“அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான்.
“தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி போனை எடுக்கச் சொல்லு. பினாங்குக்கு கனக்ஷன் கொடுக்கப் போறேன்.” “தம்பி ! நம்மல கவனிச்சிருப்பா !” அவசரப்பட்டாள் ஒரு பெண்மணி.
அபுலைச் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு அடுத்த எஸ்.டி.டி கெளண்டருக்குச் செல்லப் புறப்பட்ட டிப்டாப்பான ஒருவரை “பிரதர் – பிளீஸ் கம் இன், ஜஸ்ட் டென் மினிட்ஸ். திஸ் இஸ் பிஸி ஹவர்ஸ். பிளீஸ் கம் இன்” என்று அழைத்து உட்கார வைத்தான். எஸ்.டி.டி கெளண்ட்டர் தெருவுக்கு பக்கத்துல வந்துவிட்டது இப்போது அரைநாள் வரை கூட காத்திருந்து பொறுமையுடன் பேசித் திரும்பியவர்கள், இப்போது அரைமணி நேரம் காத்திருப்பதற்கே பொறுமை இழக்கிறார்கள்.
அபுல் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. அத்தா மெளத்துக்குப்பின் குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு. அவன் பெற்றிருந்த பி.எஸ்.ஸி பட்டம் வேலைக்கு உதவவில்லை. அம்மா தோது செய்து தந்த பணத்தை விசா ஏஜெண்டிடம் கொடுத்து விட்டு, டென்ஷனோடு காத்திருந்து கடைசியில் ஏமாறுவதைவிட அல்லது ஏதோ ஒரு கட்டுமானத் தொழிலாளியாய் அரபு மண்ணில் அவதிப்படுவதை விட, அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தன்னுடன் படித்த எட்வினின் சித்தப்பாவுடைய உதவியால் இந்த கெளண்ட்டரை ஆரம்பித்தான். அஞ்சல் அலுவலகத்தில் ஆபீஸரான அவர், எஸ்.டி.ஓ.டி யான தனது அண்ணனிடம் சிபாரிசு செய்து இதற்கேற்பாடு செய்து கொடுத்தார்.
காலத்தால் செய்த உதவி. ரத்த உறவுக்காரர்களிடம் கூட கமிஷன் பேசும் இந்தக் காலத்தில் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் மனிதாபிமானப் பரிமாறலைக் காட்டினார் அந்த நல்லவர்.
அபுல் குடும்பத்தை இப்போது நிலை நிறுத்திவிட்டான். தங்கை கரை சேர்ந்து விட்டாள். பழைய வீட்டை ஓரளவு பழுது பார்த்து வசதிப்படுத்தி விட்டான்.
இயன்ற வரை கெளண்ட்டரை அழகுபடுத்தி விரிவு படுத்திவிட்டான். அவனது கடமை உணர்வு, பழக்க முறை பல நூறு வாடிக்கையாளர்களை அவனிடம் கொண்டு வருகிறது. பக்கத்துக் கிராமங்களில் எஸ்.டி.டி வசதியில்லாதவர்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து வரும் செய்திகளைக் குறித்து வைத்திருந்து சொல்லி உதவி அனைவரிடமும் நல்ல பெயர்.
ப்ளஸ் டூ படித்துவிட்டு படிக்க மறுத்து ஊர் சுற்றித் திரிந்த தம்பி அனஸுக்குக் கூட பயிற்சி கொடுத்து ஆளாக்கி விட்ட நிம்மதி. சிரமமில்லாமல் குடும்ப நகர்ச்சி. உள்நாடு – வெளிநாடு என்று பிரித்து உள்ள இரண்டு தொலைபேசித் தொடர்புகளையும் இணைத்து படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் அபுல்.
திடீரென கண்ணாடிக் கதவை படாரெனத் திறந்து கொண்டு அந்தக் கூட்டம் நுழைந்தது. தொடர் வாடிக்கை என்ற அளவில் மிக நல்ல பார்ட்டி. ஆனால் இங்கிதம் தெரியாமல் வளவளவென்று பேசக் கூடியவர்கள். ஆள் மாற்றி ஆள் குறைந்தது அரை மணிநேரமாவது பேசி விடுவார்கள். காத்திருப்பவர்கள் பொறுமையை இழந்து தவிப்பார்கள்.
“தம்பி மருமகனைக் கூப்பிடுங்க…” என்று படபடத்தார் அந்தக் கூட்டத்தின் தலைவர், பக்கத்து கிராமம். கோலலம்பூர் மளிகை கடை ஒன்றில் பணிபுரியும் அவரது மருமகன் ரபீக்கின் நம்பர் அபுலுக்கு மனப்பாடம்.
“கொஞ்சம் உக்காருங்கத்தா. முன்னாடி வந்தவுங்க ரெம்ப நேரம் காத்துக்கிட்டிருக்காங்க. பத்து நிமிஷத்துல புடிச்சுத்தாரேன் உட்காருங்க! நீங்கள்லாம் உள்ள போங்கம்மா” என்றான் அபுல். உடன் வந்த பெண்கள் அசைவதாயில்லை. “ரொம்ப அவசரம் தம்பி ! சொணங்க முடியாது சீக்கிரம்” அவர் படபடத்தார்.
“ஒரு நிமிஷம்த்தா ! கொஞ்சம் பொறுங்க.” “நாங்க வேணுன்டா அடுத்த எடத்துக்குப் போகவா?” அவர் தனது வழக்கமான பயமுறுத்தலை பிரயோகித்தார். “போங்களேன்” என்று சொல்ல வாய் முணுமுணுத்தது. ஆனால் தொழிலை நிலைப்படுத்தும் கடமை உணர்வு தடுத்தது. கிராமப்புறத்து ஆசாமி. இங்கிதம் தெரியாதவர். சொல்லில் புரிய வைப்பது சிரமம். நாம் தான் நெளிவு சுளிவாக நடந்து கொள்ள வேண்டும்.
“என்னத்தா இப்படி பேசுறீங்க? இன்னக்கி நேத்துப் பழக்கமா? கொஞ்சம் பொறுங்க இந்தா வந்துட்டேன். உங்கள் மாதிரி பெரியவுங்கள நம்பித்தானே நாங்க தொழில் செய்யுறோம்.” அபுல் அவரை வார்த்தைகளால் அமைதிப்படுத்தினான்.
காத்திருந்த ஒரு சிலர் அபுலின் தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டு, “சரி, சரி ! அவரப் பேசச் சொல்லுங்க” என்று பெரிய மனதுடன் வழி விட்டனர். திமுதிமுவென்று அந்தக் கூட்டம் கண்ணாடிப் பெட்டிக்குள் நுழைந்தது. முதலில் அந்த நபர் உரத்த குரலில் மருமகனிடம் பேசினார்.
“அத்தா ! ஒங்க அம்மாக்காரி புள்ளய ஆடுமாட்ட அடிச்சமாதிரி அடிச்சுப் போட்டுட்டா ! டாக்டர் கிட்ட கொண்டு போய்க் காண்பிச்சோம். இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருக்கனும்கறார். மாசா மாசம் நீங்க பணம் அனுப்புற கொழுப்பு அவளுக்கு. அவள அடக்கி வையுங்க. உங்க மொகத்துகாக இன்னிக்கி உட்டுட்டோம். இல்லேண்டா நாரு நாராப் பிச்சிருப்போம்.” அவர் தன் மருமகன் நேரில் நிற்பது போல நினைத்துக் கொண்டு கத்தினார்.
உட்கார்ந்திருந்த அனைவரும் அந்த நாகரீகமற்ற கூச்சலை முகம் சுருக்கி வேடிக்கை பார்த்தனர். அபுல் அதிர்ந்தான். காரணம் அவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்ன அவரது மகள் கொழுக்கட்டைபோல் அங்கே நின்று கொண்டிருந்தாள். முகத்தில் வினையமான புன்னகை.
“போனை இங்க கொடுங்க” என்று கையில் வாங்கிக் கொண்ட அந்தப் பெரியவரின் மனைவி, “அத்தா! இதுக்கு மேல் எம்புள்ளைய நான் அந்த ராட்சசிகிட்ட உடவே மாட்டேன். எங்க வூட்லேயே புள்ள இருந்துட்டுப் போகட்டும். நீங்க பணத்தை எங்களுக்கே அனுப்பிடுங்க. அந்த கெழட்டுச் சிறுக்கிய காயப்போடுங்க, அப்பத்தேன் அவளுக்குப் புத்தி வரும்.
அவர் மாற்றி அவள், அவள் மாற்றி இவர் மருமகனை ஒரு ஒழுங்கு செய்து விட்டு போனை வைத்தார்கள். ஆயிரத்து எண்ணூறு ரூபாயை அலட்டலில்லாமல் தூக்கிப் போட்டார்கள். சர்வ அலட்சியமாக அங்கிருந்து சென்றார்கள். பாவம், அந்த மருமகன்.
குடும்பத்தைப் பிரிந்து ஓய்வு ஒழிச்சலின்றி வெளிநாட்டில் கஷ்டப்படும் போது, இங்கிருந்து அடிக்கடி இப்படி திராவக வீச்சுகள். அவனது மன அமைதிக்கு வெடி வைக்கும் குண்டுகள்.
இந்தக் கூட்டம் கடந்த சில மாதங்களாக அடிக்கடி வந்து இப்படி அந்தப் பையனின் தாயைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறது. அவர்களுடைய உரையாடலிலிருந்து மருமகனை அவனது தாயிடமிருந்து நிரந்தரமாக அபகரித்துக் கொண்டுவிடும் முஸ்தீபுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
அபுல் அதை மறந்துவிட்டு அடுத்த அலுவலில் முனைந்தான். ஒரு அரைமணிநேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான பெண்மணி விதவைத் தோற்றம். நெற்றியில் கைகளில் காயங்கள் அழுத முகக்குறி.
“என்னம்மா?” என்றான். கூட்டமும் கொஞ்சம் குறைந்திருந்தது. அந்தப் பெண் தயங்கித் தயங்கிப் பேசினாள். “மேலக்காட்டுச் சனங்க வந்து போன் பண்ணாகலா தம்பி?” “யாரு அந்த மீசக்காரரா?” என்றான் அபுல் “ஆமா தம்பி ! – என்ன பேசுனாங்க? எம்மகன் என்ன சொன்னான்?” படபடத்தாள் அவள். அபுல் தர்ம சங்கடத்தில் நெளிந்தான்.
அவர்கள் பேசும்போதே தவறு செய்வது புரிந்ததுதான். இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக் கட்டிச் சொல்லி குழப்பம் விளைவிக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்ததுதான். இருந்தாலும், அவன் அந்த ரகசியத்தை இவளிடம் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. அது தொழில் ரகசியத்தை வெளியாக்கிய பாவம்.
பாவம் இந்தப் பெண்மணி ! மருமகளிடம் சரியான அடி வாங்கியிருக்கிறாள். அடித்துப்போட்டு விட்டு வந்து, தான் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் இருப்பதாக பொய்யுரைத்திருக்கிறாள் மருமகள்.
நியாயம் புரிகிறது. என்றாலும் தொழில் தர்மம்? ஒரு நிரந்தரமான வாடிக்கையாளருக்கு துரோகம் செய்து விட முடியுமா? செய்யலாமா? “அம்மா ! அவங்க என்ன பேசுணாங்கண்டு நான் கவனிக்கல. நீங்களும் போன் பண்ணி உங்க மகன் கிட்ட பேசுங்க” என்றான் சுருக்கமாக. “அவன் போன் நம்பர் தெரியாது தம்பி” “எனக்குத் தெரியும், போட்டுத் தரட்டா?” “எவ்வளவு செலவு ஆகும் தம்பி ! அவள் பரிதாபமாகக் கேட்டாள். “பேசுறதுக்கு தக்கன காசு வரும்மா, சுருக்கமாக பேசுனா நானூறு, ஐநூறு வரும்.” “நானூறு ஐநூறா !?” அவள் வியப்பில் வாய் பிளந்தாள்.
அவளுக்கு இதிலெல்லாம் அனுபவமில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அவள் மீது அனுதாபமும் அதிகரித்தது. “ஏன் கைல காசு இல்லியா? வேணுண்டா பேசிட்டுப் போங்க. நாளக்கி வந்து கொடுங்க” உதவ முன் வந்தான் அபுல்.
“இல்லே தம்பி ! மாசாமாசம் அவன் அனுப்புறதே ஐநூறுதான். அதையும் போனுக்குச் செலவழிச்சுட்டா மாசமுழுக்க எதவச்சு ஓட்டுறது?” அவள் ஏமாற்றத்தோடு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அபுலுக்கு வயிற்றைப் பிசைந்தது. அவளது முகத்தோற்றம். ஒரு மகனைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, கணவனையும் இழந்து நிற்கும் அனாதரவான இந்த நிலையில், மருமகள்காரி இந்த அளவு கொடுமை செய்கிறாள். பெற்றவளுக்கு மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத வக்ர மனசு. தனக்கும் கூட ஒரு நிலை இப்படி வரலாம் என்ற பய மில்லை, இறையச்ச மில்லை.
அபுலுக்கு மனசு கனத்தது. அந்தத் தாயின் சோகம் திரும்பத் திரும்ப நெஞ்சில் நிழலாடியது. நம்பரைச் சுழற்றினான். “மேலக்காட்டு ரபீக்கக் கூப்பிடுங்க” என்றான்.
“பிரதர் ! நான் எஸ்.டி.டி கெளவுண்டர்ஸ் இருந்து பேசறேன். கொஞ்ச முன்னாடி உங்க மாமனார், மாமியார் வந்து போன் பண்ணினாங்க. இப்பத்தேன் உங்க அம்மா வந்துட்டுப் போனாங்க. பிரதர் உங்க அம்மாவைப் பாக்கயில பரிதாபமா இருக்குது. போன் பண்ணக் கூட காசு இல்லே. உடல் முழுக்க காயம். ஆனா உங்க ஒய்ஃபுக்கு எந்த அடியும் பட்டதா தெரியல. கொழுக்கட்ட மாதிரி நின்னுக்கிட்டு தன்னோட அம்மாவும், அத்தாவும் பேசுறத வேடிக்கை பார்த்தாங்க. அவசரப்பட்டு உங்க அம்மா மேல கோபப்பட்டுறாதீங்க பிரதர். உங்க மாமாவால எனக்கு ரொம்ப வருமானம். நம்மகிட்ட வந்துதான் எப்போதும் ஐ.எஸ்.டி பேசுவாங்க. இருந்தாலும் எம்மனசு கேக்கல பிரதர். உங்க அம்மாவப் பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கு பிரதர்.” அவன் படபடவென்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான்.
அந்த மகனின் பதில் என்னவாக இருக்குமென்று கேட்கும் ஆர்வம் கூட அவனிடம் இல்லை. அவனது இந்தச் செய்கையால் ஏற்படப்போகும் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனநிலையில் அவன் இருந்தான். மனதில் அலாதியான நிம்மதி படர்ந்திருந்ததை அவன் உணர்ந்தான். ( நர்கிஸ் – ஜுன் 2015 ) |