Tamil Islamic Media ::: PRINT
நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்

🌾 "நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்"🌾

♣ ஸலாதுன் நாரிய்யா பற்றிய வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

புதுமை விரும்பிகள், அது கூடாது. இது கூடாது என்று எடுத்ததுக்கெல்லாம் ‘ஷிர்க்’, ‘பித்அத்’ என்று சாயம் பூசும் பட்டியலில் ஸலாத்துன் நாரியாவையும் இணைத்து கூறி அறியாமையின் அல்லது அகம்பாவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

(4444)  தடவை என்று பெரும் எண்ணிக்கையைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது.அதற்கென்று ஓதத் தெரிந்தவர்களை அழைப்பார்கள். அதற்கு பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நல்ல நோக்கம் எதுவும் இருக்க முடியாது என 4444 ஸலாத்துன் நாரிய்யா ஓதப்படுவதற்கான காரணத்தையும் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
இந்த வஹ்ஹாபிகளான புதுமைவாதிகளின் செயல்களும், விளக்கங்களும் முற்றிலும் ஈமானை அசுத்தப்படுத்தக் கூடிய அகம்பாவத்தின் வெளிப்பாடாகும்.

♣  நாட்டங்களை நிறைவேற்றும்  "ஸலாதுன் நாரிய்யா "பற்றி இமாம்கள்,முத்தகீன்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் வேறுபாடின்றி எகோபித்த கருத்து என்வென்றால்
அண்ணல் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வாயினிக்க, நா மணக்க சொல்கின்ற ஸலவாத்துக்களில் முக்கியமான ஒன்று இந்த ஸலாதுன் நாரிய்யா என்று தெளிவாக இமாம்கள் விளக்கியுள்ளார்கள்...

முஃமின்கள் ஒரு செயலை அது சிறப்பானது என்று கண்டால் அது இறைவனிடத்தும் சிறப்பானதே!” என்ற நபி மொழிக்கிணங்க,” ‘ஸலாத்துன் நாரிய்யா’ எனும் ஸலவாத்தை உலகம் முழுக்க ஈமானிய முஸ்லிம்கள் சிறப்பான செயலாகக் கண்டு ஓதுகின்றனர். அது இறைவனிடத்தும் சிறப்பானதாக அமையும் நற்பலன்களை ஈட்டித்தரும் என்பதே உண்மை விசுவாசிகள் நிலைப்பாடாகும்...

♦ ஸலாத்துன் நாரிய்யா என்பது ஆரிபுபில்லாஹ் ஸெய்யது இப்றாஹீம் அத்தாஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும். (இவர்கள் ஸாதுலிய்யாத் தரீக்காவின் ஒரு முக்கியமான செய்கு ஆவார்கள்) இந்த ஸலவாத், மொராக்கோ பகுதியில்  “ஸலவாத்துத் தாஸீ” என்று பெயரும் சொல்லப்படுகிறது.

மொராக்கோ நாட்டினல் குழப்பங்கள்,சோதனைகள் ஏற்படுத்துகின்ற போது தூய ஆடை புனைந்து, நறுமணம் பூசி,மனத்தூய்மையோடு இந்த ஸலவாத்தை 4440 அல்லது 4444  தடவைகள் ஓதுவர். நெருப்பு,பஞ்சை எவ்வளவு வேகமாக கறித்து அழித்து விடுமோ அது போல் இந்த ஸலவாத்துடைய பயனால் சோதனைகள் அகலும், தேவைகள் நிறைவுபெறும். எனவேதான் ஸலாத்துன் நாரிய்யா 'நெருப்பு ஸலவாத்' எனப்பெயர் கூறி சொல்லப்பட்டது.

♦ இமாம் செய்னுல் ஆப்தீன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்படி ஸலவாத்தை ஓதியதாக
ஹஸீனத்துல் அஸ்ரார் என்ற நூலில் பதிவாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கஷ்டங்கள் நீங்க, தேவைகள் நிறைவேற இந்த ஸலவாத் பரீட்சித்துப் பார்த்து பலன் தருகின்ற ஒன்று என பல அறிஞர்களும் கருத்து வேறுபாடின்றி கூறுவதாக
“ஸஆதத்துத் தாரைன்” என்ற நூல் அறிவிக்கிறது. கஸீனத்துல் அஸ்ரார் எனும் நூல், மெஞ்ஞானத் துறை துலக்கிய ஆத்மஞான வள்ளல்கள் இதனை “மிப்தாஹுல் கன்ஸுல் முஹீத்”சூழ்ந்திருக்கும் கஜானாவின் திறவுகோல் எனப் பெயர் சூட்டியுள்ளதாகக் கூறுகிறது.

♦ இந்த ஸலவாத்தை ஒரு நாளைக்கு 41 தடவைகள் ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டால் நினையாப் புறத்திலிருந்து ரிஸ்குகள் அவனைத் தேடிவரும்”என அல்லாமா தூனூசி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், தொழுகைக்குப் பின்னர் 11 தடவைகள் இதனை வழக்கமாக ஓதி வருபவர் குறைவற்ற ரிஸ்கு கிடைக்கப்பெருவதோடு மேலான அந்தஸ்துகளையும் அடைவார்
என மகான் தைனூரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள்,

திருமறை குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய அல்லாமா குர்துபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறிகின்றார்கள். “யாராவது இதனை தினமும் 41 அல்லது 100 முறை வழக்கமாக ஓதி வந்தால் அவரது துயரங்கள் அகலும். கஷ்டங்கள் இலேசாகும். அவர் அந்தஸ்து உயர்வடையும் ரிஸ்கு விசாலமாகும் மக்களிடம் இவரது கூற்று ஏற்றுக்கொள்ளப்படும். இவர் இறைவனிடம் இறைஞ்சும் துஆக்கள் வீணாகாது நிறைவேறும்.இவை மன அடக்கத்தோடும்,உண்மை விசுவாசத்தோடும் உளத்தூய்மையோடும் கேட்கும் போதுதான் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். இந்த ஸலவாத்தை ஓதுவதின் பரக்கத்தினால் நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணுகின்ற பாக்கியத்தினைப் பெறமுடியும். “சுந்தரத் திருநபியின் சந்திர திருவதனத்தை கனவில் பார்க்கின்ற பேற்றினைப் பெறுபவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகுத் தோற்றத்தினை நேரில் பார்க்கும் பாக்கியத்தினைப் பெறுவார் என்று கூறுகிறார்கள்.
(நூற்கள் அப்ழலுஸ் ஸலவாத், கஸீனதுல் அஸ்ரார்)

♣ ஸலாத்துன் நாரிய்யாவின் பொருள் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணானவையா?  என்பது குறித்து இனி ஆராய்வோம்

இறைவா! எங்கள் தலைவர் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் மீது பூரணமான ஸலவாத்தையும், நிறைவான ஸலாமையும் சொல்வாயாக! அந்த அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொருட்டால் முட

ிச்சுகள் அவிழும்;கஷ்டங்கள் அகலும்; தேவைகள் நிறைவேறும்; ஆசைகள் பெற்றுக்கொள்ளப்படும்; நல்ல முடிவுகள் கிட்டும்; சிறப்பான அண்ணார் திருமுகத்தின் பாக்கியத்தால் மேகங்கள் மழை பெய்விக்கும். அன்னார் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் வினாடிகள் தோறும் இறைவா! நீயே அறிந்திருப்பவற்றின் எண்ணிக்கைக்கு நிகராக (ஸலவாத்து, ஸலாம் சொல்வாயாக!) என்பது இந்த ஸலவாத்தின் பொருள்! முடிச்சுகள் அவிழ,கஷ்டங்கள் அகல, தேவைகள் நிறைவேற, நல்ல முடிவுகள் கிட்ட,ஆசைகள் பூர்த்திபெற அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு வஸீலாவாக அமைந்துள்ள ஒரு ஸலவாத்தாகும்.

♣ அவர்களது பொருட்டால் மேகம் மழை பெய்விக்கின்றது என்று இந்த ஸலவாத்தில் கூறுகின்றோம். இப்படி கூறுவது சரிதானா?

♦ அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறுகின்றார்கள்.“என்னுடைய உம்மத்தில் 30 அப்தால்கள் இருப்பர். அவர்கள் பொருட்டினால்தான் நீங்கள் மழை பொழிவிக்கப்படுகின்றீர்கள்.அவர்களைக் கொண்டே நீங்கள் உதவி செய்யப்படுகின்றீர்கள்”
(அறிவிப்பாளர் : உப்பாதா இப்னு ஸாமித், நூல் : தப்றானி)

♦ நம் நாட்டில் 40 அப்தால்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மௌத்தாகிவிட்டால் வேறு ஒருவர் அவ்விடத்தில் நியமிக்கப்படுவர்.அவர்களைக் கொண்டே மழை பொழிவிக்கப்படுகின்றது. விரோதிகளுக்கு எதிராக உதவி அளிக்கப்படுகிறது. ஷாம் மக்களுக்கு இவர்கள் மூலமாக 'அதாப்' வேதனை நீக்கப்படுகிறது”
(அறிவிப்பாளர் : அலி ரழியல்லாஹு அன்ஹு நூல் : முஸ்னது அஹ்மத்)

இந்த நபிமொழிகள் அப்தால்களின் பொருட்டினால் மழையும்,உதவியும், வெற்றியும் இறைவனால் அளிக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்துகிறது இறைவனுக்கே சொந்தமான உதவி புரிதல், மழை பெய்வித்தல், வெற்றி தருதல் போன்ற தன்மைகள்,அப்தால்கள் பொருட்டைக் கொண்டு நடைபெறுகின்றன என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களே கூறினார்கள். அல்லாஹ் தன் நபிமார்கள், இனிய நேசர்களுக்கு வழங்கிய சிறப்புகள் இவை! அந்த அடிப்படையில்தான் ஸலாத்துன் நாரிய்யாவின் வார்த்தைகள் அமைந்துள்ளன.. எனவே ஸலவாதுக்களில் ஒன்றான "ஸலாதுன் நாரிய்யா" ஒரு இஸ்திகாதா, வஸீலா என்ற அடிப்படையில் அதாவது ஸலவாத் பொருட்டினால் இறைவனிடம் உதவி தேடி  ஓதலாம் என்பது தெளிவாகின்றது...

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.