மவ்லவீ. அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவீ
“உமது இறைவன் அவன் விரும்பியவற்றைப் படைக்கிறான். அவன் விரும்பியவாறே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை.” (அல்குர்ஆன் 28:68)
மனிதன் உலகில் வாழப் பிறந்துள்ளான். அவ்வாறு வாழப் பிறந்துள்ள மனிதர்களுள் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லையென்றே கருதுகின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தான் இவ்வாறு நினைக்கிறார்கள் என்பதில்லை. செல்வத்தின் உச்சநிலையில் இருப்பவர்களும் அவ்வாறே எண்ணுகிறார்கள். பொதுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வாழ்க்கை என்பது ஒரு காணல் நீராகவே கருதப்படுகிறது.
இந்நிலைக்கு காரணமென்ன வென்பதையும், அதன் தீர்வையும் மேற்காணும் இறைவசனம் குறிப்பால் உணர்த்துகிறது.
மனிதன் வாழத் துவங்கும் போது தனக்கு இறைவனால் பகுத்தளிக்கப்பட்ட வாழ்க்கைதான் அமையும் என்ற உண்மையை உணர மறந்து விடுகிறான். தனக்கு உயர்வான வாழ்க்கைதான் அமைய வேண்டுமென ஆசைப்படுகிறான். இறைவன் அவனுக்கு பகுத்தளித்ததைத் தாண்டி அவனது கற்பனைக் கோட்டை கட்டப்பட்டிருந்தால் அவன் ஏமாற்றமடைகிறான்.
‘நான் லட்சாதிபதியாக வளர்வேன். கோடீஸ்வரனின் மகளை மணப்பேன். மாளிகைகளை கட்டி மகிழ்வேன். எனது வாழ்வில் தோல்வி ஏற்படலாகாது. சிறு சிரமம் கூட என்னை சந்திக்கலாகாது’ என்பன போன்ற ஆசைகளை பெரும்பாலோர் மனதில் இடம் பெற செய்து விடுகிறார்கள். தான் ஆசைப்பட்டதைப் போன்று வாழ்க்கை அமையாத போது அவர்கள் துவண்டு விடுகின்றனர். தோல்வி கண்டதால் புலம்புகின்றனர்.
நான் அல்லாஹ்வின் அடிமை எனது வாழ்க்கை என்பது அவன் இட்ட பிச்சையே அவன் எத்தகைய வாழ்க்கையைத் தந்தாலும் நான் திருப்திப்பட்டுத்தான் ஆக வேண்டும். அவன் எனக்கு உயர்தரமான வாழ்க்கையைத்தான் தரவேண்டுமென அவனை நிர்பந்திக்கும் அளவு அவன் எனக்குக் கடமைப்பட்டா இருக்கிறான்? மனநிறைவான வாழ்க்கையை அவன் எனக்குத் தந்தால் நான் அவனுக்கு நன்றி செலுத்துவேன். மாற்றமாக வாழ்க்கை அமைந்துவிட்டால் எனது நிலைக்கும் கீழ்க்கோட்டில் இருப்பவர்களைப் பார்த்து நான் ஆறுதலடைவேன். இத்தகைய எண்ண ஓட்டம் உள்ளவர்களின் வாழ்க்கை நிறைவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே வாழ்க்கைப் பயணத்தின் தோல்விக்குக் காரணம் ஆசையும் தோல்வியே வரலாகாது என்ற வறட்டு சித்தாந்தமுமாகும்.
தோல்வியைத் தழுவச் செய்யும் எண்ண ஓட்டத்தில் இளைஞர்கள் மட்டும் ஏமாறவில்லை. அனுபவித்து விட்ட வயோதிகர்களும் ஏமாந்து தமது வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறார்கள் என்பதை பின்வருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஆதமின் மகன் முதுமையடைகிறான். இன்னும் நீண்ட காலம் வாழுவோமென்ற எண்ணமும், இதர ஆசைகளும் இளமையாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
தோல்வி வெற்றியின் முதற்படி
நடைபயிலும் குழந்தைகள் கீழே விழுந்தால் அவர்களின் பெற்றோர் இடிந்து போய் விடுவதில்லை. ‘பட்ட இடம் பெருக்கும்’ என்று இனிமையாக அவர்கள் உரைத்து விட்டு அடிபட்ட இடத்தை இதமாக தடவிக் கொடுப்பர். இளம் பிராயத்தில் ஏற்படும் சிறிய சிறிய காயங்கள் பிற்காலத்தில் ஏற்படும் பெரிய பெரிய காயங்களைத் தாங்கும் ஆற்றலைத் தரும் என்பதை பெற்றோர் நன்குணருவர். குழந்தைக்கு அது புரியவில்லையாயினும் அதுதான் உண்மையாகும்.
அது போன்றே மனித வாழ்வில் சம்பவிக்கும் தோல்விகள், சிரமங்களுக்கான காரணங்களை மனிதன் அறிய முடியாவிட்டாலும் அவனைப் படைத்த இறைவன் ஏதோ ஒரு நன்னோக்கோடு தான் அவற்றை ஏற்படுத்துகிறான் என்பதே உண்மை நிலையாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் தோல்வியும் ஒரு நன்மையாக இருக்கலாம் என்ற உண்மையை மனிதன் உணர்ந்து கொண்டால் தோல்வியையும் வெற்றியாக கருதும் மனப்பான்மை அவனுக்கு ஏற்பட்டு விடும். மேலும் தோல்வியும் வரலாமென்ற எதிர்பார்ப்பு மனிதனுக்கு தோல்வியைக் கண்டு துவளா நிலையை அளிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த அன்று அவர்களின் துணைவி ஹளரத் கதீஜா (ரலி) அவர்கள் பெருமானாரை வரகா என்ற அறிஞரிடம் அழைத்துச் செல்கின்றார். நிகழ்வுகளை செவியுற்றுக் கொண்டிருந்த வரகா முஹம்மது ஒரு இறைத் தூதரெனவும் அவரிடம் தூது கொண்டு வந்தவர் ஹளரத் ஜிப்ரயில் என்ற வானவர்தான் எனவும் அறிவிக்கின்றார். அப்பொழுது நடைபெற்ற உரையாடல் மத்தியில் “இந்த ஊர் மக்கள் உங்களை இந்த ஊரிலிருந்து வெளியேற்றும் காலக் கட்டத்தில் நான் உயிரோடு இருந்தால் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்” என்று வரகா கூறுகின்றார். அதைச் செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவர்கள் எம்மை வெளியேற்றுவார்களா…!?” என ஆச்சரியத்துடன் கேட்டார்கள். அல்அமீன்- நம்பிக்கையாளர் எனவும் அஸ்ஸாதிக் – உண்மையாளர் எனவும் தன்னை பெருமைப்படுத்தும் மக்கா நகரவாசிகள் தன்னை வெளியேற்றும் நிலைக்கு ஆளாவார்கள் என்ற செய்தி பெருமானாருக்கு ஆச்சரியத்தைத் தந்ததில் வியப்பொன்றுமில்லை. “ஆம்! இதுகாறும் உலகில் தோன்றிய ஒவ்வொரு இறைத் தூதரும் அவரவர் தாய் நாட்டைவிட்டும் வெளியேற்றப்பட்டே வந்திருக்கின்றார்கள். அது போன்று உங்களையும் நிச்சயம் இந்நகர்வாசிகள் வெளியேற்றுவார்கள்” என்று வரகா பதிலளித்தார்.
நம் நாட்டு மக்கள் நம்மை இந்நாட்டைவிட்டே துரத்தலாம் என்ற எதிர்பார்ப்பு பெருமானார் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் பின்னர் அப்படியே நடந்த நேரத்தில் அவர்கள் துவண்டு போய்விடவில்லை. செயலற்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படவில்லை. முன்னைவிடவும் பலமாக செயலாற்ற ஆரம்பித்தார்கள். அவர்கள் மதீனாவிலும் இஸ்லாமிய மலர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்கள்.
பத்ரு தரும் படிப்பினை
பத்ரு பெருவெளியில் இஸ்லாத்துக்கும் இணை வைத்தலுக்கும் நடைபெற்ற மோதலில் இஸ்லாமியர் 70 எதிரிகளை கைது செய்கிறார்கள். பின்னர் அந்த கைதிகளை ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு விடுதலை செய்யப்பட்டது. அத்தருணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நண்பர்களை நோக்கி “நண்பர்களே ! வரும் ஆண்டு உஹது மலைச்சாரலில் இது போன்றதொரு மோதல் நடைபெறும். அதில் நம்மவர்கள் எழுபது நபர்கள் கொல்லப்படுவார்கள். 70 பேர்கள் கைதியாக பிடிக்கப்படுவார்கள்” என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.
அடுத்த ஆண்டு நிகழ்வும் அவ்வாறே அமைந்தது. பெருமானார் செய்த முன்னறிவிப்பு தோல்வியின் போது நண்பர்கள் துவளாமல் இருக்க வழி வகை செய்தது. மேலும் புனிதப் போரில் ஷஹீது உயிர் நீப்பதையும் அவர்கள் வெற்றியாகவும், பெரும்பாக்கியமாகவும் கருதச் செய்தது.
தந்ததும் அவனே !
பெருமானார் (ஸல்) அவர்களின் பேரக்குழந்தை ஒன்று மரணவாயிலில் நிற்கின்றது. அவர்களின் மகளார் ஹளரத் ஜைனப் (ரலி) அவர்கள் தன் குழந்தையை வந்து பார்க்கும்படி பெருமானாருக்கு செய்தி அனுப்புகின்றார்கள். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘லில்லாஹி மா அஃதா வலில்லாஹி மா அகத’ ‘இறைவன் தந்ததும் அவனுக்கே சொந்தம். இறைவன் எடுத்ததும் அவனுக்கே சொந்தம். எல்லாவற்றுக்கும் அவனிடத்தில் குறிப்பிட்ட தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொறுமையை கடைபிடிப்பீராக ! எல்லாம் நன்மைக்கே என எண்ணுவீராக !” என்று சொல்லி விட்டு தனது சேவையை தொடர்ந்தார்கள். பெருமானாருக்கு தகவல் சொல்லியனுப்பிய பிறகும் அவர்கள் வராததால் வேதனையடைந்த அவர்களின் மகளார் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக தாங்கள் வந்து பார்த்தே ஆக வேண்டும்” என தந்தையை ஆணையிட்டு அழைக்கிறார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நண்பர்களுடன் அக்குழந்தையை காணச் செல்கின்றார்கள். மரண அவஸ்தையில் துடித்துக் கொண்டிருந்த பேரனைக் கண்டதும் பெருமானார் அவர்களின் கண்கள் கண்ணீரைக் கொட்ட ஆரம்பித்தது. அவர்களின் அழுகையை கண்ணுற்ற ஹளரத் சஃது (ரலி) அவர்கள், பெருமானே இது என்ன?” என்று கேட்கின்றார்கள். “நண்பரே! இதுதான் பாசம். அல்லாஹ் தனது அடியார்களின் உள்ளங்களில் இத்தகைய பாசப் பிணைப்பை ஏற்படுத்தி உள்ளான். பாசமாக இருக்கும் அடியார்கள் மீதே இறைவனும் பாசத்தைப் பொழிகின்றான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலுரைத்தார்கள்.
இவை போன்ற எண்ணற்ற சரித்திர சான்றுகள் மனித வாழ்வில் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே என சுட்டிக் காட்டுகின்றன. அவ்வாறிருக்கையில் மனிதன் தனக்கு துன்பமே ஏற்படாது என்று எண்ணிட என்ன நியாயமிருக்கிறது. அந்த எண்ணமே அவனது வீழ்ச்சிக்குக் காரணமாகி விடுகிறதே !
( நர்கிஸ் – ஜுன் 2015 இதழிலிருந்து )
|