Tamil Islamic Media ::: PRINT
குறைகளை மறைத்தல்

உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங்குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் குழப்பவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.

➡குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)

➡(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அல்குர்ஆன் 49:12)

➡நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எனது உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். அந்தரங்கத்தை பகிரங்கப் படுத்துபவனைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு செயலைச் செய்கின்றான். அல்லாஹ் அவனது செயலை மறைத்துவிட்ட நிலையில் காலையில் அவன் ''ஓ! நேற்றிரவு நான் இன்னின்ன காரியத்தைச் செய்தேன்'' என்று கூறுகிறான். அல்லாஹ் அவனது குறையை நேற்றிரவு மறைத்திருந்தான், அல்லாஹ் மறைத்ததை இவன் காலையில் பகிரங்கப்படுத்துகிறான்.'' (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

➡ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)

➡மக்களின் குறைகளை தேடித்திரியும் வீணர்களைக் கண்டிப்பதில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றி அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். வீட்டுக்குள்ளிலிருந்த பெண்கள்கூட செவியயேற்கக்கூடிய பிரசங்கமாக அது இருந்தது.

➡நபி (ஸல்) அவர்கள் ''நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கௌரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.'' என்று கூறினார்கள். (மு·ஜமுத் தப்ரானி)

➡நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''தனக்குத் தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகியிருப்பது ஒருவரின் அழகிய இஸ்லாமியப் பண்பில் உள்ளதாகும்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் தங்களது இதயத்தில் ஈமான் நுழையாமல் நாவினால் மட்டும் ஈமான் கொண்டவர்களே! என்று கூறியது எவ்வளவு கடுமையான வார்த்தை? இது பிறர் குற்றங்குறைகளை தூண்டித் துருவி ஆராய்பவர்கள் உண்மையில் நாவினால் மட்டுமே ஈமான் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது இதயத்தில் ஈமான் நுழைந்திருந்தால் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற பொருளைத் தருகிறது.

இந்த இழிவான குணமுடையோர் பிறரை குறை காணுவதை மிக எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அது மகத்தான குற்றமாக உள்ளது. தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார்

தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல்  பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார். இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றிப் பிடித்துக் கொள்வார்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.