Tamil Islamic Media ::: PRINT
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -10

தூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.

அந் நகரில் உள்ள வாணிப நிலையங்கள். தலைகளில் ஒட்டப்பட்டிருந்த பெயர்கள் நபித் தோழர்களான சஹாபாக்களின் (ரலியல்லாஹு அன்ஹும்) பெயர்கள்! ஷீஆக்கள் மஹ்தி என்று கொண்டாடி, அரியணையில் ஏற்றி வைத்தார்களே உபைதுல்லாஹ், அவனுடைய பனூ உபைதி வம்சத்து ஆட்சி இப்படியான காட்டுமிராண்டித்தனங்களுடன் கோலோச்ச ஆரம்பித்தது.


கைரோன் இன்றைய துனிஸியாவில் உள்ள நகரம். அந் நகரை ஸியாதா அத்-தக்லிபி என்பவரிடமிருந்து கைப்பற்றினான் உபைதுல்லாஹ். ஸியாதாஹ் தப்பித்து எகிப்துக்குச் சென்றுவிட, ஹி.296/கி.பி. 909 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்காவில் உபைதுல்லாஹ்வின் பனூ உபைதி ஆட்சி தொடங்கியது. ஃபாத்திமீ வம்சம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருந்தாலும் அதை பனூ உபைதி ஆட்சி என்றே அக்கால முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதுவே சரியானதும்கூட.


துனிஸியாவில் நுழைந்ததும் முதல் வேலையாகத் தன்னுடைய ஷீஆ கோட்பாட்டைத்தான் பகிரங்கப்படுத்த ஆரம்பித்தான் உபைதுல்லாஹ். அலீ (ரலி), தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸஹாபாக்கள் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டவர்கள் என்ற அயோக்கியத்தனமான கருத்து அந்த ஷீஆக்களின் அடிப்படை. அதனால், நபித் தோழர்களையும் நபியவர்களின் மனைவியரையும் குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் ஒளிவு மறைவின்றித் தூற்றுவது அரசாங்கத்திற்குக் கடமை போலவே ஆகிவிட்டது. ஸன்னி முஸ்லிம்களின் மீதான அவனுடைய கொடுங்கோன்மை தலைவிரித்தாட ஆரம்பித்தது.


ஆப்பிரிக்காவின் அப் பகுதியின் பெரும்பாலான முஸ்லிம்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வழித்துறையைப் பின்பற்றிக் கொண்டிருந்தவர்கள். ‘அதெல்லாம் கூடாது. நிறுத்து’ என்று தடைவிதிக்கப்பட்டது. அப்படி எளிதில் தடை போட்டுவிட முடியுமோ? முஸ்லிம் அறிஞர்கள் மீறினார்கள். ‘சொன்னால் உங்களுக்குப் புரியாதா?’ என்று அடித்து, உதைத்து, சிறையில் தள்ளி, பனூ உபைதிகள் அவர்களைக் கொலையும் செய்தனர். பல அறிஞர்கள் உயிர் தியாகிகளானார்கள். அவர்களுடைய சடலங்களைக் கடை வீதிகளில் இழுத்துச் சென்று, மக்கள் மனத்தில் பீதியை உருவாக்கி, மனோரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவது தொடர்ந்தது.


தடை போட்டதுடன் நின்றுவிடவில்லை. தங்களுடைய ஷீஆக் கொள்கையைப் பின்பற்றி வாழுமாறு ஸன்னி முஸ்லிம்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது. எதிர்ப்பவர்களின் அங்கங்களைச் சிதைப்பது, சிறையில் அடைப்பது, கொல்வது இயல்பானதாகி, அவ்வகையில் ஏறத்தாழ நாலாயிரம் பேர்வரைக் கொல்லப்பட்டனர் என்கிறது ஒரு குறிப்பு. இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள், ஹதீஸ் அறிவிப்பாளர்கள், பக்திமான்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டனர். அவர்களை வேரறுத்தால் மற்றவர்களை எளிதில் மந்தையாக்கி, ஸன்னி முஸ்லிம்களை நிர்மூலமாக்க முடியும் என்பது உபைதுல்லாஹ்வின் திட்டம்.


ஸன்னி முஸ்லிம் கலீஃபாக்கள் கட்டிய கோட்டைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களுடைய பெயர்கள் கவனமாகப் பெயர்த்தெடுக்கப்பட்டு, உபைதுல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்டது. தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கில் ஷிஆக்களின் கூடுதல் வாசகங்கள் சேர்க்கப்பட்டன. ‘அப்படியெல்லாம் உங்கள் இஷ்டத்திற்கு பாங்கில் மாற்றத்தைப் புகுத்த முடியாது’ என்று மறுத்த முஅத்தீன்களின் நாக்குகளை வெட்டி ‘இந்தா’ என்று கையில் கொடுத்தார்கள். தராவீஹ் தொழுகை தடை செய்யப்பட்டது. கட்டவிழ்த்துவிடப்பட்ட இப்படியான அராஜகங்களால் பொதுமக்கள் அஞ்சி, பள்ளிவாசலுக்கு வருவதற்கே நடுங்கினர்.

கிளர்ச்சி, புரட்சி, கலகம் என்று ஏதாவது ஏற்பட்டுவிடப்போகிறது என்ற முன்னெச்சரிக்கை உணர்வில் மக்கள் கூட்டமாகக் குழுமுவதற்குத் தடை; இரவில் ஊரடங்கு என்று அடுத்த கெடுபிடி. ஸன்னி முஸ்லிம் அறிஞர்களின் நூல்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன; கொளுத்தப்பட்டன. ‘பாடம் நடத்துகிறேன், மாணவர்களைச் சந்திக்கிறேன், சொற்பொழிவாற்றுகிறேன் என்று ஏதாவது கிளம்பினீர்கள் தொலைந்தீர்கள்’ என்று அவற்றுக்கும் தடை. பனூ உபைதிகள் தங்கள் கோட்பாட்டின்படி தாங்கள் இடுவதுதான் சட்டம், சொல்வதுதான் விதி என்றானதால் ஸன்னி முஸ்லிம்களின் ஷரீஆ சட்டங்கள் தூக்கியெறிப்பட்டன.
ஆனால் அத்தனைக் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அராஜகங்களையும் கண்டு முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் முற்றிலும் ஒடுங்கி விடவில்லை. தம்மால் இயன்ற அனைத்து வகையிலும் அவர்கள் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்கள். சக்தியற்று, அடிபணிய வேண்டிய நிலைக்கு உள்ளானவர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கினார்கள். அரசுக்கு உடந்தையான நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோருக்குக் கட்டுப்படமாட்டோம் என்று மறுத்தனர். சஹாபாக்களைத் தூற்றிச் சாபமிடும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பாக்களைப் புறக்கணித்தனர். மார்க்க ஆதாரங்களுடன் தெளிவாக வாதம், விவாதம் புரியும் ஆற்றலுள்ள அறிஞர்கள் அதில் ஈடுபட்டார்கள். அதில் வெல்ல முடியாத அரசு, அந்த அறிஞர்களின் வாயை அடைக்க எளிதான வழிமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களைத் தடயமின்றிக் கொன்றொழித்தது.


இந்த வழிகெட்டவர்களை எதிர்த்துப் போரிடுவது ஜிஹாத், மார்க்கக் கடமை, என்ற நிலைப்பாடு கொண்ட அறிஞர்கள் ஆயுதமேந்தினார்கள். எழுத்தாற்றல் உள்ளவர்கள் எழுதுகோல் ஏந்திப் பல விளக்க நூல்கள் எழுதினார்கள். இவர்களும் தங்கள் பங்கிற்குப் பலரை உயிர் தியாகிகளாக அளிக்க நேரிட்டது.
ஆயினும் அவர்களுடைய இடைவிடாத போராட்டத்தினாலும் இராஜ தந்திர நடவடிக்கைகளாலும் ஆப்பிரிக்காவின் மொராக்கோவில் ஒருவழியாக, பாத்தினி-உபைதி-ஃபாத்திமீ ஷிஆ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்குள் நூற்றுச்சொச்ச ஆண்டுகள் உருண்டோடியிருந்தன. ஹிஜ்ரீ 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் அங்கிருந்த ஸன்னி முஸ்லிம்களின் கை மேலோங்கி பனூ உபைதிகளிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, அப்பாஸிய கிலாஃபத்துடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஆனால் –
அதற்குமுன் பனூ உபைதிகள் எகிப்துக்கு நகர்ந்து, அங்கு அவர்களது ஆட்சி வலிமை பெற்றுவிட்டது.


oOo


ஹி. 296 / கி.பி. 909 உருவான பனூ உபைதிகளின் ஆட்சி ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டு நீடித்து, ஹி. 567 / கி.பி. 1172 இல்தான் முடிவுக்கு வந்தது. உபைதுல்லாஹ்வில் தொடங்கி, பதினான்கு ஆட்சியாளர்கள் ஃபாத்திமீ கலீஃபாக்கள் என்ற பெயரில் ஆட்சி புரிந்தனர். ஆப்பிரிக்காவின் வட பகுதியில் துவங்கிய அவர்களின் ஆட்சி, முதல் மூவரின் காலத்தில் மட்டும்தான் அதைத் தலைமையகமாகக் கொண்டிருந்தது. அதற்குப்பின் எல்லாம் எகிப்து.


அல்-முஇஸ் லி தீன்-இல்லாஹ் என்பவன் பனூ உபைதியின் நான்காவது ஆட்சியாளன். ஒருவன் மரணித்தால் வாரிசு அடிப்படையில் மூத்த மகனுக்கு ஆட்சி என்று அது கைமாறிக்கொண்டு வந்தது. அவ்விதம் நான்காவதாக ஆட்சியில் அமர்ந்திருந்த அல்-முஇஸ் எகிப்து நாட்டின் அரசியலையும் ஆட்சியையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு எகிப்தை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணம். ஹி. 355ஆம் ஆண்டு அங்குள்ள ஆட்சியாளர் மரணம் அடைந்ததும் அந் நாட்டைக் குழப்பம் சூழ்ந்துகொள்ள, அதைச் சரியானபடி பயன்படுத்திக் கொண்டான் அல்-முஇஸ். தன்னுடைய தளபதி ஜவ்ஹர் அஸ்-ஸிஃகிலி என்பவனின் தலைமையில் இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அடங்கிய படையைத் திரட்டி, ‘செல்லுங்கள், வெல்லுங்கள்’ என்று அவன் வழியனுப்பி வைக்க, ஆயுதங்களையும் தங்களது ஃபித்னாவையும் அள்ளிக்கொண்டு ஹி. 358 ஆம் ஆண்டு, ‘ஹோ ஹோ’ வென்று எகிப்துக்குள் வெற்றிகரமாய் நுழைந்தது அப்படை.


எகிப்தைக் கைப்பற்றிய வேகத்தில் முக்கியமான சில காரியங்களைச் செய்தான் ஜவ்ஹர் அஸ்-ஸிக்லி. ஹி.358ஆம் ஆண்டு அல்-மன்ஸூரிய்யா என்றொரு நகரை உருவாக்க அடிக்கல் நாட்டினான். அந் நகரில் அல்-முஇஸுக்காகப் பெரும் மாளிகை கட்டப்பட்டது. பின்னர் அந் நகரின் பெயர் மாறி, ‘காஹிரா’வாகி நிலைத்தது.


ஹி. 359ஆம் ஆண்டு பெரிய பள்ளிவாசலையும் கல்விச் சாலையையும் கட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் உருவானது அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம். இன்றும் எகிப்தில் புகழுடன் திகழ்ந்து வருகிறதே அந்த அல்-அஸ்ஹர். அதை அன்று அவர்கள் உருவாக்கிய நோக்கமெல்லாம் இஸ்மாயிலீக்கள் தங்களின் கொள்கையைக் கற்பிக்கவும் பரப்புவதற்குமே.


ஜவ்ஹர் இவ்விதம் தடபுடலாய் ஏற்பாடுகளைச் செய்து முடித்ததும் ஹி. 362 ஆம் ஆண்டு அல்-முஇஸ் தன் படை பரிவாரங்களுடன் துனிஸியாவிலிருந்து எகிப்துக்குப் புலம் பெயர்ந்தான். வந்து நுழைந்தவன் ஒரு வேடிக்கை செய்தான். சில நாள்கள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ சென்று ஒளிந்து கொண்டான். பிறகு திடீரென்று ஒருநாள் மக்கள் மத்தியில் தோன்றி, ‘அல்லாஹ் என்னை வானுக்கு உயர்த்தி, கீழே இறக்கியுள்ளான். நான் இல்லாதிருந்த காலத்தில் இங்கு நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று அறிவித்தவன், தன் ஒற்றர்கள் மூலம் திரட்டி வைத்திருந்த செய்திகளையும் தகவல்களையும் ஏதோ தான் தன் ஞான திருஷ்டியில் கண்டதைப்போல் ஒப்பிக்க, ஆவென்று வாய் பிளந்து மயங்கிக் கட்டுண்டது மக்கள் கூட்டம். பிறகென்ன? வட ஆப்பிரிக்காவில் தாங்கள் அரங்கேற்றிய வன்செயல்களையும் கொடுமைகளையும் அவன் மட்டுமின்றி அவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்களும் எகிப்தின் ஸன்னி முஸ்லிம் அறிஞர்கள்மீது கட்டவிழ்த்து விட்டனர்.


பனூ உபைதிகளின் இலக்கு எகிப்துடன் முடியவில்லை. இராக்கில் வீற்றிருக்கும் அப்பாஸிய கிலாஃபத்தும் அவர்களது செயல்திட்டத்தில் இருந்தது. ஆனால் அங்கு அவர்கள் படையை அனுப்பவில்லை. தங்களது பிரச்சாரகர்களை பக்தாதுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுள் முக்கியமானவன் அல்-முஅய்யத். அவன் அப்பாஸிய கிலாஃபத்தின் முக்கிய இராணுவத் தலைவனான அல்-பஸாஸிரியைத் தன் பிரச்சாரத்தால் கவர்ந்து வயப்படுத்த, அப்பாஸியர்களின் முதுகில் குத்தினான் அல்-பஸாஸிரி. பக்தாதின் கட்டுப்பாட்டைத் தன்னிடம் கொண்டு வந்து அப்பாஸிய கலீஃபா அல்-காயிம் பி அம்ரில்லாஹ்வையே பதவி நீக்கம் செய்துவிட்டான். வெள்ளிக்கிழமை குத்பாக்களில் ஃபாத்திமீக்களின் புகழ் பாடப்பட்டது.


அந்த அபாயத்திலிருந்து அப்பாஸிய கிலாஃபத்தைக் காப்பாற்றி, பனூ உபைதியின் கைப்பாவையாக இருந்தவனைக் கொன்று, அப்பாஸிய கலீஃபாவைக் காவலில் இருந்து மீட்டு, கிலாஃபத்தை மீட்டுத் தந்தவர்தாம் நமக்கு இத் தொடரின் ஆரம்பத்தில் அறிமுகமான ஸெல்ஜுக் சுல்தான் துக்ரில்பேக். அதன் பிறகுதான் ஃபாத்திமீக்களின் ஆளுமை இராக்கிலிருந்து விலகி, மீண்டும் அப்பாஸியர்களின் கட்டுப்பாட்டிற்குள் இராக் வந்தது.


அதைத் தொடர்ந்துதான், ஃபாத்திமீ ஆட்சியை எப்படியும் துடைத்தெறிய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அப்பாஸிய கிலாஃபத்தின் சார்பாய் ஸெல்ஜுக் சுல்தான்களின் ஓயாத சவால்கள், ஒழியாத போர்கள் துவங்கின.



oOo


எகிப்தில் வலிமையுடன் ஓங்கி வளர்ந்த பனூ உபைதிகளின் ஆட்சி ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு திருப்புமுனையை எட்டியது. கலீஃபாவின் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் மெதுமெதுவே செல்வாக்குப் பெற்று உயர்ந்து, ஆட்சியை நிர்வகிக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்தவர்களாக உருவானர்கள். தங்கள் விருப்பத்திற்குரிய வாரிசை கலீஃபாவாக ஆட்சியில் அமர்த்தும் அளவிற்கு அவர்களது ஆற்றல் பெருகியது. ஹி. 487ஆம் ஆண்டு அவர்களின் கலீஃபாவாக இருந்த அல்-முஸ்தன்ஸிர், தங்கள் வம்ச மரபின்படி தன் மூத்த மகன் நிஸார்தான் அரச வாரிசு என்று அறிவித்துவிட்டு மரணமடைந்தான். ஆனால் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுநர் அல்-ஜம்மாலி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. யார் இந்த ஆளுநர், அவனுக்கும் கலீஃபாவுக்கும் என்ன உறவு என்பதெல்லாம் ஃபாத்திமீக்களின் தனி வரலாறு. இங்கு நமக்கு அது அவ்வளவு முக்கியமில்லை. நாம் அறிய வேண்டியதெல்லாம் அல்-ஜம்மாலி அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவனுக்குப் பிரியமானவன் அல்-முஸ்தன்ஸிரின் கடைசி மகனான அஹ்மது அபூ அல்-காஸிம் என்பன மட்டுமே. ‘நீயே கலீஃபா!’ என்று அவனுக்குப் பிரமாணம் அளித்து ஆட்சியில் அமர்த்திவிட்டான் அல்-ஜம்மாலி.
இந்தக் காலகட்டத்தில் அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ் என்றொருவன் எகிப்திற்கு வந்திருந்தான். இஸ்பஹானில் இஸ்மாயிலீ மத்ஹபைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தவன் அவன். தனது மத்ஹபை மேலும் கற்றுத் தேர்வதற்கு எகிப்துக்கு வந்திருந்தவன், ‘மூத்த மகனுக்கு ஆட்சி என்பதே நமது மத்ஹபு. நிஸார்தான் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்’ என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தான்.


‘அரசியல் என்றால் பலருக்கும் பல கருத்துகள் இருக்கத்தான் செய்யும். அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ்வுக்கும் கருத்து இருந்திருக்கும். தெரிவித்திருக்கக்கூடும். அதற்கு என்ன?’ என்ற எண்ணம் தோன்றினால் – நிற்க. ஏனெனில், அது வெறும் கருத்தாக நின்று விடவில்லை; இஸ்மாயிலீ நிஸாரி என்றொரு பிரிவு உருவாக வித்திட்டது. அந்த நிஸாரிப் பிரிவு வெறுமே மற்றொரு பிரிவாக அமைந்துவிடவில்லை. பிறிதொரு பெரும் அபாயத்திற்குத் தூண்டுகோலானது.
அதென்ன அபாயம்?


இரகசியக் கொலையாளிகள்!


காலா காலத்திற்கும் நிலைத்திருக்கும்படி தம் பெயரையும் தொழில்ரீதிக் கொலைகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய இரகசியக் கொலையாளிகள்!

 


உருவானார்கள் ஹஷாஷியர்கள். உருவானது Assassins!

 

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் - 9
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி
தொடர் -11

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.