இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943 - இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) - என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (Azad Hind Fauj) - என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார்.* அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943-இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.
நேதாஜியின் இந்த இமாலய முயற்சிக்கு முன்னோடியாக, இந்திய மண்ணிலேயே ஆங்கிலேயருக்கெதிரான தனி சுதந்திர அரசுகளைப் பிரகடனப் படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாவர். (* lbid.,P.665)
இந்திய வஹாபி இயக்கத்தின் தலைவர் சையது அஹமது ராய்பரலி அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் அச்சாதனையை நிகழ்த்தினார். சமய - சமுதாய சீர்திருத்த இயக்கமான வஹாபி இயக்கம் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட இயக்கமாக மாறியது. ஹாஜ் சரியத்துல்லா, தத்தோ மியான் ஆகியோரது வீழ்ச்சிக்குப் பின்னர் பெரய்ஸி இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்த வஹாபி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.* *(lbid. P.248..)
பாட்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட செய்யது அஹமது ராய்பரலி, இந்திய தேசத்தைத் தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது 'இஸ்லாமியர்களின் உலகம்' என்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார். இச்சுதந்திர அரசுக்கென மேற்குப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தன் ராணுவத்தளம் அமைக்ப்பட்டது. இச்சுதந்திர அரசின் நோக்கம், 'இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஜிஹாத் (புனிதப்பேர்) புரிவதாகும்'.
செய்யது அஹமது ராய்பரலியின் இச்சுதந்திர அரசம் அதன் முன்னணித் தலைவர்களும் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளால் சந்தித்த கொடுமைகள் ஏராளம். பாட்னாவில் விலாயத் அலி, ஹிமாயத் அலி ஆகியோர் தலைமையில் ஆங்கிலேயருக்கெதிரான புரட்சிகள் தொடர்ந்தன.
கிளர்ச்சியில் ஈடுபட்ட மௌல்வி. முஹம்மது ஜஃபிரை ஆங்கில அரசு கைது செய்து, தேசத்துரோக தண்டனை விதித்து அந்தமானுக்கு நாடு கடத்தியது. அவர் அந்தமானில் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். 1870 - இல் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான அமீர்கானும் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரை அந்தமானுக்கு நாடுகடத்தும் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி நார்மனை அப்துல்லா என்ற முஜாஹித் இளைஞன் சுட்டுக்கொன்றான். இதுபோன்ற பல வீரவரலாறுகள் இச்சுதந்திர அரசின் நடவடிக்கையில் உண்டு. இதுபோன்றே 1921-இல் மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சியின் போது, கேரளாவில் எர்நாடு, வள்ளுவநாடு, பகுதிகளை ஒருங்கிணைத்து கிலாபத் இராஜ்யம் என்ற தனி சுதந்திர அரசை அலி முஸல்லியார் பிரகடனப்படுத்தினார். இவ்வரசுக்கென கிலாபத் கொடி, கிலாபத் நாணயம், கிலாபத் ராணுவம் ஏற்படுத்தி தனி முத்திரையுடன் கூடிய சாகச ஆட்சியை, ஆங்கிலேயரை ஆதரித்த சமஸ்தானங்களின் எல்லைகளுக்குள்ளேயே நடத்திக்காட்டினார்.
இவ்வாறு இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் - முதல் போராட்ட உத்வேகம் - முதல் மக்கள் இயக்கம் - முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது.
தகவல்: http://pinnoottavaathi.blogspot.com/2012/08/blog-post.html |