Tamil Islamic Media ::: PRINT
புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்

இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகளும், அம்மாதத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான (பிறை 27) மிஃராஜ் நோன்பின் சிறப்புகளும்.

♣ பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்கும் மிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது. வேந்தர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜ் பயணமாகும்.

♦ (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன், அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான், (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

அல்குர்ஆன் : 17:1

♦ மேலும் இந்த சிறப்பான சங்கையான மாதத்தில் அல்லாஹ் தன் வல்லமையை வெளிப்படுத்துவதற்காக நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயிலாக நிகழ்த்துக் காண்பித்த மகா அற்புத நிகழ்வே 'அல் இஸ்ராஉ வல் மிஃராஜ்' எனும் அதிசய நிகழ்வாகும். ரஜப் பிறை 27 புனித மிஃராஜ் தினமாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க விண்ணுலகப் பயணம் சென்ற நாள். இன்றுதான் நமக்கு ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. இந்த நாளில் சிறப்பு வாய்ந்த ரஜப் பிறை 27 அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அன்றைய தினத்தில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். ஆகவே புனிதமான நாட்களில் நோன்பு வைப்பதும், குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 'அய்யாமுல் பீல்' என்று சொல்லப்படும் பிறை 13,14,15 ஆகிய மூன்று நாட்களும் அதேபோன்று ஒவ்வொரு திங்கட்கிழமை, வியாழக்கிழமை நோன்பு வைப்பதும் அதேபோன்று அந்நாளில் அதிகமதிகம் ஸலவாத்து ஓதுவது, இபாதத் எனும் வணக்க வழிபாடுகளில் ஈடுபதுவது சிறப்பிற்குரிய சுன்னத்தாகும்.


♣ ரஜப் பிறை 27 (மிஃராஜ்) தினத்தன்று நோன்பு வைப்பது சுன்னத்தா?

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்: ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.

♦ மேலும் அபான் இப்னு ஙயாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது. ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.

♦ ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

♦ ஆகவே 'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் பல ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே கருத்தில் வந்துள்ள எல்லா ஹதீஸ்களிலும் இந்த ஹதீஸ்தான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.