ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார் அவர் நல்ல அறிஞரும் கூட,
தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகாமையில் அழைத்தார்.மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என் அருமை மகனே, விரைவில் நான் உங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?” என்று கேட்டார்.
என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான் மகன். அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை” என்றார். ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.
அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மௌத்தாகி போனார். அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமி விட்டனர். உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது.
அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து “இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும் என்று கூறினான்.
முடியாது, முடியவே முடியாது என்று மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர். இல்லை, இது என் தந்தையின் ஆசை, நீங்கள் செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை, எனவே வாய்ப்பில்லை என்றார் உறுதியாக…
மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். நான் சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள் என்றார். அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள். ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!
இக்களேபரம் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.
இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான் மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. என் மகனே… அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த நிலை உனக்கும் வரலாம். இந்தப் பொருட்களும், செல்வங்களும், சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும்.
ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!” என்று எழுதியிருந்தது.
கடிதத்தை படித்த அந்த நிமிடம் உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவம், மனதை சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வு. கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.
|