Tamil Islamic Media ::: PRINT
உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
தமிழில் : அ. கான் பாகவி
 
 
சுலைமான் அல்கானூனீ
———————————–
துருக்கி நாட்டின் பத்தாவது மன்னர் சுலைமான் அல்கானூனீ. உஸ்மானியப் பேரரசர்களில் மிக முக்கியமானவரான சுலைமான், தமது ஆட்சிக் காலத்தில் (கி.பி.1520-1566) ஐரோப்பா, ஆசியா நாடுகள் மீது 13 முறை நேரடித் தாக்குதலை எதிர் கொண்டு முறியடித்தவர்.
 
இவரது ஆட்சியில் தலைநகர் இஸ்தான்பூல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வாசலுக்கு இமாமைத் தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்துவார்.போட்டி நடக்கும். போட்டியில் வென்று முதலாவதாக வருபவரே இமாமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
 
இந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தகுதிகளை அவர் நிர்ணயித்திருந்தார். அத்தகுதிகள் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் தலைமைப் பண்புக்குச் சிறந்த முன்னுதாரணமாகும். அப்படியானால் அது எவ்வளவு பெரிய பொற்காலம்.
 
தகுதிகள் என்ன?
 
1. அரபி, ஃபார்சி, லத்தீன், துருக்கி ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். (பேசத் தெரிந்தால் மட்டும் போதாது; மொழியாற்றல் வேண்டும்)
(இவற்றில் ஃபார்சீ, லத்தீன், துருக்கி ஆகியவை அந்நாட்டிற்கும் அக்காலத்திற்கும் அவசியமானவை).

2. திருக்குர்ஆன், தவ்ராத் (தோரா), இன்ஜீல் (பைபிள்) ஆகியவற்றைக் கற்றிருக்க வேண்டும்.

3. தற்காலப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) அளிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.

4. தற்காலப் போர்க்கலை அறிந்திருக்க வேண்டும்.

5. கணிதம் (விணீtலீs) இயற்பியல் (றிலீஹ்sவீநீs) ஆகிய கலைகளைப் பள்ளிவாசலில் கற்பிப்பதற்காக நன்கு கற்றிருக்க வேண்டும்.

6. நல்ல தோற்றமுள்ளவராக இருத்தல் வேண்டும்.

7. குரல் வளமிக்கவராக இருத்தல் வேண்டும்.
இமாம் என்பவர் தொழுகை எனும் வழி பாட்டிற்கு வழிகாட்டியாக, தொழுகையாளிகளின் செயல்களுக்குப் பொறுப்பாளியாகத் திகழ்கிறார். அதனால், தொழுகை தொடர்பான எல்லா விசயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் என்பவர் சமுதாயத்தின் தகுதி வாய்ந்த முக்கியப் புள்ளி ஆவார். நாட்டிற்கும் சமுதாயத்திற்குமான தோற்றத்தை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. எனவே, அவரிடம் வேறுபல தகுதிகளும் இருப்பது அவசியம்.

இமாம்குர்ஆனை மட்டும் கற்றால் போதாது, தவ்ராத், இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களையும் அறிந்திருக்க வேண்டும். இன்றும் புவியில் இருக்கும் இரு மதங்கள் அவை. நாம் வாழும் நாட்டிலேயே அம்மதத்தார் வாழ்கின்றனர்.

அவர்களில் சிலருக்கு இஸ்லாம் பிடிக்கிறது. வேறுசிலரோ இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். இது பொதுமக்களிடையே சலசலப்பை உண்டாக்கிவிடுகிறது. இந்நிலை யில், வேதக்காரர்களின் வாதங்களை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டு முறியடித்தாக வேண்டும்.

இதற்கு மேம்போக்கான அறிவு போதாது, அவர்களின் வேதம் பற்றி சற்று ஆழமாக ஆராய்ந்திருக்க வேண்டும். அப்போதுதான், முஸ்லிம் பொதுமக்களின் நம்பிக்கையைக் காக்க முடியும்.

நபித்தோழர் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் யார் தெரியுமா? வேதக்காரராக இருந்தவர். நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களின் நிலையை அறிய வருகிறார். மக்களிடையே பிரசித்தி பெற்று விளங்கிய அதீ வந்தவுடன், இதோ! அதீ பின் ஹாத்திம்! அதீ பின் ஹாத்திம்! என்று மக்கள் கூவினர். “அதீ பின் ஹாத்திமே! இஸ்லாத்தில் இணைந்துவிடு! சாந்தி அடைவாய்” என்று நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.
 
மூன்று முறை இதையே சொன்னார்கள்.
அவரோ, “நான் ஒரு மதத்தில் இருக்கிறேன்” என்றார். உடனே நபியவர்கள், உன்னைவிட உன் மதத்தை நான் நன்கு அறிந்தவன் என்றார்கள். அப்படியா என்று வியப்போடு வினவிய அதீயிடம், நீர் ரகூஸ் மதத்தில் (யூதம்-கிறித்தவம் இடையிலான ஒரு மதம்) உள்ளவர் அல்லவா? உன் சமூகத்தாரின் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உண்பவரல்லவா?” என்று கேட்டார்கள். அவர் ஆச்சரியத்தோடு `ஆம்’ என்றார்.
இது உங்கள் மதத்தில் அனுமதிக்கப்படவில்லையே என்று நபியவர்கள் கேட்டதுதான் தாமதம்! அதீ பணிந்துவிட்டார். உங்களில் ஒருவர் மற்றவரை இறைவனாக ஆக்கிக் கொண்டுள்ளீர்களே! என்ற அடுத்த கணையை நபியவர்கள் வீசினார்கள். அதற்கு அதீ, எங்களில் யாரும் யாரையும் வழிபடுவதில்லையே! என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், உங்கள் மதத்தலைவர்கள், உங்களுக்குத் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யப்பட்டதாகவும் மாற்றவில்லையா? அதை நீங்கள் ஏற்பதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் வழிபாடு என்றார்கள். (முஸ்னது அஹ்மத்) 
 
எதிரியின் மதத்தையும் வேதத்தையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் பதில் சொல்ல முடிந்தது. எதிரி உணர்ந்தார். தோழர் ஆனார். தீர்வுக்காகப் பழைய வேதங்களை அணுகக் கூடாது என்றுதான் நபியவர்கள் தடை செய்தார்களே தவிர, தெளிவுக்காகப் பழைய வேதங்களைப் படிப்பதற்கு தடை விதிக்கவில்லை.
 
இன்றையப் பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் அறிவு இமாமுக்கு மிக முக்கியமானது. பிரச்சினைகள் புதிது புதிதாக முளைக்கின்றன. புதிதாகச் சிந்திக்கவே கூடாது என்று தடைபோடுவது முடக்கம் ஆகும். ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக ஆகாது. மார்க்கம் எங்கே அப்படிச் சொன்னது?
இயற்பியல், கணிதம் போன்ற கலைகளும் இமாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. இக்கலைகளுக்குப் பின்னால், கட்டடம், வளர்ந்து வரும் தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் என ஏராளமான சமுதாய வளர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன. இத்துறைகளில் சமுதாயத்தை முன்னேற்றுவதில் இமாமுக்குப் பங்கு இருக்க வேண்டும்.
பள்ளிவாசலில் பலர் ஒன்றுகூடுகின்றார்கள். படித்தவர், படிக்காதவர், பல்கலைக்கழக பட்டதாரி, இராணுவ வீரர், ஆலிம் எனப் பலவகை மனிதர்களும் தொழுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இமாம் வழிகாட்டக் கடமைப்பட்டவர். அவருக்கு மார்க்கமும் தெரிந்திருக்க வேண்டும். உலகமும் தெரிந்திருக்க வேண்டும். தாய்மொழியும் தெரிந்திருக்க வேண்டும். உலக மொழியும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியாக வழிகாட்ட இயலும்.
 
இவ்வாறு இல்லாதபோது மார்க்கமும், உலகமும், மார்க்கமும் அறிவியலும், மார்க்கமும் அரசியலும் மோதிக் கொள்கின்றன. மார்க்க அறிஞர்களும் உலக அறிஞர்களும் பகைத்துக் கொள்கின்றனர். மார்க்கத்தை மக்கள் விரோதமாக, விநோதமாகப் பார்க்கின்றனர்.
 
மன்னர் சுலைமான் விதித்த இந்தத் தகுதிகள் இன்று முஸ்லிம் நாடுகளிலாவது இமாம்களிடம் உண்டா? அவர்களுக்கு அரபிமொழி தவிர வேறு உலக மொழிகள் தெரியுமா? அரபி மொழியைக்கூடத் தெளிவாகப் பேச முடிகிறதா?
 
இதற்கு என்ன தீர்வு? ஷரீஅத் கல்லூரியின் (அரபிக் கல்லூரியின்) எல்லைக்குள் மேற்சொன்ன கலைகள் ஏதேனும் ஓர் அடிப்படையில் இடம் பெற வேண்டும். இமாம்கள் வல்லவர்களாக வெளிவர வேண்டும். அலைக்கழியும் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும். இது ஒரு பாரம்பரியம் மிக்க, அறிவு சார்ந்த சமுதாயம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 
அக்காலம் எப்போது வரும்?
 
பின்குறிப்பு :
 
எல்லாம் சரி! இத்தனை தகுதிகள் உள்ள இமாமுக்கு துருக்கி அரசு எவ்வளவு கௌரவம் அளித்திருக்கும்! அதையும் யோசிக்க வேண்டுமல்லவா! இவ்வாண்டு ஹஜ்ஜூக்கு சென்றிருந்தபோது மறைந்த முஃப்தி ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களின் வீட்டை மக்கா புறநகர்ப் பகுதியில் பார்த்தேன். சென்னை அமீர் மஹாலைவிடப் பெரியது. இப்போதுள்ள இமாம் சுதைஸி அவர்களின் இல்லம் மாளிகைபோல் காட்சியளித்தது.
 
 
 
 
-------
 
சுலைமான் உருவாக்கிய பள்ளிவாசல்
 
 
உலகப் புகழ்பெற்ற சுலைமானியா பள்ளிவாசல் இன்றும் துருக்கி தலைநகர் இஸ்தன்புல்லில் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கி.பி. 1558 இல் கட்டிமுடிக்கப்பட்ட இப்பள்ளி வாசலை அன்றைய நாட்களில் உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர் சினான் பாஷா என்பவர் தான் வடிவமைத்தவர்.
 
பள்ளிவாசல்கள் எப்படி அமையப் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் கட்டி உலகிற்கு காட்டித் தந்தார்களோ அதே போன்ற சிறப்புகளுடன் இந்தப் பள்ளி சுலைமான் அல்கானூனி அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது.
 
பள்ளிவாசலில் இலவச மருத்துவமனை, ஆரம்பப் பாடசாலை, பொதுக் குளியலறை, வழிப்போக்கர்கள் தங்குமிடம், மதரஸா, ஹதீஸ் கற்பதற்கான சிறப்பு உயர்கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி, ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் மையம் என்று மக்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிணைந்த அனைத்து அம்சங்களும் அந்தப் பள்ளிவாசலில் அமைந்திருந்தது.
 
 


The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.