Tamil Islamic Media ::: PRINT
வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!

 

மரவேர்களின் மிக முக்கியமான தன்மை நீரைத் தேடி நகர்வது. இத் தேடலில் அவை என்றுமே சளைத்ததில்லை; பின் வாங்கியதில்லை.
மரம் நிற்கும் இடத்திலிருந்து மண்ணுக்குள்ளே பல அடி தூரம் நகர்ந்து, நீரை உறிஞ்சி மரத்துக்கு அளிக்கின்றன.

தடைகள் இருந்தாலும் வேர்கள் தயங்கி நிற்பதில்லை. வளைந்தும் நெளிந்தும் விடாமுயற்சி செய்து தங்கள் இலக்குகளை எட்டிப் பிடிக்கும். தேடல் என்ற பண்பை, இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் மர வேர்களிடமிருந்து பெறவேண்டும். அவை நீரைத் தேடுவதுபோல நாம்,  நமக்கான இம்மை - மறுமை வெற்றி வாய்ப்புகளைத்  தேடவேண்டும்.

தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்.
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசி இருக்கும்.'

ஒரு செருப்பு நிறுவனம் தனது புதிய கிளையை ஆதிவாசிகள் அதிகம் வாழும் ஒரு தீவில் திறக்க எண்ணியது. அந்த நிறுவனத்திடம் வேலை கேட்டு வந்த இரு இளைஞர்களை அந்தத் தீவுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருமாறு ஒருவருக்கொரு வரைத் தெரியப்படுத்தாமல் அனுப்பி வைத்தது.

முதலில் சென்றவர், ‘அந்தத் தீவில் செருப்புக் கடை வைப்பதும், பணத்தைக் கடலில் கொட்டுவதும் ஒண்ணுதான். ஏனெனில், அங்குள்ள யாருக்கும் செருப்பு என்றால் என்னவென்றே தெரிய வில்லை. எனவே, அவர்கள் செருப்புகளை வாங்கமாட்டார்கள்’ என தனது அறிக்கையைக் கொடுத்தார்.

அடுத்ததாகச் சென்றவர், ‘வேறு கம்பெனிகள் அங்கு சென்று, கிளை தொடங்கும் முன் நாம்  வேகமாக அத் தீவில் செருப்புக் கடையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், அங்கே யாருமே செருப்பு பயன்படுத்துவதில்லை. செருப்பின் பயன்பாட்டை எடுத்துச் சொன்னால் விற்பனை மளமளவென நடக்கும்’ என்று தனது அறிக்கையைக் கொடுத்தார்.

இருவரில் யாருக்கு வேலை கிடைத்திருக்கும் என்பதை நீங்களே சொல்லுங்களேன்...!

இறைவன் எனக்கு வழங்கிய நேர்வழி, பூமியில் விழும் மழைநீர் போல. பூமியில் ஒரு சில நிலம் அந்த மழைநீரை உள்வாங்கி  புற்பூண்டுகளை முளைக்கச்செய்து தன்னையும் வளப்படுத்திக் கொள்ளும்.

வேறு சில தரிசு நிலம், தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும். அது தன்னளவில் பயன்பெறாது. ஆனால் மக்கள் அதன் மூலம்  பயனடைவர். அதனை அருந்துவர்; தங்களது  கால்நடைகளுக்கும் புகட்டுவர்; விவசாயமும் செய்வர்.

இன்னொரு வகை நிலம், அது ஒன்றுக்கும் உதவாத கட்டாந்தரை. அது நீரைத் தேக்கி வைத்துத் தானும் பயன்பெறாது; புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்யாது.

இது, நான் கொண்டு வந்த தூதைத் தேடி அடைந்து, தாமும் பயனடைந்து, பிறருக்கும் கற்பித்தவர், நான் கொண்டு வந்த தூதை - இறைநெறியை ஏற்றுக்கொள்ளாதவர் இருவருக்குமான உவமை. [புகாரி - 79]

ஆரம்பத்தில் மிகப்பெரும் கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையாக இருந்து, பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் வறுமையில் வாடிய, பெற்றோரைப் பிரிந்து சோகத்தில் மூழ்கிய முஸ்அப் பின் உமைரை (ரளி) நபி (ஸல்), மதீனா மாநகருக்கு  இஸ்லாமிய அழைப்பியல் பணி பிரதிநிதியாக - செயலராக அனுப்பி வைத்தார்கள்.

இஸ்லாமிய வரலாற்றுப் பாதையில் ஹிஜ்ரத் ஒரு முக்கிய மைல்கல். நபியவர்கள் மதீனாவுக்குச் செல்வதற்கு முன்பே அங்கே நபியவர்களின் வருகைக்கும் இஸ்லாமுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் இந்தப் பணி மிகப்பெரிய பணி.

முஸ்அப், பார்வையற்ற அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரளி) இருவரும் மதீனா சென்று இஸ்லாமிய பரப்புரைப் பணியில் ஈடுபட்டனர். இதனால் மதீனாவில் உள்ள ஒவ்வொரு இல்லக் கதவையும் இஸ்லாமின் தூதுச்செய்தி சென்றடைந்தது. இவர்களது தீவிர பிரச்சாரத்தின் பயனை நபியவர்கள் அடுத்த ஆண்டிலேயே கண்டு கொண்டார்கள்.

முதல் வருடத்தில் பன்னிரெண்டு பேர் நபியவர்களிடம் கலிமாச் சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர். அடுத்த வருடத்தில் மதீனாவின் தூதுக்குழுவில் எழுபதுக்கும் மேற்பட்டோர் வந்து இஸ்லாமை இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டனர்.

நபியவர்களின் பிரதிநிதியாகச் சென்ற முஸ்அபும் அவருடன் தொடராக இணைந்து கொண்ட அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம், ஸஃத் பின் அபீ வக்காஸ், அம்மார் பின் யாஸிர் (ரளியல்லாஹு அன்ஹும்) போன்றோரின், 'வாய்ப்புகளை நழுவ விடாத தன்மையால்' நபியவர்கள் மதீனாவுக்குச் செல்லும் போது அவர்களை வரவேற்க அங்கே ஒரு மிகப்பெரும் கூட்டமே திரண்டிருந்தது.

மதீனத்து அன்ஸாரி முஸ்லிம்கள் முஸ்அப் (ரளி) மூலமே 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' போன்ற பல அத்தியாயங்களை மனனம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகுதான் நபியவர்களே மதீனா சென்றார்கள். [புகாரி 3925]

ஆக, மரம், இறைவரமான மழைநீரை உள்வாங்கித் தன்னை வளமாக்கிக் கொள்வது போல ஓர் இறை நம்பிக்கையாளன் இறைவன் தனக்கு வழங்கியுள்ள இறையருட்கொடைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது மரம் வழங்கும் மூன்றாவது படிப்பினை.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.