Tamil Islamic Media ::: PRINT
சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்

 

இது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.

திருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மனைவியைக் கேலி செய்வதாக நினைத்து அவமானப்படுத்துகிறார்கள். அவள் செய்த ஒரு தவறைப் பொதுவில் சொல்லி சிரிப்பது என்னவோ அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கிறது. ஆனால் அவளின் மனநிலை என்னவாகுமென்று அறியாமல் இவ்வாறு செய்து விடுகின்றனர். தன் மனைவியைக் கேலி செய்தால் என்பது அது தனக்குத்தான் அவமானம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகாமல் இருப்பது மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உரியதாகும்.

மற்றவர் முன் தன் மனைவியைக் குறை கூறினால் அவர்கள் மனமகிழலாம். ஆனால் அது தன் மனைவியின் மனதைப் புண்படுத்தும் என்பது இக்குணம் கொண்ட கணவன்மார்களுக்கு ஏனோ புரிவதில்லை.

2:187. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;

இறைவன் கணவனை மனைவிக்கும் மனைவியைக் கணவனுக்கும் ஆடையாக உவமைப்படுத்தியுள்ளான். எத்தனை அருமையான, மகத்தான வாழ்வியல் கோட்பாடு இது?! ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது? தன்னைப் போல தன் மனைவியும் சிறு சிறு குறைகளையுடைய ஒரு மனிதப்பிறவி என்றும் தன் குறைகளைப் பிறரிடம் இருந்து மறைக்க நினைக்கும் ஆண்கள் தன் மனைவியின் சிறு பிழைகளைச் சிறிதும் இங்கிதமில்லாமல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது எந்த அளவிற்கு சிறுமைத்தனம்?

மனைவியானவள் இவ்வாறு அடுத்தவர் முன் தன்னுடைய கணவரை நடத்தமாட்டாள். அடுத்தவர் முன் தன் கணவர் என்றுமே ஒரு கண்ணியமானவராகத் திகழ வேண்டும் என நினைப்பாள்.. அல்லாஹ் தன் மறையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கூற்றிலும் பிரதானப்படுத்தி வைத்திருக்கும் செயலில் பல ஆண்கள் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்).

உங்கள் வாழ்க்கைத்துணையின் குறைகளையே உங்களால் மறைக்க முடியவில்லையெனில், உங்களது ஈமான் மிகவும் பலவீனமானதாக உள்ளது என்றே பொருள். அழகிய முறையில் பிறரது குறைகளை மறைப்பவர், உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டெடுத்த நன்மையைச் சம்பாதிக்கிறார் (அல்அதபுல் முஃப்ரத்). அல்லாஹு அக்பர்.... ஒரு சில நிமிட சிரிப்புக்காக, எத்தகைய பேற்றை இழந்து விடுகிறோம்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.

அடுத்து அவள் செய்யும் சமையலைக் குறித்து பொதுவில் கேலி செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது.. என்னதான் படித்த அறிவாளி பெண்ணாக இருந்தாலும் திருமணமான புதிதில் சமையலில் சொதப்பாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதில் கூட கணவரும் அவரின் குடும்பத்தாரும் அதே சமையலைத் திரும்ப செய்யும் போது பண்ணும் கேலி இருக்கிறதே... அப்பப்பா... அவள் என்னதான் பின்னாளில் சமையலில் புலியாகிப் போனாலும் ஒரு முறை செய்த அத்தவறைச் சொல்லிக்காட்டாமல் இருக்க இவர்களால் முடியாது.

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

அடுத்து பிள்ளைகளிடம் அம்மாவைப் பற்றி தவறான கருத்தை விளைவிப்பது:

ஒரு குடும்பத்தையே கட்டி ஆளும் வல்லமை கொண்டவளாகவும் அனைத்தையும் தெரிந்தவளாகவும் இருந்தாலும் குழந்தைகளின் முன் டம்மிதான். அதற்குக் காரணம் அவளின் கணவர் ”உன் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது” என்று ஒவ்வொரு முறையும் சொல்வதுதான் காரணம்.

ஒரு முறை மட்டுமே கேலியாக நினைத்து விட நினைக்கும் மனம் அதையே திரும்பத்திரும்ப சொல்லும் போது அவளை உங்களிடம் இருந்து நீங்களே பிரிக்க முயல்கிறீர்கள். உங்களையும் மூன்றாம் நபராகவே அவள் மனம் எண்ணும். இத்தகைய செயல்களே, அவள் உங்கள் குடும்பத்தில் இருந்து விலகி தனியாக இருக்க நினைப்பதைத் துவக்குகிறது.

 

உங்களால் மட்டுமே இம்மாதிரியான சூழ்நிலைகளைப் பல நேரங்களில் கையாளுகிறார்கள். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. பிழை செய்திடாத மங்கையுமில்லை. உங்கள் வீட்டிற்குத் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து உங்களுக்காக உங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். உங்களுக்குக் கேலி செய்வது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அக்கேலிகளுக்குப்பின் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து செயல்படுங்கள். என்ன செய்தாலும் தன் கணவனின் திருப்தி கிடைக்காது என்ற சலிப்பு ஏற்பட்டுவிட நீங்களே வழிவிடாதீர்கள். அது நிச்சயம் குடும்பத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். கவனமாயிருங்கள்.

தன்னுடையவள் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிண்டலும் அவளுக்கு வலிக்கும். அந்த நேர சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு அடுத்தவர் முன் கண்ணீருடன்தான் நடமாடுவாள். உங்களுடைய இல்லாளுக்கு நீங்கள் செய்யும் நல்லதில் இதுவும் ஒன்று என்று எண்ணி செயல்படுத்துங்கள். இறுதி வரை உங்களுடன் வரப்போவது அவள்தானேயன்றி, உங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. யார் மூலம் துன்பம் ஏற்பட்டாலும் உங்கள் மனைவிக்கு நீங்களும் உங்களுக்கு உங்கள் மனைவியுமே சிறந்த ஆறுதலாக இருக்க வேண்டும். ஆகையால், மற்ற உறவினர்கள், நண்பர்களிடத்தில் உங்களை முன்னிலைப்படுத்துவதற்காக உங்களின் மறுபாதியைச் சீர்குலைத்துவிடாதீர்கள்.

எதையும் சாதிக்கக் கூடியவள் பெண். தவறுகளைத் தனிமையில் கூறுங்கள். நல்லதை சபைகளில் கூறுங்கள், அவளைப் பற்றி எண்ணம் அடுத்தவர் உள்ளத்தில் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் வித்திட வேண்டும். உங்களின் மனைவியிடம் சிறந்தவராக விளங்குவதே மக்கள் அனைவரிடத்திலும் சிறந்தவராக விளங்குவதற்கு வழியாகும் (திர்மிதீ. 1082) என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையேற்றுங்கள்.

Source: http://www.islamiyapenmani.com/2015/04/blog-post_78.html

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.