் வீட்டு சூழலில் ஒருவர் மரணம்வரைக்கும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. பல வீடுகளில் முதியோர் ராஜாக்களையும் ராணீக்களையும் போல் கவனிக்கப்பட்டு வருவதனை மறுப்பதற்கில்லை.

   ஆனால், இஸ்லாமிய போதனைகள் நடைமுறையில் இல்லாத மேலைத்தேய, சடவாத, ஆன்மா இல்லாத,வரண்ட வாழ்வொழுங்குக்கு அடிமையான சமூக அமைப்பில் வயோதிபர்கள் பல்வேறு அவஸ்த்தைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். பெற்ற பிள்ளைகளது ஏச்சுக்களுக்கும் பேச்சுக்களுக்கும் உள்ளாவது, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது,பேரப்பிள்ளைகளை கவனிக்க நிர்ப்பந்திக்கப்படுவது, வீட்டு வேலைகள் சுமத்தப்படுவதுபொருத்தமற்ற உறையுள்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

   எனவே, எமது வீடுகளில் வைத்துக்கொண்டு துன்புறுத்துவது முதியோர் இல்லங்களில் சென்று ஒப்படைத்து விட்டு திரும்பியும் பார்க்காமல் இருப்பது என்ற இரு துருவ நிலைகளில் இல்லாமல் அவர்களுக்கே உரிய மரியாதையுடன் மனது நோகாமல் அவர்களைக் கவனித்துகொள்வது அனைவரதும் கடமையாகும்.

   இஸ்லாம் பெற்றோர்களை துன்புறுத்துவதை இறைவனுக்கு இணைவைப்பதற்கு அடுத்த பெரும் பாவமாக கருதுகிறது. உதவி உபகாரம் செய்வது (இஹ்சான்),இங்கிதமாகப் பேசுவது(கவ்லுன் கரீம்) விரட்டாதிருப்பது (நஹர்),சீ என்று கூட(உஃப்ஃபின்) கூறாதிருப்பது, பணிந்து குனிந்து (கப்ளுள் ஜனாஹ்)நடந்து கொள்வது, அவர்களுக்காக(ரப்பிர்ஹம் ஹுமா ) பிரார்த்திப்பது என்பன அவர்களுக்கான பிள்ளைகளது நீங்காக் கடமைகளாகும்.

وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا )الإسراء 23- 24
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்;அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!”
  பெற்றார் தான் தோணி, ஏணி, மெழுகுவர்த்தி, பிள்ளைகளது உயர்ச்சிக்காகவே தமது சுக துக்கங்களை தியாகம் செய்து மாடாக உழைத்து ஓடாகிப் போனவர்கள்,பிள்ளைகளது உயர்ச்சியை தமது உயர்ச்சியாகவும், அவர்களது வீழ்ச்சியை தமது வீழ்ச்சியாகவும் கருதும் சுயநலத்தை பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுப்பவர்கள்.பிள்ளைகளை உலகத்தில் உளமாற நேசிப்போர் பெற்றாரைத் தவிர வேறு இருக்க முடியாது.

படித்தவர்களது நிலை

  தற்கால உலகில் பாமரர்களை விட படித்து பட்டம் பெற்று உயர் பதவிகளில் இருப்பவர்களே பெற்றோருக்கான உரிமைகளை வழங்குவதில் அதிகம் பின்நிற்பதாக கூறப்படுகிறது. பேராசிரியர் விஸ்வ வர்னபால அவர்கள் அமைச்சராக இருந்த போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது வயோதிபர் மடங்களில் இருக்கும் அனேகரது பிள்ளைகள் உயர்கல்வித் தகைமைகளைப் பெற்ற உயர் பதவிகளில் இருப்பவர்களே என்று கூறியமை பற்பல செய்திகளை எமக்குச் சொல்லுகின்றது.
   “ஒரு மகன் தனது தகப்பனை வீட்டிலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு நாள் காலை வேளையில் அவரைத் தனது காரில் ஏற்றிக் கொண்டு போய் பஸ்தரிப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு மிக அவசரமாக காரில் ஏற முயற்சித்த போது தகப்பன் அவனை அழைத்து “மகனே இன்னும் பொழுது புலரவில்லை. மக்கள் இன்னும் பாதைக்கு வரவில்லை.எனவே அவர்கள் உன்னை கண்டுகொள்ளும் சந்தர்ப்பம் இல்லை. எனவே, காரை மெதுவாகச் செலுத்துக் கொண்டு பத்திரமாகப் போ”. என்று கூறியதாக ஒரு சம்பவத்தை ஒரு பேச்சாளர் கூறியது மனதைத் தொட்டது.”பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்ற கருத்தில் ஆழமான கருத்துக்கள் பொதிந்துள்ளன.


பிள்ளைகள் இல்லாத பெற்றோர்:

வயோதிபர்களை பராமரிப்பதற்கு அவர்களாலேயே பெற்றுடுக்கப்பட்ட பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்களுக்கு அப்பொறுப்புச் செல்லும்.அது இஸ்லாத்தில் ”சிலதுர் ரஹ்ம்” –இனபந்துக்களது உறவைப் பேணி வாழ்வது– என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களைப் பராமரிக்காமல் விடுவது உறவு முறிப்பாக அமையும்.

“நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா?என்று அல்லாஹ் கேட்டான். திருப்தி தான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.
’ நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

   நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்களும் இல்லாத போது அது ஊராரின் சமூகத்தின் இஸ்லாமிய அரசு இருந்தால் அரசின் பொறுப்பாக மாறும். அதாவது அது கூட்டுப் பொறுப்பாகும். ஒரு வயோதிபர் எவருமே கவனிக்காத நிலையில் விடப்படும் பட்சத்தில் அது முழு சமூகத்தினதும் பாரிய பாவமாகவே கருதப்படும்.

மனிதாபிமான உறவு:

முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்ல ஏனைய சமூகங்களிலும் வயோதிபர்களுக்கான உரிமைகள் எந்தளவு பேணப்படுகின்றன என்ற விடயம் ஆழமாக ஆராயப்பட்டு குறைபாடுகளை தீர்க்கப்பட வேண்டும்.

وفي (‏ كتاب الأموال لأبى عبيد)‏ أن عمر بن عبد العزيز رضى الله عنه وهو من خلفاء المسلمين العلماء العاملين كتب إلى عامله على البصرة كتاباً ومما جاء فيه :(‏وانظر من قبلك من أهل الذمة قد كبرت سنه وضعفت قوته وخلت عنه المكاسب، فأجر عليه من بيت مال المسلمين ما يصلحه) ص 46‏
  உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் பஸ்ராவில் இருந்த தனது கவர்னருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார்: ”அஹ்லுத் திம்மாக்களில் (அதாவது முஸ்லிம் அரசின் பாதுகாப்பில் வாழும் முஸ்லிம் அல்லாத குடிமக்களில்) எவராவது முதிர்ந்த வயதை அடைந்து, அவரது உடல் பலவீனமுற்று, தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டால் அவருக்கு தேவையான அளவு உதவியை முஸ்லிம்களது பைதுல் மாலில் இருந்து பெற்றுக் கொடுங்கள்.”(கிதாபுல் அம்வால்–அபூஉபைத் , பக்:46)
   எனவே, அனைவரும் அல்லாஹ்வின் படைப்புக்கள் மனிதர்கள் என்ற வகையில் வயோதிபர்களுக்கான எமது சேவைகள் மத,பிரதேச,மொழி எல்லைகளை கடந்து வியாபிக்க பேண்டும்.
மிகமுக்கிய குறிப்பு:

   வயோதிபர்களுக்கான உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுக்கும் எவரும் அதற்கான இஸ்லாத்தின் அணுகுமுறையை நன்கு விளங்க வேண்டும்.

1.பொதுவாக  வயோதிபர்களையும் குறிப்பாக பெற்றாரையும் பராமரிப்பது வாஜிப்–கட்டாயக் கடமை. அதில் பொடுபோக்காக இருப்பது சிறிய பாவமல்ல.’கபாஇர்’எனப்படும் அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகும் பெரும் பாவமாகும். ஆனால், அவர்கள் விடயமாக ஈடுபாட்டோடு நடந்துகொள்வது அளப்பரிய நன்மைகளையும் இம்மை மறுமை நலன்களையும் பெற்றுத்தரும்.இந்த ஆத்மீக,பசுமையான கண்ணோட்டமும் மனப்பதிவும் சமூகத்தில் வந்துவிடும் போது அந்த சமூகத்தில் வயோதிபர்கள் மிகுந்த மன நிம்மதியோடு வாழ்வார்கள்.எனவே, முதலில் தக்வா–அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயமே ஏற்படுத்தப்பட வேண்டும்.

2.மனிதர்களிடம் நன்றி உணர்வை வளர்க்க வேண்டும்.’செய்நன்றி மறப்பது நன்றன்று’.அல்லாஹ்வுக்கு அடுத்ததாக எமக்கு எமது பெற்றாரை விட உதவி செய்தோர் யாரும் இருக்க முடியாது.
   எனவே, அல்லாஹ் أن اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ ”எனக்கும் உனது பெற்றார் இருவருக்கும் நன்றி செலுத்துவீராக” என்றான். அல்லாஹ்வுக்கு அடுத்தாக நாம் கடமைப்பட்டிருப்பது எமது பெற்றோருக்காகும். {وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا} அல் இஹ்சானுஇலல் வாலிதைன்’ ’பிர்ருல் வாலிதைன்’என்ற சொற்களை அல்லாஹ் குர்ஆனிலும் நபியவர்கள் ஹதீஸ்களிலும் இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும் .பெற்றார் தமது  பிள்ளைகளது உடல் வளர்ச்சி,ஆளுமை விருத்தி,அறிவு வளர்ச்சி போன்றவற்றில் அதிகமான பங்கை வகித்திருக்கிறார்கள்.தாய் ’பத்தியன்’கள் பல இருந்து பாரமான கருவை சுமந்தது முதல் மலம்,சலம் கழுவியது உணவு தீத்தியது வரை தகப்பன் வியர்வை சிந்தி உழைத்தது முதல்பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்க படாது பட்டது வரை செய்த ஈடிணையற்ற உதவிகளை பிள்ளைகள்  அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

3.மூன்றாவது கட்டமாகவே முதியோர் பரமரிப்புக்கான திட்டங்கள் பற்றி யோசிக்க வேண்டும். அதாவது முதலில் மனப்பாங்கு மாற்றம் அதன்பிறகு தான் ஏனைய திட்டமிடல்கள் தேவை.இல்லாத போது காய்ந்த வரண்ட திட்டங்களாகவே அவை அமையும்.
  இஸ்லாத்தின் முதியோர் குறிப்பாக பெற்றார் பற்றிய அருமையான போதனைகளை குத்பாக்கள்,சொற்பொழிவுகள்,அஹதியாக்கள்,பாடசாலைகள்,மத்ரஸாக்கள் திரைப்படங்கள் ,நாடகங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாக இளம் வயதினரதும் ஏன் வளர்ந்தவர்களதும் உள்ளங்களில் பதிக்க எம்மாலான முயற்சிகளைச் செய்வோமாக! அதன் மூலம் அல்லாஹ்வின் அபரிமிதமான நன்மைகளை பெற்றுக்கொள்வோமாக.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.