Tamil Islamic Media ::: PRINT
தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

"தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு"

ஆயுதப்புரட்சி ஒன்றுதான் இந்திய மண்ணில் விடுதலையை வரவு வைக்க ஒரே வழி என்ற முடிவுடன் உத்திரப்பிரதேசத்தில் வலுவான ஓர் இளைஞர் அமைப்பு உருவானது; சுதந்திரநாத் சனயால், போகேஷ்பாபு, ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற, இவ்விளைஞர் அமைப்பின் துவக்க கர்த்தாக்களில் ஒருவர் ஷாஜஹான்பூரைச் சார்ந்த அஸ்பாகுல்கான் என்ற இளைஞர் ஆவார்.

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவ்விளைஞர்களுக்கு, ஆயுதங்கள் வாங்கப் பணவசதி தேவைப்பட்டது. அதற்காக அரசாங்க கஜானாக்களைச் சூறையாடத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925 ஆகஸ்ட் 26 - இல் உத்திரப்பிதேசத்தில் சஹான்பூரிலிருந்து லகனோவிற்கு அரசாங்க கஜானாப் பணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. கஹோரி கிராமத்தில் அந்த ரயிலைத் தடுத்து நிறுத்தி கஜானாப் பணத்தைச் சூறையாட அஸ்பாகுல்கான், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர ஆஸாத், ரோஷன்சிங், ராஜேந்திர லால் ஆகியோர் தலைமையில் ஓர் இளைஞர் குழு புறப்படுகிறது.

கஹோரியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு கஜானாப் பணம் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கையில் ஆங்கில அரசு இறங்குகிறது. தெஹ்லீ என்னும் இடத்தில் அஸ்பாகுல்லாகான் கைது செய்யப்பட்டார்.
லாகூரில் 18 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், இவர் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்றவர், கஹோரிகொள்ளையில் ஈடுபட்டவர் போன்ற ஐந்து குற்றங்களை அஸ்பாகுல்கான் மீது சுமத்தி, தூக்குத்தணடனை வழங்கியது நீதிமன்றம்.

சில நாளே ஜீவித்திருப்பேன். என் தேசத்தின் ஒரு பிடிமண்ணை என் கஃபன் ஆடை (சவத்துணிக்குள்)க்குள் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்!.

- என்ற பொருள் பொதிந்த கவிதையை எழுதி வைத்தவராக,
லெப்பைக்க என்ற ஹஜ் பயணிகளின் தாரகமந்திரத்தைச் சப்தமாக முழங்கியவராக,
குர்ஆனின் உரையைக் கையில் ஏந்தியவராக....

26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்கான்.

இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் (ஆயுதப் புரட்சி) முன்னோடி ஆவார்.

- (ஏ.என். முஹம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.223-224.)

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.