Tamil Islamic Media ::: PRINT
நம்மைச் சுற்றியும் சோமாலிய குடும்பங்கள்.

சென்ற ரமழானில் (2015) முகநூல் உலகை ஆட்கொண்ட மூத்த சகோதரர் Engr Sulthan அவர்களின் கண்ணிரை வரவழைத்த பதிவு
***************

சென்னையில் தலை நோன்பு அன்று..
இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது..
தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்..
மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது..


தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது தான் கவனித்தேன் ஒரு பெண், தன் இரு பெண் குழந்தைகளுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்..இடை இடையே கடைக் காரரிடம் கை நீட்டி எதோ கேட்பதும், அவர் வியாபார மும்முரத்தில், இரும்மா தருகிறேன் என எரிச்சல் கலந்த கோபத்தில் பதில் சொல்வதுமாக நேரம் போய் கொண்டிருந்தது..

நான் அந்த பெண்ணிடம் நோன்பா என்றேன்..ஆம், இந்த இரு குழந்தைகளும் நோன்பு தான். பள்ளியில் கஞ்சி வாங்கி விட்டேன்..புள்ளைங்க வடை வேணும்னு கேக்குறாங்க..அதான் தூள், உடைந்தது என ஒதுக்கப்படும் வடைகள் இலவசமாக தருவார்..அதற்காக தான் காத்திருக்கிறேன் என்றார்...
பிள்ளைகளின் முகத்தில் சோர்வும், கண்களில் பசியின் தாக்கமும் தெரிந்தது..
ஒரு முடிவுக்கு வந்தவனாக நான் கையில் வைத்திருந்த வடை பார்சலை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, கடைக்காரரிடம் இந்த மாதம் முழுவதும் நான் வாங்கும் அயிட்டங்களை இந்த பெண்ணுக்கு கொடுத்து விடுங்கள்..நான் காசு மொத்தமா தந்து விடுகிறேன் என சொல்லி விட்டு, அந்த பெண்ணிடம் தினமும் வந்து வாங்கி கொள் என சொல்லி வீட்டுக்கு திரும்பும் போது அந்த பெண், வாப்பா நீங்க ஒன்னும் வாங்காம போறீயளே என ஒரு ஆதங்கத்துடன் கேட்டதும், அந்த...அந்த பரிவு நிறைந்த வாப்பா என்ற வார்த்தை என்னை கலங்கடித்தது.. இல்லேம்மா அப்புறமா வாங்கி கொள்கிறேன் என நடையை கட்டினேன்.

வீட்டில் வெறுங்கையுடன் வரும் என்னைப் பார்த்து, மனைவி, ஏங்க நோன்பு திறக்க ஒன்னும் வாங்காம வந்துட்டீங்க என்றாள்..
வாங்கினேன், என்று சொல்லி முடிக்கும் போதே அப்போ எங்கே மறந்து வச்சுட்டு வந்தீங்க? என்று எதிர் கேள்வி கேட்டவளிடம், வாங்கி இன்னொரு மகளிடம் கொடுத்து விட்டேன்.என்று சொல்லி முடிக்கும் முன்பே கண்களில் என்னை அறியாமலே கண்ணீர்..உள்ளம் உடைந்து விம்மி விம்மி அழுகிறேன்..மனைவியும் நடந்த விஷயங்களை ஓரளவு யூகித்து கொண்டு சரி சரி விடுங்க.. கஞ்சியும், ஜூசும் இருக்கு அது போதும்..எண்ணை அயிட்டங்கள் உங்களுக்கு ஒத்துக்காது தானே..என்றாள்..நானும் மீதியுள்ள நாட்களிலும் இதையே கடை பிடிப்போம்..கஞ்சியும் ஜூசும் போதும் என்றேன்..

நினைத்து பார்த்தேன்..அந்த சோமாலி சகோதரன் கேட்ட கேள்வி நெஞ்சில் சம்மட்டியாய் தாக்கியது.. "சஹரும் இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுமா?" என்றானே..அதை நினைத்தேன் அது தான் அந்த அழுகை..


நம்மை சுற்றிலும் எத்தனை எத்தனை சோமாலிய குடும்பங்கள்..
சஹருக்கும் இப்தாருக்கும் வழியின்றி..
இதை பெருமைக்காகவோ, அனுதாபத்தை தேடியோ எழுதவில்லை..
என் ஒருவன் வாயைக் கட்டி இன்னொரு குடும்பம் வாழ வழி செய்யலாமே..

என்னோடு இணைந்திருக்கும் 11 ஆதரவற்ற குடும்பத்தில் புதிய வரவாக மேலே சொன்ன பெண்மணியின் குடும்பமும் சேர்ந்து கொண்டது..குடும்பத் தலைவனின்றி, தவிக்கும் கொடுமை, வருமானத்திற்கே வழி இல்லாத நிலை..
இவர்கள் தான் இன்று என் உலகம். அந்த மிகச் சிறிய உலகத்தில் என்னை நான் முடக்கி கொண்டேன் எனலாம்..முடிந்த வரை பகிர்ந்து உண்கிறோம்..அவர்களின் சுக துக்கங்களில் அவர்களில் ஒருவனாக இருக்கிறேன்..இந்த வாழ்க்கையும் எனக்கு நிம்மதியாகத் தான் இருக்கிறது..

இதை இங்கு சொல்வதற்கு காரணமே, ஆடம்பர இப்தார், சஹர் உணவுகளை முடிந்தளவு, வீணாக்காமல் குறைத்து இன்னொரு ஏழை குடும்பத்தை வாழ வைப்போமே!

நான் செய்கிறேன், ஆகவே நீங்களும் இது போல் செய்யுங்கள் என்று, யாரையும் நான் கட்டாயப் படுத்தவில்லை..
அந்த சோமாலிய சகோதரரின் கேள்வி என்னை ரெம்பவும் பாதித்து விட்டது..அதன் வெளிப்பாடே இந்த பதிவு..
என்ன நான் சொல்வது சரி தானே??

#எளியவர் ஏற்றம் பெற இறைஞ்சுகிறேன் யா அல்லாஹ்!!.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.