---சிராஜுல் ஹஸன் ----
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அறிமுகமான அத்தனை பேருக்கும் இறைவனின் அருள்நெறியை அறிமுகப்படுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நெறி அந்நியமானதாய் – அறிமுகம் அற்றதாய் இருந்தது.
ஆகவே அவர்களில் பலர் அதனை நம்பவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மிகக் குறைவான பேர்கள்தான் அதனை நம்பி ஏற்றுக் கொண்டார்கள்.
ஏற்க மறுத்த நிராகரிப்பாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமானால்- நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் முஹம்மதுதான்; அவர் பிரச்சாரம் செய்கின்ற புதியநெறிதான்; அது குடும்பங்களில் கலகத்தை உண்டாக்குகிறது. சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துகிறது. குலதெய்வங்களைக் கை கழுவுகிறது; பாரம்பர்யச் சடங்குகளைக் கேள்வி கேட்கிறது; எனவே –
இறைத்தூதரைப் பின்பற்றுவது படுபாதகம் என அவர்கள் கருதினர். பின்பற்றுபவர்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். நம்பிக்கை கொண்ட குழுவினரை நசுக்குவதற்கு அவர்கள் தங்களால் இயன்றதை எல்லாம் செய்தனர்.
புதிய நெறியை வேரோடு கிள்ளி எறியவும், இறைத்தூதரின் கதையை முடிக்கவும் முயன்றனர். நம்பிக்கை கொண்ட அந்த சிறிய குழுவினர் தங்களின் சக்திக்கும் மீறி எல்லாவிதத் துயரங்களையும் சகித்தனர்.
நிராகரிப்பாளர்களோ, அக்கிரமங்களை அடுக்கடுக்காய் அள்ளி வீசினர். இந்தக் கொடுமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று நம்பிக்கையாளர்கள் துடித்தனர். அப்பொழுதுதான் எத்தியோப்பியாவின் கதவுகள் அவர்களுக்காகத் திறக்கப்பட்டன.
நபித்தோழர்களில் பலரும் மக்காவைத் துறந்து எத்தியோப்பியாவுக்கு இடம் பெயர்ந்தனர். அப்படிச் சென்றவர்களில் இறைத்தூதரின் ஆருயிர்த் தோழரான அபூபக்கர் அவர்களும் ஒருவர்.
எத்தியோப்பியா செல்லும் வழியில் மக்காவின் கோத்திரத் தலைவர்களில் ஒருவரான இப்னு துக்னா என்பவர் அபூபக்கரைப் பார்த்தார். அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். “தாங்கள் எங்கே போகிறீர்கள்?”
“ஏக இறைவனை வணங்கி வழிபட்டு வாழ ஏற்ற இடம் தேடிச் சென்று கொண்டிருக்கிறேன்” என்று கூறினார் அபூபக்கர். உடனே இப்னு துக்னா, “தங்களைப் போன்றவர்கள் ஊரை விட்டுப் போகக் கூடாது. தாங்கள் குடும்ப உறவைப் பேணுகிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். ஏழைகளை ஆதரிக்கிறீர்கள். எளியோரின் துயரம் களைகின்றீர்கள். அடுத்தவர்களின் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறீர்கள். வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்கிறீர்கள்.
வாருங்கள்… தங்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. மக்காவில் இருந்துக் கொண்டே தாங்கள் இறைவனை வணங்கி வழிபட்டு வாழலாம்.” திட்டவட்டமான குரலில் கூறினார். நிராகரிப்பாளரான இப்னு துக்னா.
யோசித்துப் பாருங்கள் !
தமக்குச் சாதகமானவர்களின் ஆதரவையோ, அங்கீகாரத்தையோ பெறுவது அப்படியொன்றும் சிரமமான செயல் அல்ல. அவர்களிடமிருந்து புகழ் மொழிகளை வரவழைப்பதும் பெரிய விஷயம் அல்ல. ஆனால்- பகைவர்களிடமிருந்து அன்பையும், மதிப்பையும் பெறுதல் மிகக் கடினமான பணி. எதிரிகளிடமிருந்து மதிப்பைப் பெறுபவர்கள் மிகக் குறைவே.
சுட்டுப் பொசுக்குகின்ற பாலைவனங்களிலும், வற்றாத நீரூற்றுகள் இருக்கலாம். எத்தனைச் சூரியன்கள் வானில் தகித்தாலும் அந்த நீரூற்றுகளை நிர்மூலம் ஆக்க முடியாது. அதுபோல் உயர்தனிப் பண்புகள் கொண்டோரை அத்தனை எளிதில் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட முடியாது.
பூமியில் உள்ள ஒவ்வொன்றும் ஏதேனும் பயன் கருதியே படைக்கப்பட்டுள்ளன. கல்லும், புல்லும், மண்ணும், மரமும், மனித இன நிலைப்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை. மனிதன் வெறித்தனமாக அடித்துக் கொல்லும் விஷப்பாம்பும் கூட காற்றில் உள்ள நச்சுக்களை உறிஞ்சிக் கொண்டு அதைத் தூய்மையாக்குகிறது.
மா போன்ற மரங்கள், கல் எறிபவன் மீதும் கருணை பொழிகின்றன. இனிப்பான கனிகளைத் தருகின்றன. அந்தக் கல்லடிக்கு எத்தனைச் சுவையான பதிலடி ! இதுபோல் மனிதனும் தன்னுடைய உயர்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நாட்டிற்கு நன்மைச் செய்ய வேண்டும். சமூகத்தை மேம்படுத்த வேண்டும்.
ஒருவர் இல்லாதபோது அவர் இல்லை என்கிற உணர்வு எதிரிகளுக்கும் கூட துயரத்தை வரவழைக்க வேண்டும். அப்படிப்பட்ட உணர்வை யாரால் ஏற்படுத்த முடிகிறதோ, அவர்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்.
கொள்கை ரீதியிலான பகைவர்கள் கூட அவருடைய இருப்பை விரும்புவர். அவர் விட்டுப் பிரிவதைக் கண்டு இதயம் துடிப்பர் – அபூபக்கர் சித்தீக் விஷயத்தில் நடந்தது போல !
அபூபக்கரிடம் இந்த உன்னத பண்புகள் மலர்ந்து மணம் வீசக் காரணமாக இருந்தவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்தாம். நம் உள்ளத்தில் இதர மக்கள் மீது எந்தவிதமான கபடமும் இருக்கக் கூடாது. எந்தத் தீய உணர்வுகளுக்கும் இடம் தரக்கூடாது என்பது நபிகளாரின் வழிமுறையாகும்.
மற்றவர்கள் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். பிறருடைய குறைகளைப் புறக்கணிக்க வேண்டும். அடுத்தவர்களின் தவறுகளை மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் மீது பழி போடுவதை விட சில சிரமங்களைத் தாமே தாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் இறைத்தூதரின் வழிமுறையாகும். இந்த உயர்பண்புகள் யாரிடம் இருக்கிறதோ அவருக்குத்தான் சுவனம் உரித்தானது. நன்றி : நர்கிஸ் மாத இதழ், மார்ச் 2015 |